சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

தேசி விநாயகப் பிள்ளையார், கற்பகப் பிள்ளையார், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகர், வரத கணபதி, கற்பகக் களிறு, கணேசன், கணேசபுரேசன், மருதங்கூர் அரசு, மருதங்கூர் ஈசன்... இப்படி, 10 பெயர்கள் கொண்ட பிள்ளையார் ஒருவர் உண்டு. உலகப் புகழ் பெற்ற அந்த அழகு மூர்த்தி யார் தெரியுமா? பிள்ளையார்பட்டி பிள்ளையார்தான் அவர்!

காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்துள்ளது பிள்ளையார்பட்டி. இந்த ஊருக்கு கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் ஆகிய பெயர்களும் உண்டு. இங்கு அருளும் விநாயகரின் திருக்கோலம், அற்புத அமைப்பாகும்.

பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் அருளும் விநாயகர், இங்கே இரண்டு கரங்களுடன், அங்குச-பாசம் இல்லாமல் காட்சி தருகிறார். தொந்தி வயிறு ஆசனத் தில் படியாமல்... அர்த்தபத்மாசனம் போன்று கால்களை மடித்துவைத்து அமர்ந்திருக்கிறார். இடக்கரத்தை கடி ஹஸ்தமாக இடையில் நாட்டி, வலக் கரத்தில் மோதகம் கொண்டு (இதனை சிவலிங்க மூர்த்தி என்று சிற்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்), வலது தந்தம் நீண்டும், இடது தந்தம் குறுகியும் காணப்பட, துதிக்கையை வலம் சுழித்து விசேஷ திருக்கோலம் காட்டுகிறார்!

இந்தத் திருக்கோயில், பல்லவர் காலக் குடைவரை. செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவை நாளடைவில் உருவிழந்து போகக் கூடியவை; கருங்கல் கட்டுமானக்கோயில் களே உறுதியானவை என்பதைப் பல்லவர்கள் உணர்ந்தார்கள். இதனால், இயற்கையிலேயே மலையில் அமைந்த குகைகள் மற்றும் பாறை களைக் குடைந்து,  எண்ணற்ற குடைவரைக் கோயில்களை அமைத்தனர். சித்தன்னவாசல், சிங்கவரம், மகேந்திரவாடி, மாமண்டூர், திரிசிராப்பள்ளி, தளவானூர், மாமல்லபுரம் முதலான தலங்களில், இப்படியான கோயில் களை அமைத்தனர்.

##~##
தென்னாட்டில் முதலில் குடைவரைக் கோயில் அமைத்த பெருமை, விசித்ரசித்தன் எனும் மகேந்திரவர்மனுக்கே (610-640) உரியது. அவன் மகன் மாமல்லன் எனும் முதலாம் நரசிம்மவர்மன், மாமல்லபுரம் சிற்பக் கோயில் களையும், இவன் மகன் ராஜசிம்ம பல்லவன் கட்டிய காஞ்சி கயிலாயநாதர் ஆலயமும் காலத்தால் அழியாத புகழ் பெற்றவை.

வாதாபி வெற்றிக்குப் பிறகு, மிக அமைதி யாகத் திகழ்ந்திருக்கிறது பல்லவர்களது ஆட்சி. அந்தக் காலத்தில் நரசிம்மவர்மன், கோயில் திருப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான். வாதாபி வெற்றியும், சிறுத் தொண்டரும், திருச்செங்காட்டங்குடியும் இவன் உள்ளத்தே பதிந்துவிட்டமையால், அதே ஐதீகத்துடன் (உருவமைப்புடன் கூடிய) குடைவரைக் கோயில்களை உருவாக்கத் துவங்கியிருக்க வேண்டும். அப்படியான குடைவரைக் கோயில்களில் பிள்ளையார்பட்டி கோயிலும் ஒன்றாதல் வேண்டும். எனவே,  642-க்குமேல் 688-க்குள் இந்தக் கோயில் உருவாகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில், வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ள ஆனை முகத்தோனை, 'தேசி விநாயகப் பிள்ளையார்’ என்று குறிப்பிடுகிறது, இந்தக் கோயில் தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டு.

'மருந்தங்குடியான இராஜ நாராயணபுரத்து உடையார் திருவீங்கைச்வரமுடைய நாயனார் கோயிலில் தேசி விநாயகப் பிள்ளையாற்கு திருப்பண்ணிகாரம் பிட்டமுது சேவிக்க தியாக விநோதன் திருமடத்தில் இருக்கும் வாமதேவன்...’ என்று கல்வெட்டு தொடங்குகிறது. தியாக விநோதன் திருமடம் என்பது, கோனேரின்மை கொண்டான் எனும் சிறப்பு பெயர் கொண்ட மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் பெயரால் விளங்கியதாகும். அந்தக் கோயில் தர்மகர்த்தர்களில் ஒருவர் வாமதேவர்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இந்தக் கல்வெட்டில், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விநாயகருக்கு கருப்பட்டிப் பணியாரமும், பிட்டும் நைவேத்தியம் செய்வதற்காக, எந்தவித வரியும் செலுத்த வேண்டாத ஒரு நிலம் கொடுத்த செய்தி காணப்படுகிறது.

கற்பக விநாயகர் கோயிலில், திருவீசர் எனும் ஸ்ரீதிருவீங்கைக்குடி மகாதேவர், ஸ்ரீசிவகாமியம்மனுடன் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு சிறிது வடமேற்கில், ஒரு கற்றளி இருந்திருக்கிறது. அங்கு எழுந்தருளிய ஈஸ்வரனுக்கு ஸ்ரீமருதீசர் என்றும் மருதங்குடி நாயனார் என்றும் பெயர். இந்த இறையனாரும், அம்பிகை ஸ்ரீவாடாமலர் மங்கையுடன் இந்தக் கோயிலிலேயே அருள்பாலிக்கிறார்.

தினமும் விழாக்கோலத்துடன் திகழும் பிள்ளையார்பட்டியில், விநாயக சதுர்த்தியன்று விநாயகருக்கு 18 படி (முக்குறுணி) அரிசியைக் கொண்டு, கொழுக்கட்டை தயாரிக்கிறார்கள். 18 படி அரிசி மாவு, எள், கடலைப்பருப்பு, தேங்காய், பசுநெய், வெல்லம், ஏலக்காய் முதலியன கொண்டு பிரசாதம் தயாரித்து விநாயகருக்குப் படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்தத் தலத்தை அர்ஜுன வனத் திருத்தலம் என்றும் குறிப்பிடுகின்றனர். பிள்ளையார்பட்டி விநாயகர் சிவ பூஜை செய்யும் கோலத்தோடு வீற்றிருப்பதால், இந்தச் சந்நிதியில் மந்திர தீட்சை பெறலாம் என்பதும், மந்த்ரோபதேச பலனை விரைவில் அருள்பவர் ஸ்ரீகற்பக விநாயகர் என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள். நகரத்தார் பராமரிப்பில் அற்புதமாகத் திகழும் இந்த ஆலயம், அனைவரும் தரிசித்து அருள்பெற வேண்டிய திருவிடம்!

- பிள்ளையார் வருவார்...