சிறப்பு கட்டுரை
மண் மணக்கும் தரிசனம்!
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
ஷ்ட நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஒன்று; பரம்பொருள் பூவரச இலையில் தோன்றி அருள்செய்த திருவிடம்; முனிவர்கள் பலருக்கும் இறைவனின் தரிசனம் கிடைத்த திருத்தலம்... எனப் பல்வேறு மகிமை களுடன் திகழ்கிறது பூவரசங்குப்பம்.

விழுப்புரத்தில் இருந்து தென்கிழக்கில், சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தை, தென் அகோபிலமாகப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

பூவரச மரம் நிறைந்த தலம் ஆதலால் இந்தப் பெயர் என்றும், பூவரசன் என்றொரு மன்னன் வழிபட்டு அருள் பெற்றதால் பூவரசங்குப்பம் ஆனது என்றும் இந்தத் தலத்துக்கான பெயர்க் காரணத்தை விவரிக்கிறார்கள்.

ஊரின் அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல், தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் கம்பீரமாக அமைந்திருக்கிறது ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் ஆலயம். ஸ்வாமியை மனதார வணங்கி, உள்ளே நுழைகிறோம்.

லட்சுமி நரசிம்ம தரிசனத்தைத் தாங்களும் காண வேண்டும் என சப்தரிஷிகளும் ஆசை ஆசையாய் இங்குதானே தவம் இருந்திருப்பார்கள்? நினைக்கும்போதே பரவசம் பொங்குகிறது மனதில்!

அரக்கன் இரணியனை அழித்த நரசிம்மப் பரம்பொருள், பிரகலாதனின் வேண்டுதலுக்கு இணங்க சினம் தணிந்து, சாந்த மூர்த்தியாக - லட்சுமி நரசிம்மராகக்  காட்சி அளித்தாராம். அந்த அற்புத தரிசனத்தை, ஆயிரந் தோள் கொண்ட மாலவன், பெரிய பிராட்டியாரை அணைத்தபடி இருக்கும் அருள்கோலத்தை தாங்களும் காண வேண்டும் என ஆசைப்பட்டார்கள் சப்தரிஷிகள்.

படைப்பவன் இறைவன். அந்தப் படைப்புக்குச் சக்தியோ பிராட்டி. சொல்லுக்குப் பொருள் பெருமாள். அந்தச் சொல்லைப் புலப்படுத்துவது பிராட்டியார். ஆமாம் மாலவனும் அலைமகளும் ஒருவருள் ஒருவர் அடக்கம். நமக்காகப் பரிந்துரைத்து ஸ்வாமியின் திருவருளைப் பெற்றுத் தருவது தாயார். அந்த அன்னையும் சேர்ந்திருக்கும்படி தந்தையைத் தரிசிக்க அந்த முனிவர்கள் ஆசைகொண்டதில் வியப்பில்லைதான்!

அத்திரி, வசிஷ்டர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர், கௌசிகர் ஆகிய அந்த ஏழு முனிவர்களும்  தென்பெண்ணை நதி தீரத்தை அடைந்து, அதன் வடக்கு கரையில் கடும் தவம் புரிந்தார்கள்!

மனம் மகிழ்ந்த பரம்பொருளும், ஸ்ரீலட்சுமி நரசிம்மராக அவர்களுக்குக் காட்சி தந்தார். அவரை வணங்கிப் பணிந்த முனிவர்கள் ஏழு பேரும், 'இந்தத் திருவிடத்திலேயே எழுந்தருள வேண்டும்’ என்று வேண்டினர். அதை ஏற்று ஸ்ரீநரசிம்மம் விரும்பி வந்து குடியேறிய கோயில் இது!

உள்ளச் சிலிர்ப்புடன் ஸ்ரீநரசிம்மரைத் தரிசிக்கச் செல்கிறோம். முப்பது முக்கோடி தேவர்களும் தேடிக் காணத் துடிக்கும் அந்த தெய்வம், நமக்காக நம்மை நாடி வந்திருக்கிறதென்றால்... நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்?!

ஆலயக் கட்டுமானத்தை, அமைப்பை, தெய்வ மூர்த்தங்களை தரிசித்து வியந்தபடி மெள்ள கருவறை நோக்கி நகர்கிறோம். ஸ்ரீலட்சுமி நரசிம்மர். புன்னகையுடன் காட்சி தரும் கருணை தெய்வம்; நாளும் நலம் அருளும் நரசிம்மப் பரம்பொருளின் திருமுகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்; அத்தனை அழகு! அன்பர்களுக்கு அருள்வதில் அத்தனை வேகம்!

இந்தப் பகுதி பல்லவ மன்னன் ஒருவனின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலம்! சமண மதத்தைச் சார்ந்த அந்த மன்னன், சைவ-வைணவக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி வந்தான். தடுத்தவர்களுக்கும், அறிவுரை கூறியவர்களுக்கும் கடுமையான தண்டனை அளித்தான்.

இந்த நிலையில் நரஹரி என்ற முனிவர், அவனைச் சந்திக்க வந்தார். ஸ்ரீஹரி பக்தரான அவர், துணிச்சலுடன் மன்னனின் குறைகளைச் சுட்டிக்காட்டினார். இதனால் கோபம் கொண்ட மன்னன், நரஹரியைக் கழுவில் ஏற்றுமாறு உத்தரவிட்டான். முனிவரோ, அவனை பிரம்மஹத்தி பீடிக்கட்டும் என்று சபித்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

சாபத்தால் துன்புற்றான் வேந்தன். நோயால் வாடினான். உண்ணவும் உறங்கவும் முடியாமல் அல்லல்பட்டான். செய்த தவறுகளை  மெள்ள மெள்ள உணர்ந்தான். பரிகாரம் பெறுவதற்காக நரஹரி முனிவரைத் தேடினான். அவன் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அவனது கவலை பன்மடங்காக அதிகரித்தது.

ஒரு நாள், பூவரச மரத்தின் கீழ் அவன் துங்கிக்கொண்டிருந்தபோது, ஓர் அசரீரி ஒலித்தது; 'நரஹரி வருவார் சாப விமோசனம் கிடைக்கும்’ என்றது!

அவன் உள்ளம் மகிழ்ந்திருந்த வேளையில் இன்னொரு அற்புதமும் நிகழ்ந்தது. அவன் மேல் ஒரு பூவரச இலை விழுந்தது. அதை எடுத்துப் பார்த்த அரசன் அதிசயமும் ஆச்சரியமும் பரவசமும் அடைந்தான். அந்த இலையில், லட்சுமி நரசிம்மரின் எழில்மிகு தோற்றம் காணப்பட்டது.

அதே நேரம், அவன் முன் நரஹரி தோன்றினார். மனம் வருந்தி மன்னிப்பு வேண்டிய மன்னனுக்கு, 'மங்கலம் உண்டாகும்!’ என்று முனிவர் ஆசி கூறினார். மேலும், பூவரசமங்கலம் என்ற அந்த இடத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்குக் கோயில் கட்டிப் புண்ணியம் தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.  

தசாவதாரம் திருத்தலங்கள்!

முனிவரின் ஆசியுடன், ஸ்ரீநரசிம்மர் ஆலயத்தை அழகுறக் கட்டி முடித்த பல்லவ மன்னன், குடமுழுக்கும் செய்து குறை நீங்கப் பெற்றானாம்.

பல்லவனுக்கு அருளிய பரம்பொருள், நிச்சயம் நமக்கும் அருள் செய்யும் எனும் நம்பிக்கையும் ஸ்வாமியைத் தரிசித்து நிற்கிறோம்.

மேலிரு கரங்களில் சங்கு- சக்கரம் திகழ, முன் இடக் கரத்தால் அன்னை அமிர்தவல்லியை அணைத்தவாறு, வலக் கையால் அருள்மாரிப் பொழிகிறார்.

இடக் காலை மடக்கி, மடி மீது மகாலட்சுமியை அமர்த்திக்கொண்டுள்ளார். தாமரை மலரொன்று, கீழே தொங்கவிடப்பட்டிருக்கும் வலக் காலைத் தாங்கிய வண்ணம் உள்ளது. அமிர்தவல்லித் தாயார், வலக்கரத்தால் ஸ்வாமியை அன்புடன் அணைத்துக் கொண்டிருக்கும் அழகே அழகு! இடக் கரம் தாமரை மலரை ஏந்தியுள்ளது!

அன்னை அமிர்தவல்லி ஒரு கண்ணால் தன் நாயகன் ஸ்ரீநரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பிரியத்துக்குரிய பிள்ளைகளாம் பக்தர் களையும் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்!

சந்நிதியின் எதிரே கருடாழ்வாரும், தென்புறம் பக்த ஆஞ்சநேயரும் வணங்கிய நிலையில் தரிசனம் தருகிறார்கள். மகா மண்டபத்தின் மேற்புறம் அமைந்திருக்கும் சிற்பங்கள், சீரிய கலை நுணுக்கங்களுடன் திகழ்கின்றன. ஊஞ்சல் மண்டபத்தின் சிற்பங்கள் விஜயநகரப் பேரரசின் கலைத் திறனுக்குக் கட்டியம் உரைக்கின்றன. கோயிலின் இடப்புறம் ஆண்டாள் சந்நிதியும், வலப்புறம் தாயார் சந்நிதியும் உள்ளன.

பூவரசன் என்ற விஜயநகர அரசன், பகைவர் படையெடுப்பால் பலவாறு பாதிக்கப்பட்டிருந்தான். நாடு, நகரம் யாவற்றையும் இழந்திருந்த பூவரசன்,  பூவரசங்குப்பம் திருத்தலத்துக்கு வந்து, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வேண்டி,  கோயிலில் தங்கி இருந்து விரதம் கடைப்பிடித்து வழிபட்டானாம்.

இறுதியில்... நரசிம்மரின் நல்லருளால் நலிவு நீங்கப் பெற்று நாடும், நல்லாட்சியும் பெற்றான். பிறகு அவன், வினை தீர்த்து வெற்றி தந்த நரசிம்மமூர்த்தியின் கோயிலைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகமும் செய்வித்ததாகக் கூறுவர்.

அன்று அரசர்களின் குறை தீர்த்த பூவரசங்குப்பத்து லட்சுமி நரசிம்மர், இன்று அன்புடன் வரும் அனைவரது அல்லல் களையும் அழித்து, அழியா ஆனந்தம் அளித்து வருகிறார்.

ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரம் அன்று சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் நடைபெறுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும். இதில் பங்கு பெறும் அன்பர்களுக்குப் சத்ரு பயம் நீங்கும்; பிணிகள் யாவும் விலகும்.

பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மரின் திருவருளை, அவருடன் அருள்பாலிக்கும் தாயாரின் கருணைக் கடாட்சத்தை பரிபூரணமாகப் பெற, பூவரசங்குப்பம் செல்வோம். ஸ்ரீலட்சுமி நரசிம்மரை கண்ணாரத் தரிசித்து; மனதார வணங்கி வழிபடுவோம்.

அன்னையின் துணையால் ஸ்ரீஹரியின் அருள் கிட்டும்; நம் அல்லல்கள் யாவும் நீங்கி, ஆனந்தம் பெருகும்.

- அவதாரம் தொடரும்...