Published:Updated:

கோவிந்தபுர கன்றுக்குட்டி!

கோவிந்தபுர கன்றுக்குட்டி!

கோவிந்தபுர கன்றுக்குட்டி!

கோவிந்தபுர கன்றுக்குட்டி!

Published:Updated:
கோவிந்தபுர கன்றுக்குட்டி!
கோவிந்தபுர கன்றுக்குட்டி!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கு
ம்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் அமைந்துள்ள திருவிடம் கோவிந்தபுரம். இங்கே காலடி வைத்ததுமே, ஒரு தெய்வீக அதிர்வு நம்மைப் பற்றிக்கொள்கிறது; நமது கவலைகளையும் பாவ மூட்டைகளையும் எவரோ சூட்சுமமாக வந்து வலியக் கவர்ந்து சென்றுவிட்டதுபோன்று, உடலும் உள்ளமும் இலவம்பஞ்சைவிட லேசாகிவிட்ட பரவசம் தொற்றிக்கொள்கிறது.

காரணம்... இங்கே கனகம்பீரமாய் வானுயர்ந்து நிற்கும் விட்டல் ருக்மிணி ஆலயமும், ஜகத்குரு ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானமும்!

காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் 59-வது பீடாதிபதியாக விளங்கியவர், ஸ்ரீபகவந்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1638-1692). 'நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம்... கஷ்டங்களைப் போக்கலாம்’ என்று, இறை நாம ஜபத்தின் மேன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லி, அந்த எளிய வழிபாட்டை மேம்படுத்திய மகான் இவர்.

கோவிந்தபுர கன்றுக்குட்டி!

ஒரு காலகட்டத்தில், காவிரியின் வெள்ளப்பெருக்கால் கண்ணுக்குத் தென்படாமல் போன ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானத்தைக் கண்டுணர்ந்து, மீண்டும் அழகுற நிர்மாணித்தவர், இவரின் சீடர் மருதநல்லூர் சத்குரு ஸ்வாமிகள்.

சத்குருவின் சமாதியின்மீது தமது பாதங்கள் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கட்டப்பட்ட கால்களுடன் ஆற்று மணலில் தவழ்ந்தவாறு தேடினாராம் மருதநல்லூர் ஸ்வாமிகள். அப்போது ஓரிடத்தில், 'ராம்... ராம்’ எனும் தாரக மந்திர உச்சாடனம் வருவதைக் கேட்டு அகமகிழ்ந்தார். அந்த இடமே குருநாதர் ஜீவன்முக்தி அடைந்த இடம் என்றுணர்ந்தவர், தஞ்சை மன்னரின் உதவியோடு அங்கே ஓர் அழகிய பிருந்தாவனத்தை நிர்மாணித்தாராம். அது மட்டுமின்றி, காவிரியின் போக்கைச் சற்றே வடக்காகத் திசை திருப்பி, மீண்டும் வெள்ளப்பெருக்கால் அதிஷ்டானம் பாதிக்கப்படாமல் இருக்கவும் வழிவகை செய்தாராம்.

கோவிந்தபுர கன்றுக்குட்டி!

வீரசோழன் எனும் காவிரியின் உபநதியின் கரையில், மிக அமைதியாகத் திகழ்கிறது அதிஷ்டானம். கிழக்கு நோக்கிய முகப்பில் அதிஷ்டானத்தின் பிரதான வாயில், மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும், அனுமனைத் தரிசிக்கிறோம். ராம நாமத்தின் மீது அவர் கொண்ட பக்திக்கு ஈடு இணை கிடையாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது அனுமனின் அருட்பார்வை! நாமும் தாரக மந்திரத்தை உச்சரித்து வணங்குகிறோம்.

அடுத்து, அழகிய மண்டபத்தை வலம் வந்து, அதன் நடுவே இருக்கும் அதிஷ்டானத்தைத் தரிசிக்கிறோம். அழகிய பளிங்குக்கல் கட்டுமானம்; உடல் சிலிர்க்கும் குளிர் காற்று; ரீங்காரத்துடன் காற்றில் தவழ்ந்து வந்து செவிக்குள் நுழையும் ராம நாமம்... என பரவசப்படுத்துகிறது அந்த தரிசனப் பொழுது!

தினமும் காலை 6 மணிக்கு சுப்ரபாத சேவை. 8 மணிக்கு உஞ்சவிருத்தி. 9 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயருக்கு அபிஷேகம். 11 மணிக்கு அதிஷ்டான பூஜை. அதன் பிறகு சமாராதனை நடைபெறுமாம். இதேபோன்று, மாலை 4 மணிக்கு சம்பிரதாய பூஜை; 6 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்; 7 மணிக்கு அதிஷ்டான பூஜை. 7:30 மணிக்கு டோலோற்ஸவம். இதுதான் ஸ்ரீபோதேந்திராள் அதிஷ்டானத்தின் நித்தியப்படி வழிபாடு என்கிறார்கள்.

அனுதினமும் அன்னதானம் நடைபெறுகிறது. ஆஞ்சநேயர் சந்நிதிக்குப் பின்புறம் போஜன சாலைக்குச் செல்லும் வழி இருக்கிறது. இங்கு பரிமாறப்படும் சர்க்கரைப் பொங்கல், நெய்க்குப் பதிலாக வெள்ளை வெளேர் வெண்ணெய்யை விட்டுத் தயாரிக்கப் படுகிறதாம். சர்க்கரைப் பொங்கலாகத் தித்திக்கும் ராம நாமத்தை உச்சரித்தால், வெண்ணெய் போன்று நம் உள்ளம் வெள்ளையாகும், தூய்மை பெறும் என்பதை உணர்த்தவே, வெண்ணெய்க்கு இங்கே முக்கியத்துவம் தரப்படுகிறதோ, என்னவோ?!

கோவிந்தபுர கன்றுக்குட்டி!
கோவிந்தபுர கன்றுக்குட்டி!

அற்புதமான கோசாலை, இங்குள்ள சிறப்பம்சம். இங்குள்ள பசுக்களின் மூலம் கிடைக்கும் பால், அதிஷ்டானத்தின் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமியின் அர்த்தஜாம பூஜைக்கும் செல்கிறதாம்.

ஒரு கொட்டிலில் பசுக்கள்; அடுத்ததில் கன்றுக் குட்டிகள். நாம் அகத்திக்கீரைக் கட்டுடன் உள்ளே நுழைய, 'முதலில் குழந்தைகளுக்கு’ என்பது போல் வெள்ளைப் பசு ஒன்று தலையாட்டியது. அதை அங்கீகரிப்பது போல், நாமும் கன்றுக் கொட்டிலுக்குள் நுழைந்து, அகத்திக் கீரைக் கட்டுகளை சமமாகப் பிரித்து, ஒவ்வொரு கன்றாகக் கொடுத்து வந்தோம். என்ன ஆச்சரியம்! கொஞ்சமும் அவசரப்படவில்லை அந்தக் கன்றுகள். கிடைத்த பங்கை நிதானமாக, சப்தமின்றிப் புசிக்கின்றன. கடைசியில் நின்ற கன்றுக்குட்டியும், பசியுடன் பாயாமல், 'கடவுளின் அருள் இருந்தால் எனக்கும் கிடைக்கும்; அந்தக் கீரைக்கட்டில் என் பெயரை இறைவன் எழுதியிருந்தால் அது எனக்குக் கிட்டாமல் போகுமா, என்ன!’ என்று பக்குவப்பட்ட மனம் வாய்க்கப்பெற்றதைப் போல, மிகப் பொறுமையுடன் காத்திருந்து, நாம் அளிப்பதை வாங்கி உண்டு மகிழ்கிறது. பக்தி, கர்மயோகம், சக்தி, சிரத்தை, ஞானம், தபஸ் என்பவை இருந்தாலும், நன்னடத்தை என்கிற ஏழாவது நற்குணம் இருந்தால்தான் மற்றவை மிளிரும் என்று சொல்லாமல் சொல்கிறதோ அந்தக் கன்றுக்குட்டி?!

ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஆற்றங்கரை மணலுக்குள் ஐக்கியமான தினம் கி.பி. 1692-ஆம் வருடம் (பிரஜோத்பத்தி வருடம்) புரட்டாசி மாதம் பூர்ணிமை திதியில் நடந்தது. இப்போதும், ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பௌர்ணமியில் ஆரம்பித்து, மஹாளய அமாவாசை வரை 15 நாட்கள் ஆராதனை உற்ஸவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்பர்கள் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்கவேண்டிய அற்புத வைபவம் அது!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism