Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Published:Updated:
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

திருப்போரூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருப்பு நிலவால் என் மலதிமிரம் போக்கும்
கருக்கோடை போக்கு மதக்காரால் - திருப்போரூர்
நிம்பத்தின் கீழிருந்து நேயர்க்கு வாழ்வளிக்கும்
கம்பக் கடமா களிறு

- திருப்போரூர்ச் சந்நிதிமுறை

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் பகைதான். ஒருமுறை போரில் தேவர்களுக்குப் பின்னடைவு ஏற்பட, அவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் தேவர்களுக்கு உதவ முன்வந்தார்; அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார். திருமாலிடம் இருந்து தப்பியோடிய அசுரன் ஒருவன், பிருகு முனிவரிடம் சரண் புகுந்தான். அவர் அவனுக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டார். பயந்து அங்குமிங்கும் ஓடிய அசுரன், நீராடிவிட்டு வந்துகொண்டு இருந்த பிருகு முனிவரின் மனைவி புலோமசையைக் கண்டான். அவளின் காலில் விழுந்து, தனக்கு அபயம் அளிக்கும்படி வேண்டினான்.

##~##
முதலில் மறுத்தவள், பிறகு அவனது மன்றாடலுக்கு மனமிரங்கி, அவனுக்கு சரணாகதி அளித்தாள். அந்த வேளையில், அசுரனைத் தேடி அங்கு வந்த திருமாலை தொழுது, அசுரன் தன்னிடம் சரண் புகுந்ததை விவரித்து, அவனை விட்டுவிடும்படி வேண்டினாள். ஆனால், திருமால் தயவுதாட்சண்யம் காட்டாமல் அசுரனைத் தாக்கினார். 'நான் அவனுக்கு அடைக்கலம் தந்திருக்கிறேன். எனவே, முதலில் என்னை சம்ஹரித்துவிட்டு, அதன் பிறகு அசுரனை அழியுங்கள்’ என்றாள் புலோமசை தீர்மானமாக!

இதனால் கோபம் அடைந்த திருமால், சக்ராயுதத்தால் பிருகுவின் மனைவியை வீழ்த்தினார். இதைக் கண்ட மற்ற ரிஷிபத்தினிகள் அலறியடித்தபடி ஓடிச் சென்று, பிருகுவிடம் விஷயத்தைச் சொன்னார்கள். உடனே, மனைவி விழுந்து கிடக்கும் இடத்துக்கு வந்தார் பிருகு. அங்கே அவரது கண்களுக்கு விஷ்ணு தென்படவில்லை. மாறாக, அவரின் மார்பில் இருந்த மகாலட்சுமியே முனிவரின் கண்ணுக்குத் தெரிந்தாள். ''சாகாத் தன்மையும் இனிப்பும் கலந்த பாற்கடலின் அமுதத்துடன் பிறந்த நீ... கசப்பான இந்தச் செயலைச் செய்யும்படி திருமாலை அவரின் நெஞ்சில் இருந்துகொண்டு மூட்டிவிட்டுவிட்டாய். நீயும் பூலோகத்தில் கசப்பின் மரமாகப் போவாய்'' என்று திருமகளைச் சபித்தார். பிறகு, இறந்து கிடக்கும் புலோமசையின் உடலோடு சிரத்தைப் பொருத்தி, அவளை உயிர்ப்பித்தார்.

முனிவரின் சாபத்தால் மனம் வருந்திய திருமகள், திருமாலிடம் புலம்பினாள்.அவரோ, ''விநாயகரின் கருணை இருந்தால் மட்டுமே, உனது சாபம் தீரும்'' என வழிகாட்டினார். அதன்படி பூலோகம் வந்தவள், ஓரிடத்தில் வேப்ப மர வடிவம் தாங்கி, அங்கிருந்த விநாயகரை வழிபட்டுத் தவம் செய்து, அவரருளால் சாப விமோசனம் பெற்றாள். அந்த வேப்ப மரத்தின் அடியில் அருளும் விநாயகருக்கு, ஸ்ரீவேம்படி விநாயகர் என்றே திருநாமம்!

மாசிலாமணி சிதம்பரம் என்ற பெயருடைய பெரும் புலவர், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர். கோவையை அடுத்த பேரூரைச் சார்ந்த லிங்க சுவாமிகளின் மாணவரான குமாரதேவர் என்பவரை ஞானாசிரியராகக் கொண்டு, பல இலக்கிய- இலக்கண, சாஸ்திர நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

ஒருநாள், தமது தியானத்தில் மயில் ஒன்று தோகை விரித்து ஆடக் கண்டார். இதற்கான கருத்தை தம்முடைய ஆசிரியரிடம் வினவினார். மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மையை தியானிக்கும்படி பணித்தார் ஆசிரியர். அதன்படி, மதுரைக்குச் சென்ற புலவர் மாசிலாமணி சிதம்பரம், அங்கே 45 நாட்கள் தவம் புரிந்து, மீனாட்சியம்மையின் மீது கலிவெண்பா பாடினார். பாதச் சிலம்பு ஒலிக்க அவருக்குக் காட்சி தந்த அம்பிகை, ''வடக்குத் திசையில் யுத்தபுரி எனும் திருத்தலத்தில் அருளும் கந்தவேளின் ஆலயத்தைப் பொலிவுறச் செய்க'' என ஆணையிட்டாள்.

சிதம்பரனாரும் யுத்தபுரியைத் தேடி பயணப் பட்டார். வழியில் திருமுதுகுன்றத்தில், தன் ஞானா சிரியர் குமாரதேவரிடம் வீர சைவ நெறிப்படி தீட்சை பெற்றார். 'நீ உடனே திருப்போரூர் செல்'' என்று குமாரதேவரிடம் இருந்து ஆசியும் அருளும் கிடைத்தது. சிதம்பரனார் மகிழ்ந்தார். அவரின் ஞானத்தையும் தோற்றப் பொலிவையும் கண்ட மக்கள், சிதம்பரம் ஸ்வாமிகள் என அழைத்தனர். சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் புறப்பட்டார். வழியில், கிளியனூரில் ஞானம்மையார் என்ற மூதாட்டி அளித்த கூழ் அமுதை உண்டு மகிழ்ந்தார்.

விரைவில், யுத்தபுரி எனும் திருப்போரூரை அடைந்த சிதம்பர சுவாமிகள், அங்கே முருகன் ஆலயம் எங்குள்ளது என்று தேடியபோது, வேம்படி விநாயகர் அவருக்குக் காட்சி அளித்தார். மகாலட்சுமிக்கு அருளிய அந்தப் பிள்ளையாரை, சிதம்பர சுவாமிகளும் வழிபட் டார். மீனாட்சி அன்னையின் ஆணைப்படி, கந்தவேள் ஆலயத்தைப் பொலிவுறச் செய்வதற்கு, ஸ்ரீவேம்படி விநாயகரின் திருவருளை வேண்டினார். விநாயகர் வழிகாட்ட, அங்குள்ள பனங்காட்டில் பெண் பனைமரத்தின் ஒன்றின் அடியில், சுயம்பு மூர்த்தியாக கந்தவேள் காட்சியளிப் பதைக் கண்டு மகிழ்ந்தார். அந்த மூர்த்திக்குச் சிறு குடில் ஒன்று அமைத்துப் பாதுகாத்தார். வேம்படி விநாயகர் கோயிலில் இருந்துகொண்டு, அருகிலுள்ள வள்ளையார் ஓடையில் நீராடி, தினமும் வழிபட்டு வந்தார்.

ஒரு நாள், குருநாதர் குமாரதேவரின் வடிவில் வந்தான் வடிவேலன். தன்னை வரவேற்று மகிழ்ந்த சிதம்பரம் சுவாமிகளை அழைத்துச் சென்று, தமது திருக்கோயில் முன்பு எப்படியிருந்ததோ அதன் அளவையும், மண்டபம் மற்றுமுள்ள பகுதி களையும் விவரித்தான். பிறகு மூல முருகனின் மூர்த்தியில் கலந்து மறைந்தான். குருநாதர் உருவில் வந்தது குருபரனே என்றறிந்த சிதம்பர சுவாமிகள் சிலிர்த்தார். திருப்பணி ஏற்பாடுகளைச் செய்து, கந்தவேளின் ஆலயத்தைப் புதுப்பித்தார்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

சென்னை- மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 42 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்போரூர். முருகப் பெருமான் அசுரர்களுடன்  மூன்று இடங்களில் போர் செய்தார். கடலில் போர் செய்த இடம்- திருச்செந்தூர்; நிலத்தில் போர் செய்த இடம்- திருப் பரங்குன்றம்; விண்ணில் போர் செய்த இடம்- திருப்போரூர். மாயை அடங்கிய இடம் செந்தூர்; கன்மம் அடங்கிய இடம் பரங்குன்றம்; ஆணவம் அடங்கியது திருப்போரூரில். ஆக, இந்தத் தலத்துக்கு போரி, போரிமாநகர், யுத்தபுரி, சமரபுரி, சமரபதி என்று பல பெயர்கள் உண்டு. திருமால், மகாலட்சுமி, கண்வ முனிவர் ஆகியோர் வழிப்பட்ட தலம் இது. இங்கே, ஸ்ரீவேம்படி விநாயகர் ஆலயம், முருகன் கோயிலுக்கு மேற்கில்... சாலையின் வலப்புறம் அமைந்துள்ளது. இந்தப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே, கந்தவேள் ஆலயத்துக்குச் செல்லவேண்டும் என்பார்கள்.

திருப்போரூருக்குள் நுழையும்போதே, சிதம்பர சுவாமிகளின் திருமடமும், சமாதியும் உள்ளன. அருகிலுள்ள பிரணவ மலையில் கயிலாயநாதரும் பாலாம்பிகையும் அருள்புரிகிறார்கள்.

அருணகிரியாரின் திருப்புகழ் பெற்ற இந்தத் தலத்தில், சிதம்பர சுவாமிகள் முருகனுக்கு கற்கோயில் கட்டியதுடன், அவரைத் துதித்து வழிபட 'திருப்போரூர்ச் சந்நிதி முறை’ எனும் சொற்கோயிலும் கட்டி னார். 726 பாடல்கள் கொண்ட இந்த பக்திப் பாமாலை, 19-ஆம் நூற்றாண்டில் தமிழில் அதிகமான பதிப்புகளுடன் வெளிவந்த ஒரே நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்போரூரில் தினமும் வேம்படி விநாயகருக்குப் பூஜை செய்த பின்னரே மற்ற சந்நிதிகளில் பூஜை நடைபெறுகிறது. சிதம்பர சுவாமிகளின் குருபூஜை தினமான வைகாசி பௌர்ணமி  தினத்தில், வேம்படி விநாயகருக்கு 1008 தேங்காய்களைச் சமர்ப்பிக்கிறார்கள். அன்று அன்னதானமும் நடைபெறுகிறது. வேம்படி விநாயகரை வழிபட்டுத் திருவருள் பெற, திருப்போரூர் சென்று வருவோம்!

- பிள்ளையார் வருவார்...
படங்கள்: க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism