Published:Updated:

சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு!

சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு!

சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு!

சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு!

Published:Updated:
சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு!
சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு!

மசிவாயனை நெஞ்சில் நிறுத்தி, ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளமுருக உச்சரித்து, பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வணங்கி வழிபடுங்கள்... மலைபோல் வரும் துயரங்கள் எல்லாம் பனிபோல் விலகும்; சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்; மறுமைக்கும் பலகோடி நன்மை கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதோஷ கதை இது

சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு!

ண்டசராசரங்களும் ஆனந்தத்தில் திளைத்தன, ஆனந்தக் கூத்தனின் சந்தியா தாண்டவத்தைக் கண்டு! நந்தியெம்பெருமானின் 'சுத்த மத்தள’ இசைக்கேற்பத் துள்ளியாடும் பரமனைக் கண்டு பராசக்திக்கும் மகிழ்ச்சி!

இருக்காதா பின்னே... 'உலகாளும் நாயகனுக்கே ஆபத்து நேருமோ’ என்று ஒருகணமேனும் அவளும் பரிதவித்துவிட் டாளே! தாயுள்ளம் அல்லவா? அதனால்தான் பரமனின் நிலைகண்டு பதைத்துப்போனது!

அப்படி என்ன நேர்ந்தது பரமேஸ்வரனுக்கு? இப்போது இந்த ஆனந்தக்கூத்து எதற்காக?

அழியா வாழ்வுக்காக அமிர்தம் பெற விரும்பினர் தேவர்கள். நாராயணரின் அறிவுரைப்படி, அசுரர்களுடன் சேர்ந்து பாற் கடலைக் கடையத் துவங்கினர். இன்பத்தை வேண்டிச் செயல்படுபவர்களுக்கு, இறைவனை நினைக்கத் தோன்றுமா என்ன?! அமரர்கள், ஈசனை வழிபட்டு ஆசி பெற மறந்தே போனார்கள்! விளைவு, அடுக்கடுக்காக வந்து சேர்ந்தது துயரம்.

மேரு பர்வதத்தை மத்தாக்கி, வாசுகிப் பாம்பைக் கயிறாக்கி அவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, வலி பொறுக்காமல் விஷத்தைக் கக்கியது நாகம். அதேநேரம் பாற்கடலிலும் ஒருவகை விஷம் பொங்கியது. இரண்டும் சேர்ந்து கொடிய ஆலகாலமாய் உருவெடுத்தது. கொடிய வெப்பமும், கரும் புகையுமாகப் பொங்கிய ஆலகால விஷம், உலகையே அழிப்பதுபோல் ஆர்ப்பரித்தது. நாலாபுறமும் அஞ்சி ஓடிய தேவர்கள், கயிலைக்கு வந்தார்கள்; கயிலை நாதனைப் பணிந்து, தங்களின் அல்லல் நீக்கி அருள்புரியுமாறு வேண்டி நின்றார்கள். பரமனோ, பார்வதியாளை நோக்கினார்... 'என்னை வணங்காமல், எனது ஆசி இல்லாமல் ஒரு காரியத்தைத் துவங்கி, அது இடையூறில் முடிந்து, தீவினை துரத்த... என்னைத் தேடி வந்திருக்கிறார்கள். இப்போது என்ன செய்யலாம் சொல்?’ என்று கேட்பதுபோல் இருந்தது அவரது பார்வை!

'பாவம் குழந்தைகள்... அறியாமல் பிழை செய்துவிட்டார்கள். காத்தரு ளுங்கள்’ என அவளும் பார்வையாலேயே பரிந்துரைத்தாள் பரமனிடம்!

அடுத்த கணம் கட்டளை பிறந்தது... 'சுந்தரா! விஷத்தைத் திரட்டி வா!’

- பரமேஸ்வரரின் நிழலில் பிறந்தவரும், அழகில் சிறந்தவருமான அந்த அணுக்கத் தொண்டரும் விரைந்து சென்றார். உலகையே அச்சுறுத்தும் வகையில் பரவிக்கிடந்த விஷத்தை, ஒரு கருநாவற்பழம் போல அடக்கி, சிறு பாத்திரத்தில் வைத்து, எடுத்து வந்தார்.

##~##
தேவர்கள் வியந்தனர். ''பரம்பொருளே, எங்களை அச்சுறுத்திய ஆலகாலம் உங்கள் கையில் கட்டுண்டு கிடக்கிறது. அதைத் தாங்களே அடக்கியருள வேண்டும்'' என்று வேண்டினர். சற்றும் தாமதிக் காமல் அந்த விஷ உருண்டையைச் சிவனார் தன் வாயில் போட்டுக்கொள்ள... பதறிய பார்வதி தேவி, விஷம் உள்ளே இறங்கிவிடாமல் கழுத்தைப் பற்றி, விஷம் அவருடைய கண்டத்தில், அதாவது கழுத்திலேயே தங்கும்படி செய்தாள்.

அத்தோடு முடிந்ததா? அதுதான் இல்லை. பரமனின் திருவிளை யாடல் தொடர்ந்தது. விஷம் உண்டதால் அயர்ச்சி வந்ததுபோல் அப்படியே படுத்துக்கொண்டார் பரமன். அதைக் கண்டுதான் பதைபதைத்தாள் பார்வதி தேவி! ஆதியந்தம் இல்லாத இறை, ஆயாசம் கொண்டது என்றால் உலகம் தாங்குமா? தேவி முதல் தேவர்கள் அனைவரும் கலங்கி நின்றனர்!

உலகின் கலக்கம் தீர, உமையவளின் பயம் நீங்கும்படி  விடையேறு நாயகன் கண்விழித்தான். உமையவளை ஒரு பக்கம் நிறுத்தி, சூலாயுதத்தைச் சுழற்றி, டமருகத்தை ஒலித்து ஆடத் துவங்கினான்... ஆடிக்கொண்டே இருந்தான்.

அது காலகாலமாய்த் தொடரும் கூத்து. பகலும் இரவும் சந்திக்கும் வேளை என்றில்லை; யுகம் முடிந்து யுகம் துவங்க இரண்டு யுக சந்திப்பில் நிகழும் கூத்து! உயிர்கள் உடல் களைந்து புதிய ஜன்மம் எடுக்க... இடைப்பட்ட நேரத்தில் அவன் ஆடும் கூத்து!

சகல தோஷங்களும் போக்கும் பிரதோஷ வழிபாடு!

சூட்சுமமாக நிகழும் ஆண்டவனின் இந்தக் கூத்தை தரிசித்து பலன்பெறவே பிரதோஷ வழிபாடும் பூஜைகளும்! பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத்தில்; களைப்புற்றவராக அவர் பள்ளிகொண்டது துவாதசித் திருநாளில். உலக உயிர்கள் மேன்மையுறும்பொருட்டு அவர் சந்தியா தாண்டவம் ஆடியது... திரயோதசி புண்ணிய தினத்தில், பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலத்தில்! புனிதமான இந்தக் காலத்தையே பிரதோஷ வேளையாகக் கருதி, சிவபூஜை செய்து வழிபடுகிறோம். தொடர்ந்து 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் சிவாலய தரிசனத்தை முறைப்படி செய்பவர்கள், சாரூப பதவி பெற்று சிவ கணங்களாகத் திகழ்வர் என்கின்றன புராணங்கள்!

நந்தி தரிசனம்!

பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்த வேளையில், மூலவரை நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியின் வழியே தரிசித்து வணங்கவேண்டும்.

சிவபெருமான் விஷம் உண்டு சயனித்துத் திருவிளையாடல் புரிந்த பிறகு எழுந்து, அம்பிகை தரிசிக்கும்படி சந்தியா நிருத்தம் ஆட, அதைக்கண்ட நந்திதேவர், ஆனந்த நிலையால் உடல் பருத்தார். அதனால், கயிலாயமே மறைக்கப்பெற்றது. நந்தியின் கொம்புகளுக்கு இடையே இருந்த இடைவெளியில், ஈசனின் நடனத்தைத் தேவர்கள் கண்டுகளித்தார்களாம். இதையட்டியே, பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே பெருமானைத் தரிசிக்கிறோம்.

உத்தமம்... மத்திமம்... அதமம்!

பிரதோஷத்தை உத்தமம், மத்திமம், அதமம் என 3 வகையாகப் பிரிக்கின்றன ஆகம நூல்கள்.  சூரிய உதயம் முதல், மறுநாள் சூரிய உதயம் வரை திரயோதசி திதி இருப்பின், அந்தநாள் உத்தம பிரதோஷம் ஆகும். சூரியன் மறைவது  முதல் அடுத்தநாள் சூரியன் மறைவது வரை திரயோதசி இருந்தால் அது மத்திமம். சூரியன் மறைவுக்குப் பிறகு, திரயோதசி வந்து, மறுநாள் 26 நாழிகைக்குள் முடிந்துபோனால் அதமப் பிரதோஷம்.

பிரதோஷ நைவேத்தியம்!

பிரதோஷத்தன்று, நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது விசேஷம். மட்டுமின்றி வில்வம், மல்லிகை, மருக்கொழுந்து  மலர்களையும் சமர்ப்பிக்கலாம். பச்சரிசி, பயத்தம்பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அதனுடன் வெல்லம் கலந்து காப்பரிசி செய்து நந்திக்கு நைவேத்தியம் செய்வார்கள். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசான்னம், நீர்மோர், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வர்.

தொகுப்பு: தி.தெய்வநாயகம்

எத்தனை பிரதோஷங்கள்?!

நித்ய பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயாதி முதல் 26.15 நாழிகைக்கு மேலுள்ள ஏழரை நாழிகைப் பொழுதே பிரதோஷ காலம் (சுமார் மாலை 4.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள்). தினமும் உள்ள மாலை நேரமான சந்தியா காலமே நித்ய பிரதோஷம்.

பக்ஷப் பிரதோஷம்: மாதம் தோறும் வளர்பிறை திரயோதசி நாட்களில் வரும் பிரதோஷம் பக்ஷப் பிரதோஷம் எனப்படும்.

மாதப் பிரதோஷம்: மாதம்தோறும் தேய்பிறை திரயோதசி நாட்களில் வரும் பிரதோஷம் மாதப் பிரதோஷம் ஆகும்.

சோமப் பிரதோஷம்: திங்கட் கிழமையை சோமவாரம் என்பார்கள். திரயோதசி திருநாள், திங்கட்கிழமை யுடன் சேர்ந்து வந்தால், சோமப் பிரதோஷம் ஆகும்.

சனிப் பிரதோஷம்: சனிக் கிழமையுடன் சேர்ந்து வருவது சனிப் பிரதோஷம். சிவபெருமான், ஒரு சனிக்கிழமை மாலையில்தான் முதன் முதலாக சந்தியா தாண்டவம் ஆடினார்  என்பதால் சனிப்பிரதோஷத்துக்கு சிறப்பு!

பிரளயப் பிரதோஷம்: பிரளயத்தின் போது, அழித்தல் தொழிலின் பொருட்டும் மீண்டும் படைத்தலின் பொருட்டும் திருநடனம் புரிவார் சிவபெருமான். பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் அந்த ஆதி சிவனிடத்தில் ஐக்கியமாகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளயப் பிரதோஷம் ஆகும்.

உஷத் காலத்தில் ஹரி ஸ்மரணையும்,  சாயங்கால நேரத்தில் சிவநாம ஸ்மரணையும் உகந்தவை என்பார்கள் பெரியோர்கள். ஆகவே, பிரதோஷப் பொழுதில் சிவனை வழிபட்டு சிந்தை மகிழ்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism