Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யில்ய நட்சத்திரத்தை 'ஆச்லேஷா’ எனக் குறிப்பிடுகிறது வேதம். இது, கடக ராசியின் பிற்பகுதியில் பரவியிருக்கும். கடகத்துக்கு அதிபதி சந்திரன். அம்சகத்தில் குரு மற்றும் சனியுடன் தொடர்பு உண்டு. வளர்பிறையில் சுபனும் தேய்பிறையில் அசுபனுமாக தனது இயல்பை மாற்றிக்கொள்ளும்.

சந்திரனின் தொடர்பு, ஆயில்யம் நட்சத்திரத்தின் முதல், கடைசி பாதங்களில் (1,4) குருவும் இடைப்பட்ட இரண்டு பாதங்களில் (2,3) சனியுமாக இணைந்திருப்பதால், சிறு வயதிலும் முதுமையிலும் மகிழ்ச்சியும், இளமையில் இன்னல் கலந்த மகிழ்ச்சியுமாக இருக்கும் என்கிறது ஜோதிடம்.  

மேஷம் முதல் கடகம் வரை நான்கு ராசியில் அஸ்வினி முதல் ஆயில்யம் வரை ஒன்பது நட்சத்திரங்கள் அடங்கிவிடும். சிம்மம் முதல் விருச்சிகம் வரை நான்கு ராசியில், மகம் முதல் கேட்டை வரை ஒன்பது நட்சத்திரங்கள் அடங்கிவிடும். தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிகளில், மூலம் முதல் ரேவதி வரையிலான ஒன்பது நட்சத்திரங்கள் அடங்கிவிடும்.

ராசிச் சக்கரம், நான்கு ராசிகளை அடக்கிய மூன்று துண்டுகளாக இணைக்கப்பட்டுள்ளது என்கிறது வேதம் (த்ரிநாபி சக்கரம் அஜரமனர்வம்). கண்டம் என்றால் ஒரு பகுதி என்று அர்த்தம். அதன் எல்லையைக் கண்டாந்தம் என்று தெரிவிக்கிறது வேதம். ஆயில்யம் கண்டாந்த நட்சத்திரம். அதேபோல், கேட்டையும் ரேவதியும் கண்டாந்த நட்சத் திரங்கள். 4-வது ராசியின் எல்லையை அதாவது கண்டத்தின் அந்தத்தைத் தொடும் நட்சத்திரங்கள் என்று அர்த்தம்! ஆயில்ய நட்சத்திரத்தின் கடைசி பாதத்தின் மூணே முக்கால் நாழிகையும் மகம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் முதல் மூணே முக்கால் நாழிகையும் சேர்ந்த ஏழரை நாழிகை அளவு நேரத்துக்கு இணைப்பு என்று பொருள்!

##~##
இந்த இணைப்பில் பிறந்தவர்கள், அல்பாயுசாகவும் வாய்ப்பு உண்டு. இன்னல்களைச் சந்தித்து துயரத்தில் தவிக்கவும் நேரும் என்கிறது ஜோதிடம். ரேவதி- அஸ்வினி கண்டாந்தச் சந்திப்பில் பிறந்தான் ராவணன். தன் குலத்தையும் தன் தாயாரின் குலத்தையும் அழித்து, தானும் அழிந்தான் என்று ஜோதிடம் உதாரணம் காட்டுகிறது (
கண்டாந்த ஸம்ப வோமர்த்ய: பித்ரு மாத்ரு குலாந்தக:).
கண்டாந்தத்தில் பிறந்தவர்களை துயரத்தில் இருந்து மீட்க, பிறந்தவுடன் பரிகாரம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம். ஆயில்யம் நட்சத் திரத்தில் பிறந்தவரின் சாந்தி (
ஆச்லேஷா நக்ஷத்ர ஜனன சாந்தி
) என்று குறிப்பிட்டு, அதன் விளக்கத்தையும் தருகிறது சாந்திரத்னாகரம். 'குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு’ என்ற சொல் வழக்கு, கண்டாந்த தோஷத்தை நம்ப வைக்கிறது.

பரிகாரத்தால் அகன்ற தோஷம், திரும்பவும் முளைக்காது. பிறந்து ஒன்பது மாதத்துக்குப் பிறகு தோஷம் செயல் இழந்துவிடும் என்கிறது ஜோதிடம். ஆனால் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தீர்க்காயுளுடன் இருந்தால் வாழ்நாள் முழுவதும் இன்பத்தில் திளைப்பார்கள். செல்வந்தராகவும் செல்வாக்கு உள்ளவராகவும் வீரனாகவும் புகழ்மிக்கவனாகவும் திகழ்வார்கள் என ராவணனை அடையாளப்படுத்துகிறது ஜோதிடம் (யதிஜவதி பூபாலோ கஜவாஜி ஸமன்வித:).

முதல் பாதத்தில் பிறந்தால், புகழுடன் இருப்பார்கள். 2-ல் செல்வத்தையும், 3-ல் தாயாரையும், 4-ல் தகப்பனாரையும் இழப்பார்கள் எனும் தகவல் ஜோதிடத்தில் உண்டு. தோஷம் என்ற சொல் மரணத்தைக் குறிப்பது அல்ல; கெடுதலைச் சொல்வது மட்டுமே! அவர்களின் தொடர்பால், தாய்- தந்தையர் இன்னலைச் சந்திப்பார்கள் என்கிறது ஜோதிடம்.  

'ஆயில்யத்து மாமியார் ஆசந்தியிலே’ எனும் சொல் வழக்கு, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்று அர்த்தப்படுத்திக் கொள்வது தவறு. ஆயில்யத்தில் பிறந்த பெண், கணவருடன் தொடர்பு உடையவள். ஆனால் கணவனையும் மீறி அவன் தாயாரைத் தாக்கும் என்பது சிந்தனைக்குப் புறம்பானது! ஒருவரின் பிறப்பு, பிறரின் இறப்பை நிர்ணயம் செய்யாது. அவரின் ஜாதகம், அவரது இறப்பை நிர்ணயம் செய்யும். மாமியாரின் ஜாதகம், அவருடைய மரணத்தை வரையறுக்குமே தவிர, எந்தத் தொடர்பும் இல்லாத மருமகளின் ஜாதகமானது, மாமியாரின் மரணத்தை எப்படி நிர்ணயம் செய்யும்?   சிம்மாசனத்தில் அமர்ந்து, அரசாண்ட கொச்சி ராஜா, ஆயில்யத் திருநாள் என்கிறது சரித்திரம். திருமணத் தேர்வில், செயற்கையான சிக்கலில் தவிக்கிற இந்தக் காலத்தில், சான்று இல்லாத வழக்குச் சொல், பாமரர்களை திக்குமுக்காடச் செய்கிறது என்பது வேதனைக்கு உரியது!

ஆயில்யத்தின் தேவதை- சர்ப்பங்கள் (ஆச்லேஷா நக்ஷத்திரம் ஸர்பா தேவதா). மண்ணி லும் விண்ணிலும் இடைவெளியிலும் ஊர்ந்து செல்லும் தேவதைகள் அவை என்கிறது வேதம் (நமோஅஸ்துஸர்பேப்யோ யே கேச பிருதிவீமனு ஏ அந்தரிஷே யேதிவி). நம்மை ஊக்குவிப்பவை இவை! கத்ருவுக்குப் பிறந்த மைந்தர்கள் அவர்கள்! ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீபரமேஸ்வரன், ஸ்ரீஅம்பாள், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீகணபதி ஆகியோரிலும் அவர்கள் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். பாம்புக்குத் தீங்கு விளைவிப்பதைப் பாபமாகக் கருதுகிறது தர்மசாஸ்திரம். சர்ப்பங்கள், தெய்வமாக வழிபடக்கூடிய பெருமையைப் பெற்றிருப்பவை. பாம்புப் புற்றை பாதுகாப்பதும் நாகர் விக்கிரகங்களை வைத்து வழிபடுவதும் நடைபெறுகிறது.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

மறைமுகமாகக் கெடுதலைச் செய்பவன், உணவைத் தேர்ந் தெடுப்பதில் வரையறை இல்லாதவன், தீய செயலில் ஈடுபடும் இயல்பு கொண்டவன், பொது உடைமைகளைச் சீர் குலைப்பவன் என்று ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களது செயல்பாடுகளை வரையறுக்கிறார் வராஹமிஹிரர்.

சர்ப்பத்தைப் போல் வளைந்து வளைந்து செல்பவன், நேர் வழியைப் பின்பற்றாதவன், கொடூரமானவன், சடுதியில் கோபத்திலும் குரோதத்திலும் ஈடுபட்டு நாசம் செய்பவன், பிறரைத் துன்புறுத்துவதில் மகிழ்பவன், இன்னல்களில் சிக்கித் தவிப்பவன் என்று மாறுபட்ட கருத்தை விளக்குகிறார் பராசரர். சேமித்த செல்வத்தைப் பிறருக்குப் பகிர்ந்து அளிப்பான், துயரத்தில் தவிப்பவர்களுக்கு உதவுவான், உணவை மறந்து உபகாரத்தில் மூழ்குவான் என்கிற தகவல் ஜோதிடத்தில் உண்டு.

முதல் பாதத்தில் பிறந்தவருக்கு, குழந்தைச் செல்வம் தடைப்படும். இரண்டாவதில் பிறந்தவர்கள், உழைத்துச் சாப்பிடுவார்கள். மூன்றில் பிறந்தால், பிணியைச் சந்திப்பார்கள். நான்கில், செல்வந்தராக இருந்தும் ஏழ்மையை அனுபவிப்பார்கள் என்று பாதங்களின் பலனை வகுத்துச் சொல்கிறது பிரஹத்சம்ஹிதை.

ஐந்து தாரைகளை உள்ளடக்கியது ஆயில்யம். கடினமான நட்சத்திரமும் கூட! மந்திர - தந்திர விஷயங்களில் அதன் சேர்க்கை பலனைத் தரும். பிறரைத் துன்புறுத்த, மந்திர-தந்திரங்களைக் கையாள, இந்த நட்சத்திரம் உதவிசெய்யும். எதிரிகளைக் கட்டிப்போட்டு வதைத்தல், ஒட்டி உறவாடுபவர்களை வெட்டிவிடுதல், மூளைச் சலவை செய்து எவரையும் வசப்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஆயில்யத்தின் இணைப்பு உதவும் என்கிறது பிருஹத்சம்ஹிதை.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

மந்தரையால் கைகேயி வசமிழந்தாள். சகுனியால், துரியோதனன் தன் வசம் இழந் தான். அமைச்சரால் கம்சன் வசமிழந்தான். இப்படியான நிகழ்வுகள், புராணங்களில் உண்டு. எதிரிகளை வீழ்த்த, பிறர் மனம் கவர, நண்பர்களுக்குள் பகையைத் திணிக்க, பிரிந்தவர்களை ஒன்றுசேர்க்க, பகைவனை நண்பனாக்க, விலைமகளிரை ஈர்க்க, பிறர் புகழைக் களங்கப் படுத்த, பிறர் நன்மையைச் சிதைக்க... ஆயில்ய நட்சத் திரத்தின் தொடர்பு வெற்றியைத் தரும் என்கிறார் பராசரர்.

சொல் ஒன்று செயல் வேறு. நேரில் ஒன்று மறை முகமாக மற்றொன்று எனச் செயல்பாடுகளில் மாறுபட்டி ருப்பர். திரைமறைவில் கெடுதலுக்கு ஊக்கம் அளிப்பார்கள். செய்நன்றி மறப்பார்கள். அவர் களது சொல்லிலும் செயலிலும் நம்பகத்தன்மை குறைந்திருக்கும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

குரு, சனி இருவரது இணைப்பு, சிலருக்கு உழைப்பையும் கல்வி அறிவையும் தந்து, உலகில் பெருமைக்கு உரியவராக உயர்த்தும் என்கிறது அது!

'ஸம் ஸர்பேப்யோநம:’ என்று சொல்லி சர்ப்ப உருவத்துக்கு பதினாறு உபசாரங்களைச் செய்ய வேண்டும். 'நமோ அஸ்து ஸர்பேப்ய:’ என்கிற மந்திரத்தை ஓதி வழிபடலாம்.

'சூரிய மண்டலத்திலும் வாயு மண்டலத்திலும் மண்வெளியிலும் இருக்கும் ஆச்லேஷா நட்சத்திரத்துடன் இணைந்த சர்ப்பங்கள், நாங்கள் அளிக்கும் உணவை ஏற்று, எங்களது செயல்பாடுகளில் முழு வெற்றியைத் தந்து, எங்களை மகிழ்ச்சியுடன் வாழச் செய்யுங்கள்’ எனும் வேத விளக்கத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

'அபஸர்ப ஸர்ப பத்ரம் தெதூரம் கச்ச மஹாயசா: ஜனமே ஜயஸ்ய யஞ்ஞாந்தெ அஸ்தீத வசனம் ஸ்மரன்’ என்ற செய்யுளைச் சொல்லியும் வழி படலாம். தியானம் (நினைத்தல்), ஆவாஹனம் (வரவேற்றல்), இருக்கை அளித்தல், கால் கழுவிப் பணிவிடை செய்தல், அர்க்யம் அளித்தல், ஆசமனத்துக்கு தண்ணீர் தருதல், மதுபர்க்கம், நீராடல், உடை அலங்காரம், சந்தனம்- குங்குமம், அட்சதை, புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், தீபாராதனை என 16 வகை  உபசாரங்களை, அதாவது பூஜையைச் செய்தால் வழிபாடு முழுமை பெறும்! இந்தப் பணிவிடைகள், படாடோபமான முறையில் விரிவடைந்திருக்கும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

மனத்துடன் இணைந்த பணிவிடைகள் நிம்மதியைத் தரும். அன்றாட வாழ்வில், நேரம் இல்லையே... என வருந்தினால், 'ஸம் ஸர்பேப்யோ நம:’ என்று சொல்லி நீராடி,  உடையணிந்து, திலகமிட்டு, உட்கார்ந்து, கண்கள் மூடி, இதனை 108 தடவை மனதுள் சொல்லி வழிபடலாம். கோயில், குளக்கரை, சர்ப்பப் புற்று, நாகர் விக்கிரகம் எனத் தேடியலைந்து வழிபாட்டுக்கு முனையாமல், மனதார வழிபடுவதே சிறப்பு!

மண்ணும் விண்ணும் இடைவெளி யும்தான் நம் அத்தனை செயல்பாடுகளுக்கும் அடித்தளம். மூன்றிலும் சர்ப்ப தேவதை உண்டு. விண்ணில் இருக்கிற சர்ப்பம், நம் உடலுள் இருக்கிற விண்ணிலும் (இடைவெளி) தென்படும்.

படம்பிடித்தாற் போல் பதித்துக் கொள்ளும் மனம், அதையும் பதியச் செய் யும். மனதில் அண்ட சராசரங்களையும் அடக்கிவிடலாம்.

உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தபோதெல்லாம் சுற்றிய உலகை மனதுள் பார்த்துக் கொண்டிருக்கலாம். முதுமையில், சிறு வயதில், இளம் வயதில் சந்தித்த அத்தனை நிகழ்வுகளும் நினைவில் நிழலாடும். இறையுருவங்களைக் கொண்டு வந்து வழிபடும் பாங்கு மனதுக்கு இருப்பதால், மனதார வழிபடுவதே சிறப்பு!

தேசம் விட்டு காட்டில் வாழ்ந்த முனிவர்களும் ரிஷிகளும் மனதுள் மந்திரத்தை அசைபோட்டபடியே வழிபட்டார்கள். த்ருவனும் பிரகலாதனும் மனதுள் நினைத்தபடியே வழிபட்டார்கள்.

மனம் நினைத்தபடி உலகம் நமக்குத் தோன்றும். தற்காலச் சூழல், மன வழிபாட்டுக்கு உகந்தது. சுற்றுச் சூழல், எங்கும் வாகன இரைச்சல், மரங்கள்  இல்லாததால் ஏற்பட்டுள்ள புழுக்கம் என நிரம்பியுள்ள இந்தக் காலகட்டத்தில், புற வழிபாட்டின் தரம் மெள்ள மெள்ள குறைந்து வருகிறது. ஆகவே, அக வழிபாடு எனும் நிலை வந்துவிட்டது.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது மனதார வழிபடுவதற்கும் பொருந்தும். எனவே, சர்ப்ப தேவதைகளை மனதார வணங்கி, பிறப்பின் பயனை முழுமையாகப் பெறுவோம்!  

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism