Published:Updated:

சக்தி விகடன் சார்பில் ஏப்ரல் 21-ல் வேல்மாறல் பாராயணம்... தேவகோட்டையில் நடைபெறுகிறது!

முருகக் கடவுளைப் போற்றுவதும், அவன் திருக்கை வேலாயுதத்தைப் போற்றுவதும் வேறுவேறல்ல. கருணையே வடிவான முருகன், வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்யாது இரு கூறாகச் செய்து முருகனுக்கு உகந்த கொடியும், வாகனமுமாக்கி நித்தியத்துவம் பெறச் செய்தார். பக்தர்கள் கந்தா என்று கதறும்போதும் கந்தனுக்கு முந்திச் சென்று அவர்களைக் காப்பதும் அவன் கைவேல்தான்

சக்தி விகடன் சார்பில் ஏப்ரல் 21-ல் வேல்மாறல் பாராயணம்... தேவகோட்டையில் நடைபெறுகிறது!
சக்தி விகடன் சார்பில் ஏப்ரல் 21-ல் வேல்மாறல் பாராயணம்... தேவகோட்டையில் நடைபெறுகிறது!

முருகக் கடவுளைப் போற்றுவதும், அவன் திருக்கை வேலாயுதத்தைப் போற்றுவதும் வேறுவேறல்ல. கருணையே வடிவான முருகன், வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்யாது இரு கூறாகச் செய்து முருகனுக்கு உகந்த கொடியும், வாகனமுமாக்கி நித்தியத்துவம் பெறச் செய்தார். பக்தர்கள் கந்தா என்று கதறும்போதும் கந்தனுக்கு முந்திச் சென்று அவர்களைக் காப்பதும் அவன் கைவேல்தான்.   

இல்லையென்றால் `அச்சம் அகற்றும் அயில் வேல்’ எனச் சிறப்பிப்பாரா குமரகுருபரர்... `வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்’ என்று கந்தரநுபூதியும். `வினை எறியும் வேல்’ என்று திருப்புகழும் வேலைப் புகழ்கிறது. 

குமரன் கைவேல் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய முச்சக்திகளின் சங்கமம். வள்ளிப்பிராட்டி இச்சா சக்தி வடிவானவள். தேவசேனா தேவியோ கிரியா சக்தியின் வடிவானவள். கந்தக் கடவுளே ஞான சக்தி. இம்முச்சக்திகளையும் கொண்ட வேலின் அருளைப் பெற நமக்கு வாய்த்திருக்கும் எளிய மந்திரப் பாராயணமே வேல்மாறல் பாராயணம். 

அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த நூல்கள் மொத்தம் ஒன்பது. அவற்றுள் வேல்வகுப்பும் ஒன்று. உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருள வல்ல ஆற்றல் படைத்தது `வேல் வகுப்பு’ என்று வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுவார்.

இத்தகைய பெருமை வாய்ந்த வேல்வகுப்பை, பக்தர்கள் எளிதில் பாராயணம் செய்து பயன்பெறும் வகையில் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் வேல்மாறல் என அருளிச் செய்தார். சாக்த வழிபாட்டில் உள்ள பல்லவப் பிரயோக முறையின் படி 16 X 4 = 64 அடிகளில் வருமாறு வேல்மாறலை அமைத்தார். மேலும், கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும், ஏறி இறங்கி வருவது போலவும் மாறிமாறி வர அமைத்து, அறுபத்து நான்கு அடிகளில் அதை உருவாக்கினார். 

வேல்மாறல் பாராயணத்தின் மூலம் சகலவிதமான பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டுப் பல்வேறு நன்மைகளை அடையலாம். திருமணத் தடை நீங்குதல், புத்திரபாக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம், செல்வச் செழிப்பு ஆகிய பல்வேறு நன்மைகளை வேல்மாறல் பாராயணம் மூலம் அடையலாம். 

`சக்திவிகடன்' சார்பில் ஒவ்வொரு மாதமும் வேல்மாறல் பாராயணம் வெவ்வேறு திருத்தலங்களில் நடைபெறுகிறது. இந்த வைபவத்தின்போது, வேல்மாறல் பாராயணமும் வேலுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். வேலுக்கு `ஷோடச அபிஷேகம் எனப்படும் பால், நெய், தயிர், மஞ்சள், இளநீர், தேன், கனிகள் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெறும். 

இந்த மாதம் வேல்மாறல் பாராயணம், தேவகோட்டையில் அமைந்திருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் வரும் ஏப்ரல் 21-ம் தேதி காலை 9.15 மணிக்குத் தொடங்கும். சக்தி விகடன் சார்பாக வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் குழுவினரின் வேல்மாறல் பூஜை செய்யவிருக்கின்றனர். 

இந்தத் திருக்கோயில் ஒரு விசேஷித்த அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக முருகன் கோயில்கள், மலைமீது அமைந்திருக்கும். இந்தத் தலத்தில் குன்றுகள் இல்லை. ஆனாலும் முருகனை, உயரத்தில் இருத்திப் பார்க்க விரும்பி, கோயிலையே 75 அடி உயரத்தில் அமைத்திருக்கிறார்கள். 

பழநியில் அருள்வதைப் போன்றே, இந்தத் தலத்திலும் ஒரு கரத்தில் தண்டம் ஏந்தி, மறு கரத்தை இடுப்பில் ஊன்றியபடி, தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார் முருகன். சந்நிதிக்கு நேர் எதிரில் பசிய மயில் வாகனம். வளைந்த கழுத்தும், விரித்த தோகையும், தூக்கிய ஒரு காலும், ஊன்றிய ஒரு காலுமாக பிரணவ வடிவில் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகிறது. 

அருள் நிறைந்த இந்தத் தலத்தில், வேல்மாறல் பூஜை நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும், பக்தர்கள் அனைவரும் கூடி நிகழ்த்தும் கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் அதிகம். மனித மனங்களை பீடித்துள்ள அனைத்துத் தீவினைகளும் தீர சக்தி விகடன் சார்பில் நடைபெறவிருக்கும் இந்த வேல்மாறல் பாராயணத்தில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் திருவருள் பெறலாமே...

இந்தப் பிரார்த்தனையில் கலந்துகொண்டு, முருகக்கடவுளின் திருவருளைப் பெற அன்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

இடம் : சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ளது தேவகோட்டை. இவ்வூரில், கண்டதேவி சாலையில் சுமார் 1 கி.மீ தொலைவில், கருதா ஊரணியின் எதிர்ப்புறம் (நகரச் சிவன் கோயில் அருகே) அமைந்துள்ளது இந்த முருகன் கோயில். 

தொடர்புக்கு: ரங்கன் குருக்கள்: 87605 68792