திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

சக்தி கொடு! - 7

சக்தி கொடு! - 7
பிரீமியம் ஸ்டோரி
News
சக்தி கொடு! - 7

வி.ஆர்.சுந்தரி

சக்தி கொடு! - 7

அருள் செய் சிவனே!

சி
த்திரைத் திருவோணம், ஆனி திருஉத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழித் திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன சிதம்பரத்தில்.

கூத்தப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்கள் பலவற்றிலும் மிகவும் விசேஷமானவை ஆனித்திருமஞ்சனமும் மார்கழித் திருவாதிரையும்.  கங்கைகொண்ட சோழன் காலத்திலிருந்தே இத்திருவிழாக்களுக்காக ஏராளமான நிலமளித்த தகவல்கள் சிதம்பரம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வளவு பெருமை பெற்ற நடராஜப்பெருமான், இங்கு எழுந்தருளிய காலத்தையும் கோலத்தையும் தரிசித்து, மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம் வாருங்கள்!

பதஞ்சலி, வியாக்கிரபாதர் எனும் இரு ரிஷிகளுக்காக, தைப்பூசம் குருவாரத்தன்று, அதாவது வியாழக்கிழமையன்று பிரம்மாதி தேவர்கள் ஆகாயத்தில் தோன்ற, தேவ துந்துபிகளும் வேத கோஷங்களும் ஒலிக்க, விண்ணிலிருந்து மலர்மாரி பொழிய, அன்னை சிவகாமசுந்தரி சமேதராக நடராஜப்பெருமான் சிதம்பரம் கோயிலின் சிற்சபையில் தோன்றினார்.

கனகசபை முழுவதுமாக ஒளிவெள்ளம் பரவியது. விரித்த சடை, திருமுடியில் கங்கை, கொன்றை மலர், இளம் பிறை, மயிலிறகு, கொக்கு இறகு ஆகியவை விளங்க; சூரியன், சந்திரன், அக்னி எனும் மூன்றுமே  கண்களாய்த் திகழ, நீலநிறக் கழுத்தும்; திருநீறு அணிந்த நெற்றியும்; குமிண் சிரிப்புமாக... குழையெனும் தோடுகளும்; கபால மாலையும்; பூணூலும் அணிந்து; புலித்தோலும் யானைத்தோலும் உடுத்தி; பாம்புகள் உடலில் நெளிய; உடுக்கை, அனல் ஏந்திய இரு கரங்களும் அபய ஹஸ்தம் - கஜ ஹஸ்தம் எனும் குறிப்புகொண்ட இருகரங்களுமாக... சிலம்பு, கழல், வீரகண்டாமணி பூண்ட திருவடிகளுடன் ஒரு பதம் எடுத்து ஆட; மற்றொரு பதம் முயலகனை மிதித்திருக்க, சிவ மந்திரங்கள் திருவாசிச் சுடர்களாய் ஒளி வீச; ஆயிரம் ரதிகள் ஒன்று சேர்ந்தாற்போல் அன்னை சிவகாமி இடது பக்கத்தில் மகிழ்ந்திருக்க; யாராலும் வர்ணிக்க முடியாத ஆனந்தத் திருக்கூத்தை நடராஜப்பெருமான் ஆடிக் காண்பித்தார்.

பதஞ்சலி, வியாக்கிரபாதர் எனும் இருவர் மட்டுமல்லாமல், அனைவரும் தரிசித்து மகிழ்ந்தார்கள். பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் கைகளைக் கூப்பித் தொழுதார்கள்; மனமாரத் துதித்தார்கள். அந்த இரண்டு ரிஷிகளின் வேண்டுகோளின்படி, அன்றுமுதல் அங்கே உலக மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி, சிதம்பரநாதர் தன் ஆனந்த தாண்டவத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

சக்தி கொடு! - 7

அற்புதமான இந்தத் தலத்தில் ஆனித் திருமஞ்சனம் விசேஷம் என்று பார்த்தோம் அல்லவா. வரும் ஆனி மாதம் 23-ம் நாள் (8.7.19) திங்கள்கிழமை அன்று ஆனி உத்திரத் திருநாள். இந்தப் புண்ணிய நாளில் சிதம்பரநாதனை தரிசித்து வாழ்க்கைச் செழிக்க வரம்பெற்று வாருங்கள்.ஆனி மாதத்துக்கு வேறோர் விசேஷமும் உண்டு. அதுபற்றியும் தெரிந்துகொள்வோமா!

வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதம் எழுதியது போல், மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, ஆதியும் அந்தமும் இல் லாத சிவபெருமான், தன் திருக்கரங்களால் எழுதிய ஞானப் பொக்கிஷம் - திருவாசகம். ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி.

கிறிஸ்தவரும் தலைசிறந்த தமிழ் அறிஞருமான ஜி.யு.போப், திருவாசகம் படித்து அதில் மூழ்கிப் போனதுதான் வியப்பு. அவர் கடிதம் எழுதும்போது, திருவாசகப் பாடல் ஒன்றை குறிப்பிடத் தவறுவதே இல்லை.

ஒரு முறை அவர் கடிதம் எழுதும்போது அவர் கண்களில் இருந்து நீர்த்துளிகள் கடிதத்தில் சிந்தின. அதனால் எழுத்துக்கள் ஆங்காங்கே அழிந்தன. எழுத்துக்கள் அழிந்ததற்காக அவர் வேறு கடிதம் எழுதவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அற்புதம்.

‘திருவாசகம் மட்டும் புனிதமானது அல்ல; அதை எழுதும்போது நான் வடித்த கண்ணீரும் புனிதமானது. அதனால்தான் வேறு கடிதம் எழுதாமல், கண்ணீர்த் துளிகள் பட்டு ஆங்காங்கே எழுத்துகள் அழிந்த நிலையில் உள்ள இந்தக் கடிதத்தையே அனுப்புகிறேன்’ என்றார்.

திருவாசகம் அந்த அளவுக்கு உயர்ந்தது. இதை நமக்காக அருளியவர் மாணிக்கவாசக ஸ்வாமிகள். மதுரைக்குக் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ள திருவாதவூர் எனும் திருத்தலத்தில் சம்புபாதாச்ரியர்- சிவ ஞானவதி தம்பதிக்கு மகனாக அவதரித்தார் மாணிக்கவாசகர். பதினாறாவது வயதில், மாணிக்கவாசகரின் புகழ் எங்கும் பரவியது. 

‘அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்’ என்ற வாக்குக்கு இணங்க, அரசர் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை அழைத்து அமைச்சராக்கினார். இதைத் தொடர்ந்து நிகழ்ந்த... மன்னன் குதிரைகள் வாங்கக் கொடுத்தப் பொருளைத் திருப்பெருந்துறையில் ஆலயம் கட்டுவதற்கு மாணிக்கவாசகர் செலவழித்தது, அவரின் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டது  ஆகிய திருக்கதைகளை அருளாடல்களை நாமறிவோம்.

அதன் பிறகு, மாணிக்கவாசகர் தனது அமைச்சர் பதவியைத் துறந்து தவக்கோலம் ஏற்றார். மதுரையில் ஆலவாய் அண்ணல் ஆலயத்தில் புகுந்து ஸ்வாமி தரிசனம் செய்து திருப்பெருந்துறையை அடைந்தார்.

சக்தி கொடு! - 7

ஏற்கெனவே திருப்பெருந்துறையில் குருவாய் வந்து தம்மை  ஆட்கொண்ட பெருமானை மனதில் நினைத்துப் பாடினார். அங்கிருந்த அடியார்களுக்கும் மாணிக்கவாசகருக்கும் தரிசனம் தந்தார் குரு வடிவான இறைவன். அத்துடன், ‘‘அடியார்களே! எதிரில் இருக்கும் பொய்கையில், ஒரு ஜோதி தோன்றும். உத்தமர்களான நீங்கள் ஒவ்வொருவராக அதில் புகுந்து எம்மை அடையுங்கள்’’ என்று சொன்ன ஸ்வாமி, ‘‘மாணிக்கவாசகா! நீ மட்டும் இன்னும் பல தலங்களை தரிசித்து, உள்ளத்தை அள்ளும் திருவாசகப் பாடல்களைப் பாடு. முடிவில் தில்லைக்கு வா’’ என்று கூறி மறைந்தார்.

கண்ணுதலோன் சொன்ன காலம் வந்தது. பொய்கையில் இருந்து ஒரு ஜோதி பொங்கி எழுந்தது. ஒவ்வொருவராகப் போய் அதில் கலந்தார்கள். சிவபெருமான் கட்டளைப்படி மாணிக்கவாசகர் அவர்களுடன் போகவில்லை.

`வேண்டும் நின் அடியார்
மெய்யன்பு எனக்கும்
அருள் செய் சிவனே அலந்தேன் அந்தோ
முறையோ முறையோ இறையோனே...’ 
என்று கதறினார். அவரது ஆற்றாமை பாடல்களாக வெளிப்பட்டது. அதன் பிறகு, பல தலங்களை தரிசித்து தில்லையை அடைந்தார் (திருவண்ணாமலை தரிசனத்தின் போது திருவெம்பாவை, திருவம்மானை ஆகியவை பாடப்பட்டன).

தில்லையில் அம்பலத்தாடும், ஸ்வாமியை தரிசித்து வழிபட்ட மாணிக்கவாசகர், அதன் எல்லையிலிருந்த சோலை ஒன்றில் தவம் செய்தார். ஒருநாள் அவரைத் தேடி வந்தார் வேதியர் ஒருவர். அவர் வந்து சேர்ந்த அதே வேளையில் மாணிக்கவாசகரின் தவம் கலைந்தது.

‘‘மாணிக்கவாசகரே! யாம் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன். நீங்கள் பாடிய திருவாசகப் பாடல் களைத் தொகுத்து ஏட்டில் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு நீங்கள் உதவவேண்டும்’’ என்றார்.

‘‘பரமனின் பிரபாவத்தை மறுபடியும் பாடச் சொல்கிறீர்கள். பெரும் புண்ணியமல்லவா அது’’ என்ற மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாடி னார். வேதியர் அவற்றை விரைந்து எழுதினார்.

‘‘பாவை பாடிய வாயால் கோவைப் பாடுக’’ என்று வேதியர் சொல்ல, மாணிக்கவாசகர் திருக்கோவையார் பாடினார் (திருவாசகமும் திருக்கோவையாரும் சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறை எனப்படும்). அதை எழுதி முடித்ததும், எழுதிய பாடல்களுடன் அங்கிருந்து மறைந்தார் வேதியர். திடுக்கிட்ட மாணிக்கவாசகர் எழுந்தார். வேதியரைத் தேடினார்.

‘தில்லையில் ஆடும் திருக்கூத்தனின் லீலை இது’ என உணர்ந்தார். உடல் சிலிர்த்தது. ஆனந்தக் கண்ணீர் அவர் உடம்பை அபிஷேகம் செய்தது. இறைவனே எழுதிய இனிய பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடி, தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் கையில் கிடைத்தது. அதில், ‘திருவாதவூரர் திருவாய் மலர்ந்தருள அழகிய திருச்சிற்றம்பலர் திருக்கையெழுத்து’ என இருந்தது. வியப்புடன் எடுத்தனர். அர்ச்சித்தனர். மாணிக்க வாசகரிடம் நடந்ததைச் சொல்லி, ‘‘திருவாசகத்தின் பொருளை இனிது உரையுங்கள்’’ என்று வேண்டினர்.

‘இறைவனின் திருவுள்ளக் குறிப்பு இது’ என உணர்ந்த மாணிக்கவாசகர், ‘‘அம்பலவாணர் (நடராஜர்) திரு முன்னால் வாருங்கள், சொல்கிறேன்’’ என்றார். எல்லோரும் பின்தொடர்ந்தனர். அன்று ஆனி மாமகம். அம்பலத்தை நெருங்கியதும் சிற்சபேசரான நடராஜரைச் சுற்றிக் காட்டிய மாணிக்கவாசகர், ‘‘இதுதான் பொருள்’’ என்று சொல்லியபடியே ஸ்வாமியை நெருங்கினார். பெரும் ஒளி வெள்ளம் எழுந்தது. அதனுள் புகுந்தார் மாணிக்கவாசகர். இரண்டறக் கலந்தார். மணிகள் ‘ஓம் ஓம்’ என ஒலித்தன.

மாணிக்கவாசகர் மோட்சம் அடைந்த இந்த நாள் சிதம்பரத்தில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. ஆனி மாத பிரம்மோற்சவத்தில் மகம் நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகர், பஞ்சமூர்த்திகளுடன் காலையில் திருவீதி வலம் வர, அவரை ஸ்வாமி முன் எழுந்தருளச் செய்வர். பின்பு இருவருக்கும் தீபாராதனை நடக்கும். சிவநேயச் செல்வர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய அற்புத வைபவம் அது!