Published:Updated:

'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'

'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'

'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'

'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'

Published:Updated:
'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'
'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'செட்டிநாட்டில் 'குடி’ என்று முடியும் பெயர்கொண்ட ஊர்கள் நிறைய உண்டு. வள்ளி- தெய்வானை சமேதராக சண்முகநாதன் குடியிருக்கும் குன்றக்குடி, கொப்புடையாள் குடியிருக் கும் காரைக்குடி, இன்னும்... நகரக் கோயில்கள்னு நகரத்தார் சிறப்பிக்கிற ஒன்பது தலங்களில், இளையாத்தங்குடி, சூரக்குடி, வேலங்குடி, இலுப்பக் குடின்னு நான்கு ஊர்கள் உண்டு. ஆனா, இந்த ஊர்களுக்கெல்லாம் இல்லாத சிறப்பு அரியக்குடிக்கு உண்டு. என்ன தெரியுமா? இது ஒன்றுதான் வைணவத் தலம். தன்னோட பக்த னுக்காக 'அரி’ அருளிய கோயிற்குடி இது!''

பங்குச்சந்தை நிபுணர் நாகப்பன், ஷேர் மார்க்கெட் நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அவரே அரியக்குடி குறித்து அரிதான தகவல்களை அள்ளிக் கொட்டியபோது அசந்துதான் போனோம்!

அரியக்குடி பெருமாள் மீது அவ்வளவு   ஈர்ப்பாம் அவருக்கு. காரணம்?!

அவரே சொல்கிறார்...

'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'

''பக்தியும் வழிபாடும் எதிர்பார்ப்பு இல்லாம இருக்கணும். கோயிலுக்குப் போனாக்க... எல்லாத்தையும் மறந்துட்டு இறைச் சிந்தனையில மனசு லயிச்சுக் கிடக்கணும். அப்படியரு அனுபவம் எனக்கு அரியக்குடி பெருமாள் கோயில்ல

கிடைக்கும். இதோ... புத்தாண்டு ஸ்பெஷல் தரிசனத்துக்கு தம்பதி சமேதரா இங்க வந்திருக்

கோம்னா... இந்தக் கோயிலும் அதன் ஏகாந்த சூழலும்தான் காரணம்!''என்று நாகப்பன் சொல்ல, அதை ஆமோதிப்பதுபோல் புன்னகைக்கிறார் சித்ரா நாகப்பன்.

நாம் கோயிலின் மகிமைகள் குறித்து கேட்க, ஆர்வத்துடன் விவரித்தார் நாகப்பன்:

''முருகன் செட்டி சேவுகன் செட்டி என்ற அன்பர்தான் இந்தக் கோயில் உருவாகக் காரணம். இவரோட குடும்பத்துல உள்ளவங்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்கத்துல இருக்கிற பலவான்குடிக்குப் போயி, விளக்கேத்தி வழிபட்டு வர்றது வழக்கம். ஒரு வாரம், இந்த அன்பருக்கு விளக்கேத்தப் போக முடியலை. தன்னோட சகோதரர் ஒருவரிடம், விளக்கேத்தி வழிபடும்படி கேட்டுக்கிட்டாராம். ஏனோ அவர், விளக்கு வழிபாடு செய்யலையாம். ஆனால், மறுவாரம் சேவுகன் செட்டி போன போது ஜெகஜ்ஜோதியா சுடர்விட்டுக் கொண்டிருந்ததாம் தீபம்.

சேவுகன் செட்டி நெக்குருகி போயிட்டாரு. பலவான்குடிகாரங்க ஒரு ஆலோசனை சொன்னாங்க. அதன்படி, அந்த விளக்கை அரியக்குடிக்கே எடுத்துவந்து, கூரை வேய்ந்த சாமி வீட்டில் வைத்து வழிபட ஆரம்பித்தாராம் சேவுகனார். அவரோட சகோதரர்களும் தனித்தனியே விளக்கு வழிபாடு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. சேவுகனாருக்கு பெருமாளோட அருள் பரிபூரணமா இருந்துச்சு. அவர் சொன்னதெல்லாம் பலிக்க, இறையடியார்கள் பெருகிப் போனார்கள். அவர்கள் தரும் காணிக்கை, தன்னோட பங்காக ஒரு தொகை... எல்லாத்தையும் சேர்த்துவெச்சு, வருஷா வருஷம் புரட்டாசி திருவோணத்தன்னிக்கு திருப்பதிக்குப் பாதயாத்திரையாகச் சென்று ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துவாராம்.

'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'

ஒருமுறை, திருமலையில் ஏறும்போது தள்ளாமையின் காரணமாக மயங்கி விழுந்துட்டார். அப்ப ஒரு அசரீரி... 'பக்தரைத் தேடி திருவேங்கடவனே வருவான்’னு கேட்க, செட்டியார் சிலிர்த்துப்போயிட்டார்.

'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'

அவர் அரியக்குடிக்கு திரும்பியபோது, நான்கு புறமும் முளை நட்டு, நடுவில் துளசி வளர்ந்திருக்க... மஞ்சளும் குங்குமமும் தோய, உடைத்த தேங்காயும் இருக்க... தான் குடிகொள்ளப் போகும் திருவிடத்தை பெருமாளே காட்டிக் கொடுத்தாராம். அன்றிலிருந்து இந்த ஊரை தென்திருப்பதின்னு சிறப்பிக்க ஆரம்பிச்சுட்டாங்க!''

நாளடைவில், சேவுகனாரால் திருவேங் கடம் உடையான், அலர்மேலு மங்கைத் தாயாரின் ஆலயம் கட்டப்பட்டதாம். திருப்பதி மலையிலிருந்த பெருமாள் உகந்த திருப்பாதுகையையும் தலையில் சுமந்து எடுத்துவந்து இங்கே எழுந்தருளச் செய்தார்கள். சேவுகனாருக்குக் கிடைத்த அசரீரிப்படி ஸ்ரீராமானுஜரால் சேவிக்கப்பட்ட நம்பெருமாள் விக்கிரகமும் பூக்குடலையில் வைத்துக்கொண்டு வரப்பட்டதாம். அதேபோல், திருப்பதி யில் இருந்து சடாரியும், திருக்கோட்டி யூரில் (திருமெய்யம் என்றும் சொல் கிறார்கள்) அக்னியும் எடுத்து வரப்பட்டது என்கிறார்கள்.

''ஆமாங்க, இங்க வந்து வழிபட்டால் ஏழுமலையானையும், திருவரங்கனையும் திருக்கோட்டியூர் பெருமாளையும் தரிசித்த பலன் கிடைக்கும்'' என்று பெருமிதத் துடன் சொல்கிறார் நாகப்பன்!

ஏழுநிலை ராஜகோபுரமும், உயர்ந்த மதிலும், பிரமாண்ட மண்டபங்களு மாக அழகுறத் திகழ்கிறது கோயில்.

சேவுகனாரின் வழி வழி உறவினர்கள் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர்.

கருவறையில் நின்ற கோலத்தில் அருள்கிறார் திருவேங்கடவன். அருகிலேயே ஸ்ரீதேவி- பூதேவியரின் திருமேனிகள். சேனை முதலிக்கும், சக்கரத்தாழ்வா ருக்கும் திருவிழாப் படிமங்கள் (உற்ஸவ மூர்த்தங்கள்) உள்ளன. மேலும் அனுமன், லட்சுமணன், சீதாவுடன் ஸ்ரீராமன், அலர்மேலுமங்கைத் தாயார், ஆண்டாள் ஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

'பக்தரைத் தேடி வேங்கடவன் வருவான்!'

இந்தக் கோயிலின் சிறப்பம்சம் மூலை கருடன் சந்நிதி. ஏகாதசி மண்டபத்தை அடுத்து, ஆலயத்தின் மேல் தளத்தில் ஈசான்ய மூலையில் சந்நிதி கொண் டிருக்கிறார் மூலை கருடன்.

''கோயிலின் திருக்குளம் வெட்டப்பட்டபோது, ஒரு மரத்தில் குடியிருந்த முனீஸ்வரரைப் பாதமாக்கி, அதற்குக் காவலாக கருடனை பிரதிஷ்டை செய்ததாகச் சொல்வாங்க. வேண்டியவருக்கு வேண்டிய வரம் தருபவர் இவர்'' என்று பயபக்தியுடன், மூலை கருடனின் மகிமையை சிலாகிக்கிறார் நாகப்பன்.

ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், கருடாழ்வாருக்கு 108 குடம் நீர் திருமஞ்சனமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறதாம். பில்லி - சூன்யம், மனவியாதி, சத்ரு பயம் நீங்கவும் லட்சுமி கடாட்சம் பெருகவும் இவரை வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

சித்ரா பௌர்ணமி, வைகாசி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், ஆவணியில் கோகுலாஷ்டமி- உறிக்கட்டித் திருவிழா, புரட்டாசியில்- தேசிகர் உற்ஸவம், புரட்டாசி சனிக்கிழமைகள், கார்த்திகை சொக்கப் பனை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பங்குனியில் திருக்கல்யாணம் என்று விழாக்கோலம் காண்கிறது அரியக்குடி பெருமாள் ஆலயம்.

''வைகாசி பிரம்மோற்ஸவத்தில் 8-ஆம் நாள், பெருமாள் திருவேங்கடம் உடையான், வெண்ணெய்த் தாழி கிருஷ்ணனாக காட்சி தருவார். இதுபோன்ற அலங்காரத்துடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் தெரியுமா?! அதேபோல், 12-ஆம் நாள் தெப்போற்ஸம் அன்று காலையில், சொர்ண கவசம் சாற்றிக்கொண்டு ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக பெருமாள் வருவதைப் பார்க்கணுமே... கண்கொள்ளாக் காட்சி அது...''

நாகப்பன் விவரிக்க விவரிக்க அரியக்குடி வேங்கடநாதனிடம் நம் மனமும் பரிபூரணமாய் சரணடைந்ததை உணர்ந்தோம்!

- நமசிவாயம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism