Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ட்டாம் நூற்றாண்டில், கீழப்பறையாறையைத் தலைநகரமாகக் கொண்டு, ஆட்சி செய்தார்களாம் சோழ மன்னர்கள்! எனவே, இந்த ஊரைச் சுற்றியிருந்த மூப்பக்கோயில், பாளையநல்லூர், சுந்தரபெருமாள்கோவில், நாதன்கோவில், கொற்கை ஆகிய ஊர்கள் நகரங்களாக வளர்ந்திருந்தன. இதில், ஒவ்வொரு ஊரிலும் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. அதன் பொலிவுக்காகவும் பூஜைக்காகவும் நிலங் களையும் மாடுகளையும் தானமாகத் தந்தார்கள், மன்னர்கள்.

இதில், கொற்கை கோயிலின் அழகிலும் விஸ்தாரத்திலும் கண்டு மயங்காதவர்களே இல்லை. அதன் சாந்நித்தியத்தை அறிந்து சிலிர்க்காதவர் களே கிடையாது. ஸ்ரீபிரம்மன் - ஸ்ரீசரஸ்வதிக்கு சிவபெருமான் ஞானம் வழங்கி பேரருள் புரிந்த தலம் எனத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்!

பிரளயத்துக்குப் பிறகு, சிருஷ்டிக்காக ஒவ்வொரு தெய்வங்களும் ஒத்தாசை செய்தனர். அதில் சாகம்பரிதேவி என்பவள், நறுமணம் வீசுகிற மலர்களைப் பூமியில் சிருஷ்டிப்பதற்காகத் தோன்றினாள். ஸ்ரீபார்வதி தேவியை நோக்கிக் கடும் தவம் புரிந்தாள். அம்பிகையின் வரம் கிடைத்தால்தானே, அகிலத்துப் பெண்களும் நலமுடன் திகழ முடியும்?! ஒவ்வொரு தலமாக வந்தவள், இங்கே வந்து சந்திர புஷ்கரணியில் நீராடி, உமையவளை நினைத்துக் கடும் தவம் புரிந்தாள். கண்மூடி, நெடுந்தவம் இருந்தவள்... கண்விழித்துப் பார்க்க, சர்வ மலர்களையும் மேனியெங்கும் கொண்டு, சாகம்பரிதேவிக்கு காட்சி கொடுத்தாள் ஸ்ரீபார்வதி. அந்த கொற்கை நகரம் முழுவதிலும் பூக்களின் நறுமணம் சூழ்ந்திருந்தது. ஆகவே, இங்கேயுள்ள அம்பிகைக்கு, ஸ்ரீபுஷ்பவல்லி என்று திருநாமம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

ஆக, பிரம்மாவுக்கு அருளியதால் சிவனார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். பூக்களை பூமியில் சிருஷ்டித்ததால், உமையவள் ஸ்ரீபுஷ்பவல்லி எனும் திருநாமம் கொண்டாள். எனவே, இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களுக்கு ஞானம் கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் வாழ்வில் சுகந்தம் வீசும்; சுபிட்சம் நிலவும் என்பது ஐதீகம்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் - பட்டீஸ்வரத்துக்கு அருகில் உள்ளது கொற்கை. ஒருகாலத்தில் இந்த ஊர், நகரமாகத் திகழ்ந்தது. இந்தக் கோயில் 7 பிராகாரங்களைக் கொண்டிருந்ததாம்! 7-வது பிராகாரத்தை அடுத்துள்ள இடத்தை வீதியாக்கி, ஊரை நிர்மாணித்ததாகவும் சொல்வர். அதாவது, ஊரே கோயிலாகவும் கோயிலே ஊராகவும் அத்தனைப் பிரமாண்டங்

களுடன் அமைந்த ஆலயம் இது. ஆனால், இன்றைக்கு இது ஒற்றைப் பிராகாரம் கொண்ட கோயிலாகச் சுருங்கிவிட்டதுதான் வேதனை! ஆறு பிராகாரங்கள் முற்றிலுமாகச் சிதைந்து விட... விழுந்த தூண்களையும் உடைந்த கற்களையும் தாண்டி, புல்லும் முள்ளுமாகக் கிடக்கிற பிராகாரத்தைக் கடந்து, ஸ்வாமியைத் தரிசிக்க வேண்டிய சூழல், மனதை இம்சிக்கிறது!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

உள்ளே நுழையும்போது அண்ணாந்து பார்க்க, கோபுரமில்லை. எப்போது விழுமோ என்கிற நிலையில் உள்ளது நுழைவாயில். இது எத்தனையாவது நுழைவாயிலாக, அன்றைக்கு இருந்திருக் கும் என்று யூகித்துப் பார்க்கும்போதே, பதைபதைக்கிறது நெஞ்சம்.  அன்றைக்கு மண்டபங்களில் ஒன்றாக இருந்தது மாறி, அந்த மண்டபம் மட்டுமே கோயிலாக இன்றைக்கு இருப்பதை என்னவென்று சொல்வது?

'எத்தனையோ கோயில்களைப் பத்தி எழுதறீங்க; கும்பாபிஷேகம் நடக்குது.

கொற்கை கோயிலைப் பத்தியும் சக்தி விகடன் எழுதணும். அந்தக் கோயிலுக்கும் திருப்பணிகள் நடக்கணும்’ என்று தழுதழுத்த குரலில், தொலைபேசியில் தகவல் தந்திருந்தார் தாராசுரம் வாசகி உமா. உண்மைதான். இந்தக் கோயிலைப் பார்க்கும்போது, மனசு மொத்தமும் பாரமாகிப் போகும்! கோயில் சிதைந்திருந்தாலும், கட்டடங்கள் பழுதாகிப் போனாலும் கடவுளின் சாந்நித்தியத்துக்கு ஒரு குறைவுமில்லை. மூர்த்தங்கள் ஒவ்வொன்றுமே கொள்ளை அழகு!

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீபைரவர் என அனைத்துத் தெய்வ விக்கிரகங்களைப் பார்க்க கொஞ்சம் ஆறுதலாகிப் போகிறோம். உள்ளே கருவறையில், பிரமாண்டமான லிங்கமூர்த்தமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். இந்த உலகுக்குப் பூக்களைத் தந்த நாயகி, ஸ்ரீபுஷ்பவல்லி... புன்னகை ததும்பக் காட்சி தருவதைக் காண... மொத்த துக்கமும் பறந்தோடி விடுகிறது.

ஞானக் கலைகளுக்கும் அவிட்டத்துக்கும் தொடர்பு உண்டாம். எனவே, அவிட்ட நட்சத்திரக்காரர்கள் இந்தக் கோயிலை அறிந்து, இங்கு வந்து வழிபட்டு, பலன் பெற்றுச் செல்கின்றனர். மற்ற நட்சத்திரக்காரர்கள், அவிட்ட நட்சத்திர நன்னாளில் இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.

ஆலயம் தேடுவோம்!

'ஒருகாலத்தில் மிகப் பிரமாண்டமாக விழாக்கள் நடைபெற்ற ஆலயம்தான் இது. இன்றைக்கு விழாக் களும் பூஜைகளும் குறைந்து விட்டன’ என்று வேதனை யுடன் தெரிவிக்கிறார்கள் கொற்கை மக்கள்.

ஆணும் பெண்ணும் சமம்; கணவனும் மனைவியும் இணை என வலியுறுத்துகிற ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர் அழகுறக் காட்சி தருவது அற்புதம் என்றால், சிவ- பார்வதிக்கு உண்டான நந்திகள், ஒரே மேடையில் காட்சி தருவது அபூர்வம். ஆகவே, பிரதோஷ நாளில், இரண்டு நந்திகளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஒரே நாளில், இரண்டு நந்திகளுக்கு ஒருசேர நடைபெறுகிற அபிஷேகத்தைத் தரிசித்தால், பிரிந்த தம்பதியும் ஒன்றுசேருவர் என்பது ஐதீகம்!

பிரிந்தவர்கள் சேருவது எவ்வளவு பெரிய சந்தோஷம்; மனநிறைவு! அதேபோல், பொலிவை இழந்து காணப்படும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம், பழைய பொலிவுடன், அழகுடன் காட்சி தர வேண்டாமா? நமக்கெல்லாம் ஞானத்தைத் தந்து, குருவுக்கும் குருவாகத் திகழும் இறை வனுக்கு, தட்சணை தருவது நம் கடமை அல்லவா?

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

இந்தப் பூவுலகில், பூக்களைச் சிருஷ்டித்துத் தர அருள் புரிந்தவள் பல காலமாகப் பூக்களும் சூடாமல், புது வஸ்திரமும் அணியாமல், வழிபாடுகளே இல்லாமல் இருந்தாளாம்! பூவும் புது வஸ்திரமும் மகிழ்ச்சியின் அடையாளம் அல்லவா? ஒரு பூவை அவளின் சிரசில் வைத்து, ஒரு வஸ்திரத்தையும் சார்த்தினால், குளிர்ந்து போய், நம் ஒட்டுமொத்த சந்ததியையும் சக்தியுடன் வாழச் செய்யும் கருணைத் தாய் ஆயிற்றே அவள்!

அவிட்ட நட்சத்திரக்காரர் களுக்கு அருள்பாலிக்கிற தலம் இது. எனவே, அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அனைவரும் ஆளுக்கொரு செங்கல்லோ, ஒரு கைப்பிடி மணலோ கொடுத்தால் கூட, ஜம்மென்று மிக அழகாகத் திருப்பணிகள் முடிந்து பொலிவு பெற்றுவிடுமே இந்தக் கோயில்!

அத்துடன், நல்லது செய்ய நாளும் தேவையில்லை; நட்சத் திரமும் பார்க்கவேண்டாம். எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தால் என்ன... ஒருமுறை, ஒரேயரு முறை... கொற்கை ஸ்ரீபுஷ்பவல்லி சமேத ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் கோயிலுக்கு வந்து வணங்குங்கள். தம்பதி சமேதராக இருந்து, உங்களிடம் அவர்களே கேட்டுப் பெற்றுக் கொள்வார்கள்.

யாருக்கு என்ன கொடுக்கவேண்டும் என்பதும், யாரிடம் இருந்து என்ன பெறவேண்டும் என்பதும் கடவுளின் சித்தம்!

'விரைவில் திருப்பணி துவங்கி, கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும். அந்தக் கும்பாபிஷேக நாளில், இங்கு வந்து உன்னைத் தரிசிக்க வேண்டும்’ என்கிற பிரார்த்தனையுடன் பிரிய மனமில்லாமல் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரின் தாள் பணிந்து திரும்பினோம்.

சிவ கருணை... சிவ கருணை... சிவ கருணை!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism