Published:Updated:

'வண்டிக் கருப்பரு வழித்துணையா வருவாரு...'

'வண்டிக் கருப்பரு வழித்துணையா வருவாரு...'

'வண்டிக் கருப்பரு வழித்துணையா வருவாரு...'

'வண்டிக் கருப்பரு வழித்துணையா வருவாரு...'

Published:Updated:
'வண்டிக் கருப்பரு வழித்துணையா வருவாரு...'
##~##
வெ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ள்ளையர்கள் ஆட்சியில், இந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்ட காலம்! திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி விரைந்துகொண்டிருந்த அந்த ரயில்... சட்டென்று வேகம் குறைய, குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்றேவிட்டது!

வேகவேகமாக வந்து சேர்ந்தார்கள் ரயில்வே ஊழியர்கள். ரயில் வண்டியை முழுவதுமாகச் சோதித்தார்கள். வண்டியில் பழுதேதும் இல்லை! 'பிறகு எப்படி ரயில் நின்று போனது?’ காரணம் தெரியாமல் குழம்பினார்கள்!

ரயில் நின்றிருந்த அந்த இடம், வண்டிக் கருப்பண்ணசாமியின் அருளாட்சிக்கு உட்பட்டது.

அங்கிருந்த ரயில்வே ஊழியர்களில் ஓரிருவர், வண்டிக் கருப்பரின் சாந்நித்தியம் அறிந்தவர்கள்; இன்பமோ துன்பமோ எல்லாவற்றையும் வண்டிக் கருப்பரிடம் சமர்ப்பித்துவிடும் வழக்கம் கொண்டவர்கள். இக்கட்டான அந்தச் சூழலிலும் வண்டிக் கருப்பரை மனதார வேண்டிக் கொண்டார்கள்; எந்தத் தடங்கலும் இல்லாமல் ரயில் வண்டி நகர்வதற்குத் துணை நின்றால், 'குட்டிமுட்டி’ தருவதாகவும் பிரார்த்தித்தார்கள்!

'வண்டிக் கருப்பரு வழித்துணையா வருவாரு...'

பிறகு, ரயிலைக் கிளப்புவதற்கு அவர்கள் முயற்சிக்க, எந்த விக்கினமும் இல்லாமல், எளிதில் கிளம்பியது ரயில். வண்டிக் கருப்பரின் திருவருள் கூடிவிட்டது என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் விதமாக, பெரிதாய் ஓசை எழுப்பியபடி விரைந்து சென்றது ரயில்! சொன்னபடியே... வண்டிக் கருப்பருக்கும் 'குட்டிமுட்டி’ கொடுக்கப்பட்டது!

திண்டுக்கல்- திருச்சி மார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் அய்யலூர். இதன் அருகே, சுமார் 1 கி.மீ. தொலைவில் கோயில்கொண்டிருக்கிறார் அருள்மிகு வண்டிக் கருப்பண்ணசாமி!

முற்காலத்தில்... கேரளாவிலிருந்து, வணிகர்கள் பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, தமிழகம் வருவது வழக்கம். அப்படியருமுறை, வணிகர் கூட்டம் ஒன்று மாட்டுவண்டியில் வந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் தானாக நின்று போனதாம் ஒரு மாட்டுவண்டி. அந்த வண்டியின் முன்புறம், பாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த கல், அந்த இடத்திலேயே கருப்பண்ணசாமியாக உருவெடுத்ததாம்! பிறகென்ன... அவரையே காவல் தெய்வமாக எண்ணி, அந்த இடத்தில் மக்கள் கோயில் எழுப்ப, வண்டிக் கருப்பண்ணசாமி அங்கேயே குடிகொண்டுவிட்டார் என்று பயபக்தியுடன் விவரிக்கிறார்கள் ஊர் மக்கள்!

'வண்டிக் கருப்பரு வழித்துணையா வருவாரு...'

பொட்டி நாயக்கனூர், தங்கமாப்பட்டி, முடக்குப்பட்டி, புதூர், வால்பட்டி, கருஞ்சின்னானூர், செம்பனபழநியூர் என ஏழு கிராமங்களுக்கும் இவர்தான் காவல் தெய்வம்! தங்களின் பிள்ளை குட்டிகள் என்றில்லை... தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குப் பிரச்னை, உடல்நோவு என்றாலும் அவர்கள் தேடி ஓடி வருவது இவரின் சந்நிதானத்துக்குத்தான்!

'என்னோட காளை படுத்துடுச்சி. அறுவடைக் குள்ளாற எந்திரிச்சி நின்னுடணும். காளையும் பொழைச்சி, அறுவடையும் சிறப்பாயிட்டா... தவறாம உனக்கு ஈடு சுமத்திடறேன் சாமி!’

இப்படி வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், வேண்டுதல் பலித்ததும் கோயிலுக்கு வந்து... ஆடு, மாடு, நாய் என எந்தப் பிராணிக்காக வேண்டிக் கொண்டார்களோ, அதன் உருவத்தை மண் பொம்மையாக செய்து எடுத்துவந்து காணிக்கை செலுத்துகிறார்கள். இதையே 'ஈடு சுமத்துதல்’ என்கிறார்கள்.

நினைச்ச காரியம் நிறைவேறவோ, பொருட்கள் களவு போனாலோ, பில்லி- சூன்யத்தை முறிக் கவோ... வண்டிக் கருப்பருக்கு 'குட்டிமுட்டி’ அளிப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். வெள்ளாட்டின் கறியை, மண்ணால் செய்யப்பட்ட முட்டியில் (கலயம்) வைத்துச் சமர்ப்பிப்பதையே, 'குட்டிமுட்டி’ பிரார்த்தனை என்கிறார்கள்!

'வண்டிக் கருப்பரு வழித்துணையா வருவாரு...'

அதேபோல், சைக்கிள் முதல் லாரி வரை புதிதாக எந்த வாகனம் வாங்கினாலும், அவற்றை வண்டிக் கருப்பரின் கோயிலுக்கு ஓட்டிவந்து, கருப்பருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். கோயில் அமைந்துள்ள சாலை வழியே பயணிக்கும் அன்பர்கள், தவறாமல் கோயில் வாசலில் வாகனங்களை நிறுத்தி, பயணம் இனிதே அமையவும், எந்த விபத்தும் நிகழாமல் தங்களைக் காக்க வேண்டியும், 'எறிகாசு’ செலுத்தி வணங்கிச் செல்கின்றனர். வண்டிக் கருப்பருக்கு, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. இந்தக் கோயிலில் மூலவரைத் தரிசிக்க, பெண்களுக்கு அனுமதி கிடையாதாம்!

ஏழு வருடங்களுக்கு ஒருமுறை, ஏழு கிராமங் களும் ஒன்றுகூடி கொண்டாடும் 'குதிரையெடுப்பு’ திருவிழா, அமர்க்களப்படுமாம். இதற்காக, வைகாசி அல்லது ஆனி மாதத்திலேயே, குளத்தில் களிமண் எடுத்துவந்து குதிரைகள் செய்து வைத்து வழிபட ஆரம்பித்துவிடுவார்கள்! விழாவின் ஒரு பகுதியாக... தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளில், அதிகாலை வேளையில் நிகழும், முனீஸ்வரர் குருதி குடிக்கும் வைபவம் சிலிர்ப்பானது! இந்த ஆலயத்தில் அருளும் முனீஸ்வரருக்கான இந்த வைபவம் நிகழும் நேரத்தில், எந்த வாகனமும் கோயிலைக் கடந்து போகக் கூடாதாம்!

பொங்கல் பண்டிகை அன்றும் பக்தர்கள் திரளாக வந்திருந்து, தங்களையும் தங்களுடைய மண்ணையும் செழிக்கவைக்கும் வண்டிக் கருப்பசாமிக்கு, சிறப்பாக அபிஷேக- ஆராதனைகள் செய்து வழிபடுகிறார்கள். இதனால் அந்த வருடம் விவசாயம் செழிக்கும், கால்நடைகள் பெருகும், வாகன விருத்தி ஏற்படும், வீட்டில் சுபிட்சம் மேலோங்கும் என்பது நம்பிக்கை.

பக்தர்களின் இந்த நம்பிக்கையைத் தவறாமல் நிறைவேற்றி அருள்கிறார், ஸ்ரீவண்டிக் கருப்பண்ணசாமி!

 - உ.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்

'வண்டிக் கருப்பரு வழித்துணையா வருவாரு...'
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism