Published:Updated:

ராஜராஜ சோழன் பள்ளிப்படை பற்றி கல்வெட்டுகள் சொல்வதென்ன? - ஓர் அலசல்!

ராஜராஜ சோழன் பள்ளிப்படை பற்றி கல்வெட்டுகள் சொல்வதென்ன? - ஓர் அலசல்!
ராஜராஜ சோழன் பள்ளிப்படை பற்றி கல்வெட்டுகள் சொல்வதென்ன? - ஓர் அலசல்!

நான் 30 வருடங்களுக்கு முன்பு தொல்லியல் துறை சார்பில் உடையாளூர் பகுதியை ஆய்வு செய்து, அனைத்துக் கல்வெட்டுகளையும் என் கைப்பட படியெடுத்துப் படித்திருக்கிறேன். அப்போது ராஜராஜன் பள்ளிப்படை குறித்த உள்ளூர் வழக்கு எதுவும் காணப்படவில்லை...

நெடுங்காலமாகவே தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில், சோழப்பேரரசன் ராஜராஜனின் பள்ளிப்படை எது என்ற கருத்துப் போர் நிலவி வருகிறது. குடந்தை சேதுராமன், மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் உடையாளூரில் சிவலிங்கம் இருக்கும் இடமே ராஜராஜனின் பள்ளிப்படை என்று கருதுகிறார்கள். ஆனால், பிற அறிஞர்கள் இது ராஜராஜனின் பள்ளிப்படையாக இருக்க வாய்ப்பில்லை என்று மாற்றுக்கருத்தை முன்வைக்கின்றனர். இந்த இருதரப்புக் கருத்துகளுக்கும் முடிவுகட்டுவதைப் போன்று, சமீபத்தில் மதுரை உயர்நீதி மன்றக்கிளை, ராஜராஜனின் பள்ளிப்படைக் கோயில் என்று குறிப்பிடப்படும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகத் தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையடுத்து, நவீனக் கருவிகள் உதவியுடன் தமிழக தொல்லியல் துறையினர் உடையாளூரில் ஆய்வுமேற்கொண்டு, முடிவுகளை இன்னும் 15 நாள்களுள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.

கும்பகோணம், வலங்கைமான் அருகே சோழன்மாளிகை என்றொரு கிராமம் இருக்கிறது. இதன் பழைமையான பெயர் `பழையாறை'. சோழர்களின் மாளிகைகள் இருந்த இடம். தலைநகராகவும் விளங்கிய பெருமை இந்தப் பகுதிக்கு உண்டு. கி.பி 1231-ல் மாறவர்வன் சுந்தரபாண்டியன், சோழ நாட்டின் மீது படையெடுத்து அரண்மனைகள், மாளிகைகள், கோட்டைகள் என்று அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினான்.

இந்தத் தாக்குதலின்போது சோழ மன்னர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட பள்ளிப்படைக் கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டன என்ற கருத்து, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் உண்டு. இந்தச் சோழன்மாளிகை கிராமத்துக்கு அருகே உடையாளூர் எனும் கிராமத்தில் வாழை மரத்தோப்புகளுக்கு மத்தியில் சாய்ந்த நிலையில் பிரமாண்ட லிங்கம் ஒன்று இருக்கிறது. இதுதான் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக் கோயில் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. 

இதே கிராமத்தில் உள்ள பால்குளத்தம்மன் கோயில் மண்டபத்தில் உள்ள தூண்கல்வெட்டுதான், ராஜராஜ சோழன் பள்ளிப்படை தொடர்பான கருத்தைக் கிளறிவிட்டது. இந்தத் தூண், இதே ஊரில் உள்ள பெருமாள் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்டதென்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். இந்தத் தூணில், முதலாம் குலோத்துங்கச் சோழனின் 42-ம் ஆட்சியாண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டில் உள்ள செய்திதான், `ராஜராஜனின் பள்ளிப்படை இந்த ஊரில் இருக்கிறது' என்று பொருள்கொள்ளக் காரணமானது. இதே கல்வெட்டின் அடிப்படையில்தான் இது ராஜராஜனின் பள்ளிப்படைக் கோயிலாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் எழுப்பப்படுகிறது. 

ராஜராஜனின் பள்ளிப்படை இதுதான் என்ற கருத்து எழத்தொடங்கியதும் பொதுமக்கள் பலர் லிங்கத்தைத் தரிசிக்கத் தொடங்கினர். அதன்பிறகு தற்போது அங்குக் கொட்டகை அமைக்கப்பட்டு, சாய்ந்த லிங்கம் நிமிர்த்தி வைக்கப்பட்டிருக்கிறது. தினமும் மாலையில் ஒரு குடும்பத்தினர் அந்த லிங்கத்துக்கு விளக்கேற்றி வழிபட்டு வருகிறார்கள். 

ராஜராஜனின் பள்ளிப்படை குறித்து வரலாற்று ஆய்வாளரும், கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமத்தைச் சேர்ந்த கோமகனிடம் பேசினோம்...

``உடையாளூரின் சோழர்காலப் பெயர் சிவபாதசேகர மங்கலம். சிவபாத சேகரன் என்பது ராஜராஜனின் பெயர்களுள் ஒன்று. ராஜராஜன், அருண்மொழி, ராஜராஜப் பெருவுடையார், கேரளாந்தகன் என்று பல்வேறு பெயர்கள் இருந்தாலும் தன்னை `சிவபாத சேகரன்’ என்று கூறிக்கொள்வதில் பெருமைப்பட்ட சிவபக்தன் ராஜராஜன். ராஜராஜனின் பள்ளிப்படை அமைக்கப்பட்ட காரணத்தினால் இதற்கு சிவபாத சேகர மங்கலம் என்ற பெயரையே சூட்டியிருக்கிறார்கள்.

தற்போது, தொல்லியல் துறையினர் மேற்கொள்ளும் ஆய்வில் நிச்சயம் `இதுதான் ராஜராஜனின் பள்ளிப்படை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும்’ என்று நம்புகிறோம். தற்போது ராஜராஜனின் பள்ளிப்படை என்று கூறப்படும் இடம் சிதைவடைந்து கல்மேடாகக் காட்சியளிக்கிறது. அதற்கு அருகிலேயே ராஜவீதி போன்ற அகலமான தெரு இருக்கிறது. சற்று தொலைவில் ஆறு ஒன்றும் ஓடுகிறது. கோயில் இடிபட்ட பகுதிகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த அடிப்படைத் தரவுகள் அனைத்தும் இதுதான் ராஜராஜனின் பள்ளிப்படையாக இருக்கலாம் என்று கருத இடம் தருகிறது. தற்போது நடைபெற்று வரும் அறிவியல் பூர்வ ஆய்வுகள் மூலம் இந்த இடத்தில் பள்ளிப்படை இருந்ததற்கான ஆதாரங்கள் நிச்சயம் கிடைக்கும். ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

ராஜராஜன் சமாதி என்று கூறுவது தவறான சொல் பிரயோகமாகும். தமிழர் சைவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டு வழிபடும் கோயிலுக்குப் பெயர் `பள்ளிப்படைக் கோயில்’. இறந்தவர்களின் உடலைப் புதைத்து அதன் மீது லிங்கம் ஒன்றை நிறுத்தி கோயில் கட்டி வழிபடுவார்கள். பட்டீஸ்வரத்தில் ராஜராஜனின் மனைவியும், ராஜேந்திரனின் சிற்றன்னையுமான பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை, வேலூர் மாவட்டம் மேல்பாடியில் அரிஞ்சயன் பள்ளிப்படை, காளகஸ்தி அருகே தொண்டைமானூரில் ஆதித்யன் பள்ளிப்படை, அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் சுந்தரபாண்டியன் பள்ளிப்படை மட்டும்தான் தற்போது ஆதாரத்துடன் கிடைத்திருக்கும் பள்ளிப்படைக் கோயில்களாகும். அங்கெல்லாம் பள்ளிப்படை என்று நேரடியாகவே கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. 

ஓய்வு பெற்ற தொல்லியல் கண்காணிப்பாளர் மார்க்சிய காந்தியிடம், உடையாளூர் பள்ளிப்படைக் கோயில் குறித்துத் கேட்டோம்...

``உடையாளூர்தான் ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக் கோயில் என்பதற்கு இதுவரை நேரடியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பான முக்கியமான ஆதாரமாக இருப்பது உள்ளூர் வழக்குதான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆய்வாளர் குடவாயில் சேதுராமன், உடையாளூரில் இருக்கும் பால்குளத்தம்மன் கோயில் மண்டபத்தில் இருக்கும் கல்வெட்டுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுதினார்.

தற்போது தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யும் இடத்தில்தான் ராஜராஜனின் பள்ளிப்படை இருந்தது என்றும் தெரிவித்தார். அதன்பிறகுதான், உள்ளூர் மக்களும் இதுதான் ராஜராஜன் பள்ளிப்படை என்று கூறத்தொடங்கினர். நான் முப்பது வருடங்களுக்கு முன்பு தொல்லியல் துறை சார்பில் உடையாளூர் பகுதியை ஆய்வு செய்து, அனைத்துக் கல்வெட்டுகளையும் என் கைப்பட படியெடுத்துப் படித்திருக்கிறேன். அப்போது ராஜராஜன் பள்ளிப்படை குறித்த உள்ளூர் வழக்கு எதுவும் காணப்படவில்லை.

 உடையாளூருக்கு அருகில்தான் பழையாறை இருக்கிறது. அது, சோழர்களின் தலைநகராக விளங்கியதும் கூட. சோழர்களின் மாளிகைகள் இங்கு இருந்ததெல்லாம் உண்மைதான். அதனால், ராஜராஜன் இங்குதான் இறந்தார் என்ற கருத்தும் அவரது பள்ளிப்படைக் கோயில் இங்குதான் இருக்கிறது என்ற கருத்தும் நிலைப்பெற்றுவிட்டது. 

பால்குளத்தம்மன் கோயில் கல்வெட்டில் கூட, `சிவபாதசேகர மங்கலம் எனும் ஊரில் ராஜராஜ சோழனின் உருவச்சிலை ஒன்று மண்டத்தில் இருந்தது. அந்த மண்டபம் பழுதாகி, சிதிலமடைந்துவிட்டதால் பிடவூர் வேளான் அரிகேசவனான காசிராஜன், பிடாரன் நாடறிபுகழன், ராஜேந்திர சோழன் உதைய நாகனான ஈசானசிவர், தேவன் அபயமான அறங்காட்டிப் பிச்சர் ஆகியோர் இந்த மாளிகையைச் சீரமைத்திருக்கிறார்கள்’ என்றே வருகிறது. இந்த மறுசீரமைப்பு நிகழ்ந்தது குலோத்துங்கனின் காலத்தில். இதில் பள்ளிப்படை என்று ஒரு வார்த்தை கூடவரவில்லை. மேலும், இறந்தவர்களை அடக்கம் செய்த பிறகு லிங்கத்தை வைத்து வழிபடுவதுதான் நமது மரபே தவிற உருவச்சிலை வைத்து வழிபடும் மரபு நம்முடையது இல்லை. அதனால் உடையாளூரில் நிச்சயம் ராஜராஜனின் பள்ளிப்படை இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. 

தமிழகத் தொல்லியல் துறையினர் தற்போது அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தமுடிவுக்கும் வரமுடியாது. சிதைந்த கோயிலாகக் கூட இது இருக்கலாம். கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே உறுதியான முடிவுக்கு வரமுடியும். ஏதாவது எலும்புகள் தென்பட்டால் தோண்டியெடுத்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். ஆயிரம் ஆண்டுகளாக மண்மூடிக் கிடக்கும் நிலம் அது. அங்கு ராஜரானின் உடல் மட்டுமல்ல, வேறு உடல்களும் மண்ணுக்குள் புதைந்திருக்க வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்தார்.

தமிழகத் தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாக வேண்டும். இது பள்ளிப்படையாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தமிழனின் பெருமையை உலகறியச் செய்த ராஜராஜசோழனுக்கு உலகமே வியக்கும் வண்ணம் மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது..!

பால்குளத்தம்மன் கோயில் தூணில் உள்ள கல்வெட்டுச் செய்தி

ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு
லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து
எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ
சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
பெரிய திருமண்டப முன்(பி¦)லடுப்பு ஜீர்
ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா
ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா
த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
நபயமாந அறங்காட்டி பிச்சரும்

பொருள்:

ஸ்ரீசிவபாதசேகரமங்கலம் என்னும் ஊரில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீஇராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரதேவர் திருமாளிகையின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதுபட்டதால் பிடவூர் வேளான் அரிகேசவனான காசிராஜன் அதைத் திருப்பணி செய்ய விழைந்தார். ஜெயசிங்ககுலகால வளநாட்டு சாத்தமங்கலத்து பிடாரன் நாடறிபுகழன், அவருக்காக இப்பணியை மேற்கொண்டார். ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்துப் பிடாரர்களில் ராஜேந்திர சோழன் உதைய நாகனான ஈசானசிவரும் தேவன் அபயமான அறங்காட்டிப் பிச்சரும் இப்பணிக்கு உறுதுணையாக அமைந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு