Published:Updated:

`இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அழியாது’ - பசிப்பிணி தீர்க்கும் வள்ளலார் சத்திய தருமசாலைக்கு 154 வயது

அணையா அடுப்பு
அணையா அடுப்பு

இந்த அடுப்பை மூட்டியபோது, ``உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அணையாது” என்று சொன்னாராம் வள்ளலார் பெருமான்.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றுரைத்த வள்ளலார் உருவாக்கிய தருமசாலையின் வயது 154. வள்ளலார் தன் வாழ்நாளில் சத்திய சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை, சத்திய தருமசாலை ஆகிய மூன்று அமைப்புகளை உருவாக்கினார்.

`பசியை ஒரு பிணி’ என்று சொன்னவர் வள்ளலார். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரையும் தாக்கும் பிணி பசி. அதைப் போக்குவதே மாபெரும் தருமம் என்று போதனை செய்தார். அதற்குத் தானே முன்னுதாரணமாகுமாறு, 1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ம் நாள் வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவினார். அப்போது, அவர் கையால் மூட்டப்பட்டதுதான் இங்கு உள்ள `அணையா அடுப்பு’.

வடலூர் சத்திய தருமசாலை
வடலூர் சத்திய தருமசாலை

இன்றுவரை, தருமச்சாலையின் தனிச்சிறப்பு அந்த அணையா நெருப்பு. பலரின் பசியைப் போக்குவதே அதன் பொறுப்பு. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு உணவு வழங்கி ஆதரித்துள்ளது இந்த தருமசாலை. எந்தச் சூழலிலும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. இங்கு தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு, ஒவ்வொரு வேளைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்தக் கொடிய நோய் தொற்றுக் காலத்திலும் உலகின் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடி இருந்த நிலையிலும், சத்திய தருமச்சாலை தனது சேவையைச் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கிறது.

சாதி, மதம், மொழி, இனம், தேசம் என்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி உலகோர் பசி போக்குவதையே பிரதான பணியாய் கொண்டு செயல்பட்டு இந்தத் தருமசாலை 153 ஆண்டுகளை நிறைவுற்று 154 -ம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறது. இந்த அடுப்பை மூட்டியபோது, ``உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அணையாது” என்று சொன்னாராம் வள்ளலார் பெருமான்.

வடலூர் சத்திய தருமசாலை
வடலூர் சத்திய தருமசாலை

கொரோனாவால் உலகமே முடங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஏழைமக்களும் உணவகங்களில் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும் மக்களும் தருமசாலையை நம்பியே வருகின்றனர். மேலும், பலரும் சத்திய தரும சாலையில் தங்கியுள்ளனர். அரசு வலியுறுத்துவதைப் போல இங்கு அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள்.

எந்த நேரத்திலும் சுமார் ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றைச் சேமிப்பில் வைத்திருப்பதால், தொடர்ந்து உணவு வழங்க முடிகிறது என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.

''அரிசி, பருப்பு எனத் தானியங்களுக்காகத் தனி உண்டியல் உள்ளது. பலரும் இங்கு அரிசி மூட்டைகளைத் தானமாக அனுப்புவார்கள். விவசாயிகள் விளைச்சல் எடுத்ததும், தங்களால் முடிந்த பங்கை இங்கு காணிக்கையாகச் செலுத்துவார்கள். அவற்றைக்கொண்டு இடைவிடாது அன்னதானம் செய்கிறோம். தற்போது இங்குள்ளவர்களுக்கு டோக்கன் தரப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இடைவெளி விட்டு நின்று அனைவரும் உணவை வாங்கிச் செல்கிறார்கள்” என்கிறார்கள் நிர்வாகிகள்.

வடலூர் அருட்பிரகாச வள்ளலார் சத்திய தருமசாலை

`பசி தவிர்ப்பதே முக்கியம்; அன்னதானமே

பிரதானம்; பழங்கஞ்சியானாலும் வழங்குவது நன்று'

என்னும் வள்ளலாரின் போதனை உலகமே பின்பற்ற வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம். இன்று நம்மாலான உதவிகளை மற்றவர்களுக்குச் செய்து மகிழ்வோம்.

அடுத்த கட்டுரைக்கு