மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்
கேள்வி-பதில்

தைப்பூச நன்னாளில் தெப்போத்ஸவம் விசேஷம். அன்று, தெய்வங்கள் தெப்பத்தில் எழுந்தருள்வதற்கான தாத்பரியம் என்ன?

- வி.திருவேங்கடநாதன், கும்பகோணம்

##~##
ஆண்டவனின் முதல் படைப்பு நீர் என்கிறது புராணம் (அபஏவ ஸஸர்ஜாதௌ). உயிரினங்கள் உருவாவதற்கும், உரிய வளர்ச்சி பெற்று மகிழ்வதற்கும் நீர் முக்கியமானது. தான் படைத்த நீரில் பவனி வருகிறார் ஆண்டவன். தெப்போத்ஸவத்தின் போது ஆண்டவனை தரிசனம் செய்வது, நமது நன்மைக்கு.

சந்நிதிக்கு எதிரில் இருக்கும் குளங்கள், மாக ஸ்நானம் போன்ற விழா நாட்களில் நீராட வும், ஆண்டவன் தெப்போத்ஸவத்தில் பவனி வந்து மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டியும் ஏற்படுத்தப்பட்டவை. அன்றாடம் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீராடி வழிபடவும், உத்ஸவ காலங்களில் இறைவன் நீராடவும் ஏற்பட்டது, சந்நிதி முன் இருக்கும் குளங்கள்.

அகில உலகமும் அவன் படைப்பு. ஐம்பெரும் பூதங்களில் பல வடிவங்களாகத் தோன்றும் அத்தனைப் பொருள்களும் அவன் படைத்தது. அவன் அழியா சொத்து; அவனின்றி எந்தப் பொருளும் தோன்றாது. அவன் படைத்த பொருளையே அவனுக்கு அளித்து மகிழ்கிறோம். 16 உபசாரங்களில் பயன்படும் பொருட்கள் அத்தனையும் அவனது படைப்பே. நம்மால் ஒரு சிறு உயிரினத்தையும் உருவாக்க இயலாது.

உயிரினங்களை படைப்பதற்கு முன்பே, அந்த உயிர்களுக்கு உணவையும் அதாவது தாவரங் களையும் படைத்தவன் இறைவன். குழந்தை பிறக்கும் முன்பே தாய்ப்பால் தயாராவது போன்று, எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் உணவைப் படைத்து நம்மை வளர்ப்பவன் அவன். அத்தனைப் பொருட்களிலும் அவனது இணைப்பே, அவற்றின் தரத்தை உயர்த்துகிறது. 'பொருளில் பெருமைப் படக்கூடிய அம்சம் எனது சாந்நித்யம்’ என்று சொன்னான் கண்ணன் (யத்யத் விபூதி மத்ஸத்வம்). தூபம், தீபம், நைவேத்தியம், கற்பூரம், மந்திர புஷ்பம்-அத்தனையும் ஐம்பெரும் பூதத்தின் வடிவங்கள். அவை அவனது படைப்பு. அவற்றை வைத்து அவனை வழிபடுகிறோம்.

நீராடலில் இருந்து அவனது உபசாரம் ஆரம்பம். நீரில் இருந்து மற்ற உயிரினங்களின் தோற்றம் என்று பரிணாம வாதிகள் கூறுவார்கள். இப்படி நீரில் ஆரம்பித்த உபசாரம், கடைசியில் நீரில் பவனி வரும் உபசாரத்தில் முற்றுப் பெறும். தெப்போத்ஸவம் முன்னிரவில் நிகழும். ஐம்புலன் களுக்கும் மனதுக்கும் இனிமை யான உபசாரங்களுடன் தெப் போத்ஸவம் இருக்கும். நீருடன் நெருப்பு இணையும்போது உயிரினங்கள் தோன்றும். புழுக்கத்தில் புது படைப்புகள் ஆரம்பமாகும். தெப்போத்ஸவத் தில் தீப ஒளிகள் சூழ்ந்து ரம்மியமான சூழலை உருவாக்கும். அந்த வேளையில் அவன் நினைவு ஆனந்தம் அளிக்கும்.

கேள்வி-பதில்

அவன் பொருளை அவனுக்கு அளித்து மகிழ்வது நமது வாழ்க்கையின் குறிக்கோள். நாமே அவன் படைப்பு. அவனுக்குக் கொடுக்க நம்மிடம் ஏதுமில்லை. ஆகையால், நமது மனத்தை அவனிடம் அளிக்கும் தருணமாக, தெப்போத்ஸவத்தை உருவாக்குகிறோம். எங்கிருந்து வந்தோமோ, அங்கேயே அடைக்கலமாகி நிம்மதி பெறுகிறோம். நம் மகிழ்ச்சிக்காக தெப்போத்ஸவம் வேண்டும்.

ஹோமங்கள் பல வகை. அவை ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே சமித்துகள் உண்டு என்கிறார் பெரியவர் ஒருவர். இதுகுறித்து விளக்குங்களேன்.

- சந்தோஷ் நாராயணன், சேலம்-1

நவக்கிரக ஹோமங்களில்... எருக்கு, பலாசு, கருங்காலி, நாயுருவி, அரசு, அத்தி, வன்னி, அறுகு, தருப்பை ஆகியன சூரியன்  முதல் கேது வரையிலான நவக்கிரகங்களுக்கும் சமித்தாகச் செயல்படும். சிந்தில் கொடி, ஆலம் மொட்டு, நெல், எள், பால், ஹவிஸ்ஸு அறுகு ஆகியன மிருத்யும்ஜய ஹோமத்தில் சமித்தாகச் செயல்படும்.

சமித்தைத் தனியாக குறிப்பிடாத இடங்களில் அரசு பயன்படுத்தப்படும். எல்லா ஹோமங்களிலும் நெய்யும் ஹவிஸ்ஸும் பயன்படும். அத்துடன் சமித்தை சேர்க்கச் சொல்லும் இடங்களில் அரசு அல்லது பலாசு சேர்த்துக் கொள்ளப்படும். தர்மசாஸ்திர நூல்களை ஆராய்ந்தால், ஒவ்வொரு ஹோமத்துக்கும் உரிய சமித்தை அறியலாம்.

ஆலயங்களில் வலம் வந்தபிறகு ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டுமா? அல்லது மூலவர் தரிசனம் முடிந்ததும் வலம் வந்து வழிபட வேண்டுமா?

- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்

கருவறையில் உறைந்திருக்கும் இறைவனை வணங்கி வழிபட்டு, அதன் பிறகு வலம் வருவது சிறப்பு. வலம் வருவது வழிபாட்டில் அடங்கும். அது, இறைவனை வணங்கிய பிறகே வரும். பிரதக்ஷிண வழிபாட்டை முன்னதாக முடித்துக்கொள்ள இயலாது. தீபாராதனையை தரிசித்த பிறகே வலம் வருதல் வரும். அது உபசார வரிசையில் கடைசியில் வரும்.

கருவறையில் இருக்கும் இறைவனை நினைத்திருந்தால் இந்த சந்தேகம் எழாது. ஆலய தரிசன வழிபாட்டில் வலம் வருதலும் அடங்கும். இரண்டையும் வேறுவேறாகப் பார்க்கக் கூடாது.

கேள்வி-பதில்

பாகப் பிரிவினையில் எனக்குக் கிடைத்த நிலத்தில் சொந்தமாக வீடு கட்டி குடியிருக்கிறேன். ஆனால், எனது வீடு ஸ்ரீராமர் கோயிலுக்கு நேர் எதிரில் உள்ளது. எங்கள் உறவினர் சிலர், கோயிலுக்கு எதிரில் குடியிருக்கக் கூடாது என்கிறார்கள். இது சரியா?

- அருணாசலம்,  ஊனை பள்ளத்தூர்

ராமர் கோயிலுக்கும் தங்கள் வீட்டுக்கும் இடையில் பொதுவான நடைபாதை பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் இருந்தால், தாங்கள் அங்கு குடியிருக்கலாம். இரண்டுக்கும் இடையில் வாகனங்கள் செல்லும் சர்க்காரின் ரோடு இருந்தாலும் போதும். சேவார்த்திகள் மட்டும் வந்து போகும் அளவுக்கு, தங்கள் வீட்டோடு கோயில் நெருக்கமாக இருந்தால், வீட்டின் வாசலை மட்டும் மாற்றியமைத்தால் போதுமானது.

தங்கள் வீட்டின் வாசலும் கோபுர வாசலும் இடைவெளி குறைவாக எதிரும் புதிருமாக அமையக் கூடாது. உங்களின் பரம்பரைச் சொத்து, கோயில் உருவாவதற்கு முன்பே இருந்து வந்தால், தாங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. கோயில் உருவான பிறகு வீடு கட்டுவதாக இருந்தால், முறைப்படி கோயிலுக்கு குந்தகம் வராத வகையில் வெளி வாசலை மாற்றியமைக்க வேண்டும். நிலத்தின் உரிமை இருந்தாலும், பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் அதை அனுபவிப்பது, அறம்.

நல்லெண்ணெய் இரவலாக கொடுப்பதோ வாங்குவதோ கூடாது; வெளியூர் செல்லும்போதும் நல்லெண்ணெய் எடுத்துச் செல்லக் கூடாது என்கிறார்களே சிலர், ஏன் அப்படி? ஒரு சில ஊர்களில் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெயோ, நெய்யோ கிடைப்பதில்லை. அதுபோன்ற தருணங்களில் வீட்டில் இருந்தே எண்ணெய் எடுத்துச் செல்லலாமா?

- வி.கே.பெருமாள், பெங்களூரு

கேள்வி-பதில்

ஒன்றை இரவலாகக் கொடுக்கும் தருணத்தில், அது தேவைக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே இரவல் அளிக்க இயலும். அங்கு இரவலாக அளிக்காமல் இனாமாக அளிக்க வேண்டும். எந்தப் பொருளையும் (அதாவது நுகர்பொருள்) இரவலாகப் பெறுவதையோ, கொடுப்பதையோ தர்மசாஸ்திரம் ஏற்காது. இக்கட்டான சூழலில் ஏற்கச் சொல்லும்.அதையே நடைமுறையாக மாற்றக் கூடாது.

வெளியூர் செல்லும்போது, நல்லெண்ணெய் எடுத்துச் செல்லலாம். அங்கே எண்ணெய் கிடைக்காது என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இறையுருவங் களுக்கு விளக்கேற்றி வழிபட, நல்லெண் ணெயும் திரியும் எடுத்துச் செல்வதுண்டு. பயணம் மேற்கொண்டவன் எண்ணெயுடன் செல்லக்கூடாது. க்ஷேத்திராடனம் போன்ற வற்றில் எண்ணெய் இருக்கலாம்.

பல ஊர்களில் இருக்கும் (தங்கும்) வசதியை ஏற்படுத்தி, அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் எண்ணெயை எடுத்துச் செல்லலாம். எள், தேங்காய், இலுப்பை, ஆமணக்கு, கடலை போன்றவை 'தைல யோனி’ என்ற வரிசையில் அடங்கும். அவற்றை பயணத்தில் எடுத்துச் செல்வதை தர்மசாஸ்திரம் ஏற்காது. தற்போது பூவில் இருந்தும், தவிட்டில் இருந்தும், 'தைலயோனி’ பொருட்களில் இருந்தும் எண்ணெய் எடுக்கிறார்கள். இவற்றுக்கு விதிவிலக்கு உண்டு. செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கப்படும் தாவரங்களையே 'தைலயோனி’ சுட்டிக்காட்டும்.

உணவு வகைகளும் பொருட்களும் காலப்போக்கில் மாறுபட்டு தென்படுவதால், உணவுக்காக எடுத்துச் செல்வது தவறாகாது.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்