Published:Updated:

காஞ்சி எனும் புண்ணிய பூமி!

காஞ்சி எனும் புண்ணிய பூமி!
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சி எனும் புண்ணிய பூமி!

காஞ்சி எனும் புண்ணிய பூமி!

காஞ்சி எனும் புண்ணிய பூமி!

காஞ்சி எனும் புண்ணிய பூமி!

Published:Updated:
காஞ்சி எனும் புண்ணிய பூமி!
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சி எனும் புண்ணிய பூமி!

லைகளில் சிறந்த காஞ்சி மாநகரம், ‘வேகவதி’ எனும் சரஸ்வதி நதிக்கரையினில் அமைந்துள்ளது. பெருக்கெடுத்துப் பாயும் காவிரியின் மேன்மைக்குச் சிறிதும் குறைவில்லாதது கனகா - பொன்னி எனும் வேகவதி. ஆம்! சரஸ்வதி நதிக்கு இப்படி பல பெயர்கள் உண்டு!

காஞ்சிபுரம் கல்விக் களஞ்சியமாகவும் கலைக் களஞ்சிய மாகவும் திகழ்வதற்கு என்ன காரணம் எனப் பலரும் யோசிப்பர். ‘வேங்கடாத்வரி’ எனும் மகாகவி, காஞ்சியில் தோன்றிய அறிஞர் பெருமக்களின் பெருமைகளை அழகாக விளக்குகிறார் கேளுங்கள்…

காஞ்சி எனும் புண்ணிய பூமி!

“பிரம்மதேவன் செய்த அசுவமேத யாகத்தைக் கெடுக்க வேகத்துடன் வந்தாள் சரஸ்வதிதேவி. அவள் ஒரு நதியாக வந்ததால், அதற்கு வேகவதி எனும் பெயருண்டாயிற்று. பின்னர் பெருமாளின் பெருமையால் சாந்தமடைந்த சரஸ்வதி, பிரம்மனுடன் வரதராஜரை வழிபட்டாள். சரஸ்வதி என்றால் ‘கல்வி’ என்பது பொருள். கல்விக்கடவுளே நதியாக இங்குப் பெருகுவதாலும் அந்நதியின் தூய்மையான தண்ணீரைப் பருகுவதாலும் சரஸ்வதியின் அருள் பெற்றவர்களாக இங்குள்ள பெருமக்கள் அறிஞர்களாகத் திகழ்கின்றனர். காஞ்சியின் அரும்பெருமைக்கு இது தக்க சான்று” என்கிறார் வேங்கடாத்வரி.

முதலில் பிரம்மா, அதன்பின்னர் திரேதாயுகத் தில் கஜேந்திராழ்வான், அதன்பின்னர் கல்வியறிவு தந்திடும் தேவகுருவான பிருகஸ்பதி ஆகியோர் வரதனை வழிபட்டனர். தனது புத்தி மழுங்கியதால் தன்னிலை மறந்த பிருகஸ்பதி, இத்தலத்தில் வந்து வரதராஜப் பெருமாளையும் பெருந்தேவித்தாயாரையும் வழிபட்டு  மீண்டும் அறிவுத்திறன்  பெற்றாராம். வரதனை மனமுருகிச் சேவிப்பவர்களுக்கு ஞானஸித்தி கைகூடும் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி, காஞ்சியிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் அவதரித்த, வைணவம் வளர்த்த மகான்கள் சிலரின் வைபவங்களைக் காணலாம்.

தொண்டை மண்டலம் என்பது பெண்ணையாற்றின் கரை வரையிலுள்ள பகுதி. தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை வரையிலும் படர்ந்துள்ள இம்மண்டலத்தில்தான்  பொய்கை, பூதம், பேயர் என முதலாழ்வார்கள் மூவர் அவதரித்தனர். இவர்களில் முதலாழ்வார் பொய்கையாழ்வார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாசுரமான ‘வையம் தகளியா’ எனத் தொடங்கும் முதல் திருவந்தாதியை இயற்றியவர். இவரின் அவதாரத் தலமான ‘பொய்கை’ எனும் திருக்குளம், காஞ்சி வரதன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

வரதன், யாகத்திலிருந்து அவதரிப்பதற்கு முன்னமே சரஸ்வதியின் வெள்ளத்துக்கு அணையாகப் பிறந்தவர் ‘சொன்னவண்ணம் செய்த பெருமாள்’. சம்ஸ்கிருதத்தில் ‘யதோக்தகாரீ’ என்று பெயர். இவரின் சந்நிதியின் திருக்குளத்தில்தான் பொய்கையாழ்வார் அவதரித்தார்.

காஞ்சி எனும் புண்ணிய பூமி!

அதன்பின்னர் திருமழிசை ஆழ்வார் இத்தலத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் கணிகண்ணன் எனும் அவரின் சீடனை அரசன் நாடு கடத்தினான். இதனால் கொதித்தெழுந்த ஆழ்வாரும் “என் சீடன் இல்லாத இடத்தில் நானும் வசிக்க விரும்பவில்லை. நான் இல்லாத ஊரில் பகவானே நீயும் இருக்க வேண்டாம் கிளம்பு” என்றார்.

தனது பாம்பணையைச் சுற்றிக் கொண்டு பெருமாளும் ஆழ்வாரின் பின் சென்றார். இப்படிப் பெருமாளும் கிளம்பினவுடன் காஞ்சி களையிழந்தது.

ஓடோடி வந்த மன்னன், ‘பகவான், பாகவதன், அடியார்’ என மூவரின் தாளினையும் பணிந்தான். தன் தவற்றுக்கு மன்னிப்பு வேண்டினான். இப்படிப் பாம்பணையுடன் ஒரு நாள் தங்கிய இடம் ‘ஓரிருக்கை’ - ஓர் இரவு தங்கிய இடம் -  தற்போது மருவி ‘ஓரிக்கை’ என அழைக்கப்படுகிறது.

ஆழ்வார்களுள் தலைமையான நம்மாழ்வார், தனது திவ்ய பிரபந்தமாகிய திருவாய்மொழியின் முதல் நூறு பாடல்களை, இப்பெருமான் விஷயமாகவே பாடியுள்ளதாக குருபரம்பரைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இத்தலத்தில் நம்மாழ்வாரின் விக்கிரக பிரதிஷ்டைக்கு முயன்றபோது, இயல்புக்கு மாறாக நம்மாழ்வார், `மார்பில் கைவைத்த முத்திரை’யுடன் காட்சியளித்தாராம்!

“இது எனக்கு மிகவும் பிடித்தமானது. இப்பெருமாளைப் பாடினது எல்லோருக்கும் தெரியும்படி மார்பில் கைவைத்துள்ளேன்” என்றாராம் நம்மாழ்வார்.

ஸ்ரீவைஷ்ணவ ததீயாராதனம் செய்யத் தலைப்பட்டார் திருமங்கையாழ்வார். அப்போது சிற்றரசனாகிய அவர், சோழ அரசனுக்குச் செலுத்தவேண்டிய கப்பத்தொகையைக் கொண்டு  பாகவத ததீயாராதனம் செய்தார். அதனால் கோபமடைந்த சோழ அரசன், ஆழ்வாரைச் சிறையில் தள்ளினான். அப்போது ஆழ்வாரின் கனவில் தோன்றிய வரதன், வேகவதி நதிக்கரையில் தங்கப்புதையல் இருக்கும் இடத்தை அவருக்குக் காட்டினான். இன்றும் வரதராஜப்பெருமாள் ஆலயத்தில், கையில் தங்கப்புதையலுடன் திருமங்கையாழ்வார் சேவையா கிறார்.

ஆழ்வார்கள் காலத்துக்குப் பிறகு ஆசார்யர்கள் அவதாரம் செய்தனர். திருவரங்கத்தில் ஆளவந்தார் வைணவத்தின் குருவாகத் திகழ்ந்தபோது, அவரின் சீடர் திருக்கச்சிநம்பிகள் சென்னைக்கு அடுத்த பூவிருந்தவல்லியில் பிறந்தார். தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து காஞ்சிக்கு நடந்தே சென்று வரதனை தரிசிப்பாராம் இந்த மகாத்மா!

காஞ்சி எனும் புண்ணிய பூமி!

அதுமட்டுமல்ல... வரதன் தினமும் இவருடன் பேசுவானாம்! பெருமாளுக்கு வெட்டிவேர் விசிறியால் விசிறிக்கொண்டே அவனுடன் பேசும் பாக்கியம் பெற்றவர் நம்பிகள். ஒருமுறை ராமாநுஜருக்குச் சில சந்தேகங்கள் உண்டானபோது, வரதனிடம் பேசி அதற்குரிய பதில்களைப் பெற்றுத் தந்தவரே நம்பிகள்தான்!

திருவரங்கத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கச்சொல்லும் பொருட்டு ராமாநுஜரைத் தேடி வந்த ஆளவந்தார், முதன்முதலில் இங்கு பெருமாள் சந்நிதியில் ராமாநுஜரைக் கண்டு வரதராஜப் பெருமாளிடத் தில் சரணாகதி செய்தார். ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவரான ராமாநுஜருக்கு வரதன் செய்த அனுக்கிரகம் உலகப் பிரசித்தம். ராமாநுஜரின் குருவான யாதவபிரகாசர், ராமாநுஜரைக் கொல்லத் துணிந்தார். காசி, கங்கைக்கு யாத்திரை செல்லும் தருணம் கங்கையில் அழுத்தி அவரைக் கொல்ல யாதவபிரகாசர் திட்டமிட்டபோது, அவரைக் காப்பாற்றியது வரதன்தான். வேடுவன், வேடுவச்சி உருவில் வந்த வரதனும், பெருந்தேவித்தாயாரும் ஓர் இரவுக்குள் விந்தியமலைக் காடுகளிலிருந்து ராமாநுஜரைக் காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். மேலும், சாலையோரக் கிணற்றிலிருந்து தினந்தோறும் தங்களுக்குத் தண்ணீர் கைங்கர்யம் செய்யச் சொல்லினர். இன்றளவும் அந்தச் சாலைக் கிணற்றிலிருந்தே பெருமாளுக்குத் தீர்த்தம் சமர்ப்பிக்கப்படுவதைக் காணலாம்.

பின்னாளில் ‘யஞ்ஞமூர்த்தி’ எனும் பண்டிதரை வெற்றிகொள்ள ராமாநுஜரின் கனவில் வந்து வரதனே வழிகாட்டினான். மேலும், சோழ அரசனின் கொடுஞ்செயலால் கண்ணிழந்த கூரத்தாழ்வானுக்கு வரதனின் அனுக்கிரகத்தால் மீண்டும் பார்வை கிடைத்த அற்புதத்தை வர்ணிக்க வார்த்தையில்லை! காஞ்சியின் அருகிலுள்ள ‘கூரம்’ எனும் கிராமத்தில் அவதரித்த கூரத்தாழ்வான், ‘வரதராஜ ஸ்தவம்’ எனும் அற்புத ஸ்தோத்திரத்தை இயற்றியுள்ளார்.

ராமாநுஜர் வழிவந்த ‘வாத்ஸ்ய வரதகுரு’ எனும் பெரியவர், கரிகிரி மலைமீது தினமும் ராமாநுஜரின் பிரம்மசூத்ர வியாக்யானத்துக்குப் பொருள் கூறுவாராம்.  ஒரு நாள், இரவுப்பொழுதில்  பக்தர் ஒருவர் பெருமாளுக்கு மிகவும் சூடாக பால் சமர்ப்பித்தார். பதறிப்போன வரதகுரு, பாலை வாங்கி, நன்கு சூடு ஆற்றி, பக்குவமாகப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார். அதனால் மகிழ்ந்த வரதன், தாயைப் போன்று பரிவு கொண்ட அவரை ‘அம்மா’ என்று அழைத்தான்.  அதுமுதல் அவர் ‘நடாதூர் அம்மாள்’ என்றே அழைக்கப்பட்டார்.

இந்த மகான்தான் சிறுவயது வேதாந்த தேசிகனைத் தனது மடிமீது அமர்த்திக்கொண்டு வரதன் சந்நிதியில் ஆசீர்வாதம் செய்தவர். இவரது மடியில் பாலதேசிகன் அமர்ந்திருக்கும் அழகிய சித்திரத்தை இன்றும் பெருமாள் கருவறை அருகே மண்டபத்தில் காணலாம்.

காஞ்சி எனும் புண்ணிய பூமி!

வேதாந்த தேசிகரின் அவதாரத்தால் காஞ்சியே கம்பீரமானது என்றால் மிகையில்லை. வரதராஜப் பெருமாளுக்கும் பெருந்தேவித்தாயாருக்கும் செல்லக்கிளியைப் போன்று வளர்ந்தவர் சுவாமி தேசிகன். அவரின் மாமாவான அப்புள்ளாரிடம் சகல சாஸ்திரங்களையும் கற்று உலகின் மிகச் சிறந்த மேதையாக விளங்கினார். தத்துவ ஞானியாக மட்டுமன்றி கவிஞராகவும், சமுதாயத்துக்கு வழிகாட்டியாகவும், மிகச்சிறந்த சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.

வரதராஜன் குறித்துத் தமிழிலும், சம்ஸ்கிருதத் திலும் தன்னிகரற்ற பல நூல்களை இயற்றியுள்ளார். தமிழிலும், வடமொழியிலும் இணைந்து புலமை பெற்றிருந்தும் ‘சந்தமிகு தமிழ்மறையோன்’ எனத் தன்னைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார். வரதனின் அழகைக் கண்டு மயங்கிய தேசிகன் `வைகுண்ட வாழ்வுகூட வேண்டாம்; காஞ்சியில் வசித்தாலேயே போதுமானது” எனச் சத்தியம் செய்கிறார். சுவாமி மணவாள மாமுனிகள் தொண்டை மண்டலத்தில் பிறக்காவிடினும் வரதனைத் துதித்துள்ளார். வேங்கடாத்வரி, அப்பைய தீக்ஷிதர், மூககவி, கடிகாசதம் அம்மாள் போன்ற பல அறிஞர்கள் இங்கு வைணவம் வளர்த்துள்ளனர். இவர்கள் மட்டுமன்றி 20-ம் நூற்றாண்டில் தோன்றி, காஞ்சியின் புகழைப் பாடி வைணவம் வளர்த்த ஆசார்யர்கள் ஆயிரமாயிரம் உண்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism