Published:Updated:

திருமண வரமருளும் சீதா கல்யாண மகோத்சவம்... கல்பட்டில் கோலாகலம்!

திருமண வரமருளும் சீதா கல்யாண மகோத்சவம்... கல்பட்டில் கோலாகலம்!
திருமண வரமருளும் சீதா கல்யாண மகோத்சவம்... கல்பட்டில் கோலாகலம்!

`இன்று நடைபெறும் பல்வேறு தெய்வத்திருமண வைபவங்களையும் விட காலத்தால் மூத்தது சீதா கல்யாண வைபவம் என்று சொல்வதுண்டு. தென் இந்தியாவில் பத்ராசல ராமதாசர், சீதா கல்யாணத்தை தான் நிறுவிய ஆலயத்தில் நிகழ்த்தினார். இன்றும், தினமும் அங்கு சீதா கல்யாணம் நடைபெறுகிறது.

வீடுகளில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகள் யாவற்றிலும் `சீதா கல்யாண வைபோகமே...' என்னும் தியாகராஜர் பாடிய பாடலைப் பாடும் மரபு உண்டு. சீதையின் கல்யாண வைபவத்தை தன் மனக்கண்ணில் கண்டு அதை தியாகராஜர் செய்த கவிதான் `சீதா கல்யாண வைபோகமே. ' இன்று நடைபெறும் பல்வேறு தெய்வத்திருமண வைபவங்களையும் விடக் காலத்தால் மூத்தது சீதா கல்யாண வைபவம் என்று சொல்வதுண்டு. தென் இந்தியாவில் பத்ராசல ராமதாசர், சீதா கல்யாணத்தை தான் நிறுவிய ஆலயத்தில் நிகழ்த்தினார். இன்றும், தினமும் அங்குச் சீதா கல்யாணம் நடைபெறுகிறது. 

பொதுவாக, ராமநவமி உற்சவத்தோடு, ராமச்சந்திரமூர்த்தி சந்நிதியிருக்கும் ஆலயங்களிலும், பஜனை மடங்களிலும், பிற கோயில்களிலும் சீதா கல்யாணம் நடைபெறும். இதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று சடங்குப் பூர்வமாக திருமணம் நடத்தி வைப்பது. மற்றொன்று பஜனைப் பாடல்களாகத் திருமணச் சடங்குகளைச் செய்து வைப்பது. இரண்டு முறைகளுமே மிகவும் அற்புதமான அனுபவம். ராமநவமி உற்சவம் தொடங்கி அதன் நிறைவாகச் சீதா கல்யாணமும், பட்டாபிஷேகமும் செய்வது வழக்கம். அப்படி ஒரு வைபவம், விழுப்புரத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள கல்பட்டு என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் லட்சுமி கணபதி ஆலயத்தில் நடைபெற்றது.

இந்தத் தலம், அவதூத ஸ்வயம்பிரகாச சுவாமிகளின் அவதாரத் தலம். இங்கு 1871 - ம் ஆண்டு, ராமசாமி சாஸ்திரிக்கும் ஜானகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த சுவாமிகள் சிறுவயது முதலே கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதிலேயே வேதம், சாஸ்திரம், தர்க்கம் ஆகியன கற்று ஸ்வயம்பிரகாச சுவாமிகள் என்ற திருநாமத்தோடு துறவறம் ஏற்றார். சுவாமிகள் இங்குக் கோயில் கொண்டிருக்கும் லட்சுமி கணபதியை வழிபடுவது வழக்கம். பல்வேறு ஆன்மிக சாதனைகள் நிகழ்த்திய சுவாமிகள் 1948 - ம் ஆண்டு ஸித்தியடைந்தார். சுவாமிகள் வழிபட்ட லட்சுமி கணபதி ஆலயம் பின்னர் பராமரிப்பின்றிப் போனது. தற்போது அந்த ஆலயத்தைப் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த ஆலய வளாகத்தில்தான் சீதா கல்யாண மகோத்ஸவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 13 - 4 -19 அன்று தொடங்கிய ராமநவமி உற்சவத்தின் முத்தாய்ப்பான வைபவமாக கடந்த 21 - 4- 19 அன்று சீதா கல்யாணம் நடைபெற்றது. 

சீதா கல்யாணத்தையொட்டி அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆலயத்தின் நுழைவுவாயில் வாழைமரத் தோரணங்களால் அலங்கரிப்பட்டிருந்தது. ராமர் பட்டாபிஷேக உற்சவர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னால் மக்கள் சீர் வரிசைகளுடன் வந்தனர். இருதரப்பினர் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என, ராமனை மகனாகவும் மருமகனாகவும் பாவித்து, பக்தியும் பாசமும் கலந்த பரவசத்தில் திளைத்தனர்.

பட்டாபிஷேக ராமர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய உற்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின் திருமண வைபவச் சடங்குகள் நடைபெற்றன. கன்னிகாதானம், சூர்ணிகை, பிரவரம் ஆகியன வாசிக்கப்பட்டு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. பொதுவாக, இத்தகைய தெய்வத் திருமண வைபவங்களில் கலந்துகொண்டால், பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும். திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். பட்டாபிஷேகக் கோலத்தில் இருக்கும் சீதையையும் ராமரையும் தரிசிக்க, காரிய ஸித்தியும், செல்வ வளமும் சேரும் என்று நம்பப்படுகிறது. பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த சீதா கல்யாண மகோத்சவத்தில் கலந்துகொண்டு பலன்பெற்றவர்கள் அநேகர் என்று அந்த ஊர்மக்கள் சொல்கிறார்கள்.  

சீதா கல்யாண மகோத்ஸவப் பணிகளை முன்னின்று நடத்திய ந.கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பேசினோம். 

``கடந்த 13 -ம் தேதி தொடங்கிய ராமநவமி உற்சவத்தின் ஒருபகுதியாக சீதா கல்யாணம் நடைபெறுகிறது. ராவணனை சம்ஹாரத்துக்காக அவதாரம் செய்த ராமனை திருமணம் செய்துகொள்வதற்காக மகாலட்சுமித் தாயார் சீதையாக அவதரித்தார். இருவருக்கும் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது. ஜகத் ஜீவனத்துக்காக நடைபெற்ற இந்தத் திருமண வைபவம் முறைப்படி நடந்தது. மாங்கல்யதாரணத்துக்கு முன்பாக வாசிக்கப்படும் சூர்ணிகை, பிரவரம் ஆகியனவற்றைக் கேட்டாலே, புண்ணியம் ஏற்படும். வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் தடைப்பட்டுவருபவர்கள் இதுபோன்றதொரு வைபவத்தில் கலந்துகொண்டால், விரைவில் அவர்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நிகழும். மேலும், புண்ணிய பலன்கள் கிட்டும். ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த இந்தப் புனித வைபவத்தின் மூலம், தனிப்பட்ட வாழ்வில் நன்மை கிடைப்பது மட்டுமன்றி லோக க்ஷேமமும் ஏற்படும்" என்று தெரிவித்தார்.

சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த லட்சுமிகணபதி ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவுபெறும் தறுவாயில் உள்ளன என்பது பக்தர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

அடுத்த கட்டுரைக்கு