ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

பஞ்சவடியில் திருமலை தெய்வம்!

பஞ்சவடியில் திருமலை தெய்வம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சவடியில் திருமலை தெய்வம்!

மகா சம்ப்ரோக்ஷணம் 23.6.19தாமல் ராமகிருஷ்ண ஸ்வாமி

ஞ்சநேயரின் வீர பராக்கிரமத்தைச் சொல்லும் எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் குறித்த திருக்கதை. 

பஞ்சவடியில் திருமலை தெய்வம்!

ராவணனின் கட்டளைப்படி ராம-லட்சுமணர்களை அழிக்க முற்பட்டான் அசுரனான மயில்ராவணன்; பாதாள லோகத்தின் அரசன் இவன். ராம- லட்சுமணர்களுக்கு ஆபத்து வர இருப்பதை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஸ்ரீஆஞ்சநேயர், மயில்ராவணனை சம்ஹாரம் பண்ணுவதற்காக எடுத்ததே, ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேய அவதாரம் என்கின்றன ஞானநூல்கள்.

குதிரை (ஹயக்ரீவர்), நரசிம்மம், கருடன், வானரம் (ஆஞ்சநேயர்), வராஹம் ஆகிய ஐந்து திருமுகங்கள் கொண்டவர் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்தில் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரை நாம் வணங்குவதால் மன தைரியம் பெருகும், புகழ் கூடும், புத்திசாலித்தனம் அதிகமாகும், உடல் ஆரோக்கியம் சிறக்கும், நிம்மதி பிறக்கும்! மொத்தத்தில், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்; வளம் பெருகும்.

இத்தகைய சிறப்புகளைக்கொண்ட ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் வடிவம், சில ஆலயங்களில் பிரதானமாகவும், சில ஆலயங்களில் தனிச் சந்நிதியிலும் கம்பீரமாக அருள்பாலிக்கின்றன. அவ்வகையில், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர், தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கும் புண்ணிய க்ஷேத்திரமே, பஞ்சவடி.

பஞ்சவடியில் திருமலை தெய்வம்!

திண்டிவனம்-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது பாப்பாஞ்சாவடி எனும் கிராமம். இதுதான் தற்போது பஞ்சவடி க்ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. திண்டிவனத்திலிருந்து சுமார் 29 கி.மீ. தொலைவு; பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு.

பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும். முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கி வந்திருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்திவந்துள்ளார்கள்.

ஆதிகாலத்தில் ராமாயணம் சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகள் இங்கு நடந்திருக்கலாம் என்பது ஆன்றோர்களின் கருத்து. அதற்குச் சான்றாக இந்தப் பஞ்சவடி க்ஷேத்திரத்துக்கு அருகே அமைந்திருக்கும் சில ஊர்களின் பெயர்கள் திகழ்கின்றன. கூனிமேடு (ராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம் கூனி), அனுமந்தை ராகவன் பேட்டை, தப்பளாம்புலியூர் (தப்பி மான் புலியூர்), விழுப்புரம் (வில்லுபுரம்) ஆகிய ஊர்களின் பெயர்கள், ராமாயணக் கதையோடு பொருந்துகின்றன!

இந்த க்ஷேத்திரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபஞ்சமுகஆஞ்சநேயர் விக்கிரகத்தின் உயரம் சுமார் 36 அடி. மிகப் பிரமாண்டமான ஒரே கல்லில் அற்புதமாக வடிக்கப்பட்ட விக்கிரகம் இது. ‘ஜயமங்கள பஞ்சமுக ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி’ என்று அழைக்கப்படுகிறார் இந்த வாயு மைந்தன். இவர், இங்கே கோயில்கொண்ட திருக்கதை, நம்மைச் சிலிர்க்கவைப்பதாகும்.

`ஜயமங்கள பஞ்சமுக ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி’ ஆலய நிர்மாணத்தில் பெரும் பங்கு வகித்தவர் ரமணி அண்ணா. 1999-ம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி வியாழக்கிழமை... இவரின் நண்பரான சந்தானம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர் தொழில் தொடங்குவதற்காக வாங்கிய நிலத்தைப் பார்வையிடச் சென்றார், ரமணிஅண்ணா.

ஆள் அரவம் இல்லாத, சவுக்கு மரங்கள் நிறைந்த அந்த இடத்தில் நுழைந்தபோதே, ஒருவித சிலிர்ப்புக்கு ஆளானாராம் ரமணி அண்ணா. ஏதோவொரு தெய்வ சக்தி தன்னை ஆட்கொள்வதாக உணர்ந்தவர்,  அந்த இடம் மிக மகத்துவமானது என்பதை அறிந்தார். அதுமட்டுமன்றி,  `இங்கே எனக்கு ஓர் ஆலயம் எழுப்பு’ என்று யாரோ கட்டளையிடுவதுபோல் ஒரு குரல் அவர் காதில் கேட்டதாம்!

அங்கிருந்து புறப்பட்டு காரில் செல்லும்போது, நண்பர் சந்தானத் திடம் தனக்கு ஏற்பட்ட தெய்விக உணர்வை, தான் செவிமடுத்த கட்டளையை பகிர்ந்துகொண்டாராம் ரமணிஅண்ணா. அத்துடன், `இது ஆஞ்சநேயரின் உத்தரவு என்பதாகவே நினைக்கிறேன்’ என்ற கருத்தையும் ரமணி அண்ணா சொல்ல, நண்பர் சந்தானம் மிகவும் மகிழ்ச்சியோடு ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்கு அந்த இடத்தைத் தர ஒப்புக்கொண்டார்.

பஞ்சவடியில் திருமலை தெய்வம்!

ஆனாலும் ரமணி அண்ணா, தனக்குக் கிடைத்த தெய்வக் கட்டளையை உறுதிப்படுத்திக்கொள்ள முனைந்தார். நண்பர் சந்தானம் மற்றும் சில பக்தர்களோடு கேரள மாநிலம், பையனூருக்குச் சென்று தேவப் பிரச்னம் பார்த்தார். பிரச்னத்தின் மூலம் அற்புதமான தகவல்கள் வெளிப்பட்டன!

குறிப்பிட்ட இடம் ஆதிகாலத்தில் பஞ்சவடி என்று அழைக்கப் பட்டதாகவும் அங்கு ரிஷிகளும் முனிவர்களும் ஆஞ்சநேயரை பஞ்சமுக சொரூபத்தில் வைத்து வழிபட்டதாகவும் பிரச்னத்தின் மூலம் தெரியவந்தது. மேலும், `அற்புதமான இந்த இடத்தில் பூமிக்கடியில் அனுமன் சூட்சுமமாக ராமநாமம் ஓதிக்கொண்டு பல்லாண்டு காலமாக தவம் செய்துவருகிறார். தற்போது, பஞ்சமுக ஸ்வரூபனாக (ஸ்தூல உருவில்) எழுந்தருள்வார். அத்துடன், தன் பிரபுவான ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கும் இங்கே ஆலயம் அமைக்க ஸித்தம் கொண்டுள்ளார்’ என்றும் பிரச்னத்தின் மூலம் தெரிய வந்தது. பக்தர்கள் அனைவரும் சிலிர்த்துப்போனார்கள்.

அத்துடன், ஒரு வழிகாட்டலும் கிடைத்தது ரமணி அண்ணாவுக்கு.  ஆம்! பஞ்சவடி க்ஷேத்திரத்தில் இப்படியோர் ஆலயம் அமைவதில் திருமலை வேங்கடவனுக்கும் விருப்பம் உண்டு. அவரின் சந்நிதியில், விடியற்காலை பூஜையில் கலந்துகொண்டு, வேங்கடவன் திருமுன், ஆலயக் கட்டுமானத்துக்கான பிரார்த்தனையைச் செய்யவும் என்றும் திருவேங்கடவன் விரும்பும் காலத்தில் அவரும் பஞ்சவடி க்ஷேத்திரத்தில் எழுந்தருள்வார் என்றும் பிரச்ன வாக்கு கிடைத்தது.

தெய்வ சங்கல்பத்தின்படி திருப்பணிகள் தொடங்கின.  சிறுதாமூர் எனும் கிராமத்திலிருந்து சுமார் 150 டன் எடையுள்ள பெரிய கல் தேர்ந்தெடுக்கப்பட, கேளம்பாக்கத்திலுள்ள முத்தையா ஸ்தபதியாரின் சிற்பக்கலைக் கூடத்தில் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேய ஸ்வாமியின் பிரமாண்ட விக்கிரகம் அழகுற உருவானது. தொடர்ந்து ஆலயக் கட்டுமானப்பணிகள் பூர்த்தியானதும், 2007-ம் ஆண்டு ஜனவரி 31 அன்று மிக அற்புதமாக நடந்தேறியது மகாகும்பாபிஷேகம்.

மேற்கு நோக்கிய ஆலயம். பிரமாண்ட மகா மண்டபத்தை அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர். சாஸ்திரம், சம்ஹிதை, ஆகமம் ஆகியவற்றில் சொல்லியுள்ளபடி இந்தப் பஞ்சமுக ஆஞ்சநேயர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது. பத்துக் கைகளிலும் முறையே கத்தி, கேடயம், புத்தகம், அமிர்தக் கலசம், அங்குசம், மலை, கலப்பை, கட்வாங்கம், பாம்பு, மரம் ஆகியவற்றை ஏந்தியபடி அருள்கிறார் இந்த அனுமன். இவரை வலம் வர தனியே பிராகாரம் உண்டு. மாலைகள் போடவும், வஸ்திரம் சார்த்தவும் வசதி இருக்கிறது.

பஞ்சவடியில் திருமலை தெய்வம்!

ஸ்ரீஜயமங்கள வலம்புரி ஸ்ரீமகா கணபதி சந்நிதி, ஸ்ரீஜயமங்கள ஸ்ரீபட்டாபிஷேக கோல ராமரும் சீதையும் அருளும் சந்நிதி ஆகியவையும் அற்புதமாக அமைந்துள்ளன. பட்டாபிஷேக ராமர் சந்நிதியில் லட்சுமணன், பரதன், சத்ருக்னன், ஆஞ்சநேயர், சுக்ரீவன், விபீஷணன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோரும் அருள்பாலிப்பது சிறப்பு. இதன் எதிரே கருடாழ்வார் காட்சி தருகிறார்.

ஐந்து பிரதட்சணமும், ஐந்து நமஸ்காரமும் செய்து பிரார்த்திப்பது இங்கு விசேஷமாகக் கருதப்படுகிறது. 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி அன்னதானமும் சிறப்புற நடைபெற்று வருகிறது. மற்றொரு சிறப்பம்சம், இங்கு அமைந்துள்ள ஸ்ரீராம பாதுகைகள். பாரததேசத்தின் அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களிலும் தீர்த்தங்களிலும் சங்கல்ப ஸ்நானம் செய்யப்பட்டு, பஞ்சவடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன, ஸ்ரீராம பாதுகைகள்!

அதுமட்டுமா, `தான் விரும்பும் காலத்தில் திருவேங்கடவன் பஞ்சவடி க்ஷேத்திரத்தில் எழுந்தருள்வார்’ என்ற பிரச்ன வாக்குப்படி, ஸ்ரீவேங்கடா சலபதியும் மூலமூர்த்தியாக இந்த க்ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ளார். கடந்த மே மாதம் 10-ம் நாள், இவரின் திவ்யமங்கல திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆக, மத்திய திருப்பதி எனும் பெருஞ்சிறப்பும் சேர்ந்துவிட்டது பஞ்சவடி க்ஷேத்திரத்துக்கு!

இப்படியான மகத்துவங்கள் வாய்ந்த பஞ்சவடி புண்ணிய க்ஷேத்திரத்தில், ஜூன் மாதம் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது. மகான்கள், மடாதிபதிகள் மற்றும் அருளாளர்களின் ஆசிகளோடு அன்று காலை 9 முதல் 10:30 மணிக்குள் நடைபெறும் மகா சம்ப்ரோக்ஷண விழாவில், பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெற்றுச் செல்லலாம்.

பஞ்சவடியில் திருமலை தெய்வம்!

மகோ சம்ப்ரோக்ஷணம்..!

பஞ்சவடியில் ஜூன் 17 பூர்வாங்க பூஜைகளோடு தொடங்கி 23 வரையிலும் நடைபெறவுள்ளது இந்த மகோத்ஸவம்.

மன்னர்கள் காலத்தில், ராஜகோபுரம் அமைந்திருக்கும் ஆலயத்தில் `தச தரிசன வைபவம்’ நடைபெறும். அதேபோல், இந்த ஆலயத்திலும் 22.6.19 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, தசதரிசன சிறப்பு பூஜை எனும் பத்து பிரவேசங்களும் கிரமப்படி நடைபெறும். பிரவேச விவரம்: கோ (பசு), கஜம் (யானை), அஸ்வம் (நாட்டியக்குதிரைகள்), பச்சைக்கிளி, நிலைக்கண்ணாடி, கன்னிகை, சுமங்கலி, சந்நியாசி, வேதவிற்பன்னர்கள், அறங்காவலர்கள் மற்றும் பக்தகோடிகள்.

23.6.19 ஞாயிறு அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷண வைபவம் நடைபெறவுள்ளது. அதற்கான புனிதநீர் கங்கை, யமுனை, சரயூ, பிரயாகை, திரிவேணி சங்கமம், கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பாலாறு, துங்கபத்ராஆகிய புண்ணிய நதிகளிலிருந்தும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைஷ்ணவ, சைவ புஷ்கரணிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்டுள்ளது.

மகா சம்ப்ரோக்ஷண திருநாளன்று பஞ்சவடிக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். மகா கும்பாபிஷேகம் நிறைவுற்றதும் ஆஞ்சநேயர் சந்நிதியில், அனைத்து பக்தர்களுக்கும் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட குங்குமப்பிரசாதமும் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சந்நிதியில் தீர்த்தம், சடாரி, திருத்தொழா மற்றும் நைவேத்திய பிரசாதமும் (லட்டு/ கேசரி/ சர்க்கரைப் பொங்கல்) வழங்கப்படும். பாண்டிசேரி, திண்டிவனம் பகுதியிலிருந்து இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது