மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 7

புண்ணிய புருஷர்கள் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள் - 7

அருள்செய் சிவனே!

புண்ணிய புருஷர்கள் - 7

பூக்கள், இறைவனுக்காகவே மண்ணில் மலர்ந்த  தியாக தீபங்கள். எந்தச் செடியும் தனக்காகப் பூப்பதில்லை. இறைவனின் அடியார்களும் அப்படித்தான். ஒவ்வோர் அடியாரும் ஏதோ ஒருவிதத்தில் தன்னை இறைப்பணிக்காக அர்ப்பணித்துக்கொண்டிருப்பார். ஐயா ஜோதிராமன் - அம்மையார் சுஜிந்தி தம்பதியும் தங்களை இறைவனுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்களே. 

புண்ணிய புருஷர்கள் - 7

முருக நாயனார் இறைவனுக்காக விதவிதமாக மாலைகள் தொடுக்கும் பேறுபெற்றவர். ஈசனின் பூஜைக்கு விதவிதமான மலர்களைக்கொண்டு மாலை, தார், கோதை, கண்ணி, தெரியல், தொடையல், ஒலியல், தாமம், கோவை, பிணையல், இண்டை என முருக நாயனார் தொடுத்த மாலை வகைகள் அற்புதமானவை. அந்தக் கால முருக நாயனாரைப்போலவே, ஐயா ஜோதிராமனும் அவரின் மனைவியும் ஈசனுக்கு மலர்ச் சேவையாற்றும் அடியார்கள்.  எங்கு சிவப்பணி நடந்தாலும், அங்கு  நேரில் சென்று, தங்களாலான மலர்க் கைங்கர்யங்களைச் செய்துதருகிறார்கள்.

மலர்ப்பணி முடிந்த பிறகு, ஐயா சமையல் வேலை, பூஜை வேலை என பம்பரமாகச் சுழல்கிறார். அம்மையார் குயிலைப் பழிக்கும் குரலுடையவர். இவர் பதிகம் பாடி கற்றுத் தந்தால் படிக்காத பாமரர்களும் தெளிவாகக் கற்றுக்கொள்வார்கள். அத்தனை நேர்த்தியாக மனமுருகிப் பாடுகிறார். இந்த வேலை, அந்த வேலை என்றில்லாமல் இருவருமே கௌரவம் பார்க்காமல் எந்த வேலையையும் ஈசனுக்காக, ஈசனின் அடியார்களுக்காகச் செய்துவருகிறார்கள். 

சிரித்த முகமும் கருணை ததும்பும் அணுகுமுறையும் இவர்களின் சேவையில் முக்கிய அங்கங்கள். நம்மிடம் பேசவே தயங்கினார் ஜோதிராமன்... “இந்த எளியவனிடம் என்ன விசேஷம் இருக்கிறது ஐயா. எங்களுக்கு ஈசனைப்பற்றியும் அதிகம் தெரியாது; எங்களைப் பற்றியும் அதிகம் தெரியாது. பிறந்த கடனைத் தீர்க்க ஓடிக்கொண்டிருக்கிறோம், அவ்வளவுதான். அவன் நாமத்தை ஜபிப்பதைத் தவிர வேறொன்றும் எங்களுக்குத் தெரியாது'' என்கிறார் இந்தப் பெரியவர். `உண்மையாக சேவை புரிபவர்களுக்கு எப்போது பேசத்தெரிந்திருக்கிறது' என்று நினைத்தபடி, அவர்களின் மலர் கைங்கர்யம் குறித்து விசாரித்தோம்... ஈசனைப் பற்றிக் கேட்டால், பூரிப்போடு மளமளவெனப் பேசுகிறார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 7

“பூ கட்டுவதும் ஒரு ஞான காரியம்தான். அது மனதைக் கட்டுவதைப் போன்றது. பதிகம் பாடியபடியேதான் ஈசனுக்கு மாலை தொடுப்போம். பதிகம் பாடாமல் மாலை தொடுத்தால், அது என்னவோ ஒழுங்காக வருவதே இல்லை. இறைவனைக் குறித்துப் பாடும் சொற்கள்கூட பூக்கள்தாம். அவற்றை ‘உதர புஷ்பங்கள்’ என்று அகத்தியப் பெருமான் கூறுவார். உதர புஷ்பங்கள் இணைந்தால்தான் மாலைகளிலிருக்கும் புஷ்பங்கள் மணக்கும். எல்லா புஷ்பங்களையும் ஈசனுக்கு சாத்திவிட முடியாது. எந்த வேளைக்கு என்னென்ன புஷ்பங்கள், எந்தத் திருமேனிக்கு எந்த மாலை என்று பல நியதிகளை சைவ நெறி வகுத்துவைத்திருக்கிறது. அதன்படிதான் மாலைகளைத் தொடுக்கவேண்டும்.

புண்ணிய புருஷர்கள் - 7சிவ பக்தர்களுக்கு இந்த எளியோனின் சிறிய வேண்டுகோள்... ‘பூக்களை நீங்களே மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சமர்ப்பியுங்கள்’ மாலைகளைக் கடைகளில் வாங்கிக் கொடுக்காதீர்கள். ஆடுதொடா இலை, பேய் மண்டை... என வழிபாட்டுக்கு ஆகாத இலைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளே பெரும்பாலான கடைகளில் கிடைக்கின்றன. அவை நல்லவையல்ல. நீங்களே விளக்கேற்றுவதுபோல, நீங்களே சரம் தொடுத்துச் சூட்டுங்கள். ஈசன் மகிழ்ந்துபோய் வேண்டியதையெல்லாம் கொடுப்பார். திருப்பனந்தாள் ஈசன், தாடகைப் பெண்ணின் மாலையைத் தலை வணங்கி ஏற்கவில்லையா! நல்ல மலர்களைத் தேர்ந்தெடுத்து, உள்ளம் உருக ஐந்தெழுத்தோதி, மலர் தொடுங்கள். அந்த நேரம் நீங்கள் ஈசனோடு கலந்துரையாடும் நேரம் என்பதை உணர்வீர்கள். நீங்கள் மட்டுமல்ல, நீங்கள் மாலைக்காகத் தொடுக்கும் மலர்களும் அப்போது உங்களோடு உரையாடும் மகத்துவத்தை உணர்வீர்கள்.

பூஜைக்கான மலர்களைத் தொடுக்கும்போது, அவை விரதமிருப்பதை நீங்கள் உணரலாம். விரதம் பூண்ட மலர்கள் எளிதில் வாடாது; கூடுதல் மணம் கொள்ளும்; வண்ணம் கூடும்; காம்பு முறியாது... இதையெல்லாம் தெரிந்துகொள்ள நீங்கள் மாலை தொடுக்க வேண்டும். சங்கிலி நாச்சியாரை நினைத்துக்கொள்ளுங்கள், அவள் இறையோடு கலந்துபோகும் அளவுக்கு மலர் மாலை தொடுத்தவள். அது நிஜமாகவே மனமொன்றிச் செய்யும் ஞானத் தவம்'' என்கிறார் சுஜந்தி.

இந்தத் தம்பதி, ராணிப்பேட்டை அருகேயுள்ள நரசிங்கபுரத்தில் வசிக்கிறார்கள். ஜோதிராமன் ஐயா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சுஜந்தி அம்மையார் டியூஷனில் பிள்ளைகளுக்குப் பாடங்களும் பதிகங்களும் சொல்லித்தரும் ஆசிரியை. இவர்களின் இரு மகன்களும் வெளியூரில் பணியாற்றுகிறார்கள். இந்தத் தம்பதி ஈசனுக்கும் ஈசனின் அடியார்களுக்கும் பணியாற்றுகிறார்கள். நான்கு முறை ஈசனின் அருளால் கயிலாய யாத்திரை சென்று வந்திருக்கிறார்கள். தேசமெங்கும் சுற்றி சிவப்பணியாற்றியிருக்கிறார்கள்.

வடநாடெங்கும் பஞ்ச கைலாஷ், பஞ்ச பிரயாக், பஞ்ச பத்ரிநாத் என யாத்திரைகள் பல செய்து `அன்பே சிவம்' என்ற  ஞானத்தை உணர்ந்தவர்கள்.  கடந்த ஏழு ஆண்டுகளாக சோமவார விரதத்தைக் கடுமையாகக் கடைப்பிடித்து வழிபாடு செய்துவருகிறார்கள். விடுமுறை நாள்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு சிவபூஜை செய்வது, திருமுறைகள் சொல்லித்தருவது என எப்போதும் சுழன்றபடியே இருக்கிறார்கள். ‘`குழந்தைகள் வழியே அவர்களின் பெற்றோர்களும் சிவ தீட்சை வாங்கி, குடும்பம் குடும்பமாக நம் தர்மத்துக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார்கள் இருவரும்.

மலர்க் கைங்கர்யம் மட்டுமல்ல, ஈசனுக்கான தைலங்கள் தயாரிப்பது, அபிஷேகப்பொடிகள் தயாரிப்பது, ஈசனின் அபிஷேகத்துக்கு  பதினாறு வகையான மூலிகைச்சாறுகள் தயாரிப்பது... என ஈசனுக்கே தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள். எந்தப் பலனும் எதிர்பாராமல், இந்தத் திருப்பணிகளைச் செய்துவருகிறார்கள். பெரும்பாலான மலர்கள் (கொன்றை, மாசிப்பத்து, சுருள் அரளி, திருகு அரளி... போன்ற அரிய மலர் வகைகள்) இவர்கள் வீட்டிலேயே வளர்ந்து, சிவப்பணிக்கு போகின்றன. ‘`தேவைப்பட்டால், நாங்களும் எங்கள் குழுவினரும் பணம் போட்டு மலர்களை வாங்குவோம்’' என்கிறார் சுஜந்தி.

புண்ணிய புருஷர்கள் - 7

`கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும், கிடைக்காத வரமான வாழ்வை ஈசன் கொடுத்திருக்கிறான் ஐயா... சிவ புண்ணியத்தால், ஒவ்வொரு நாளும் எங்களுக்கு மகிழ்ச்சி கூடுகிறது. திருவலம் ஆலயத்தில் நடராஜருக்கு நாங்களே பார்த்துப் பார்த்து மலர் அலங்காரம் செய்து மகிழ்ந்திருக்கிறோம். கண்டுகொள்ளப்படாத பல சிவாலயங்களைச் சுத்தம் செய்து, ஐயனுக்கு விதவிதமாக மலர் அலங்காரம் செய்து கொஞ்சி மகிழ்ந்திருக்கிறோம்.

எங்கள் தகப்பனுக்கு அபிஷேக அலங்காரம் செய்துவிட்டு தள்ளி நின்று பார்க்கும்போது வரும் பாருங்கள் ஓர்அழுகை... அது போதுமய்யா எங்கள் வாழ்க்கைக்கு. தேடிக்கண்டு கொண்டோம் எங்கள் சொர்க்கத்தை. இதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் வேண்டாம்'' என்கிறார் ஜோதிராமன்.

கூடை கூடையாக மலர்ப்பணிகள் செய்தாலும், அம்மையார் சுஜிந்தா கூந்தலில் மலர்களைச் சூடுவதில்லை. ஏன்?

“நான் மட்டுமல்ல ஐயா. பெண் அடியார்கள் யாருமே சூட்டிக்கொள்ள மாட்டோம். பூக்கும் அத்தனை பூக்களுமே சிவனுக்கு மட்டுமே சொந்தம்'' என்றவர், ``பூக்கள் மண்ணுக்கு வந்த கதை தெரியுமா?” என்று சொல்ல ஆரம்பித்தார்.

“தட்சனால் தண்டிக்கப்பட்ட சந்திரன், இழந்த ஒளியை வேண்டி ஈசனை நோக்கித் தவமிருந்தான். மனமிரங்கிய ஈசன், சந்திரன் முன் தோன்றி ஒளி வழங்கும் அமிர்தத் தாரைகளை அவன் கரங்களில் ஊற்றினார். அப்போது சில துளிகள் பூமியில் விழுந்தன. அந்த அமிர்தத் துளிகளிலிருந்து எண்ணற்ற பூக்கள் தோன்றின. அதனால்தான் பூக்களுக்கு மென்மையும் மணமும் கிட்டின. இழந்த ஒளியைப் பெற்ற சந்திரன், ஈசனின் திருமுடியை அடைந்தான். அப்படியானால் அதே அமிர்தத்தால் உருவான மலர்களும் ஈசனின் மணிமுடியைத் தானே அடைய வேண்டும். எனவே, நாங்களும் மலர்களைச் சூடுவதில்லை” என்றார்.

எளிமையாக இவர் சொன்னாலும் அதில் பொதிந்துகிடக்கும் உண்மையை (ஒரு பெண் மலர்களையே தியாகம் செய்வது என்பது மகத்தான செயல்தானே...) ஏற்றுக்கொள்ள நமக்கு  வெகு நேரம் ஆனது. பூக்கள் புனிதமானவை... இந்த அடியார்களும்தான்!

- அடியார்கள் வருவார்கள்...

மு.ஹரி காமராஜ் - படங்கள்: பெ.ராகேஷ்

புண்ணிய புருஷர்கள் - 7

மலர்களால் மாற்றம்...

வ்வொரு மலருக்கும் ஒரு பலன் உண்டு என்கின்றன, சைவ ஆகமங்கள். அல்லி,  மல்லிகை மலர் ஆகியவை மகிழ்ச்சி தரும். அரளி, சம்பங்கி ஆபத்திலிருந்து காப்பாற்றும். சாமந்தி வியாபாரம் பெருக்கும். பிச்சிப்பூ குழந்தைகளின் குறை நீக்கும்.

மனோரஞ்சிதம், நீலோத்பவம், சங்கு புஷ்பம் ஆகியவை நிம்மதி அருளும். சண்பகம் மங்கலம் தரும்; தாமரை ஞானம் நல்கும். நந்தியாவட்டை நலவாழ்வு தரும். சூரியகாந்திப் பூ காரிய ஸித்தி தரும்; முருங்கைப் பூ வாகன விருத்தி; பவளமல்லி வெளிநாட்டு பயணம் அருளும். அகத்திப் பூ தீய கனவு நீக்கும்; மாம்பூ கடன் தீர்க்கும்.

 தூதுவளை பூ பயண வெற்றி தரும். செம்பருத்திப் பூ சௌந்தர்யம் அளிக்கும். மகிழம்பூ எதிரிகளை விலகச் செய்யும். அசோகப் பூ தடைகளை  நீக்கும். மந்தாரை மன வலிமை தரும். பன்னீர் பூ வெற்றியளிக்கும். வெப்பம் பூ வேதனைகளை அகற்றும்.

‘புண்ணிய புருஷர்கள்’ தொடரைப் படித்து வருகிறேன். இந்த அருளாளர்களின் பெயரிலும் உருவிலும் பெரியபுராணத் திருத் தொண்டர்களே நிழலாடுகிறார்கள். 

புண்ணிய புருஷர்கள் - 7

உலகாதாயம் மிகுந்த இக்காலத்திலும் இப்படிப்பட்ட திருச்செல்வர்களின் திருத்தொண்டைக் கண்டு உள்ளம் நெகிழ்கிறேன். `ஞானம் ஈசன்பால் அன்பே' என்ற சேக்கிழார் பெருமான் வாக்கிற்கிணங்க வாழ்கின்ற இந்த ஞானச்செல்வர்களை, உலகம் தெரிந்துகொள்ள உதவிய சக்திவிகடனுக்கு நன்றியும் பாராட்டுகளும்!

அடியார் அடியார் அடியார்க் கடிமைக்
கடியனுய் நல்கிட் டடிமையும்
பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட
அடியான் இவனென் றடிமை கொண்டானே.


– திருமந்திரம்.

- சோலை குமார், திருமூலர் திருமந்திர பேரவை, நேமத்தான்பட்டி