Published:Updated:

திருப்பதியில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே நடக்கும் தும்புருத் தீர்த்தமாடல் விழா!  

திருப்பதியில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே நடக்கும் தும்புருத் தீர்த்தமாடல் விழா!  

அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும், கிரகண காலங்களிலும், சூரியன் ராசிகளில் பிரவேசிக்கும் மாதப் பிறப்பு நாளிலும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை நைமித்தியம் என அழைக்கிறார்கள். 

Published:Updated:

திருப்பதியில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே நடக்கும் தும்புருத் தீர்த்தமாடல் விழா!  

அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும், கிரகண காலங்களிலும், சூரியன் ராசிகளில் பிரவேசிக்கும் மாதப் பிறப்பு நாளிலும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை நைமித்தியம் என அழைக்கிறார்கள். 

திருப்பதியில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே நடக்கும் தும்புருத் தீர்த்தமாடல் விழா!  

மகிமை வாய்ந்த திருமலை திருப்பதி ஒரு பக்தி க்ஷேத்திரம் மட்டுமல்ல, ஒரு முக்தி க்ஷேத்திரமும் ஆகும். இவற்றையெல்லாம்விட மிகப்பெரிய தீர்த்த க்ஷேத்திரமாகவும் திகழ்கின்றது. திருமலையில் உருவமாகவும் அருவமாகவும் 108 தீர்த்தங்கள் இருப்பதாக புராண நூல்கள் விவரிக்கின்றன. அருவமாக, பிரத்தியட்சமாகாமல் இருக்கக்கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்கு வந்து கூடுகின்றன. அப்படி ஆண்டுக்கு ஒரு முறை தீர்த்தமாட அனுமதிக்கப்படும் புண்ணிய தீர்த்தம் `தும்புரு தீர்த்தம்.'   


பொதுவாகத் திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாளைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் யாவரும் `சுவாமி புஷ்கரணி' என்னும் கோயில் திருக்குளத்தில் தீர்த்தமாடுவது வாடிக்கையான ஒன்றுதான். தீர்த்தாடனம் செய்வதில் நித்தியம், நைமித்தியம், காமியம் என மூன்றுவகைப்படும். நாள்தோறும் அதிகாலைப் பொழுதில் நீராடுவது நித்தியம். அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும், கிரகண காலங்களிலும், சூரியன் ராசிகளில் பிரவேசிக்கும் மாதப் பிறப்பு நாளிலும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை நைமித்தியம் என அழைக்கிறார்கள். 

இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், இந்தவிதமான பலன் கிடைக்குமென்று எண்ணி, அந்தத் தீர்த்தத்தில் நீராடுவது காமியம். 
அவ்வாறு வேங்கடமுடையானை வேண்டிக்கொண்டு தும்புரு தீர்த்தத்தில் நீராட பரமபதம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆண்டுக்கொருமுறை பங்குனி உத்திரம் நாளில் மட்டுமே தீர்த்தமாட அனுமதிக்கப்படும். 

தும்புருத் தீர்த்தத்தின் கதை: 

பகவான் நாராயணனின் திருநாமத்தை நாளும் உச்சரித்த வண்ணம் கானம்பாடித் திரிபவர்கள் நாரதரும் அவரின் நண்பர் தும்புருவும். ஒருமுறை திரிலோக சஞ்சாரியான நாரதர், தும்புரு முனிவரைச் சந்தித்தபோது அவரிடம் வழக்கமான வீணைக்குப் பதிலாக பொன்னாலும் வைரத்தாலும் அலங்கரிப்பட்ட வீணையைப் பார்த்தார். ஆச்சர்யம் மேலிட, ``எப்படிக்கிடைத்தது இந்தப் பொன் வீணை?'' என வினவினார். 
``பூலோகத்தில் `ப்ராசீன பர்ஹி' என்னும் பேரரசனைச் சந்தித்தேன். உங்களுக்கே தெரியும். அவனுக்கு இணையான யாகங்களைச் செய்யக்கூடிய அரசன் யாருமில்லை. அந்த அரசனிடம், `யாகம் செய்வதிலும் தானம் வழங்குவதிலும் உனக்கு நிகராக எவரும் இல்லை' என்றும் கூறினேன். அகமகிழ்ந்த அரசன் வழங்கியதுதான் இந்தப் பொன்வீணை'' என்று பதிலுரைத்தார். (இந்திரனைப் புகழ்ந்து பாடியதால், இந்திரன் வழங்கியதாகவும் சொல்வதுண்டு)

நாராயணனின் நாமத்தைத் தவிர மற்றவர்களை புகழலாமா எனக் கோபமுற்ற நாரதர், ``இப்போதே நீ வானிலிருந்து பூமியில் தலைக்குப்புற வீழ்வாயாக'' என்று சபித்தார். அவ்வாறே நிகழ்ந்தது. இதுவும் நாராயணனின் திருஉளம் என்றெண்ணிய தும்புரு முனிவர் வந்து வீழ்ந்த இடம் திருவேங்கட மலையில் இருக்கும் கோண தீர்த்தம். அங்கிருந்து எந்தவித காயமும் இல்லாமல் மேலே வந்த தும்புரு நாராயணனை நோக்கித் தவமிருந்தார். 

தும்புருவின் பக்தியில் மனங்கனிந்த நாராயணன் நற்காட்சி தந்து, பரமபதம் வரப் பணித்தார். அப்போது தும்புரு முனிவர் தீர்த்தத்தில் வந்து நீராடுபவர்கள் அனைவருக்கும் பரமபதத்தை வழங்க வேண்டுமென வரம் வேண்டினார். நாராயணனும் அவ்வண்ணமே வரமளித்தார். அது முதல் கோணத்தீர்த்தம், `தும்புரு தீர்த்தம்' என அழைக்கப்படலாயிற்று.

பரமபதம் அடைந்த நாள் பங்குனித் திருநாள்!   

திருவேங்கடவனை நாம சங்கீர்த்தனத்தோடு தவமியற்றிய தும்புரு முனிவர் பரமபதத்தை அடைந்த இடம் தும்புரு தீர்த்தம். பங்குனி உத்திரநாளில் இங்கு தீர்த்தமாடுபவர்களுக்கு சகலவிதமான பாவங்களும் நீங்கி, செல்வ வளம் கிட்டும் என்று சொல்கிறார்கள். மேலும் தும்புரு முனிவர் வேண்டிக்கொண்டதற்கிணங்க அன்று நீராடும் அனைவருக்கும் இறைவன் பரமபதத்தை அருள்வான் என்பது ஐதீகம். 

ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இந்த விசேஷ நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு 35,000 பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறுகலான மலைப்பாங்கான பகுதியில் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

இதையொட்டி பாபநாசம் டேம் அருகில், பக்தர்களுக்குச் சாம்பார் சாதம், தயிர்ச் சாதம், பொங்கல் போன்ற உணவு வகைகள், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்கவும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பக்தர்கள் மார்ச் 19 -ம் தேதி காலை 6 மணி முதல் தும்புருத் தீர்த்தத்தில் தீர்த்தமாட அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.