Published:Updated:

ஏப்ரல் 19-ம் தேதி கண்ணகி கோயில் திருவிழா; தேர்தல் தள்ளிவைக்க தேனி கலெக்டரிடம் கோரிக்கை

ஏப்ரல் 19-ம் தேதி கண்ணகி கோயில் திருவிழா; தேர்தல் தள்ளிவைக்க தேனி கலெக்டரிடம் கோரிக்கை
ஏப்ரல் 19-ம் தேதி கண்ணகி கோயில் திருவிழா; தேர்தல் தள்ளிவைக்க தேனி கலெக்டரிடம் கோரிக்கை

தேனி மாவட்டம், கூடலூர் அருகே  தமிழக, கேரள எல்லையில் உள்ளது வண்ணாத்திப்பாறை. இங்கிருக்கும் பளியன்குடியிருப்பு வனப்பகுதியில் மங்கலதேவி மலை மீது கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 'கண்ணகிக்கோட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாகக் கலந்துகொள்வர்.  

தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்கள் பளியன்குடியிருப்பு வனப்பகுதி வழியாகச் செல்வர். திருவிழா நாளில் மட்டும் அந்த வழியாகச் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்குவார்கள். மேலும், இந்தப் பகுதிக்குக் குமுளியில் இருந்து மலைப்பாதை வழியாகவும் செல்லமுடியும். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா ஏப்ரல் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய நாளில் கண்ணகி கோயில் திருவிழா நடைபெறுவதால், தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் தொடர்பாக தேனி  மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசியவர்கள், ``திருவிழாவுக்கு முதல் நாள் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்துவிடுவார்கள். இதனால் பெரும்பாலானவர்கள் வாக்குப்பதிவில் கலந்துகொள்ள முடியாது. மேலும், காவல் துறையினர் தேர்தல் பணியில் ஈடுபடுவர். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது. இதனால் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும்'' என்றனர்.  

இதற்குப் பதிலளித்த ஆட்சியர், ``விழா 19-ம் தேதிதான் நடக்கிறது. ஆனால், 18-ம் தேதியே வாக்குப்பதிவு முடிந்துவிடும். இருந்தாலும் அனைத்துக் கட்சியினர் கருத்தைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்போம்'' என்று தெரிவித்தார்.