Published:Updated:

பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!

பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!
பிரீமியம் ஸ்டோரி
பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!

பரணி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய நல்லாடை ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்

பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!

பரணி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய நல்லாடை ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்

Published:Updated:
பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!
பிரீமியம் ஸ்டோரி
பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!
பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!

‘இறைவனைப் பிரார்த்தித்து நாம் யாக அக்னியில் சமர்ப்பிக்கும் திரவியங்கள், இறைவனைச் சென்று சேருமா?’

‘ஆம்! நிச்சயமாகச் சேரும்’  என்று இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் அது!

கணவனுக்கோ, மனைவிக்கோ, அன்பான ஓர் உறவுக்கோ உடலில் ஒரு குறை ஏற்பட்டுவிட்டால், அதற்காக அவரை ஒதுக்கிவிடக்கூடாது என்பதை, இறைவியே தன் அருளாடல் மூலம் உணர்த்தி அருளிய உன்னதத் தலம் அது!

இறைவழிபாட்டைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் உரிய பலன் கிடைக்கவே செய்யும் என்பதை, இறைவன் வேடுவனாக வந்து புலியை சம்ஹாரம் செய்து உணர்த்திய திருத்தலம் அது!

இத்தனை மகிமைகளும் ஒருசேரப் பெற்ற அந்தத் தலம், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரத் தலமும்கூட! இறைவன் அக்னி ஸ்வரூபமாகக் காட்சி தரும் அந்தத் தலத்தை தரிசிப்போமா!

பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகை மாவட்டம் நல்லாடை எனும் சிற்றூரில், அமைதி தவழும் சூழலில் அமைந்திருக்கிறது, சுமார் 2,000 வருடங்கள் பழைமை வாய்ந்த அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்.

மேற்கு வாயில் வழியாக ஆலயத்துக்குள் செல்கிறோம். கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்து ஆலயத்துக்குள் செல்கிறோம். கருவறையில் அருள்மிகு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். ஐயனின் சந்நிதிக்கு வலப்புறத்தில் அடுத்தடுத்து இரண்டு அம்பிகை சந்நிதிகள் தெற்கு நோக்கி அமைந்திருக்கின்றன. அம்பிகையரின் திருப்பெயர்கள்: சொக்கநாயகி, சுந்தரநாயகி.

அம்பிகைக்கு இங்கு இரண்டு சந்நிதிகள் அமைந்திருப்பதன் பின்னணியில் சிலிர்ப்பூட்டும் சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது. அதுபற்றிப் பார்ப்பதற்கு முன்பு, கோயில் தோன்றிய திருக்கதையைத் தெரிந்துகொள்வோம்.

வேடனாக வந்து சுயம்புவானார்!

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக தர்ப்பை வனமாக இருந்த இந்தப் பகுதியில், மிருகண்டு மகரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை மேற்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ராஜாவுக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. தன்னுடைய மூன்று மகன்களில், தஞ்சாவூர் அரண்மனையை நிர்வகிக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பது பற்றி முடிவெடுக்க முடியாத நிலை. ராஜகுருவைச் சந்தித்த மன்னர், தன் குழப்பம் தீர ஒரு வழி சொல்லும்படிக் கேட்டார்.

தான் சொல்லும் பரிகாரம் மன்னரின் குழப்பத்தைத் தீர்ப்பதுடன், மக்களுக்கும் அதனால் ஏதேனும் பலன் ஏற்படவேண்டும் என்று நினைத்தார் ராஜகுரு. ஆகவே, கோயில் இல்லாத ஊரில் கோயில் கட்டும்படியும், குளம் இல்லாத ஊரில் குளம் வெட்டும்படியும், சத்திரம் இல்லாத ஊரில் சத்திரம் கட்டும்படியும் கூறினார். பிறகு, ‘இருபத்தியொரு சிவாலயங்களை நடந்தே சென்று தரிசித்துவிட்டு வந்தால், உன் பிள்ளைகள் மட்டுமல்லாமல், உன் சந்ததியினர் அனைவரும் ராஜயோகத்துடன் வாழ்வார்கள்’ என்றும் கூறினார்.

ராஜகுரு கூறியபடியே அந்த ராஜாவும் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டார். அவர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, அவர்கள் கொண்டு வந்திருந்த உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது (அந்த இடம் தற்போது கொல்லுமாங்குடி என்று அழைக்கப்படுகிறது).  எனவே, ராஜா தன் பரிவாரங் களை அரண்மனைக்கு அனுப்பி, உணவு தயாரித்து எடுத்து வரும்படி ஆணையிட்டார். அவர் அங்கேயே இளைப்பாறினார். மாலை நெருங்கும் நேரத்தில் ராஜாவின் மனதில், ‘இரவு எங்கே தங்குவது?’ என்ற குழப்பம் ஏற்பட்டது. சுற்றுமுற்றும் பார்த்த ராஜாவின் கண்களில் மிருகண்டு மகரிஷியின் குடில் தென்பட்டது. மகரிஷியிடம் சென்று அன்றிரவு தங்குவதற்கு அனுமதி கேட்ட ராஜாவிடம், மிருகண்டு மகரிஷி விவரம் கேட்டார்.

பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!

ராஜா கூறியவற்றைக் கேட்ட மகரிஷி, ‘`அப்பனே, நீ இருபத்தியொரு சிவாலயங்களை தரிசிக்கவேண்டாம். நாளை மகா சிவராத்திரி. நீ பதினைந்து இருபது மைல்களுக்குள் அமைந் திருக்கும் நான்கு சிவாலயங் களை நான்கு கால பூஜைகளில் தரிசித்துவிட்டு, அர்த்தஜாம பூஜைக்கு உன்னுடைய ஊருக்குச் சென்றுவிடவேண்டும். அப்படிச் செய்தால் நூற்றியெட்டு சிவாலயங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்’’ என்று கூறினார்.

மகரிஷி கூறியபடியே மறுநாள் அதிகாலையில் எழுந்த ராஜா, நீராடி முடித்து சிவத்தலங்களை தரிசிக்கப் புறப்பட்டார். சுமார் இரண்டு காத தூரம் நடந்து செருபுலியூர் என்ற ஊரை அடைந்தார். பெயருக்கேற்ப அந்தப் பகுதி புலிகள் நிறைந்த பகுதி. ராஜாவைப் பார்த்துவிட்ட ஒரு புலி, அவரைத் துரத்தத் தொடங்கியது.

புலிக்கு அஞ்சி ஓடிய ராஜா, இதோ இப்போது நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் இந்தத் தலத்தை அடைந்தார். அப்போது இங்கே கோயில் எதுவும் இல்லை. ஒரு வில்வ மரத்தினடியில்தான் இறைவன் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். ராஜா, வில்வ மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டார். புலியும் மரத்தின் அடியிலேயே தங்கிக் காத்திருந்தது!

நேரம் சென்றுகொண்டே இருந்தது. பகல் முடிந்து இரவும் தொடங்கியது. ராஜாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இரவு தூங்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வில்வதளமாகப் பறித்துக் கீழே போட்டுக்கொண்டே இருந்தார். ராஜா போட்ட வில்வதளங்கள், கீழே இருந்த சிவலிங்க மூர்த்தத்தின் மீது விழுந்தன. தெரிந்தோ தெரியாமலோ சிவராத்திரியின் நான்கு காலமும் வில்வதளத்தால் தன்னை அர்ச்சித்த ராஜாவைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், வேடனாக வந்து புலியை சம்ஹாரம் செய்தார். புலி கொல்லப்பட்டதும் கீழே இறங்கி வந்த ராஜா, வேடனைப் பற்றிய விவரம் கேட்டார்.

வேடனாக வந்த சிவபெருமானோ, மன்னனை அங்கே அனுப்பிய மகரிஷியிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளும்படிக் கூறிவிட்டார். இந்த ஈஸ்வரனே, நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கோயிலின் மேற்குப் பகுதியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

யாகத்தில் தோன்றிய பரமன்!

வேடன் சொன்னபடி மிருகண்டு மகரிஷியிடம் சென்று விவரம் கேட்டார் மன்னர்.

‘`உனக்கு முன்பாகத் தோன்றிய இறைவனை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே. சரி என்னுடன் வா’’ என்று சொல்லி, ராஜாவை அழைத்துக்கொண்டு, இறைவன் வேடனாக வந்து புலியை சம்ஹாரம் செய்த இடத்தை அடைந்தார்.

‘`கோயில் இல்லாத இடத்தில் கோயில் கட்டும்படி உன் ராஜகுரு சொன்னபடி, இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் ஆறு கால பூஜைகளுக்கு ஏற்பாடு செய்’’ என்று கூறினார்.

கோயில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகளும் தொடங்கின. அப்போது திருவிடைமருதூர், திருபுவனம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள், கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஏதேனும் செய்ய விரும்பி, மூன்று பட்டாடைகளை நெய்து கொண்டு ராஜாவிடம் வந்தனர். ஒன்றை யாகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் மற்ற இரண்டை மகரிஷியும் மன்னரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறி மன்னரிடம் கொடுத்தனர்.

பரமன் ஏற்றுக்கொண்ட பட்டாடை!

யாகத்துக்கும் மகரிஷிக்குமான பட்டாடை களை ஏற்றுக்கொண்ட மன்னர், தனக்குக் கொடுக்கப்பட்ட பட்டாடையை அவர்களிடமே திருப்பிக்கொடுத்தார். அதில் தனக்கு இறைவன் அருளிய விவரங்களைப் பொறித்து எடுத்துவந்து இறைவனுக்கு அணிவிக்கும்படியும், அதன் மூலம் இறைவனின் அருள்திறனை அனைவரும் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறி அனுப்பினார். அந்த மக்களும் அப்படியே நெய்துவந்து கொடுத்தனர்.

மகரிஷியோ யாகத்துக்குக் கொடுத்த பட்டு வஸ்திரத்துடன், தனக்கும் இறைவனுக்கும் கொடுத்த பட்டு வஸ்திரங்களையும் யாகத்தில் ஆஹுதியாகக் கொடுத்துவிட்டார்.இறைவனுக்குக் கொடுத்த வஸ்திரத்தையும் யாகத்தில் போட்டுவிட்டதைக் கண்ட மன்னர் மனம் வருந்தினார். அவரின் வருத்தத்தைப் போக்கத் திருவுள்ளம்கொண்ட மகரிஷி, இறைவனைப் பிரார்த்தித்தார். யாகாக்னியில் மகரிஷிக்கு மட்டும் பிரத்தியட்சமான இறைவன், மன்னரின் மனக்குறையைத் தாம் போக்குவதாகக் கூறி மறைந்தார்.

மறுநாள் காலை கும்பாபிஷேகம் முடிந்து ஈசனின் சந்நிதிக்குச் சென்ற போது, அனைவருக்கும் ஆச்சர்யம் காத்திருந்தது. ஆம்! இறைவனுக்காக யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட பட்டாடை இறைவனின் திருமேனியை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அனைவருக்கும் அந்த அற்புதத் துக்கான காரணத்தை விளக்கினார் மகரிஷி.

‘`நாம் இறைவனுக்கு யாகத்தில் அளிக்கும் திரவியங்களை, பரணி எனும் ருத்ராக்னி சூட்சுமமாகக் கொண்டு சென்று இறைவனிடம் சேர்க்கிறது. அதை நம்மால் காணமுடியாது. இந்தத் தத்துவத்தை மன்னரும் மக்களும் புரிந்து கொள்ளவே இறைவன் என் மூலம் இப்படியோர் அருளாடல் நிகழ்த்தினார்’’ என்று கூறினார். அக்னியில் இடப்பட்ட பட்டாடை நல்ல ஆடையாக இறைவனின் திருமேனியைச் சேர்ந்ததால், இந்த ஊருக்கு ‘நல்லாடை’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், யாகாக்னியில் பிரத்தியட்சமானதால் ‘அக்னீஸ்வரர்’ என்று இந்த இறைவன் திருப்பெயர் கொண்டதாகவும் தலவரலாறு.  ``மகரிஷிக்கு இறைவன் யாகாக்னியில் பிரத்தியட்சமானது பரணி நட்சத்திர நாள் என்பதால், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டு அருள் பெறக்கூடிய பரிகாரத்தலம் இது’’ என்று கூறுகிறார் கோயில் குருக்கள்.

ஆலயத்தை வலம் வருகிறோம்.  பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, மஹாவிஷ்ணு, துர்கை, வீரபத்திரர், பைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதி களை தரிசிக்கலாம்.

சரி, இந்தத் தலத்தில் இரண்டு அம்பிகை சந்நிதிகள் ஏன்?

கனவில் தோன்றிய அம்பிகை!

அந்தக் காலத்தில் முத்தப்பையர் என்பவர் இந்தக் கோயிலின் தக்காராக இருந்தார். ஒருநாள் கோயிலில் கொள்ளையிட வந்த திருடன் ஒருவன், தன்னுடைய முயற்சி பலிக்காமல் போகவே, சொக்கநாயகி அம்பிகையின் சிலையைப் பின்னப் படுத்திவிட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் கோயிலுக்கு வந்து பார்த்த தக்கார், அம்பாளின் சிலை பின்னப்பட்டிருப்பதைக் கண்டு, அந்தச் சிலையை அப்புறப்படுத்தி கோயிலுக்குப் பக்கத்திலிருந்த குளத்தங்கரையில் போட்டு விடும்படிக் கூறினார். அன்றிரவே தக்காரின் கனவில் தோன்றி அவரை ஓங்கி அறைந்த அம்பிகை, ‘`உன் மனைவி அல்லது தாயின் கை ஒடிந்துவிட்டால் அவளை நீ ஒதுக்கிவிடுவாயா’’ என்று கேட்டாள். தன் தவற்றை உணர்ந்த தக்கார், சொக்கநாயகி அம்மன் சிலையை மறுபடியும் பிரதிஷ்டை செய்ததுடன், நித்திய பூஜைகளுக்காகப் புதிய சிலை ஒன்றைச் செய்து, சுந்தரநாயகி என்ற திருப்பெயருடன் பிரதிஷ்டை செய்தார். இதன் மூலம் உறவுகளின் மேன்மையை உலகத்தவர்க்கு உணர்த்தினாள் அன்னை சொக்கநாயகி!

இப்படிப் பல தத்துவங்களை நமக்கு நிதர்சனமாக உணர்த்தியருளிய அக்னீஸ்வரரையும், சுந்தரநாயகி, சொக்கநாயகி தேவியரையும் மனமுருக வழிபட்டுவிட்டு, ஆலயத்தை விட்டுப் புறப்படுகிறோம்.

-எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: க.சதீஷ்குமார்

பரமனும் பரணி வழிபாடும்!

ந்த ஆலயத்தின் கருவறையில் சிவலிங்க மூர்த்தத்தைச் சுற்றித் தாழ்வான பகுதி காணப்படுகிறது. இறைவன் அக்னி சொரூபமாக இருப்பதால், அவருடைய வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

இந்த இறைவன் பரணி நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பலதரப்பட்ட தோஷங்களிலிருந்து விடுபட வணங்கவேண்டிய பரிகாரக் கோயில் இது. அக்னீஸ்வரரை வழிபட்டால் பகைவர் தொல்லை, மரணபயம், நோய்கள் ஆகியவை நீங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதிகம்.

குறிப்பாக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது, அளவற்ற நலன்களைத் தரும் என்று சொல்லப்படுகிறது.

பக்தர்கள் கவனத்துக்கு...

ஸ்வாமி: அருள்மிகு அக்னீஸ்வரர்

அம்பாள்: அருள்மிகு சொக்கநாயகி அருள்மிகு சுந்தரநாயகி

திருவிழாக்கள்: ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, மார்கழி உற்சவம், மகா சிவராத்திரி புலி சம்ஹார வைபவம், பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 12 மணி வரை: மாலை 5 முதல் 8.30 மணி வரை

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறை - காரைக்கால் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நல்லாடை அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில். பஸ் வசதி உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism