Published:Updated:

ஒரே இடத்தில் கூடும் எட்டு ஊர் ஸ்வாமிகள்!

பாவம் போக்கும் தீர்த்தவாரி!

ஒரே இடத்தில் கூடும் எட்டு ஊர் ஸ்வாமிகள்!

பாவம் போக்கும் தீர்த்தவாரி!

Published:Updated:
ஒரே இடத்தில் கூடும் எட்டு ஊர் ஸ்வாமிகள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரணி போற்றும் தை மாதத்தில், பூசம் நட்சத்திரத்தில் அதாவது தைப்பூச நன்னாளில், சிவமைந்தன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் விசேஷமாக பூஜைகள், வழிபாடுகள், திருவீதியுலாக்கள் அமர்க்களப்படும் என அறிவோம். இந்த நாளில், சிவனாருக்கும் சிறப்பு வழிபாடுகளும் திருவீதியுலாக்களும் கோலாகலமாக நடைபெறும் என்பது தெரியுமா, உங்களுக்கு?!

காவிரிக் கரையில் அமைந்துள்ள சிவத் தலங்களை வடகரை மற்றும் தென்கரைத் தலங்கள் என வகைப்படுத்துவர். இதன்படி திருச்சி பகுதியில்  காவிரிக் கரையில், கடம்பர் கோவில், பேட்டவாய்த்தலை, ராஜேந்திரம், ஐயர் மலை, கருப்பத்தூர் ஆகியன தென்கரைத் தலங்கள். வெள்ளூர், முசிறி, திருஈங்கோய்மலை ஆகியன வடகரைத் தலங்கள். இவை அனைத்தும் புராதனமான, அற்புதமான திருத்தலங்கள்!

இந்தத் தலங்களில் உள்ள ஸ்வாமிகள் அனைவரும் தத்தம் தேவியருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு திருக்காட்சி தரும் வைபவம் வெகு பிரசித்தம்! அந்த விழா நடைபெறும் நாள்... தைப்பூசத் திருநாள்!

ஒரே இடத்தில் கூடும் எட்டு ஊர் ஸ்வாமிகள்!

அந்த நாளில், எட்டு ஊர் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இந்த வைபவம், கடம்ப வனேஸ்வரர் கோயில் அருகே- காவிரிக் கரையில் கோலாகலமாக நடைபெறும்! எட்டு திருத்தல இறைவனையும் ஒரே நேரத்தில் தரிசிக்க பக்தர்கள் திரண்டு வருவார்களாம்! பின்னே? ராஜேந்திரம் ஸ்ரீதேவநாயகி சமேத ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வரர், பேட்டவாய்த்தலை ஸ்ரீபாலாம்பிகை- ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வரர், ஐயர்மலை ஸ்ரீகரும்பார்குழலி- ஸ்ரீரத்னகிரீஸ்வரர், கடம்பர்கோவில் ஸ்ரீபாலகுஜாம்பாள்- ஸ்ரீகடம்பவ னேஸ்வரர், கருப்பத்தூர் ஸ்ரீசுகந்த குந்தளாம்பாள் - ஸ்ரீசிம்ம புரீஸ்வரர், முசிறி ஸ்ரீகற்பூரவல்லி- ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர், திருஈங்கோய்மலை ஸ்ரீமரகதவல்லி- ஸ்ரீமரகதாசலேஸ்வரர், வெள்ளூர் ஸ்ரீசிவகாமி அம்பாள்- திருக்காமேஸ்வரர்... என எட்டுத் தலங்களின் ஸ்வாமியரும், ஒரே இடத்தில் சங்கமிக்கும் காட்சியைத் தரிசிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?

திருச்சி - குளித்தலை சாலையில், மருதூர் எனும் ஊரில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது ராஜேந் திரம். அடுத்து, குளித்தலை சாலையில் குளித்தலைக்கு முன்னதாக உள்ளது பேட்டவாய்த்தலை. குளித்தலை - மணப்பாறை மெயின் சாலையில், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஐயர்மலை. குளித்தலை - கரூர் சாலையில், குளித்தலையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கருப்பத்தூர்.

ஒரே இடத்தில் கூடும் எட்டு ஊர் ஸ்வாமிகள்!

அடுத்து, காவிரி வடகரையில் முசிறி - நாமக்கல் சாலையில், முசிறியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருஈங் கோய் மலை. முசிறியில் உள்ளது ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் கோயில் முசிறி - திருச்சி சாலையில், முசிறியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளூர்.  

காசி தலத்தில் சிவனார் வடக்கு நோக்கி அருள் வது போல், குளித்தலை கடம்பர் கோவிலிலும் சிவனார் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். ஆகவே, இது காசிக்கு நிகரான தலம்; தட்சிண காசி என்று போற்றுகின்றனர், பக்தர்கள்.

காசிக்கு இணையான இந்தத் திருத்தலத்தில், கங்கைக்கு இணையான காவிரியின் கரையில், தைப்பூச நாளில், இறைவனைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, ஐஸ்வரிய பாக்கியம் பெற்று சிறப்புற வாழ்வர் என்பது ஐதீகம்.

திருச்சிக்கு அருகில் உள்ள குளித்தலையில், கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகடம்பவனேஸ்வரர். திருக்கடம்பந்துறை என புராணத்தில் போற்றப்படும் தலம், முருகப்பெருமானின் சாபத்தைப் போக்கி, சிவனார் அருள்பாலித்த திருவிடம், திருமால், ஸ்ரீபிரம்மன், சப்தகன்னியர், கண்வ முனிவர், அகத்திய மாமுனி என பலரும் வழிபட்டு, வரம் பெற்ற பூமி எனப் பெருமைகள் கொண்ட திருத்தலம் இது!

ஒரே இடத்தில் கூடும் எட்டு ஊர் ஸ்வாமிகள்!
ஒரே இடத்தில் கூடும் எட்டு ஊர் ஸ்வாமிகள்!

நாவுக்கரசரால் பாடப் பெற்ற தலம். அருணகிரிநாதரும், ஐயடி கள் காடவர்கோன் முதலானோரும் தரிசித்த தலம் எனத் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.  

உத்தராயன புண்ணிய காலத் தில், தைப்பூச நாளில், குளித்தலை ஸ்ரீகடம்பவனேஸ்வரருடன் மற்ற ஏழு தலங்களின் சிவனாரும் தங்களின் தேவியருடன் காவிரிக் கரையில் எழுந்தருளும் காட்சியைக் காணக் கிடைக்காதது.இதற்காக, அந்தந்த ஆலயங்களில் இருந்து உத்ஸவ மூர்த்தங்கள் சர்வலங்காரத்தில், சப்பரத்தில் திருவீதியுலா வருவார்கள். பிறகு ஊர்வலமாக காவிரிக் கரைக்கு வர... அங்கே தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.

முதல்நாள் இரவு அபிஷேக - ஆராதனைகளும் மறுநாள் சுவாமிகளின் திருச் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி வைபவமும் நடைபெறும். 'காலை கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி திரு வேங்கிநாதர் என்று இந்த ஊர்ப் பகுதிகளில் சொலவடை ஒன்று உண்டாம்! அதாவது காலையில் ஸ்ரீகடம்பவனேஸ்வரர், மதியத்தில் ஐயர்மலை ஸ்ரீரத்னகிரீஸ்வரர், மாலையில் திருஈங்கோய்மலை ஸ்ரீமரகதா சலேஸ்வரரையும் ஒரே நாளில் வழிபடுவார்கள். அடுத்து மறுநாள், எட்டூர் ஸ்வாமிகளையும் தீர்த்தவாரியில் தரிசிப்பார்கள்! இப்படி தரிசித்தால் மோட்சப் பதவியை, முக்தியை அடையலாம் என்கின்றனர் பக்தர்கள்.

காவிரியில் நீராடி, இந்தத் தீர்த்தவாரியையும் 8 திருத்தலங் களின் இறைத் திருமேனிகளையும் தரிசித்துப் பிரார்த்திக்க, நமது ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் நீங்கும்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
    படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism