Published:Updated:

கோயில்களைத் தனியார் வசம் ஒப்படைப்பது நல்ல முடிவா? - ஓர் அலசல்!

கோயில்களைத் தனியார் வசம் ஒப்படைப்பது நல்ல முடிவா? - ஓர் அலசல்!
கோயில்களைத் தனியார் வசம் ஒப்படைப்பது நல்ல முடிவா? - ஓர் அலசல்!

‘கோயில்களின் நிர்வாகத்தை மாநில அரசுகள் ஏன் எடுத்துக்கொள்கின்றன. அனைத்தையும் ஏன் பக்தர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம். ஒடிசா மாநிலம் பூரி, ஜெகந்நாதர் ஆலயத்தில் பக்தர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்தக் கோயில் குறித்த விசாரணையின்போது, நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.

"2014-ம் ஆண்டு தமிழகத்தின் பழைமையான சிதம்பரம் நடராஜர் கோயிலை உச்சநீதிமன்றம் மாநில அரசிடமிருந்து பெற்று தீட்சிதர்களிடம் ஒப்படைத்தது. தமிழகத்தில் பல சிலைகள் திருடப்பட்டுவிட்டன. அவை பழைமையானவை மட்டுமல்ல. விலைமதிப்பில்லாதவை. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலும் திருவிதாங்கூர் தேவசம்போர்டால் நிர்வகிக்கப்படுகிறது. இதுபோன்று எல்லாக் கோயில் நிர்வாகங்களையும் பக்தர்களிடமே ஒப்படைக்கலாமே?” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். 

தமிழகத்தில், 36,000-க்கும் மேற்பட்ட கோயில்கள், 56 திருமடங்கள், இவற்றுடன் இணைந்து 58 கோயில்கள் உள்ளன. இவற்றை அறநிலையத்துறை நிர்வகிக்கிறது. அண்மைக்காலமாக அறநிலையத்துறை நிர்வாகம் குறித்து பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இச்சூழலில் உச்சநீதிமன்றம், கோயில்களின் நிர்வாகத்தை மாநில அரசுகளிடம் இருந்து எடுத்து பக்தர்களிடம் ஏன் தரக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இதுகுறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவத்திடம் பேசினோம். 

“கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறையிடம் இருந்து எடுத்துக் கொடுப்பதாக இருந்தால் யாரிடம் கொடுக்க முடியும்? பக்தர்கள் என்பதை எந்த அளவுகோல் வைத்து நிர்ணயிக்க முடியும்? சில ஆலயங்கள் அரச பரம்பரையினர் வசம் இருந்தன. அவர்களை எப்படிக் கண்டடைவது? தனியார்வசம் இருந்த கோயில்கள் பல, இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. உண்டியல் பணம், நகைகள், நிலம் என்று கோயில் சொத்துகளில் முறைகேடுகள் செய்து, அவற்றைச் சிலர் மட்டும் அனுபவிக்கத் தொடங்கிய பிறகு வழக்கு பதிவு செய்து, அவற்றை இந்துசமய அறநிலையத்துறை தன் நிர்வாகத்தில் கொண்டுவந்தது. 

இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது. அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில்களைச் சீரமைக்க நடவடிக்கை

எடுக்க வேண்டும். மீண்டும் கோயில்களைத் தனியாரிடம் ஒப்படைத்தால் தனி நபர்களின் மேலாதிக்கம் வலுப்பெறத் தொடங்கிவிடும். சாதிக் கட்டமைப்புகளைக் கடந்து இப்போதுதான் மக்கள் ஒன்றுபடத் தொடங்கியிருக்கிறார்கள். மீண்டும் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டால் கோயில்கள் தனித்தன்மை இழந்துவிடும். வெளியிலிருந்து பார்க்கையில், கோயில்களைப் பக்தர்கள் மற்றும் ஆன்றோர், சான்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனும் கருத்துகள் நன்மை ஏற்படுத்துவதுபோல் தோன்றும். ஆனால், ஆழமாகச் சிந்திக்கையில் இது பாகுபாட்டை ஏற்படுத்திவிடும். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை கோயில்களுக்குள் யார் வேண்டுமானாலும் சென்றுவணங்கமுடியும். ஆனால், தனி நபர்கள் அல்லது குழுக்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டால் அனைவரும் கோயிலுக்குள் சென்று வழிபடமுடியாத சூழல் ஏற்படும்.

loading...

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தீவிரமான முயற்சி ஒன்றை முன்னெடுத்தார். மடாதிபதிகள், பக்தர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ‘தெய்விகப் பேரவை’ என்ற பெயரில் ஒரு அமைப்பை அரசின் உதவியுடன் நிறுவினார். ஒவ்வொரு கோயிலிலும் அப்பகுதி மக்களை உறுப்பினராகக் கொண்ட சபை ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் கோயிலை நிர்வகிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பேரவை 'அவசரக்கால' சமயத்தில் முடக்கப்பட்டுவிட்டது..." என்கிறார் சுகி சிவம்.  

இதுகுறித்து ஆன்மிக எழுத்தாளர் பி.என்.பரசுராமனிடம் பேசினோம். 

``இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகக் கோயில்கள் அனைத்தும் சீரழிந்துவிட்டன. முறைகேடுகள் குறித்து கேள்வி கேட்டால் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் கைகாட்டுகிறார்கள் ஆலய நிர்வாகிகள். பொதுமக்களும் கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள். கோயில்கள் அனைத்தும் பக்தர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டால் யார் வேண்டுமானாலும் முறைகேடுகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பமுடியும். சரியான நேரத்தில் பூஜை செய்யாவிட்டால்கூட ஊர் மக்கள் தனியாரைக் கேள்விகேட்பார்கள். எனவே, கோயில்களைத் தனியார் மற்றும் பக்தர்கள் வசம் ஒப்படைப்பதே சரியான தீர்வாக இருக்கும்” என்கிறார் அவர்.  

கோயில்கள் மற்றும் ஆதின மடங்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கோயில்களை மீட்பதற்காக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்திவரும் திருத்தொண்டர் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து கருத்துக்

கேட்டோம். 

“கோயில்களைத் தனிநபர்களிடம் ஒப்படைத்தால் கோயிலுக்குச் சென்று பொதுமக்கள் வழிபட முடியாத சூழல் ஏற்படும். அதன்பிறகு தடி எடுத்தவர்கள் அனைவரும் தண்டல்காரர்களாக மாறிவிடுவார்கள். எனக்கு இந்துசமய அறநிலையத் துறையினர் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு. இருந்தாலும், ஆலயங்களை அரசிடமிருந்து மீட்டு தனியார் வசம் ஒப்படைக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அரசு நிர்வாகத்தில் பிரச்னை இருக்கிறது என்றால் அதைச் சரிசெய்து சீர்திருத்த வேண்டுமே தவிர, அந்த அமைப்பையே அழிக்க முயல்வதென்பது சரியான தீர்வாக இருக்காது. கோயில் நிர்வாகத்தைத் தனியார் வசம் ஒப்படைத்தால் அவர்களுக்கே முதல் மரியாதை வழங்க வேண்டும். தமிழகத்தில் அரிய சிலைகள் பல காணாமல் போனதற்குக் காரணம் தனியார் நிர்வாகம்தான். அவர்களிடமிருந்து கோயில்களையும் அங்கிருந்த சிலைகளையும், சொத்துகளையும் காப்பாற்றவே அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அதை மறந்துவிடக்கூடாது" என்கிறார் அவர். 

அடுத்த கட்டுரைக்கு