Published:Updated:

என்னை வாழ வைக்கும் ஈசன்!

என்னை வாழ வைக்கும் ஈசன்!

என்னை வாழ வைக்கும் ஈசன்!

என்னை வாழ வைக்கும் ஈசன்!

Published:Updated:
என்னை வாழ வைக்கும் ஈசன்!
##~##
'மு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தல் படத்துல சுப்ரமணியபுரம்னு படத்துக்கு பேரு வைச்சீங்க. இப்ப, ரெண்டாவது படத்துக்கு அவங்க அப்பன் சிவபெருமான் பேரை வைச்சிருக்கீங்க. நீங்க முருக பக்தரா, சிவ பக்தரா?’னு திரையுலக நண்பர்கள் நிறையப் பேரு கேட்டாங்க. கடவுளை அடையறதுதான் நம்ம குறிக்கோள். அதுக்காக எத்தனை சாமிங்க நம்மளுக்கு துணைக்கு வர்றாங்க. எல்லாச் சாமிகளும் நமக்காகத்தான்; நம்மளை நல்வழிப்படுத்தறதுக்காகத்தான்..!'' என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் 'ஈசன்’ இயக்குநர் எம்.சசிகுமார்.

''பாசத்துக்கும் பக்திக்கும் பேர்போன மதுரைதான் நமக்குப் பூர்வீகம். மீனாட்சியம்மனுக்குத் திருக்கல்யாணம்னாலும் சரி, கள்ளழகர் வைகை ஆத்துல இறங்கறார்னாலும் சரி, திருப்பரங்குன்றத்துல முருகனுக்குத் திருவிழாவா இருந்தாலும் சரி... லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்துல ஒரு துரும்பாட்டம் நின்னு ரசிச்சவன்தான் நான். சின்ன வயசுல விழாக்களையும் கொண்டாட்டங்களையும் ரசிக்கறதுக்கு மதுரை கத்துக் கொடுத்துச்சு. அதே, அரை டிராயர் வயசுல, 'இதுதாம்பு நம்ம சாமி; நம்ம குலத்தை வாழ வைக்கிற குலசாமி’ன்னு அப்பா எனக்குக் காட்டின சாமிதான் செருவலிங்க ஐயனார்!'' என்று நெக்குருகிச் சொல்லும் சசிகுமார், தொடர்ந்து விவரித்தார்...

''சிவகங்கைலேருந்து ஒரு அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு, பெருமாள்பட்டிங்கற ஊரு. அங்கேயிருந்து கிளை பிரிஞ்சு போற பாதையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போனா, ஈசனூர் அப்படீங்கற சின்ன கிராமம்! பாத்தீங்களா... 'ஹரியும் சிவனும் ஒண்ணு’ங்கறதை உணர வைக்கிற மாதிரி, பக்கத்துப் பக்கத்துல ரெண்டு சாமிங்க பேர்லயும் ஊருங்க இருக்கு!

என்னை வாழ வைக்கும் ஈசன்!

மூணு நாலு தெரு... அதுல நாப்பது ஐம்பது வீடுகள்னு தீப்பெட்டி சைஸ் அளவுக்குதான் ஊரு. ஊரைச் சுத்தியும் வயல்வெளிங்கதான்! ஒரு பக்கம் வீடுகள்... இன்னொரு பக்கம் வயல்கள்... நடுவுல பூமியையும் பூமியையே நம்பியிருக்கற மக்களையும் காக்கிற செருவலிங்க ஐயனார் கோயில்! இடத்தைப் பார்த்ததுமே மனசு, இலவம்பஞ்சாயிரும். கோயிலுக்குள்ள போயிட்டா, மொத்த பாரமும் காணாமப் போயிரும். அவ்வளவு சக்தியும் கருணையும் கொண்ட சாமி, இவரு!'' என்று கண்கள் விரியச் சொல்கிறார் சசிகுமார்.

'ஈசன்’ படத்தில், 'ஈசனூர்- சிவகங்கை மாவட்டம்’ என்று 'டைட்டில் கார்டு’ போட்டு பிளாஷ்பேக் காட்சி விரியும். தன் மனதுக்குள் இருக்கிற குலசாமியை, தனது படைப்புக்குள்ளேயும் வரித்துக்கொண்ட காரணத்தைக் கேட்டால், ''எனக்குப் பிடிச்சதை, எல்லாருக்கும் பிடிக்கிற விதமா சொல்ல ஆசைப்பட்டேன். இன்னிக்கு 'டைரக்டர்’னு பேரெடுத்து இங்கே நிக்கிறேன்னா, அதுக்கு செருவலிங்க ஐயனார்தான் முழுமுதற் காரணம்'' என்று சிலிர்க்கிறார் சசிகுமார்.

''அந்தக் காலத்துல ரோடு வசதி கிடையாது; பஸ் வசதியும் இல்லை. மாசிப் பெருந் திருவிழாவுக்கு அப்பா- அம்மா, சித்தி- சித்தப்பா, அத்தை- மாமான்னு பெருங்கூட்டமா மாட்டு வண்டிகளைப் பூட்டிக்கிட்டு ஈசனூருக்கு கிளம்புவோம். வழியில மணலூர்ல கட்டுச்சாத மூட்டையை விரிச்சு, வரிசையா உட்கார்ந்து சாப்பிடுவோம். பாக்கறதுக்குக் கல்யாண வீட்டுல பந்தி பரிமாறுற மாதிரி இருக்கும். அப்புறம் வண்டியேறினா... கழுத்து மணிச் சத்தத்துக்கு தகுந்த மாதிரி, கொம்புகளை ஆட்டிட்டே வர்ற மாடுகளைப் பாத்துக்கிட்டே வந்தா பொழுது போனதும் தெரியாது; ஈசனூர் வந்ததும் தெரியாது! அடேங்கப்பா... மாட்டு வண்டிங்க, டிராக்டர் வண்டிங்க, லாரிகள்னு ஒரு பக்கம் வாகனங்களா குவிஞ்சு கிடக்கும். எல்லாப் பக்கமும் சனங்க மனைவியும் மக்களுமா, சிரிப்பும் கும்மாளமுமா பரவிக் கிடப்பாங்க. 'ஏம்ப்பூ... கொடைக்கானல் கான்வென்ட்ல படிக்கிற நம்ம மகாலிங்கம் புள்ள நீதானாப்பு?’ன்னு கேட்டு, 'நல்லா இரு கண்ணு’ன்னு சொல்லிக் கிள்ளினதுல, என் கன்னம் ரெண்டும் சிவந்து போயிருக்கும்.

என்னை வாழ வைக்கும் ஈசன்!
என்னை வாழ வைக்கும் ஈசன்!

'சசிக்கண்ணு... தாத்தாவையும் என்னையும் நம்ம சேனைங்க எல்லாரையும் நல்லபடியா வாழவைச்சதும் வாழவைச்சுட்டிருக்கறதும் இந்தச் சாமிதான் ராசா. நல்லா பெரியாளா வரணும்; பெரிய படிப்பெல்லாம், படிக்கோணும்னு வேண்டிக்கப்பா’ன்னு... குதிரை வாகனத்துல செருவலிங்க ஐயனார் ஊர்வலமா வர்றப்ப, தன்னோட தோள்ல என்னைத் தூக்கி, சாமியைக் காட்டினார் அப்பா. அந்த நிமிஷமே, குலசாமியை என் மனசுல தூக்கிக் கிட்டேன்'' என்று உருகுகிறார் சசிகுமார்.

''எல்லாக் கோயில்ல இருக்கறதும் சாமிதான். அதே போல, நிறையக் கோயில்கள்ல இருக்கற கதைதான் இங்கேயும். பால் கலயத்தைத் தூக்கிட்டுப் போகும் போது, வரப்பு மேட்டுல குறிப்பிட்ட ஒரு இடத்துல தினமும் ஏதோ  இடறிவிட, தினமும் அங்கே பால் கொட்டுச்சாம்! ஒரு நாள், 'என்னடா இது’ன்னு கடப்பாறையால் தோண்டிப் பாத்தா, உலகத்தையே காக்கிற சாமியோட சிலை! அப்படி சுயம்புவா வந்த லிங்கத்தையும் அய்யனாரையும் ஒண்ணுமண்ணா, ஒரே கருவறை வைச்சுக் கும்புட ஆரம்பிச்சாங்களாம்! இவங்களுக்கு துணையா, பக்கபலமா, மொத்த ஊரையும் மக்களையும் காபந்து பண்றதுக்குக் காவல் காரனா சங்கையா சாமியும் இருக்கார். அதனாலதான், 'ஈசன்’ல காவல்காரனா, போலீஸ்காரரா வந்த சகோ சமுத்திரக்கனிக்கு, 'சங்கையா’னு பேரு வைச்சேன்.

இன்னிக்கு 'சசிகுமார்’ங்கறவனைப் பத்தி தமிழ் நாட்ல ஓரளவுக்குத் தெரியுதுன்னா, செருவலிங்க ஐயனாரும் சங்கையா சாமியும்தான் காரணம். அத னாலதான் உறவுக்காரங்க, நண்பர்கள்னு எல்லாரும் மதுரைல இருந்தாலும், 'சாமிக்கு முன்னாடி, ஈசனூர் லதான் என் கல்யாணம் நடக்கணும்’னு உறுதியாகச் சொன்னேன். அதேபோல, இங்கேதான் நடந்துச்சு என் கல்யாணம்.

என்னை வாழ வைக்கும் ஈசன்!

மதுரை புதுத்தாமரைக் குளத்துலதான் வீடும் வயல் களும் இருக்கு. எங்க ஜவுளிக்கடை துணிப்பையில, விதை நெல்லை எடுத்துக்கிட்டு, குலசாமியைக் கும்பிடறதுக்கு அப்பாவோடயும் தாத்தாவோடயும் வந்திருக்கேன். அந்த சாமி பார்வை பட்டதை விதைச்சா, பூமியெல்லாம் நெல்லாகும்; நெல்லெல்லாம் சத்தாகும்! சுப்ரமணியபுரம், பசங்க, ஈசன்னு எல் லாமே இங்கே கும்பிட்டு ஆரம்பிச்சதுதான்!

என்னை வாழ வைக்கும் ஈசன்!

மனசு தாமரைப்பூவா மலர்ந்து சிரிச்சாலும் சரி... தொட்டாச்சிணுங்கியா கிடந்து தவிச்சாலும் சரி... சென்னை டு மதுரை, மதுரை டு ஈசனூர்னு ஒரு டிரிப் அடிச்சிட்டு, கொஞ்சம் 'சார்ஜ்’ ஏத்திட்டு வந்தா, புத்தி பரபரன்னு வேலையில இறங்கும்!

'தியேட்டர்ல, திருவிழாக் கூட்டம்’னு நம்மூர்ல சொல்லுவாங்க. மாசி மகாசிவராத்திரியன்னிக்கு, நூறு தியேட்டர் கூட்டத்தைத் தாண்டிடும், ஈசனூர்ல! மொத்த சிவகங்கை மாவட்டமும் திரண்டு வந்திருக்கும்! ஊரும் உறவும் தங்கறதுக்கு இங்கே இடம் வாங்கியிருக்கோம். சமைக்கறதுக்கு, குளிக்கறதுக்குன்னு வசதிகளும் பண்ணி யாச்சு. 'செருவலிங்க ஐயனார் கோயில் - ஈசனூர்’னு வளைவு நுழைவாயில் வைக்கற திட்டமும் இருக்கு. இந்த வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நல்ல சினிமா தரணும்; நல்ல வாழ்க்கையைக் கொடுத்த குலசாமிக்கு, இப்படிச் சின்னச் சின்னதா எதுனா செய்யணும்'' என்று சசிகுமார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அலங் காரத்தை முடித்துவிட்டு, கருவறையின் திரையை விலக்குகிறார் பூசாரி. உள்ளே... சுயம்புலிங்கம்; அத்துடன் பூரண- புஷ்கலா தேவியருடன் ஸ்ரீசெருவலிங்க ஐயனார்; பரிவார தெய்வங்களின் சந்நிதிகள்; அற்புதத் தரிசனம்!

அதையடுத்து ஊருக்குள்ளே சிறிய கோயில்... அங்கே... மிகச் சிறிய பீடம்!

''அங்கே ஆயுதமேந்தி காவல்காக்கிற சங்கையா சாமி, இங்கே பீடமா, உருவம் ஏதும் இல்லாம இருக்கார். அங்கே சாமி கும்பிட்டுட்டு, இங்கே சங்கையா சாமிகிட்ட வந்து, 'வழித்துணைக்கு நீயும் வா சங்கையா’னு அழைப்பு கொடுக்கணும். அப்புறம், உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும், செருவலிங்க ஐயனார் சார்பா, நம்ம கூடவே இருப்பார் சங்கையா சாமி!'' என கண்மூடிப் பிரார்த்தித்து விட்டு, பயணத்தைக் தொடர்கிறார் சசிகுமார், சங்கையா சாமி துணையுடன்!

- வி.ராம்ஜி
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

என்னை வாழ வைக்கும் ஈசன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism