

ஸ்ரீவெற்றி வேலாயுத ஸ்வாமியை வழிபட்டால், வாழ்வில் சகல வெற்றிகளையும் தந்தருள்வான் என்கின்றனர் திருப்பூர் மாவட்ட பக்தர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளிக்கு அருகில் உள்ளது கயித்தமலை. திருப்பூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் ஈரோட்டில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும் உள்ள கயித்தமலையில், அருளும் பொருளும் அள்ளித் தந்தபடி கோயில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான்.
கயித்தமலை முருகக் கடவுளைத் தரிசிக்க, படிகள் உள்ளன. அத்துடன் வாகனங்களில் மலையேறுவதற்கு வசதியாக சாலைகளும் உள்ளன.
அகத்திய முனிவர் இங்கே வந்து தவமிருந்தபோது, அங்கே குளிக்கவோ குடிக்கவோ தண்ணீரின்றித் தவித்தாராம். அந்தப் பகுதியில் தண்ணீரே கிடைக்காத நிலையில், முருகப்பெருமானை மனதாரப் பிரார்த்திக்க... அங்கே அவருக்குக் காட்சி தந்த கந்தபெருமான், தன் வேலால் பூமியைக் குத்தினார். அங்கிருந்து ஊற்றெனப் புறப்பட்டது தண்ணீர். ஊற்றுக்குளி என அமைந்த அந்த ஊர், பிறகு ஊத்துக்குளியாக மருவியது. அதேபோல், சூரியப் பிரகாசமான திருமுகத்துடன் கந்தக்கடவுள் காட்சி தந்த தலம் என்பதால், கதிர் உதித்த மலை என்றானது. பிறகு கயித்தமலை என மருவியதாம்!

##~## |
இந்தக் கோயிலில், முனிவர் ஒருவரின் திருச்சமாதியும் அதன்மேல் புற்று ஒன்றும் உள்ளது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், புற்று வழிபாடு செய்ய ஏராளமான அன்பர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு, 13 நாள் விழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது தைப்பூசத் திருவிழா. கொடியேற்றத்துடன் துவங்குகிற விழாவின் 9-ஆம் நாள் ஊத்துக்குளியிலும் 12-வது நாளில் கயித்தமலையிலுமாக முருகக்கடவுள் சர்வ அலங்காரத்துடன் திருவீதியுலா வரும் காட்சியைத் தரிசிக்க, சுற்று வட்டார ஊர்களில் இருந்தெல்லாம் கூடிவிடுகின்றனர், பக்தர்கள்!
தைப்பூச நாளில், ஸ்ரீவெற்றி வேலாயுத ஸ்வாமியை வணங்குங்கள்; வாழ்வில் எல்லா வளமும் பெறுங்கள்!
- கட்டுரை, படங்கள்: மு.கார்த்திகேயன்