திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 7

கண்டுகொண்டேன் கந்தனை - 7
பிரீமியம் ஸ்டோரி
News
கண்டுகொண்டேன் கந்தனை - 7

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 7

சிறுவைதனில் மேவு பெருமாளே!

ருணகிரியார் மற்ற எந்தத் தலத்திலும் காணாத சிறப்பை, உயர்வை, அருமையை, பெருமையை சிறுவாபுரியில் அனுபவித்துள்ளார் போலும்.   கந்தவேளின் திருவருளால் கிடைத்த அப்படியான அனுபவமே, ‘எப்போதும் அடியார்கள் மனதையே இருப்பிடமாகக்கொண்டவன், குளிர்ந்த சிறுவை எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான்’ என்று பாடவைத்தது போலும்.

`சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தன் சிறுவைதனில் மேவு பெருமாளே’


அற்புதமான இந்த வரியைப் படித்து, சிந்தித்துச் சிந்தித்து இன்புற்று மகிழ்வேன். இந்த வரியே எனக்குத் தாரக மந்திரமாகி எங்கும் பேசவைத்தது. எந்த இலக்கிய - ஆன்மிகக் கூட்டங்களானாலும் இந்த வரியை முதலில் சொல்லி பிரார்த்தனை செய்துவிட்டுப் பேச்சைத் தொடங்குவது என்ற வழக்கத்தை மேற்கொண்டேன்.

கண்டுகொண்டேன் கந்தனை - 7

சிறுவாபுரிக்கு உரிய திருப்புகழ் பாடல்களில் ‘சீதளவாரிஜ பாதா நமோ நம...’ என்று தொடங்கும் அர்ச்சனைப் பாடல் (நாதவிந்து  கலாதி நமோ நம பாடலைப் போன்று) அமைந்துள்ளது. இப்பாடலின் தனிச்சிறப்பு, ஆதிசங்கரர் வழிகாட்டிய அறுவகை (சமய) வழிபாட்டை அருணகிரியார் போற்றி யுள்ளதுதான். முருகப்பெருமான் அறுவகை (ஷண்மத) வழிபாட்டிலும் தொடர்புடையவன். கணபதியின் சகோதரன் (காணாபத்யம்); நீறணிந்த சிவபிரான் நேயன் (சைவம்); ஒளி வடிவினன் (செளரம்); லட்சுமிதேவியின் மருகன் (வைணவம்); பார்வதியின் புதல்வன் (சாக்தம்); பாடலே முருகனுக்குரிய (கெளமார) தோத்திரமாக அமைந்துள்ளது.

போதக மாமுகன் நேரான சோதர
நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
பூமகளார் மருகேசா
பார்வதியாள் தரு பால நமோநம
பாலகுமார சுவாமி நமோநம அருள் தாராய்


- என்ற இந்தத் திருப்புகழைப் படித்தாலே, அறுவகை சமய வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்று 650 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவைத்துள்ள அருணகிரியாரின் தீர்க்கதரிசனம்தான் என்னே! இறையன்பர்கள், தினமும் ஒருமுறையாவது இந்தத் திருப்புகழைப் பாடி இன்புறலாமே!

இப்படி, ஒவ்வொரு பாடலிலும் அற்புதமாய் தித்திக்கும் சிறுவாபுரித் திருப்புகழ்ச் சிந்தனையுடன், 1978-ம் ஆண்டு மீண்டும் சிறுவாபுரி முருகனை தரிசிக்கச் சென்றேன். அன்று அந்தத் திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆறாம் நாளாகும். அன்றுதான் அந்தப் பல்லவர் காலத்து பிரம்ம சாஸ்தா வடிவை தரிசித்தேன்.

கண்டுகொண்டேன் கந்தனை - 7

ஒருமுகம் நான்கு கரங்களுடன், மேற்கரங்களில் கமண்டலம், ஜபமாலை ஆகியவை திகழ, கீழிரு கரங்களில் வலக்கரம் அபயம் காட்ட, இடக்கரம் தொடையில் அமைந்த கோலம் அது. பிரம்மனிடம் பிரணவத்துக்குப் பொருள் கேட்டு, அவன் திகைத்தபோது அவனைச் சிறையிலடைத்துவிட்டு, தாமே சிருஷ்டித்தொழிலை நடத்தியதால், பிரம சாத்தன் - பிரம்மனைத் தண்டித்தவன் என்று இந்தத் திருவடிவத்துக்குப் பெயர். பல்லவர் காலத்தில் பல கோயில்களில் இந்தக் கோலத்தைப் (குறிப்பாக தொண்டைமண்டலத்தில்) பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இந்த மூர்த்தியை வழிபட்டால், பிரம்மவித்தை கைகூடும் என்பது பல்லவர்களது நம்பிக்கை.

முருகன் திருவருட்சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டு 1978-79-ல் நடைபெற்றபோது, அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் சுப்ரமணியன் உதவியுடன் 25 திருக்கோயில்களில் `திருப்புகழ்' கல்வெட்டு பதிக்கப்பட்டது. சிறுவாபுரி தலத்துக்குரிய நான்கு பாடல்களைத் தவத்திரு சாதுராம் சுவாமிகள் திறந்துவைத்தார்.

சிறுவாபுரியின் வரலாற்றுச் சிறப்புகளை - திருப்புகழ் பாடல்களின் மகத்துவத்தை ‘சிந்தையில் குடிகொண்ட சிறுவை முருகன்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாக எழுதினேன். 22.6.1980 தேதியிட்ட தினமணிக்கதிரில் முதன் முதலில் அந்தக் கட்டுரை வெளிவந்தது. மலேசியாவிலிருந்து வெளிவரும் ‘தமிழ்ச்சுடர்’ என்ற நாளிதழில் அக்கட்டுரை மீண்டும் அச்சிடப்பட்டது. அதன்பிறகு, அடிக்கடி சிறுவாபுரிக்குச் சென்று முருகனை தரிசிக்கும் பேறு கிடைத்தது.

இதனிடையே கந்தவேள் வழிகாட்ட, மாதாமாதம் இரண்டாவது ஞாயிறன்று காலையில் சிறுவாபுரி முருகனுக்கு ஓர் அபிஷேக வழிபாடு செய்துவரலாம் என்று திட்டமிட்டோம். அந்த அமைப்புக்கு `சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு’ என்று பெயரிட்டோம் (அபிஷேகம் என்ற சொல்லுக்குத் திருமுடி கிரீடம் என்றும் பொருள் உண்டு). மாதம் ஒரு ரூபாய் என்று ஐம்பது அன்பர்களிடம் காணிக்கை பெற்று, ஏதாவது ஓர் உறுப்பினர் சிறுவாபுரிக்குச் சென்று அபிஷேகம் செய்து வந்தபின், அவரவர்க்கு விபூதி பிரசாதம் கொடுப்பது என்ற ஏற்பாட்டில், இந்த வழிபாடு தொடர்ந்தது.

முருகப்பெருமானுக்கு என்னென்ன பொருள்களால் எப்படியெல்லாம் அபிஷேகம் செய்யவேண்டும் என்ற வழிமுறையை உருவாக் கினோம்.

திருவாலங்காட்டில் திருவாதிரையன்று நடைபெறும் மகா அபிஷேகம் மற்றும் திருப்பூர் குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழுவினர் நடத்தும் அபிஷேகங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அபிஷேக வழிமுறைகளைப் பின்பற்றினோம்.

கண்டுகொண்டேன் கந்தனை - 7

சின்னம்பேடு என்ற ஊரின் பெயரைச் `சிறுவாபுரி' என்று மக்களிடையேயும் பத்திரிகை களில் எழுதியும் பிரசாரத்தில் கொண்டுவர ஆரம்பித்தோம். ஏனெனில், பேடு என்றால் உடற்குறை (அங்கஹீனம்) என்று பொருள். உடற்குறைக்கு அவ்வூரில் சின்னம் - அடையாளம் வைத்துள்ளார்களா என்ன!  சிறுவாபுரி என்ற சொல்லுக்கு சிறுவா (முருகனே) புரி (அருள்புரி) என்ற அற்புதமான வேண்டுகோள் உள்ளதே!

அருணகிரியாரின் வாக்கில் ஒவ்வொரு சொல்லுக்கும் அரிய-உரிய பொருள் உண்டல்லவா. அந்த முறையில் அந்தத் தலத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பல திட்டங்களைக் கந்தனிடம் வேண்டினோம். ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று சென்னையிலிருந்து பாதயாத்திரை செல்வது (25 ஆண்டுகள் நடைபெற்றது), ஸ்கந்த சஷ்டி விழாவைக் கொண்டாடுதல், பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் திருப்புகழ், தேவாரம், திவ்யபிரபந்தம் ஆகிய தெய்விகப் பாடல்களில் இசைப்போட்டிகள் நடத்துதல், திருமுறை திருப்புகழ் அடியார்களுக்குப் பட்டமளித்துப் பாராட்டி கெளரவித்தல், தோத்திர நூல்கள் வெளியிடுதல், ஜனவரி 26 அன்று சிறுவாபுரி சிவன், முருகன், திருமால் கோயில்களில் மிகப்பெரிய அளவில் விசேஷ அபிஷேகம், வழிபாடு, அன்னதானம் செய்தல், அடியார் பெருமையைக் கூறும் சிறப்புத் தலம் ஆதலால், ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 அன்று அடியார்கள் தினமாகக் கொண்டாடுதல் என்றும் நடத்தி வந்தோம்.

அத்துடன், திருப்புகழ்ப் பாடல் பெற்ற சில தலங்களின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக வைபவங்களிலும் பொறுப்பேற்று மகிழ்ந்தோம்.

1992-ம் ஆண்டில் சிறுவாபுரி மூலவர் விக்கிரகம் பின்னமடைந்ததால், இந்து சமய அறநிலையத்துறையினரால் புதிய விக்கிரகம் மகாபலிபுரத்தில் செய்யப்பட்டது. சிறுவாபுரிக்குத் தொடர்ந்து வழிபாட்டுக்கு வரும் சில அமைப்புகளைச் சேர்ந்த முருகனடியார்கள் ஒத்துழைப்புடன், 11.7.1993 அன்று சிறுவாபுரி பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயிலில் புதிய விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. அரசியல் பிரபலங்களோ வேறு முக்கியஸ்தர்களோ எவரும் கலந்துகொள்ளாமல், முழுக்க முழுக்க அடியார்கள் பொறுப்பேற்று நடத்திவைத்த மகா கும்பாபிஷேகம் அது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து கந்தவேள் ஆற்றுப்படுத்திய வகையில், சிறுவாபுரி முருகன் குழுவினரால் 12.6.1994 அன்று ‘வள்ளி மணவாளப் பெருமான்’ எனும் ‘வள்ளி கல்யாண சுந்தரர்’ பஞ்சலோக விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தேசிய விருதுபெற்ற சிற்பக்கலைச் செல்வர் சுவாமி மலை திருஎஸ்.தேவசேனாபதி ஸ்தபதியார் இந்தப் பஞ்சலோகப் படிமத்தை உருவாக்கினார்.

இந்த வடிவத்துக்கும் சிறுவாபுரி மூலஸ்தான விக்கிரகத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

என்ன தெரியுமா?

- காண்போம்...

பனித்தச் சடையுடன்...

கண்டுகொண்டேன் கந்தனை - 7

சிவத்தலங்களில் நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிஷேகம் நடைபெறும். ஆனால், பேரூர்- ஸ்ரீபட்டீஸ்வரர் ஆலயத்தில் மட்டும், வருடத்துக்கு 10 அபிஷேகங்கள்! பங்குனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் ஒரே தலமும் இதுதான்!

கோயம்புத்தூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் (சிறுவாணி பிரதான சாலையில்) உள்ளது பேரூர். இங்குள்ள பட்டீஸ்வரர் ஆலயம், கரிகாலச் சோழனால் கட்டப்பட்டதாம். இங்கே நடராஜர் எழுந்தருளி உள்ள கனகசபை மண்டபத்தைக் கட்டி முடிக்க சுமார் 36 வருடங்கள் ஆனதாம். ஸ்தூல சரீரத்தில் (உடம்பில்) அடங்கியுள்ள 36 தத்துவங்களைக் குறிக்கும் வகையில் 36 தூண்களுடனும், உடம்பின் நவ துவாரங்களைக் குறிக்கும் 9 ஜன்னல்களுடனும் அமைந்திருக்கிறது இந்த மண்டபம்.

இங்கு அருளும் நடராஜர், ஆனந்த தாண்டவம் ஆடியவர் ஆதலால், விரிசடையுடன் இல்லாமல் பனித்தச் சடையுடன் காட்சி தருவது விசேஷம்!