Published:Updated:

``தைமாதம் நடந்த மீனாட்சியம்மன் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டது ஏன் தெரியுமா?’’ - பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்! #MaduraiChithiraiFestival

``தைமாதம் நடந்த மீனாட்சியம்மன் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டது ஏன் தெரியுமா?’’ - பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்!  #MaduraiChithiraiFestival
``தைமாதம் நடந்த மீனாட்சியம்மன் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டது ஏன் தெரியுமா?’’ - பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்! #MaduraiChithiraiFestival

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவும் மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவும் 'சித்திரைத் திருவிழா' என்ற பெயரைப் பெற்ற சுவாரஸ்யமான கதையை விளக்குகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

மிழர்களைப் பொறுத்தவரை நிலாக்காலம்தான் விழாக்காலம். சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடித் தபசு, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரமென எல்லா விழாக்களும் பௌர்ணமி நாளிலேயே நடைபெறும். அதற்குக் காரணம், அப்போதெல்லாம் இப்போது இருப்பது போன்று பகலை இரவாக்கும் விளக்குகள் கிடையாது. தீப்பந்தம், தீவட்டி, லாந்தர்தான் இருந்தன. திருவிழாவுக்கு வந்த மனிதர்கள் மீண்டும் ஊர் செல்வதற்கு வசதியாக, விழாக்களை வளர்பிறையில் தொடங்கி, முழுநிலவு நாளில் முடிப்பார்கள். 

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவும் மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவும் 'சித்திரைத் திருவிழா' என்ற பெயரைப் பெற்றதற்குப் பின்னால் சுவாரஸ்யமான கதையொன்று இருக்கிறது. மீனாட்சியம்மன் கோயில் திருவிழா, தை மாதத்தில்தான் நடந்துகொண்டிருந்தன. திருமலை நாயக்க மன்னரின் காலத்தில்தான் அது சித்திரை மாதத்துக்கு மாற்றப்பட்டது. 

ஒருமுறை, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது பக்தர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர். போதிய அளவுக்குப் பக்தர்கள் இல்லாததால் தேரை இழுக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருந்தால்தானே தேரை இழுத்து வீதி உலா நிகழ்த்த முடியும். இது திருமலை நாயக்கரின் கவனத்துக்குப்போனது. மந்திரியை அழைத்த மன்னர், 'ஏன் இப்படி நிகழ்ந்தது' என்று விசாரித்தார். 

``தை மாதம் வயலில் கதிர்கள் முற்றி அறுவடைக்குக் காத்திருந்ததால் மக்கள் வயல் வேலைக்குச் சென்றுவிட்டனர்'' எனப் பதில் கூறினார் மந்திரி. அந்தப் பதிலில் உள்ள உண்மையை உணர்ந்தார் திருமலை மன்னர்.

உடனே அவர், "மக்கள் மனம் மகிழ்ந்து ஒற்றுமையாக வாழத்தானே விழாக்கள்... இனி, மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவை, பயிர்த்தொழில் இல்லாத சித்திரை மாதத்தில் நடத்துவோம்'' என ஆணை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 400 ஆண்டுகளாக, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவோடு சேர்த்தே மீனாட்சியம்மன் கோயில் தேர்த்திருவிழாவும் சித்திரை மாதத்தில்தான் நடந்து வருகிறது. 

வைகை நதியின் படுகை முழுவதும் அழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறும். வைகை நதி தொடங்குமிடத்தில் அதற்கு 'வள்ளல் நதி' என்று பெயர். கடலில் கலக்காத ஒரே நதி வைகை நதிதான். ராமநாதபுரம் கண்மாயோடு முடிந்துவிடும். மதுரைதான் இதற்குத் தலைமைச் செயலகம். முன்பெல்லாம் மதுரைக்கு முன்பாக தேனூரில் அழகர் ஆற்றில் இறங்குவார். காலப்போக்கில்தான் மதுரைக்கு அவர் இடம் மாறினார். ஆனால், இப்போதும் தேனூரில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. 

மலையிலிருந்து அழகர் புறப்படும்போது, சுந்தரராஜப் பெருமாளாகத்தான் புறப்படுவார். இடையில்தான் அவர் கள்ளழகராக மாறுவார். வெள்ளியங்கிரி ஜமீன்தான் முதல் மண்டகப்படியை வழங்குவார். அதைத் தொடர்ந்து வழியெங்கும் 50, 100 என அன்னதானத்துடன் பெருமாளுக்கு மண்டகப்படி நடக்கும். இப்போது அவை பெருகிவிட்டன. எல்லா இடங்களிலும் தங்கி அழகர் மண்டகப்படியை ஏற்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறே வைகை ஆற்றுக்கு வருவார். 

அப்பன்திருப்பதியில் எதிர்சேவை என்னும் நிகழ்ச்சி நடக்கும். எதிர்சேவை என்பது, நம்மிடம் வருபவரை வரவேற்கும் நிகழ்ச்சிதான். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் மாலை, இரண்டு இடங்களுக்குச் செல்லும். ஒன்று திருப்பதிக்கு... மற்றொன்று கள்ளழகருக்கு. அந்த மாலையை அணிந்துகொண்டுதான் அழகர் செல்வார். அதன் பிறகு அவர் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் தங்கி, அபிஷேக ஆராதனைகளை முடித்துக்கொண்டு, காலையில் பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்குவார். அவர் ஆற்றில் இறங்குவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அப்போது பக்தர்கள் வெயிலின் தாக்கம் அழகரைத் தாக்காமல் இருக்க, தோல் துருத்தியில் தண்ணீரை நிரப்பிப் பீய்ச்சி அடிப்பார்கள். கடவுளுக்கும் மனிதனுக்குமான நெருக்கமான பந்தமாக இது பார்க்கப்படுகிறது.
''நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்'' என பாரதி பாடியதுபோல் மக்கள் நெக்குருகி வழிபடுவார்கள்.

அழகருக்குப் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்கள் அருமையாக இருக்கும். இப்போதிருக்கும் மாடர்ன் உடையான பெர்முடாஸ் உடையை அப்போதே அணிந்தவர் அழகர். அதைப்போன்ற உடையை அணிந்து பக்தர்களும் வருவார்கள். காலில் சலங்கையும் பெர்முடாஸ் உடையும் கையில் சாட்டையுமாக அழகர் வரும்போது ''வாராரு வாராரு... அழகர் வாராரு'' என்னும் பாடல் எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருக்கும். பிற்காலத்தில் இந்தப் பாடல் விஜயகாந்த் படமொன்றில் இடம்பெற்றது.

பிரசன்னம் பார்த்த பிறகே அழகர் என்ன நிறத்தில் பட்டுடுத்த வேண்டுமென முடிவெடுப்பார்கள். 

ஆற்றில் இறங்கும்போது பச்சை பட்டுடுத்தி இறங்கினால், 'நல்ல மழை இருக்கும்... நன்செய் பயிர்கள் பயிரிடலாம்' என்றும், வெள்ளைப்பட்டுடுத்தி இறங்கினால், 'மழைக்குறைவாக இருக்கும். அதனால், காய்கறிகள், சிறுதானியங்களை விதைக்கலாம்' என்றும் நம்பப்படுகிறது. 

ஆற்றில் இறங்கிய அழகர், ராமராயர் மண்டகப்படியை முடித்துக்கொண்டு, மண்டூக மகரிஷியின் சாபம் நீக்கி, தசாவதாரக் கோலங்களில் காட்சி கொடுத்து அழகர் மலை சென்றடைவார். இந்த மூன்று நாள்களும் மக்கள் அழகருடனே செல்வார்கள். வழியெங்கும் பொங்கல், புளியோதரை, சுண்டல், தயிர் சாதம் என வாரி வழங்குவார்கள்.  

இதையொட்டியே உலகம் அறியாத அப்பாவியை, 'அவர் என்ன ஆற்றைக் கண்டாரா, அழகரைச் சேவிச்சாரா?’ என்று சொல்லும் சொலவடை உருவானது.    

வைகை ஆற்றின் தென்கரையில் சைவ சமயத்தைப் போற்றும் வகையில் மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவும் தேரோட்டமும் வடகரையில் வைணவர்களுக்கான அழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் நடைபெறுகின்றன. ''மகாவிஷ்ணுவின் அவதாரமான அழகர், தன் தங்கை மீனாட்சியின் கல்யாணத்துக்கு வந்தவர்... ஆற்றில் இறங்கிவிட்டு திருமணத்துக்கு வராமலே போய்விட்டார்'' என்று மதுரையின் சுற்றுப்புறத்திலிருக்கும் கிராம மக்கள் வேடிக்கையாகச் சொல்வார்கள்.     

சைவ வைணவ ஒற்றுமையை வளர்க்கும் விதமாகத்தான் திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாக்களையும் சித்திரை மாதத்தில் ஒன்றாக நடத்தினார். மதுரை மீனாட்சி அம்மன்கோயில் விழாவான சுந்தரேசர் - மீனாட்சி கல்யாணமும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் அடுத்தடுத்து நடப்பது இதனால்தான். 

செல்போனையும் வாட்ஸ்அப்பையும் மட்டும் பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். ஒருமுறை மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு வாருங்கள். அழகரின் அருளை முழுவதும் பெற்று வளமுடன் வாழலாம்.

- பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

அடுத்த கட்டுரைக்கு