

பதினெண் புராணங்கள் என்னென்ன? 'பஞ்ச புராணங்கள்’ என்றும் சிலர் குறிப்பிடுகிறார்களே... அது குறித்தும் விளக்குங்களேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- தமிழ்நிலவன், பாலைமேடு
'பஞ்ச புராணங்கள்’ என்று எதுவும் நமது சம்பிரதாயத்தில் இல்லை. புது சிந்தனையாளர்களின் கண்ணோட்டமாக இருக்கலாம்! அதுபற்றிக் கூறியவர்களே அதற்குச் சான்று!
பதினெட்டு புராணங்கள் உண்டு. அவை: மத்ஸ்ய புராணம், மார்க்கண்டேய புராணம், பாகவத புராணம், பவிஷ்ய புராணம், பிரம்மவைவர்த்த புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம், வராஹ புராணம், வாமன புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம், அக்னி புராணம், நாரதீய புராணம், பத்ம புராணம், லிங்க புராணம், கருட புராணம், கூர்ம புராணம், ஸ்கந்த புராணம் ஆகியன.
இவை தவிர, உப புராணங்களும் உண்டு. அவை: சனத்குமார புராணம், நரஸிம்ஹ புராணம், சிவ புராணம், பிரஹன்னாரதீய புராணம், துர்வாச புராணம், கபில புராணம், மானவ புராணம், ஒளசஸை புராணம், வருண புராணம், ஆதித்ய புராணம், மஹேச்வர புராணம், பார்கவ புராணம், வசிஷ்ட புராணம், காலிகா புராணம், சாம்ப புராணம், நந்திகேச்வர புராணம், ஸெளர புராணம், பராசர புராணம். இப்படி 18-ல் முடிவடையும் புராணங்கள் புழக்கத்தில் உண்டு. ஐந்து எண்ணிக்கையில் முடிவடையும் புராணத் தகவல் தென்படவில்லை!
புராணங்கள்- 18; உப புராணங்கள்- 18; வித்யைகள் 18. அதேபோல், மகாபாரதம் 18 பர்வாக்களை உள்ளடக்கியது; பாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. படைகளும் 18 அஷெளஹணியாக இருந்தன. பகவத் கீதையும் 18 அத்தியாயங்கள் கொண்டது. ஆக, '18’ எனும் சிறப்புடன் அமைந்த புராண எண்ணிக்கையில், 'பஞ்ச புராணம்’ என்றொரு வழக்கத்தை தோற்றுவிப்பது விளையாட்டு!
##~## |
- கார்த்திக்குமார், கோவை
இறை உருவங்களைக் கொண்ட வஸ்திரங்களை அணியக்கூடாது. அப்படிப் பயன்படுத்தினால், இறையுருவத்தை இழிவுபடுத்துவது போலாகிவிடும்; தெரிந்தே தவறு செய்தவராகிவிடுவோம்! அரைக்குக் கீழே இருக்கும் அவயவங்களை மறைக்க இறை உருவத்துடன் கூடிய வஸ்திரத்தைப் பயன்படுத்துவது தவறு. பக்தி என்பது நேர்வழியில் இருக்கவேண்டும்; கோணல் வழியில் செல்லக் கூடாது. சிலர், பொருட்களில் இருக்கும் அசுத்தத்தை அகற்றும் துணியாகவும் இதுபோன்ற வஸ்திரங்களைப் பயன்படுத்துவர். அதுவும் தவறே! வாய் இறைவனின் புகழ் பாடும்; செயல் மட்டும் அவனை உதாசீனப்படுத்துவது போன்ற நிலை கூடாது.

மாக்கல் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாமா?
- தமிழ்நிலவன், மிளகரணை
வழிபடலாம். தவறில்லை. மனதில் உறைந்திருக்கும் பிள்ளையாரை மாக்கல்லில் பார்க்கிறீர்கள். மனம்தான் மாக்கல்லை பிள்ளையாராகப் பார்க்கிறது. ஈடுபாட்டுடன், பிள்ளையார் என்ற எண்ணத்துடன் வழிபடுங்கள்; உங்கள் விருப்பம் ஈடேறும்.
தவம் மேற்கொண்டிருந்த துருவன், இலந்தைப் பழமும் விளாம்பழமும் மட்டுமே உட்கொண்டான் என ஸ்ரீமத்பாகவதம் கூறுவதாக நண்பர் ஒருவர் விவரித்தார். இந்த இரண்டு பழங்களுக்கும் அப்படியென்ன சிறப்பு?
- ஜி.ஜெயராமன், கூந்தலூர்
விளாம்பழம் பிள்ளையாருக்குப் பிரியமானது. மருத்துவ குணம் கொண்டது. அன்றாடம் உணவிலும் சேர்த்துக் கொள்வதுண்டு. அதன் மேல் ஓடு கடினமாக இருக்கும். ஆனால், உள் பகுதி மென்மையானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பழம், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. விளாம்பழம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், 'கஜம்’ என்ற ஒருவகைப் புழு அதனுள் ஊடுருவி, இனிப்பான பகுதியை மட்டும் உட்கொண்டுவிடுமாம்! பார்வைக்கு முழுப் பழமாகக் காட்சியளிக்கும்; உடைத்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது! சிலர், வெளித் தோற்றத்தில் பெரிய மனுஷராகத் தென்படுவர். ஆனால், உள்ளத்தில் ஈரமிருக்காது. சிலரது முரட்டுத் தோற்றம், அவரை அணுகவே பயம் கொள்ள வைக்கும். ஆனால், அவர்களது உள்ளம் மென்மையாக இருக்கும். இப்படி, மனிதனின் இயல்புக்கு எடுத்துக்காட்டாக விளாம் பழத்தைக் கையாளுவார்கள் அறிஞர்கள் (கஜபுக்தகபித்தவத்...).
இலந்தைப் பழம் இனிப்பு. இதுவும் மருத்துவக் குணம் கொண்டது. புலன்களில் ஆற்றலை நிலைநிறுத்தும். மேற்புறத் தோலும் உள்ளே சதைப்பகுதியும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். உள்ளே கொட்டை கடினமாக இருக்கும். உதட்டளவில் மென்மையான.. வசீகரமான பேச்சு. உள்ளத்தளவில் கல் போல் கடினம்- இப்படியிருக்கும் மனிதர்களுக்கு உவமையாக இலந்தைப் பழத்தைக் கையாளுவார்கள் (அன்யேபதரிகாகாரா பஹிரேவ மனோஹரா:) இப்படி, எதிரிடையான இயல்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன அந்த இரண்டு பழங்களும்!
தவத்தில் ஆழ்ந்தவர்கள், உணவின் தராதரத்தைப் பார்க்க மாட்டார்கள். உயிர் நிலைத்திருக்க, கிடைத்த உணவை ஏற்பார்கள். விளாம்பழமும் இலந்தைப் பழமும் காடுகளில் அதிகமாக விளையும். இயற்கையாக விளையும் மரங்களின் பழங்களை ஏற்பது அவர்களது இயல்பு. சிறப்பான பழத்தைத் தேர்ந்தெடுக்கும் மனம் இருந்தால், அங்கு தவம் மறைந்துவிடும்; அவரும் நம்மைப் போன்றவராக மாறிவிடுவார்!
பிறப்பு- இறப்பு தீட்டு குறித்து பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள். இந்தச் சம்பவங் களால் யார் யாருக்கெல்லாம் தீட்டு உண்டு? எத்தனை நாட்கள் கடைப்பிடிக்கவேண்டும்?
- பி.வைத்தியநாத சுவாமி, சென்னை
பிறப்பு- இறப்பு ஆகிய நிகழ்வுகளால், இவர்களைப் பற்றிய சிந்தனையிலே மனம் வட்டமிடும். மற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டாது. ஆன்மிகம் சார்ந்த அறநெறிகளிலும், பண்பாட்டுடன் இணைந்த சம்பிரதாயச் சடங்குகளிலும் செயல்படும் தகுதியை, அந்த வேளையில் மனம் இழந்திருக்கும்.
பிறப்பு- இறப்பு இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆன்மிகம் பண்பாடு சார்ந்த உயர்வான செயல்பாடு களில் மனம் தீண்டக் கூடாது என்ற நோக்கில், 'தீட்டு’ என்ற சொல் பயன்படுகிறது. அளவு கடந்த இன்பம் அல்லது அளவு கடந்த துயரம்- இதில் மூழ்கியவனுக்கு, மற்ற விஷயங்களைத் தீண்ட உரிமை இல்லை என்பது பொருள். அன்றாட அலுவல்கள், உலகவியல் நடைமுறைகள் போன்றவற்றைத் தீண்டலாம்; தவறில்லை. 'தீட்டு’ மனம் சார்ந்த விஷயம். பசுமாடு, கடவுளை வேண்டியது... 'அய்யனே! கன்றை ஈன்றெடுத்த என்னிடமிருந்து பால் பெறும் பொருட்டு மற்றவர்கள் என்னை 10 நாட்கள் தீண்டக்கூடாது என்கிற வரத்தை அருளுங்கள்’ என்று கேட்டது. கடவுளும் அப்படியே வரம் தந்தார் என்கிற தகவல் வேதத்தில் உண்டு (தசமாராத்ரீ; ஜாதம் நதோஹன்... தசராத்ரீ; ரதுஹந்தி).
இதைச் சான்றாக வைத்து, பிறந்த தீட்டை பத்து நாட்களாக நாமும் கடைப்பிடிக்கிறோம். தாய், தந்தை, பிள்ளைகள், திருமணம் ஆகாத பெண்கள், தாத்தா, பாட்டி, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப்பாட்டி, தந்தையின் உடன்பிறப்புகள் ஆகிய அத்தனைபேருக்கும் 10 நாட்கள் பிறப்புத் தீட்டு உண்டு. குழந்தையின் பிறப்பில் இவர்கள் அத்தனை பேரும் மகிழ்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. குலம் செழிக்க ஒரு குலக்கொழுந்து உதயமாவது மகிழ்ச்சியே!
இறந்த துயரத்திலும், மற்ற அலுவல்களில் செயல்பட உரிமை மறுக்கப்படுகிறது. இங்கும் பத்து நாட்கள் தீட்டு உண்டு. உண்மையைச் சொல்லப்போனால், இறந்தவரின் ஈமச்சடங்குகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு ஏற்ப, மற்ற விஷயங்களில் செயல்படுவதைத் தவிர்ப்பது பொருந்தும். தந்தையின் ஜீவாணுக்களில் உருப்பெற்றவன் தனயன். இறந்த தந்தையின் ஜீவாணுக்கள் செயலிழந்துவிடும். அதன் ஒரு பகுதி, தனயனில் செயல் இழக்காமல் தொடருகிறது. இழந்த பகுதி- இழக்காத பகுதியின் தொடர்பு, 'தீட்டுக்கு’ ஆதாரம்.
அந்த ஜீவாணுக்கள்... தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் - இப்படி ஒவ்வொருவரிலும் தாவித் தாவி, அதன் அம்சம் குறைந்து குறைந்து 7-வது தலைமுறையில் முற்றிலும் மறைந்துவிடும். அதனால், பங்காளிகளிலும் அதன் அம்சம் தொட்டு இருப்பதால், அவர்களும் தீட்டில் அடங்குவார்கள். கல்யாணத்திலும் கல்லெடுப்பிலும் பங்காளிகள் குழாம் ஒன்று சேருவது உண்டு. அது அவர்கள் தொடர்புக்கு அத்தாட்சி. பிறப்புத் தீட்டு என்பது எந்தெந்த உறவுகளுக்கெல்லாம் உண்டோ, அவர்களுக்கு இறப்புத் தீட்டும் உண்டு. இந்தப் பண்பாடு குடும்ப ஒற்றுமையை நிலைநிறுத்தும்.

ஆரத்தி எடுக்கும்போது சிலர் இடமிருந்து வலமாகவும், வேறு சிலர் வலமிருந்து இடமாகவும் சுற்றுகிறார்களே... ஆரத்தி எடுப்பதற்கான விதிமுறைகள் என்ன?
- மு.முருகேசன், திருச்சி
ஆரத்தி எடுப்பது சிறந்த சம்பிரதாயம். அதில், இடது- வலது என்கிற பாகுபாட்டைப் பார்க்கவேண்டிய கட்டாயம் இல்லை.
தாம்பாளத் தட்டில் மஞ்சள்- சுண்ணாம்பு கலந்த நீர், சிவப்பாக மாறிவிடும். அதைக் கையில் ஏந்தி ஆரத்தி எடுக்கவேண்டும் என்பது நடைமுறை. ஒருவர் மட்டுமோ அல்லது இருவர் சேர்ந்தோ ஆரத்தி எடுக்கலாம். கெட்ட பார்வையால் ஏற்பட்ட தோஷம் விலகும் என்ற நம்பிக்கையில் விளைந்த சடங்கு, ஆரத்தி!
- பதில்கள் தொடரும்...
