Published:Updated:

தடாகக் கரையில் முளைத்த பாடகலிங்கம்!

தடாகக் கரையில் முளைத்த பாடகலிங்கம்!

தடாகக் கரையில் முளைத்த பாடகலிங்கம்!

தடாகக் கரையில் முளைத்த பாடகலிங்கம்!

Published:Updated:
தடாகக் கரையில் முளைத்த பாடகலிங்கம்!
##~##
நெ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிதுயர்ந்த மரங்கள், அவற்றின் கிளைகளில் தாவி விளையாடும் மந்திகள், மொட்டவிழ்ந்து மணம் பரப்பும்  பூக்கள்... என இயற்கை வாரியிறைத் திருந்த அந்த வனத்தின் பேரழகைக் கண்கொட்டாமல் ரசித்தபடி, தன்னந்தனியே வந்துகொண்டிருந்தாள் அந்த நாட்டின் மகாராணி.

நெடுந்தூரம் வந்துவிட்டதில், வனத்தின் வனப்பு, அவளின் பசியை மறக்கடித்திருந்தாலும், சற்றே தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் மூங்கில் புதர்களையட்டி தடாகம் ஒன்று தென்படவே, ஆர்வத்துடன் ஓடினாள். தரை தெரியுமளவுக்குத் தெளிந்து காணப்பட்டது தண்ணீர். காலில் அணிந்திருந்த பாடகத்தை (கால் தண்டை போன்றதொரு அணிகலன்) கரையில் ஓரிடத்தில் கழற்றி வைத்துவிட்டு, அருகில் வளர்ந்திருந்த மூங்கிலைப் பிடித்தபடி, மிகக் கவனமாக நீரில் கால் வைத்தாள். சட்டென்று குளிர்ச்சியை உணர்ந்த உடம்பு சிலிர்த்தது. ஆனந்தமாய் தண்ணீரை அள்ளி, முகத்திலும் மேனியிலும் தெளித்துக் கொண்டாள்; இரு கைகளால் சேந்தி, தாகம் தீரப் பருகினாள்!

'போதும் கரையேறலாம்’ என அவள் முடிவு செய்தபோது, இறை ஓர் அற்புதத்தை நிகழ்த்தக் காத்திருந்தது!

ஆம்... மகாராணியால் கரையேற முடியவில்லை. கால்களை நீரிலிருந்து எடுக்கவே முடியவில்லை. திடுக்கிட்டாள். மனம் ஆபத்தை உணர்ந்ததில், ஆனந்தம் காணாமல் போய், பயம் கவ்விக்கொண்டது. பீதியில் அலறினாள்.

தடாகக் கரையில் முளைத்த பாடகலிங்கம்!

நல்லவேளையாக, அருகில் முனிவர் ஒருவர் தியானம் செய்துகொண்டு இருந்தார். இவளது குரல் கேட்டுக் கண்விழித்தவர், ஓடோடி வந்தார். அவரிடம், அரசனிடம் தகவல் சொல்லுமாறு கேட்டுக்கொண்டாள் ராணி.

தகவல் அறிந்து படை- பரிவாரங்களுடன் அரசன் வருவதற்குள்,

இறையருளால் அவள் கால்கள் விடுதலை பெற்றன. ஒருவழியா கக் கரைசேர்ந்தவள், பாடகங்களைக் கழற்றி வைத்த இடத்துக்குப் போனாள். அங்கே அவற்றைக் காணோம். அதற்குள் அரசனும் பரிவாரங்களும் வந்துவிட, விஷயம் தெரிந்து அவர்களும் பாடகங்களைத் தேடத் தொடங்கினார்கள்.

அந்தப் பாடகங்கள், ஒரு மூங்கிலுக்கடியில் வசமாய் சிக்கிக்கொண்டிருப்பதைக் கண்டான் அரசன். மூங்கிலை  வெட்டித்தான் அணிகலனை மீட்கமுடியும் என்கிற நிலை. எனவே, வாளால் ஓங்கி வெட்டினான். மறுகணம், மூங்கில் வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குபுக்கென்று பொங்கிப் பெருகியது ரத்தம்!

அங்கிருந்த அனைவரும் வெலவெலத்துப் போனார் கள். அரசியுடன் அரண்மனைக்கு விரைந்த அரசன், ராஜ குருவிடம் ஓடோடி வந்து விஷயத்தைச் சொன் னான். 'அந்த இடத்தை நான் பார்க்கவேண்டும்’ என்றார் ராஜ குரு. மீண்டும், தடாகத்தின் கரையை அடைந்தார்கள். அங்கே பாடகங்கள் இல்லை; பதிலுக்கு, அழகாக இரண்டு லிங்கங்கள் முளைத்திருந்தன!

தடாகக் கரையில் முளைத்த பாடகலிங்கம்!

'சிவமே... என் சிவமே...’ என்று அரசன் உருகி நிற்க, வானில் ஒலித்தது அசரீரி... ''மன்னவா, இந்த இடத்திலேயே எமக்கு ஓர் ஆலயம் எழுப்புவாய்!''

இறைக்கட்டளையை நிறைவேற்ற சித்தம் கொண் டான் அரசன். வெகுவேகமாய் திருப்பணிகள் நடக்க, அற்புதமாய் எழும்பியது ஆலயம். சிவலிங்கப் பிரதிஷ்டை யும் சிறப்புற நடந்தேறியது. மன்னவனையும் அவன் மனைவியையும் அந்தக் கோயிலிலேயே தங்கிவிடுமாறு பரம்பொருள் பணித்தது. அவ்வாறே, நெடுங்காலம் கோயிலில் பணி செய்து, சிவப்பரம்பொருளுடன் ஐக்கியமானார்கள் அந்த அரச தம்பதி!

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில், மலையடிவாரத்தில் அமைந்துள்ளது மலையான்குளம். இந்தக் கிராமத்தில்தான் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீபாடக லிங்க ஸ்வாமி.

ஆமாம்... அரசியின் பாடகம் இருந்த இடத்தில் தோன்றியதால், லிங்க மூர்த்தி களில் ஒருவருக்கு ஸ்ரீபாடகலிங்கம் என்று திருநாமம்; மற்றவருக்கு ஸ்ரீமகாலிங்கம் என்று திருப்பெயர்.

லிங்கத் திருமேனிகளுக்குப் பின்னால் ஸ்ரீசித்திரபுத்திர தர்மசாஸ்தா அருகிலேயே பாடகலிங்க நாச்சியார்; அரசனும் அரசியுமே இப்படி இங்கு அருள்பாலிக் கிறார்களாம்! சந்நிதியின் எதிரே நந்தியும், சாஸ்தாவின் வாகனங்களான யானையும்  குதிரையும் கம்பீரமாக நிற்கின்றன. முன் மண்டபத்தில் ஸ்ரீபாடகலிங்க பிள்ளையார் அருள்கிறார்.

இந்த ஆலயத்தின் சிறப்பம்சம், இங்கு குடியிருக்கும் காவல் தெய்வங்கள். சங்கிலிபூதத்தார், தளவாய்மாடன், தளவாய்மாடத்தி, வனப்பேச்சியம்மன், பிரம்மராட்சியம்மன், கங்காதேவி, பேச்சியம்மன், விடுமாடன், விடுமாடத்தி, சுடலைமாடன், தம்பிரான், சின்னத்தம்பி, கருப்பசாமி, தூண்டில்மாடன், பலவேசக் காரர், பொம்மக்கா- திம்மக் காவுடன் ஸ்ரீபட்டவராயர் ஆகியோரும் இங்கு அருளாட்சி செய்கின்றனர். முகப்பில், சங்கிலிபூதத்தாருடன் சுதை ஆலியையும் தரிசிக்கலாம்.

எல்லோரையும் சூடம் ஏற்றிக் கும்பிட்டபடி, கோயிலை வலம் வந்தால், பிராகாரத்தில் வரிசையாக ஏழு சிலைகள்! முன்னொரு காலத்தில், இந்தப் பகுதியில் அண்ணன் தம்பிகள் ஏழு பேர் வசித்து வந்தார்களாம். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை. அவள் மீது அந்தச் சகோதரர்களுக்கு  அதீத பாசம். இந்த நிலையில், வேற்று இனத்தைச் சார்ந்த ஒருவன், அந்தப் பெண்ணை விரும்பினான். இதையறிந்த சகோதரர்கள் ஏழு பேரும் கடுமையாக எதிர்த்தனர்.

தடாகக் கரையில் முளைத்த பாடகலிங்கம்!

இளைஞன், அந்தப் பெண்ணுடன் கோயிலுக்கு வந்து சாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தான். அவர்களைத் தேடி அங்கும் வந்துவிட்டனர் சகோதரர்கள். அப்போது அவர்கள் முன் தோன்றிய சித்திரபுத்திர சாஸ்தா, அனை வரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர்கள் அவரது ஆணையை ஏற்க மறுத்து முரண்டு பிடித்ததால், அனைவரையும் சிலையாக மாற்றிவிட்டாராம் சாஸ்தா! தனிச் சந்நிதியில் சகோதரர்கள் ஏழு பேரும், அவர்களின் சகோதரியும், கூடவே அந்த இளைஞனும் சிலையாகக் காட்சி தருகின்றனர். ஸ்தல விருட்சம், வில்வம்; தீர்த்தம்- பாடகலிங்க தெப்பம்!

கோயிலுக்கு வந்து, பிரதான மான பாடகலிங்கம், மகா லிங்கம் மற்றும் சாஸ்தாவை பிரார்த்திக்க, எண்ணிய காரியங்கள் ஈடேறுமாம். சுற்றுவட்டார ஊர்களிலும்... தங்களுடைய சாஸ்தா எந்த தெய்வம் என்று தெரியாதவர் கள், இவரையே தங்களின் சாஸ்தாவாக ஏற்று வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் கல்யாணம், கிரகப்பிரவேசம்,  வளைகாப்பு என்று வீட்டில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந் தாலும், முதல் பத்திரிகையும் அழைப்பும் கோயிலுக்குதான்!

இந்த ஆலயம் கேரள மன்னனால் கட்டப்பட்டது என்பதால், ஆவணி ஓணமும் பங்குனி உத்திரத் திருவிழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப் பன்றும்,  கடைசி சனிக் கிழமைகளிலும் சிறப்பு பூஜை கள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில்... தங்களின் தீவினைகள் தீரவும், குடும்பத்தில் சுபிட்சம் பெருகவும் வேண்டி சாஸ்தாவையும் பாடகலிங்க- மகாலிங்க ஸ்வாமியையும் வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

தைமாத பிறப்பன்று குடும்பத்தோடு வந்திருந்து பொங்கலிட்டு சாஸ்தாவை வழிபட்டுச் செல்கிறார்கள். இதனால் குடும்பமும் சந்ததியும் சிறப்பாக வாழ, அருள்புரிவாராம் சாஸ்தா.தினமும் காலை 8 முதல் 10 மணி வரையிலும்; தமிழ் மாதப்பிறப்பு மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

நெல்லைச் சீமைக்குச் செல் லும் அன்பர்கள், அப்படியே, பாடகலிங்க- மகாலிங்க மூர்த்தியரையும், சித்திரபுத்திர சாஸ்தாவையும் தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்விலும் நல்லதொரு மாற்றத்தைக் காண்பீர்கள்!

- வி.ஜெய்கிருஷ்ண கோகிலன்
படங்கள்: எல்.இராஜேந்திரன்

மாங்கல்ய வரம் தரும் மஞ்சணை வழிபாடு!

தடாகக் கரையில் முளைத்த பாடகலிங்கம்!

ந்த ஆலயத்தில் குடியிருக்கும் பரிவாரத் தெய்வங்கள் ஒவ்வொருவரும் மிகவும் சாந்நித்தியமானவர்கள். இங்கு அருள்புரியும் ஸ்ரீபிரம்மராட்சியம்மனுக்கு மஞ்சணை சாத்தி வழிபடுவது விசேஷம்.

பொட்டு தாலி அணிவிப்பதுடன் குங்குமம், மஞ்சள் பொடி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ மற்றும் பன்னீர் ஆகியவற்றுடன் விளக்கெண்ணெய் கலந்து திருமஞ்சனம் செய்து ஸ்ரீபிரம்மராட்சியம்மன் நெற்றியில் சாற்றி வழிபட, திருமண தோஷம், புத்திர தோஷம் முதலானவை நீங்கும்; கல்யாணம் தடைப்பட்டோருக்கு, விரைவில் மணமாலை தோள்சேரும்; பிள்ளைச் செல்வம் இல்லாதவருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

இங்கு கனகம்பீரமாகக் காட்சி தரும் சங்கிலிபூதத்தாருக்கு படையல் இடுவது கிடையாதாம். பிள்ளையாரைப் போலவே இவரும் பிரம்மச்சாரி என்கிறார்கள்.  பக்தர்கள் இவரை வணங்கியபிறகே கோயிலுக்குள் செல்கிறார்கள். இவருக்கு வடைமாலை சாற்றி வேண்டிக்கொள்வது விசேஷமான வழிபாடு.  

சித்திரபுத்திர சாஸ்தாவுக்கு வேண்டிக்கொள்பவர்கள், தங்களது வேண்டுதல் பலித்ததும் அவரது சந்நிதிக்கு வந்து சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism