Published:Updated:

ஆழ்வார் தரிசனம்

ஆழ்வார் தரிசனம்

ஆழ்வார் தரிசனம்

ஆழ்வார் தரிசனம்

Published:Updated:
ஆழ்வார் தரிசனம்
##~##
வை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குண்டவாசன் கோயில்கொண்டிருக்கும் திவ்விய திருத்தலங்களைத் தேடித் தேடி தரிசித்து வந்தார் அந்த அடியவர். 'இந்தப் பிறப்பு அவன் கொடுத்தது; இந்த உடம்பு அவன் தாள் பணியவே’ எனும் கொள்கையுடன் வாழ்ந்த அடியவருக்கு, கோயில் நகரமாம் காஞ்சிக்குச் சென்று, அங்குள்ள ஆலயங்களைத் தரிசிக்கவும் ஆசை!

தாமதிக்காது புறப்பட்டார். மோட்சபுரியாம் காஞ்சியில், திருவெஃகா ஆலயத்தில் அருள்புரியும் நாயகனை வணங்கி வழிபட்டார். அவரின் அழகில் மனதைப் பறிகொடுத்தவர், அங்கேயே தங்கினார். இங்கு, இவருக்கு உவப்பான சீடன் ஒருவனும் வந்து சேர்ந்தான். அவன் பெயர் கணிக்கண்ணன்.

மூதாட்டி ஒருத்தி இவர்களைக் கவனித்தாள். அடியவரின் மகிமையை அறிந்தவள், அனுதின மும் அவருக்குத் தொண்டு செய்யத் தீர்மானித்தாள். அதன்படி, அவர்கள் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வது முதல், தன்னால் இயன்ற அத்தனை பணிகளை யும் செய்துவந்தாள். அவளின் சேவையைக் கண்டு அடியவர் மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியே திருவருளாகி, மூதாட்டியை அனுக்கிரகித்தது. அவள், முதுமை அழிந்து இளம்பெண்ணானாள்!

அந்தப் பகுதி, பல்லவ மன்னனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஒருமுறை நகர்வலம் வந்த மன்னன், அடியவரின் திருவருளால் இளம்பெண்ணான அந்த மங்கையைக் கண்டு மோகம் கொண்டான். அவளை மணம் செய்து கொண்டான்.

நாட்கள் நகர்ந்தன. அந்தப் பெண் இளமை மாறாமல் திகழ, மன்னனோ நரைகூடி கிழப் பருவத்தை நெருங்கிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், தன் மனைவி இளமையாகவே இருக்கக் காரணம் அடியவர் ஒருவரின் திருவருளே என்பதையும், அந்த அடியவரின் சீடர் கணிக்கண்ணன் பி¬க்ஷக்காகத் தினமும் அரண்மனை வருகிறார்; அவர் மூலம் அடியவரின் திருவருளைத் தானும் பெறலாம் என்பதையும் மனைவியின் மூலம் அறிந்தான்.

மறுநாள், பி¬க்ஷக்காகக் கணிக்கண்ணன் வந்ததும், அவனுடைய குருநாதரை அழைத்துவரும்படி பணித்தான் அரசன். கணிக்கண்ணனோ, தன்னுடைய குருநாதர் எவரது இல்லத்துக்கும் வரமாட்டார் என்றான்.

''எனில்,  தாங்களே என்னைப் பற்றிப் பாடுங்கள்'' எனக் கட்டளையிட்டான் அரசன். திருமாலைத் தவிர வேறு எவரையும் நான் பாடுவதில்லை என மறுத்தான் கணிக்கண்ணன். 'அரசனும் ஆண்டவனின் அம்சமே! ஆகவே, எம்மைப் பாடுவதில் தவறில்லை!’ என வலியுறுத்தினான் மன்னன். அப்போதும் கணிக்கண்ணன் உடன்படாததால்,  கோபம் கொண்ட அரசன், காஞ்சியைவிட்டு வெளியேறும்படி கணிக்கண்ணனுக்கு உத்தரவிட்டான்.

ஆழ்வார் தரிசனம்

கணிக்கண்ணன் கலங்கவில்லை. நேராக குருநாதரிடம் வந்து, நடந்ததை விவரித்து, காஞ்சியில் இருந்து புறப்பட அவரிடம் அனுமதி கேட்டான். தன் சீடன் இல்லாத இடத்தில் தனக்கும் வேலையில்லை என முடிவுசெய்தார் அடியவர். நேராகக் கோயிலுக்குச் சென்று, பெருமாளையும் தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்தார்.

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா- துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

- என்று அவர் பாடி வேண்டிக்கொள்ள, உடனே தனது படுக்கையாகிய பாம்பைச் சுருட்டி எடுத்துக்கொண்டு பெருமாளும் அடியவரைப் பின்தொடர்ந்தார்.

அகிலமாளும் அனந்தனே தன்னைவிட்டு அகன்றதால், காஞ்சி பொலிவிழந்தது; அந்த நகரை இருள் சூழ்ந்தது. மக்கள் பரிதவித்தனர். நிலைகுலைந்துபோன அரசன், அமைச்சர்களை அழைத்துக் காரணம் கேட்டான். அவர்களும் ஒற்றர்கள் மூலம் தாங்கள் அறிந்த விஷயத்தை விவரித்தனர். மன்னவன் அதிர்ந்தான். தனது தவறுக்காக வருந்தினான். ஓடோடிச் சென்று கணிக்கண்ணனின் திருவடிகளைப் பற்றி, மன்னிப்புக் கேட்டு மன்றாடினான். உள்ளம் உருகிய கணிக்கண்ணனும் மன்னவனை மன்னித்தான். தன் குருநாதரிடம், மீண்டும் காஞ்சியில் எழுந்தருளுங்கள் என வேண்டிக் கொண்டான்.

அவரும் இசைந்தார். மீண்டும் பெருமாளிடம் அவர் விண்ணப்பித்தார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்

- என்று பாடினார். அதன்படியே, மீண்டும் ஆலயத்தில் எழுந்தருளி, பாம்பணையில் பள்ளி கொண்டார் பெருமாள்.பெருமாளைத் தன் சொல்லுக்கு இணங்கவைத்த பெருமையுடைய அந்த அடியவர்... திருமழிசையாழ்வார்! அவருக்கு அருளியதால் காஞ்சி- திருவெஃகா இறைவனுக்கு,  'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்றே  திருப்பெயர் (ஸ்ரீயதோத்தகாரி என்றும் ஒரு திருநாமம் உண்டு).

ஆழ்வார் தரிசனம்

சித்தார்த்தி வருடம் தை மாதம்- தேய்பிறை பிரதமை திதி நாளில், மக நட்சத்திரத்தில் அவதரித்தவர் திரு மழிசை ஆழ்வார். காஞ்சிக்குக் கிழக்கே அமைந்திருக்கிறது, இவர் அவதரித்த திருமழிசை எனும் ஊர்.

பிறக்கும்போதே கை, கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை தந்தை பார்கவர், பிரம்புப் புதர் ஒன்றில் விட்டுச் சென்றார். பிறகு, பெருமாளின் திருவருளால் உயிர் அமையப்பெற்று, அழகிய ஆண் குழந்தையாக உருப்பெற்றது. அவ்வழியே வந்த திருவாளன் என்பவர் குழந்தையை எடுத்துச்சென்று, மனைவி பங்கயச் செல்வியிடம் ஒப்படைத்தார். அவளும் அக மகிழ்ச்சியுடன் குழந்தையை பராமரித்து வளர்த்தாள் (குழந்தையின் வலக்கால் பெருவிரலில் கண் அமையப் பெற்றிருந்தது ஒரு சிறப்பம்சம்!).

ஆனாலும், அந்தக் குழந்தை எதையும் உண்ணாமல் இருந்தது. இந்த வியப்பான தகவல் அறிந்து, பலரும் வந்து அந்தக் குழந்தையைப் பார்த்துவிட்டுப் போனார்கள். திருமழிசையில் வாழ்ந்த ஒரு முதிய தம்பதி, பால் காய்ச்சி எடுத்துக்கொண்டு வந்தனர். குவளையைக் குழந்தையின் முன் வைத்தனர். ஆர்வத்துடன் அந்தப் பாலை எடுத்துக் குடித்தது குழந்தை. பிறகு, தினமும் அவர்களே பால் கொண்டு வரலாயினர்.

ஒருநாள், அந்த முதிய தம்பதியின் விருப்பத்தை அறிந்து, பாலில் சிறிது மிச்சம் வைத்தது குழந்தை. அதைப் பருகிய அந்த முதிய தம்பதி, அந்தக் கணமே இளமையாயினர். எல்லோரும் வியந்து நிற்க, தெய்வக் குழந்தையின் திருவருளை எண்ணி வியந்தபடி தம்பதி தங்கள் இல்லம் திரும்பினர். காலப்போக்கில் அவர்களுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே, பிற்காலத்தில் திருமழிசை ஆழ்வாருக்குச் சீடனான கணிக்கண்ணன்!

ஆழ்வாரின் மகிமைகளைப் படிக்கும் போதே உள்ளம் சிலிர்க்கிறது அல்லவா? எனில், அவரை தரிசித்து வந்தால்..?!

ழ்வார் அவதரித்த திருமழிசையில் அமைந்திருக்கிறது அருள்மிகு திருமழிசை திருக்கோயில். ஸ்ரீஜெகந்நாதப் பெருமாளும் இங்கு கோயில்கொண்டிருக்கிறார்.

ஒருமுறை... அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்கவர் ஆகிய முனிவர்கள் பிரம்மனிடம் சென்று, தாங்கள் பூமியில் தவமியற்றுவதற்கான தகுந்த இடத்தைச் சொல்லும்படி வேண்டினர். அவர்களிடம் திருமழிசையின் பெருமையை எடுத்துரைத்தார் பிரம்மன். அதாவது, தராசின் ஒரு தட்டில் உலகின் ஒட்டுமொத்த புண்ணியத் தலங்களையும், மற்றொரு தட்டில் திருமழிசையையும் வைக்க, திருமழிசை இருக்கும் பாகமே தாழ்ந்ததாம்! அவ்வளவு புண்ணியம் மிகுந்த தலம் என்பதை அறிந்த முனிவர்கள் இங்கு வந்து தவம் இருக்க, அவர்களுக்கு ஸ்ரீஜெகந்நாதரின் தரிசனம் கிடைத்தது!

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் 3-ஆம் குலோத்துங்கச் சோழன், கோப்பெருஞ்சிங்கன், விசயகண்ட கோபாலன், அரியண்ண உடையார், விருபாட்சன் ஆகியோரால் திருப்பணிகள் கண்டதாம். கோயிலில்,  ஜெகதானந்த விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் அருள்கிறார்  ஸ்ரீஜெகந்நாதப்  பெருமாள்; தாயார்-  ஸ்ரீதிருமங்கைவல்லி! இங்கே, கருணையே வடிவாக நின்ற கோலத்தில் அருளும் ஸ்ரீவைஷ்ணவிக்கு,

பூமாலைகள் அணிவித்து வழிபட, தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுமாம். ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீமணவாள மாமுனிகள் ஆகியோரது சந்நிதிகளும் உண்டு. பிருகு, மார்கண்டேய மகரிஷி களையும் சிலா வடிவமாக தரிசிக்கலாம். திருமழிசை ஆழ்வாருக்குத் தனிச்சந்நிதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

வைகாநஸ முறைப்படி பூஜைகள் நடை பெறும் இந்த ஆலயம் காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 6 முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆனி மாதம் பெருமாளுக்கு பிரம்மோற்ஸவம்; ஐப்பசியில்- மணவாள மாமுனிகள் உற்ஸவம்; தை மாதம் மக நட்சத்திரத்தில்- திருமழிசை ஆழ்வார் திருஅவதார மகோத்ஸவம், மாசி மாதம்- தெப்போற்ஸவம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன.

- அ.இராமநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism