Published:Updated:

‘நீதிக்கல்லில் மிளகாய் அரைத்துப் பூசினால் நியாயம் கிடைக்கும்!'- மாசாணியம்மன் கோயில் வழிபாடு

‘நீதிக்கல்லில் மிளகாய் அரைத்துப் பூசினால் நியாயம் கிடைக்கும்!'- மாசாணியம்மன் கோயில் வழிபாடு
‘நீதிக்கல்லில் மிளகாய் அரைத்துப் பூசினால் நியாயம் கிடைக்கும்!'- மாசாணியம்மன் கோயில் வழிபாடு

தென்னை மரத் தோப்புகள், வயல்வெளிகள், மலைக் குன்றுகள் என்று பசுமையும் எழிலும் நிறைந்த கவின்மிகு பூமி, பொள்ளாச்சி. பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ளது ஆனைமலை. மலையில் தோன்றி பாய்ந்து வருகிறது உப்பாறு. ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது அருள்மிகு மாசாணியம்மன் கோயில்.

பொதுவாக, அம்மன் நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்த கோலத்திலோதான் காட்சியளிப்பாள். ஆனால், இங்கு மட்டும் வேறு எங்கும் காண முடியாதபடி 17 அடி பிரமாண்ட உருவத்துடன் சயனக் கோலத்தில் அருள்புரிகிறாள் மாசாணியம்மன். அவளுக்கு முன்னே நடுகல் ஒன்றும் காணப்படுகிறது. அம்மனின் காலடியில் அசுரன் ஒருவன் காணப்படுகிறான். அவனை மகுடாசுரன் என்று அழைக்கிறார்கள். 

ஆடி, மாசி மாதங்கள், அமாவாசை, பௌர்ணமி என்றில்லை... தினமும் மாசாணியம்மன் கோயிலில் திருவிழாக் கோலம்தான். நித்தமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து மாசாணியம்மனைத் தரிசித்து வழிபட்டுச் செல்கிறார்கள். தீராத குடும்பப் பிரச்னை, மனக்குறைகள், நம்பிக்கைத் துரோகம், பொருள்களைக் களவு கொடுத்தல், பகை என்று வருத்தத்தோடு வரும் பக்தர்கள், கோயிலில் மகாமண்டபத்தில் இருக்கும் நீதிக் கல்லில் மிளகாய் அரைத்துப் பூசி வேண்டிக்கொள்கிறார்கள். வேறு எங்கும் இல்லாத வழிபாட்டு முறை இது. மிளகாய் அரைத்துப் பூசினால் அம்மன் உரிய நீதி வழங்குவாள் என்பது நம்பிக்கை. 

தமது மனக்குறைகளை அம்மனிடம் மனம் விட்டுச் சொல்கிறார்கள். ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம், நூறு கிராம் மிளகாய் ஆகியவற்றைக் கோயிலில் இருக்கும் ஆட்டுக்கல்லில் ஆட்டுகிறார்கள். பிறகு, கோயிலுக்கு முன் இருக்கும் நீதிக் கல்லில் அரைக்கப்பட்ட மிளகாயைப் பூசி தமக்கான நீதியை வேண்டுகிறார்கள். அதற்குப் பிறகு, அம்மன் தனக்கான நீதியை நிச்சயம் வழங்குவாள் என்று மன நிம்மதியுடன் திரும்புகிறார்கள் பக்தர்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அடுத்த 90 நாள்கள் கழித்து மாசாணிக்கு எண்ணெய்க் காப்பு செய்து நன்றிக்கடன் செலுத்துகிறார்கள். நீதி மட்டுமல்லாமல் பல்வேறு வேண்டுதல்களுக்காகக் கோயிலுக்கு முன் இருக்கும் மரத்தில் மஞ்சள் பூசி, எலுமிச்சம்பழத்தைத் தொங்கவிட்டும் வழிபடுகிறார்கள் பக்தர்கள். அதன் பிறகு அனைத்தையும் மாசாணியம்மன் பார்த்துக்கொள்வாள் எனும் நம்பிக்கையில் பக்தர்கள் கவலையில்லாமல் செல்கிறார்கள். 

பக்தர்களின் துயர் துடைத்து, அவர்களைக் காப்பதில் முதன்மைக் கடவுளாகத் திகழ்கிறாள் மாசாணி. அதனால்தான் இங்கு பக்தர்களின் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. தன் சந்நிதிக்கு வந்து யார் வேண்டிக்கொண்டாலும் அவர்களுக்கு உரிய நீதியை வழங்கி குற்றவாளிகளைத் தண்டிக்கிறாள் நீதி தேவதையான மாசாணியம்மன். `மாசாணம்’ என்றால் மயானம் என்று பொருள். 'மயானத்தில் வசிக்கும் அன்னை’ என்பதைக் குறிக்கும் வகையில்தான் மாசாணியம்மன் என்று இந்த நீதி தேவதை அழைக்கப்படுகிறாள். 

நீதி வழங்கும் தேவதையாக மாசாணியம்மன் ஏன் மாறினாள், அதற்குக் காரணம் என்ன. இதற்கான பதில் சங்ககால நூலான குறுந்தொகை 292-வது பாடலில் காணப்படுகிறது. அந்தப் பாடல்...

``மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை

புனல் தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு,

ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை

பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்

பெண் கொலை புரிந்த நன்னன் போல...

குறுந்தொகைப் பாடல் சொல்லும் சம்பவம் இதுதான்..."

சங்க காலத்தில் துளு நாட்டை நன்னன் வேண்மான் எனும் வேளிர் ஆண்டு வந்தான். நன்னன் வேண்மான் நீதி தவறாதவன். யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தண்டனை அளிப்பவன். நன்னன் வேண்மானின் காவல் மரம், மாமரம். காவல் மரம் தெய்வத்துக்கு இணையானது. காவல் மரத்தில் பழுக்கும் கனி தெய்வத்துக்கு மட்டுமே உரியது. அதை யாரும் பறித்து உண்ணக் கூடாது. அப்படி யாராவது செய்தால் கொலை தண்டனை வழங்கப்படும். ஒருமுறை, ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த கோசர் இனத்தைச் சேர்ந்த ஒருவரின் மகள் ஆற்றில் மிதந்து வந்த காவல் மரத்தின் மாங்கனியைத் தின்றுவிடுகிறாள். காவலர்கள் மூலம் மன்னனுக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. காவல் மரத்தின் கனியை உண்டதால் அவளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றச் சொல்கிறான் நன்னன் வேண்மான். 

விஷயத்தைக் கேள்விப்பட்ட கோசர்கள் நன்னன் வேண்மானிடம் சென்று, தங்கள் இனப் பெண்ணின் எடைக்கு எடை தங்கத்தாலான பாவையையும், 81 யானைகளையும் அபராதமாகச் செலுத்துவதாகக் கூறினார்கள். 

ஆனால், நீதி தவறாத நன்னன் வேண்மான் அதை ஏற்காமல், குற்றத்துக்கு உரிய தண்டனையாக, அந்தப் பெண்ணைக் கொலை செய்யக் கட்டளையிடுகிறான். ஒரு மாங்கனியைத் தின்றதற்காக அந்தப் பெண் கொலை செய்யப்படுகிறாள். நன்னன் வேண்மான், ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்று தூற்றப்பட்டான். அந்தப் பெண் இறந்த பிறகு, அவளின் உறவினர்களும், சொன்ன சொல் மாறாத காரணத்தால், `ஒன்று மொழிக் கோசர்கள்’ என்ற சிறப்பைப் பெற்றவர்களுமான கோசர்கள், வெஞ்சினம் உரைத்து, சூழ்ச்சி செய்து நன்னன் வேண்மானைப் பழிதீர்த்து, அவனது காவல் மரமான மாமரத்தை வெட்டி அழித்தார்கள். மன்னனால் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணை, மயானத்தில் சமாதிப் படுத்தி, அதன் மீது அவளைப் போலவே ஓர் உருவம் செய்து தெய்வமாக வழிபடத் தொடங்கினர். அவளே மாசாணியம்மன்.

இறந்து பிறகு தெய்வமான மாசாணியம்மன், இப்போது நீதி தெய்வமாகப் பரிபாலனம் செய்து மக்களைக் காத்துக்கொண்டிருக்கிறாள்.

மாசாணியம்மன் கோயிலில் முதன்மையான தெய்வம் மாசாணியம்மன்தான். மனக்குறைகளைத் துண்டுச் சீட்டில் எழுதி அம்மனின் கையில் கட்டிவிட்டாலும், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாள் மாசாணி. கோயில் பிராகாரத்தில் சப்தகன்னிகள், பேச்சி, துர்கை, மகிஷாசுர மர்த்தினி, பிள்ளையார், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் அருள்புரிகிறார்கள். 

நீதி மறுக்கப்படுகிறது என்று எண்ணுகிறவர்கள் மாசாணியம்மன் ஆலயத்துக்குச் சென்று முறையிடுங்கள்... அனைவருக்கும் நீதி வழங்கும் நீதி தேவதையான மாசாணி, உங்களுக்கும் நீதி வழங்கி, குற்றவாளிகளைத் தண்டிப்பாள்..!