Published:Updated:

தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!

தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!
பிரீமியம் ஸ்டோரி
தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு வெயிலுகந்தம்மன்

தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு வெயிலுகந்தம்மன்

Published:Updated:
தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!
பிரீமியம் ஸ்டோரி
தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!
தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!

ல நூறு ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவம் அது. கோடை காலத்தின் ஒரு மதியப் பொழுதில், திருப்பரங்குன்றத்துக்கு அருகில் அமைந்திருந்த தென்கால் கண்மாயில் தண்ணீர் பருகிக் கொண் டிருந்தாள் சிறுமி ஒருத்தி. அந்தச் சிறுமியை அதுவரை அந்தப் பகுதியில் கண்டிராத மக்கள்,   “யாரம்மா நீ?” என்று விசாரித்தனர்.

நீர் அருந்திய குளுமையையும் மீறிய வெம்மை யைத் தன் பார்வையில் கொண்டிருந்த அந்தச் சிறுமி, ``வெயிலுக்கு இளைப்பாற அமர்ந்திருக்கேன். இதோ, கொஞ்சநேரத்தில் கிளம்பிருவேன்” என்று பதில் சொன்னாள். அவர்கள், வேறு கேள்வி  கேட்கத் தோன்றாமல் அங்கிருந்து நகர்ந்தனர்.

நீண்டநேரம் கழித்து, அந்தப் பகுதி வழியாகச் சென்ற வேறு சிலர் வேறொரு காட்சியைக் கண்டு திகைத்தனர். ஆம்! முன்பு வந்தவர்களுக்கு சிறுமியாய்க் காட்சி தந்தவள், இவர்களுக்கு வேறு விதமாகக் காட்சி தந்தாள். எட்டு கரங்களுடன், ஆங்காரரூபினியாய் தன் இடது காலால் அசுரன் ஒருவனை மிதித்தபடியும், வலது காலினை மடித்து வைத்த கோலத்திலும் அமர்ந்திருந்தாள்!

தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தக் காட்சியைக் கண்டு அஞ்சி நடுங்கிய அன்பர்கள், ஊருக்குள் சென்று தகவல் சொன்னார்கள். ஊரே திரண்டு வந்தபோது, அங்கு அமர்ந்திருந்த அன்னையைக் காணவில்லை. தங்களின் இடத்துக்குத் தேடி வந்து அமர்ந்தவள், அன்னை பராசக்தியின் அம்சமே என்று கருதிய மக்கள், சிறுமியாகவும் தேவதையாகவும் அவள் காட்சி தந்த இடத்தில் சிறு கல்லை நட்டு வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். வெயிலுக்காக வந்து அமர்ந்ததால் அவளுக்கு ‘வெயிலுகந்த அம்மன்’ என்று திருப்பெயர் சூட்டினார்கள். பிற்காலத்தில், இந்த அம்மனின் பெருமைகளை அறிந்த திருமலை நாயக்கர், அந்த இடத்தில் பெரிய கோயில் ஒன்றைக் கட்டினார்.

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்திலுள்ள வீதியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கு முன்பாக இரண்டு பிரமாண்ட துவார பாலகர்கள் காணப்படுகின்றனர். பிரதான தெய்வமாக வெயிலுகந்த அம்மன் அமர்ந்திருக்க, விநாயகர், கருப்பண்ணன், காலபைரவர்,  நவகிரகங்கள், அர்த்தநாரீஸ்வரர், மாணிக்கவாசகர், கத்தரிக்காய் சித்தர், வேதாலம்மன் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். நாகப் புற்று ஒன்றும் உள்ளது. பிராகாரத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களின் வரைபடங்கள் காணப்படுகின்றன.

அந்நியரின் படையெடுப்பின்போது வெயிலுகந்த அம்மனின் (ஆதி சிலை) தலைப்பகுதி  வெட்டப்பட்டதாம். எனவே, அந்தச் சிலைக்கு மாற்றாக புதிய சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். எனினும், பழைய சிலையையும் ஆலய வளாகத்திலேயே வைத்திருக்கின்றனர்.

தினமும், மூல அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுவது போலவே, இந்தச் சிலைக்கும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!

கருவறையில் இருக்கும் அம்மனின் சிரசில் தினமும் மதியம் 12 முதல் 12.15 மணி வரை சூரியக் கதிர்கள் படுகின்றன. கடுமையான வெயிலைத்  தான் தாங்கிக்கொண்டு, மக்களுக்குக் குளுமையை அருள்கிறாள் அம்மன் என்பது ஐதிகம். அதனால், வெயிலால் உண்டாகும் நோய்கள் தீர, இந்த அம்மனின் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள் மக்கள்.

ஆலயத்தின் பூசாரியான சங்கரிடம் வழிபாட்டுச் சிறப்புகள் குறித்து கேட்டோம்.

“இந்த அம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள். மக்கள், வெயிலால் ஏற்படும் தோல் நோய்கள் நீங்க இங்கே வந்து நேர்ந்துகொள்கிறார்கள். பிணிகள் சரியானதும் கோயிலுக்கு வந்து, உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொள்வது, பாத பொம்மை காணிக்கை செலுத்துவது, பொங்கல் வைப்பது என்று பல்வேறு பிரார்த்தனைகளைச் செய்து வழிபடுகிறார்கள்.

அதேபோல், உப்பும் மிளகும் வாங்கி வந்து கோயிலில் போட்டால், நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டிச் செய்யப்படும் பொம்மை கொண்டு வரும் சடங்கும் வழிபாடும் இங்கே விசேஷம்'' என்றார் சங்கர்.

ஆடி மாதத்தில் திருவிழாக்கோலம் காண்கிறது இந்தக் கோயில். அதேபோல் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோயிலின் உற்சவர் திருமேனி, திருப்பரங்குன்றம் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விழா காலங்களில் உற்சவர் அம்பாள் எழுந்தருளி வீதியுலா காண்பாள். அந்த நாள்களில் கோயிலில் பொங்கல் வைத்தல், மாவு சாத்துதல், பூப்பல்லக்கு ஆகியவை சிறப்பாக நடைபெறும்.

தேடி வந்தாள்... கோயில் கொண்டாள்!

இந்தக் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலின் முன்பாக நடை பெறும் நாடகம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பல தலைமுறைகளாக இந்த நாடகத்தை நடத்தும் கலைஞர்களுக்கு, ஒரு காலத்தில் 60 கட்டி உப்பில்லா சோறும், 6 மரக்கால் மிளகும்  கூலியாக வழங்கப்பட்டனவாம். ஒரு முறை இந்த நாடகத்தைக் கண்ட திருமலைநாயக்கர், கலைஞர்களுக்கு வேண்டிய வேண்டிய அளவு நிலத்தைத் தானமாக வழங்கினாராம். திருமலை நாயக்கரால் மெச்சப்பட்டதால் அந்தக் குழுவினருக்கு ‘திருமலை மெச்சான்’ என்ற பெயர் நிலைத்தது. இப்போதும் அந்தக் கலைஞர்கள், தங்களின் மரபுப்படி, உப்பில்லா சோறும் மிளகு ரசமும் மட்டுமே பெற்றுக்கொண்டு நாடகம் நடத்திக்கொடுக்கிறார்கள்.

கோயிலுக்கு வந்த பக்தர்களில் ஒருவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “நாங்கள் மதுரை சாமநத்தம் பகுதியிலிருந்து வருகிறோம். ஆண்டுதோறும் மாசி, ஆடி மாதங்களில் தவறாமல் அம்மனை தரிசிக்க வந்துவிடுவோம்.  அதேபோல், எப்போதெல்லாம் திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வருகிறோமோ, அப்போது இந்த அம்மனையும் தரிசிக்காமல் திரும்புவதில்லை.

 மிகவும் துடியான தெய்வம் இவள். என் பேத்திக்குக் கழுத்திலிருந்த கட்டி குணமானால், அவளுக்கு மொட்டை அடித்து அம்மனுக்குப் பொங்கல் வைத்து வழிபடுவதாக வேண்டியிருந்தேன். வேண்டுதல் பலித்தது. இதோ அம்மனுக்கு நன்றிசெலுத்த வந்துவிட்டோம்'' என்றார் அவர்.

ஆம்! மதுரை-திருப்பரங்குன்றம் சுற்று வட்டாரத்து மக்கள் அனைவருக்கும் காவல் தெய்வமாகத் திகழ்கிறாள் இந்த வெயிலுகந்தாள்.   நீங்களும் மதுரைப்பக்கம் செல்லும்போது, அவசியம் இந்த அம்மனை வழிபட்டு வாருங்கள்; உங்கள் எதிர்காலம் சிறக்கும்; வாழ்க்கை செழிக்கும்!

-அருண் சின்னதுரை, படங்கள்: வி.சதிஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism