Published:Updated:

சீர்காழியில் மெய்ஞான வரமருளும் திருமுலைப்பால் உற்சவம்!

சீர்காழியில் மெய்ஞான வரமருளும் திருமுலைப்பால் உற்சவம்!
சீர்காழியில் மெய்ஞான வரமருளும் திருமுலைப்பால் உற்சவம்!

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு, திருநிலைநாயகி அம்மன் ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் உற்சவம், இன்று கொடியேற்றத்துடன் வெகுசிறப்பாக தொடங்கியது.

நாகை மாவட்டம் சீர்காழி, தேவார ஆசிரியர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும். பிரமபுரம், வேணுபுரம், தோணிபுரம், சிரபுரம் எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் சீர்காழியில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான `சட்டைநாதர் கோயில்' உள்ளது. நான்கு புறமும் கோபுரங்களுடன் பிரமாண்டமாக காட்சி தரும் இந்தக் கோயிலில், பிரம்மபுரீஸ்வரர் திருநிலைநாயகி அம்மனுடன் அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. 

சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தருக்கு, திருநிலைநாயகி அம்பாள், கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் ஞானப்பால் வழங்கினார். அம்மையே ஞானப்பால் ஊட்டியதால் ஞானம் எய்தினார் திருஞான சம்பந்தர். அன்னை ஊட்டிய பால், அவர் இதழோரம் வழிய, அதைக் கண்ட அவர் தந்தை சிவபாதர், 'உனக்குப் பால் ஊட்டியது யார்?' என்று வினவினார். அதற்குப் பதிலுரைக்கும்விதமாக ஞானசம்பந்தர் `தோடுடைய செவியன்' என்ற ஈசனின் அடையாளங்களைச் சொல்லும் பாடலைப் பாடினார். அது முதற்கொண்டு அவர் சிவனருள் பெற்று  ஞானக் குழந்தையாய் வலம் வந்தார்.

இந்த நிகழ்வு ஒவ்வோர் ஆண்டும், திருமுலைப்பால் உற்சவமாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருமுலைப்பால் உற்சவத்தில் கலந்துகொள்வதன் மூலம் சிவனருள் பெற்று மெய்ஞானம் பெறலாம் என்பது ஐதிகம். இந்த ஆண்டு சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ விழா, இன்று காலை பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாளை (11.4.19) திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும். இதையொட்டி திருஞானசம்பந்தர், பிரம்மபுரீஸ்வரர் சந்நிதியில் இருந்து புறப்பட்டு, பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருளுவார். அங்கு, திருஞானசம்பந்தருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடு நடைபெறும். 

விழாவில் 15.4.19 அன்று, திருக்கல்யாண வைபவமும், 16.4.19 அன்று பிச்சாண்டவர் உற்சவமும், 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருத்தேர் பெருவிழாவும் நடைபெற உள்ளன. அதைத்தொடர்ந்து 19-ம் தேதி தீர்த்தவாரியும், 23-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 26-ம் தேதி முத்துச்சட்டைநாதர் உற்சவமும் நடைபெற உள்ளன. 

படங்கள் : பா.பிரசன்னா