Published:Updated:

மனநலம் அருளும் திருநீலக்குடி மனோக்கியநாத சுவாமி திருக்கோயிலில் நாளை ஏழூர் பல்லக்கு உற்சவம்!

மனநலம் அருளும் திருநீலக்குடி மனோக்கியநாத சுவாமி திருக்கோயிலில் நாளை ஏழூர் பல்லக்கு உற்சவம்!
மனநலம் அருளும் திருநீலக்குடி மனோக்கியநாத சுவாமி திருக்கோயிலில் நாளை ஏழூர் பல்லக்கு உற்சவம்!

தேவர்களும், அசுரர்களும் இணைந்து அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது. ஆலகாலத்தின் கொடிய வெம்மை தாளாது, பிரபஞ்சமே இருண்டுவிடும் நிலை ஏற்பட்டது. தேவர்கள் உட்பட அனைவரும் அஞ்சி நடுங்கினர். அப்போது சிவபெருமான் பிரபஞ்சத்தை ரட்சித்து அனைவரையும் காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தினை உண்டார். இறைவன் உண்ட கொடுமையான விஷமானது உட்செல்லாதபடி அன்னையானவள் பெருமானின் கண்டத்தை அழுத்தித் தடுத்தாள். அந்த விஷம் சிவனின் கண்டத்திலேயே தங்கிவிட்டது. 

அன்னையின் அருளால் சகல வியாதிகளும் நீங்கும் என்பதை உலகிற்கு உணர்த்த, ஆலகாலத்தின் அதிவீரியத்தன்மை காரணமாக, சிவபெருமான் சுயநினைவிழந்ததுபோலத் திருவிளையாடல் புரிந்தார். இறைவனின் விளையாட்டை அறிந்த அன்னையும், விஷத்தின் வெம்மையைக் குறைத்திட, மூலிகைகளால் ஆன தைலத்தினைச் செய்து இறைவனின் திருமுடியில் வைத்து, தமது திருக்கரங்களால் தேய்த்துவிட்டாள். இறைவனும் சுய நினைவு பெற்று மீண்டெழுவதுபோல் எழுந்தார்.

இப்புராணகால சம்பவம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் தலம் திருநீலக்குடி. இங்குச் சுவாமிக்கு ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி என்று பெயர். ஆலகால விஷத்தினை கண்டத்தில் கொண்ட காரணத்தினால் `நீலகண்டர்' என்ற திருநாமமும் இந்தத் தல இறைவனுக்கு உண்டு.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ளது தென்னலக்குடி எனப்பெறும் திருநீலக்குடி. இங்கு, இறைவன் அன்னை ஸ்ரீ அழகாம்பிகையுடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்தத்தலத்து மூலவர்க்கு மாதந்தோறும் சித்திரை நட்சத்திர தினத்தில் தைலாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். மூலவருக்குச் செய்யப்படும் தைலாபிஷேக எண்ணெயில் ஒருதுளிகூட வெளிச் சிந்தாமல் அப்படியே மூலவர் திருமேனியால் உறிஞ்சப்பட்டு விடும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. இதனால் இறைவனுக்கு `தைலாப்பியங்கேசர் ' என்ற திருநாமமும் உண்டு. 

திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான, இந்தத் திருக்கோயிலின் தலவிருட்சம் பஞ்ச வில்வமாகும். அப்பர் பெருமானால் பாடல்பெற்ற இந்தத் தலத்தை மார்க்கண்டேயர், காமதேனு, பிரமன், வருணன், சப்த ரிஷிகள், தேவகன்னியர் போன்றோர் வழிபட்டுள்ளனர். மார்க்கண்டேயரின் அழகிய திருவுரு ஆலயத்தின் வெளிமண்டபத்தில் அமைந்துள்ளது.

சிரஞ்சீவி பதம்பெற்ற மார்க்கண்டேயர், சிவபெருமானுக்கு நன்றிகூறும் வகையில் சுற்றியிருக்கும் நீலக்குடி உட்பட ஏழு திருத்தலங்களை வலம்வந்து வழிபட்டார் என்பது ஐதீகம். இந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் சித்திரைப் பெருவிழாவின்போது, சுவாமி, அம்பாளுடன் பல்லக்கில் எழுந்தருள, மார்க்கண்டேயர் சுற்றியுள்ள ஆறு தலங்களையும் வழிபடும் வைபவம் நடைபெறுகிறது. இந்த வைபவத்திற்கு `ஏழூர் பல்லக்கு' என்று பெயர்.  

மார்க்கண்டேயன் சிரஞ்சீவி பதத்தினைப் பெறுவதற்காக சிவபெருமானைப் பூஜித்த தலங்கள் நிறைய உள்ளன. ஆயினும் அப்பேற்றினை அடைந்த தலம் திருநீலக்குடி எனப்படுகிறது. மார்க்கண்டேயர் இந்தத் தலத்து ஈசருக்கு சித்திரைப் பெருவிழாவினை எடுப்பித்தார் என்று சொல்லப்படுகிறது.

சித்திரை உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, விழாவின் 12-ம் நாளன்று, இத்தலத்துப் பெருமானை அம்பிகையுடன்  சிவிகையில் எழுந்தருளச் செய்து, மார்க்கண்டேயர் அவர்களைத் தொழுதபடி, பின்னோக்கி நடந்து சுற்றியுள்ள 6 சிவாலயங்களை திருவலம் வந்தாராம். இதே முறையில்தான் `ஏழூர் பல்லக்கு' என்னும் சப்த ஸ்தான விழாவாக நடைபெறுகிறது. ஆயுள் தோஷம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் இந்தத்தலத்து இறையை வணங்குவதன் மூலம் நீடித்த ஆயுளைப் பெறலாம். இந்த ஏழூர் பல்லக்கு நிகழ்வினைத் தரிசிப்பதன் மூலம் நோய்கள். மன சஞ்சலம் ஆகியன நீங்கி நல் ஆரோக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்,

இந்த ஆண்டு ஏழுர் பல்லக்கு உற்சவம் நாளை ஏப்ரல் 21 -ம் தேதி நடைபெறுகிறது... 

மார்க்கண்டேயர் வலம் வரும் சப்த ஸ்தான தலங்கள் 

1. திருநீலக்குடி - ஸ்ரீ அழகாம்பிகை சமேத ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி. 

2. இலந்துறை - ஸ்ரீ அபிராம சுந்தரி சமேத ஸ்ரீ சுந்தரேசுவரர். (காலை வேளை)

3. ஏனாதி மங்கலம்- ஸ்ரீ சௌந்திர நாயகி சமேத ஸ்ரீ சோம நாதர். (முற்பகல்)

4. திரு நாகேஸ்வரம் - ஸ்ரீ கிரிகுஜாம்பிகை சமேத ஸ்ரீ நாகநாதேஸ்வரர். (உச்சிக் காலம்)

5. திருபுவனம்- ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ கம்ப ஹரேஸ்வரர். (சாயரட்சை)

6. திருவிடை மருதூர் - ஸ்ரீ ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை சமேத ஸ்ரீ மஹாலிங்கேஸ்வரர். (இரவு)

7. மருத்துவக் குடி - ஸ்ரீ அபிராமியம்பாள் சமேத ஸ்ரீ ஐராவதேஸ்வரர். (மறுநாள் முற்பகல்)

ஒரே நாளில் மகிமை வாய்ந்த ஏழுதலங்களைத் தரிசிக்கும் அனுபவமும் அலாதியானது. இந்த வைபவத்தில் கலந்துகொண்டு, அழகாம்பிகை சமேத மனோக்கியநாத சுவாமிகளை வழிபட்டு நல்லருள் பெறலாம். 

கோயிலுக்குச் செல்வது எப்படி ?

 கும்பகோணம் - காரைக்கால் வழித் தடத்தில் கும்பகோணத்திலிருந்து 12 கி்.மீ . தொலைவிலும் , ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது.