மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

'ஆதி அம் சோதி உருவை அங்குவைத்து இங்குப் பிறந்த...’ என எம்பெருமானைப் போற்றுவார் நம்மாழ்வார். வைகுண்டத்தில் எத்தகைய கல்யாண குணங்களோடு திகழ்கிறாரோ, அதே திருக் குணங்களோடுதான் திருமாலின் அவதாரங்களும் திகழுமாம்! சரி... இந்த அவதாரங்கள் எதற்காக?

##~##
பாரதம் சொல்கிறது... 'காலச் சக்கரம், உலகச் சக்கரம், யுகச் சக்கரம் எல்லாவற்றையும் சுழற்றுபவர் திருமால்’. அதில் ஒரு குறைவு ஏற்பட்டால்- ஒரு தேக்கம் உருவானால்... அந்தச் சுழற்சியில் தானும் பொருந்தி, அதை செப்பனிடுவதும் அந்தப் பரம்பொருள்தான்! ஆமாம்... இறைவன், பெரியவை எல்லாவற்றைக் காட்டிலும் பெரியவர், உயர்ந்தவை எல்லாவற்றையும்விட உயர்ந்தவர் என்றே வேதமும் விவரிக்கிறது. அவரது ஒவ்வொரு காரியங்களுக்கும் ஒரு காரணம் உண்டு.

பச்சைப் பயிர்களினூடே களை வளர்ந்தால், விவசாயி சும்மா இருப்பானா?

களை பிடுங்க வேண்டாமா? பூமி எனும் பெருநிலத்தில், தனது பிரியத்துக்குரிய பயிர்களுக்கு இடையே சில தீய சக்திகள் களைகளாய் வளர்ந்து நிற்க... அவற்றை அழிக்க, பரசு எனும் ஆயுதம் தாங்கி வந்தது பரம்பொருள். களைகளை வேரறுத்தது. இனி, பயிர்களுக்கு உரம் சேர்க்க வேண்டும்.

அந்தப் பணியைச் செய்ய வேறோர் அவதாரம்... ஸ்ரீராமனாக வந்தது. பண்பால், தியாகத்தால், நற்குணங்களால் நல்லறங்களை சொல்லிக் கொடுத்தது. வீர-தீரத்தால் யுக தர்மத்தை நிலைநாட்டியது. மானிடப் பயிர்கள் செழித்தன; உலகமும் செழித்தது!

பூதத்தாழ்வார் அற்புதமான ஒரு விஷயத்தைச் சொல்வார்...''பூமியைப் பதப்படுத்தி, பள்ளம் வெட்டி, ஏரிகளாய்-குளங்களாய் செப்பனிட்டு வைத்தால்தான், மழை பெய்யும்போது அதன் நீரைத் தேக்கிவைக்க முடியும். அதேபோன்று, நல்லது செய்து, நம் உள்ளக் கேணிகளை செம்மைப்படுத்தினால்தான்... பரம்பொருளின் கருணை மழையை நம்முள் தேக்க முடியும்'' என்பார். அப்படி, நம் மனதைச் செம்மைப்படுத்த, இறைவனின் திருப்புகழைப் பாட வேண்டும்; அவரது திருக் கதையைப் படிக்கவேண்டும்; அவர் குடியிருக்கும் கோயில்களை-தலங்களை தேடித் தேடி தரிசிக்க வேண்டும். நாமும் ஸ்ரீபரசுராமனின் பெருமையைப் போற்றும்  தலங்களைத் தரிசிக்கலாம்...

ஸ்ரீபரசுராமர், தான் வென்ற ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் காசியப முனிவருக்கு தானம் அளித்தார். அதன் பிறகு, தான் அங்கு வசிப்பது முறையல்ல என்று கருதினார். பரசாயுதத்தால் கடல் நீரை விலக்கி, தனக்கென்று நிலப்பகுதியை உருவாக்கினார்.

பரத கண்டத்தின் தெற்கில், மேற்கு கடற் கரைப் பகுதியில் கேரளம் துவங்கி,  கர்நாடக மாநிலம்- கோகர்ணம் வரையிலான இந்த நிலப் பகுதியே, ஸ்ரீபரசுராம பூமி எனப் போற்றப்படுகிறது. ஸ்ரீபரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் அபூர்வம் என்றாலும், பாரதத்தின் பல பகுதிகளில் அவரின் புகழ் போற்றும் திருக் கோயில்கள் நிறைய உண்டு.

திருவல்லம்- திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். 'வல்லம்’ என்றால் 'தலை’ என்று பொருள். இந்தத் தலத்தை ஸ்ரீமந் நாராயணரின் தலைப்பகுதியாக போற்றுவர். அதேபோன்று எம்பெருமானின் உடல் பகுதியாக திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோயிலையும், கால் பகுதியாக திருவனந்தபுரம் அருகிலுள்ள திருப்பாதபுரம் கோயிலையும் ஞானநூல்கள் போற்றுகின்றன!

ஸ்ரீபரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவமும் தோஷமும் நீங்க பல்வேறு தலங்களுக்கும் சென்று வழிபட்டார். அந்த தருணத்தில் சாட்சாத் சிவபெருமானின் ஆலோசனைப்படி இந்தத் தலத்துக்கு வந்து 'கரமனை’ நதியில் நீராடினார். அப்போது, ஆற்றில் கிடைத்த சிவலிங்கத் திருமேனியை இந்தத் திருவிடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதுடன், இங்கேயே தவமும் செய்து தோஷம் நீங்கப் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.

தசாவதாரம் திருத்தலங்கள்!

மனிதனாக அவதரித்த பரம்பொருள், மனிதனுக்குரிய அத்தனை கடமைகளையும் அறங்களையும் குறைவின்றி பூர்த்தி செய்து, நமக்கெல்லாம் வழிகாட்டும்.

ஸ்ரீபரசுராமரும் இந்தத் திருத்தலத்தில் தன் அன்னைக்கு உரிய தர்ப்பணங்களைச் செய்த தாகச் சொல்வர். ஸ்ரீஆதிசங்கரரும் இங்கு தன் தாய் ஆர்யாம்பாளுக்கு தர்ப்பணம் செய்தாராம். பக்தர்களும் ஆடி, தை மற்றும் மஹாளயபட்ச அமாவாசை தினங்களில், 'தட்சிண கயை’ எனப்போற்றப்படும் இந்தத் தலத்துக்கு வந்து, முன்னோர் கடனை நிறைவேற்றுவது விசேஷம் என்கிறார்கள்.

திருவல்லம் ஆலயத்தில் ஸ்ரீபரசுராமரின் திருப்பாத பீடம் உள்ளது. அருகில் பரசு ஆயுதத்துடன் ஸ்ரீபரசுராமரும் காட்சி தருகிறார். அவரின் சீடனான அஸ்வத்தாமாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பீடம் இது என்கிறார்கள். ஸ்ரீபரசுராம ஜயந்தி இங்கே சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. சகல பிணிகளும் தீரவும், நமக்கு உள்ளேயும் வெளியே யும் உள்ள சத்ருக்களால் ஏற்படும் தொல்லைகள் அகன்று மன நிம்மதி பெறவும், நீண்ட ஆயுள் வேண்டியும் இங்கு வந்து பீடத்தையும் ஸ்ரீபரசுராமரையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். ஆயுள் விருத்திக்கான ஹோமங்களும் இந்தக் கோயிலில் விசேஷம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதானம் செய்து நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

அற்புதமான இந்த ஆலயத்தில் தனித்தனிச் சந்நிதிகளில் மும்மூர்த்தியரையும் தரிசிக்கலாம். மேலும், இங்கு அருள்புரியும் வேதவியாசரை தரிசித்தால் மாணவர்கள் கல்வி-கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜலாலாபாத் எனும் இடத்திலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ள ஊர், ஷாஜகான்பூர். பன்னெடுங்காலத்துக்கு முன் இந்த ஊரின் பெயர் என்ன தெரியுமா? பரசுராமபுரி! ஆமாம் ஸ்ரீபரசுராமர் பிறந்தது இங்குதான் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!

ஏரியின் அருகில் அழகுற அமைந்திருக்கும் திருக்கோயிலின் முன் ராம்தால் எனும் திருக்குளமும் உள்ளது. அந்நிய படையெடுப்புகளால் பாதிப்படைந்த இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்று. பலமுறை புனர் நிர்மாணம் கண்டிருக்கிறது இந்த ஆலயம்.

உள்ளே சிவலிங்கமும் அருகிலேயே ஸ்ரீபரசுராமரும் காட்சி தருகின்றனர். மிக மகிமை மிகுந்தவராகவும்  பெருமைக்குரியவராகவும் ஸ்ரீபரசுராமரைப் போற்றும் இந்தப் பகுதி மக்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுவிட்டே எந்தக் காரியத்தையும் துவங்குகிறார்கள். இதன் மூலம் அந்த சுபகாரியங்கள், தங்குதடையின்றி நிகழும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அதேபோல், திருமணமாகும் தம்பதிகள் முதலில் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனின் ஆசியைப் பெறுவது வழக்கமாக உள்ளது. விதவிதமாக காட்சி தரும் நவதுர்கா தேவியின் சிலைகள், இந்தக் கோயிலின் சிறப்பம்சம்!  

கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கத்ரி. ஸ்ரீபரசுராமர் தவம் செய்த தலம் இது. ஆதியில் வாழை வனமாகத் திகழ்ந்ததால், இந்தத் தலத்துக்கு கதலி என்று பெயர். அதுவே பிறகு 'கத்ரி’ என்றானதாகச் சொல்கிறார்கள்.

தீய அரச வம்சங்களை அழித்த பரசுராமர், சிவபெருமானின் அருளுரைப்படி 'கத்ரி’ எனும் இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்ததாகவும் வழிபட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன.  இங்கே ஸ்ரீபரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீகாலபைரவர், அவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் மற்றும் நாகூல கட்டா (நாக பிரதிஷ்டை) ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

ஸ்ரீமஞ்சுநாதர், ஸ்ரீதிரிலோகேஸ்வரர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீகோமுக கணபதி, வேதவியாசர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். 'பஞ்ச தீர்த்தம்’ எனும் வற்றாத நீருற்றும், பாதாள கங்கையும், மலைக்கு மேல் உள்ள பாண்டவர் குகையும் இந்தத் தலத்தில் தரிசிக்கவேண்டியவை. எல்லாவற்றுக்கும் மேலாக இன்றும் கத்ரி திருத்தலத்தில் ஸ்ரீபரசுராமர் வசிப்பதாக நம்பிக்கை!

- அவதாரம் தொடரும்..

தமிழகத்தில்...
பரசுராமேச்வர திருத்தலங்கள்!

க்ஷத்திரியர்களைக் கொன்ற பாவம் தீர, மகேந்திர மலையில் தவம் செய்து மேன்மை பெற்றார் பரசுராமர் என்கின்றன புராணங்கள். தமிழகத்திலும் ஸ்ரீபரசுராமர் வழிபட்ட ஆலயங்கள் உண்டு. அவற்றை ஸ்ரீபரசுராமேச்வரங்கள் எனப் போற்றுகின்றன புராணங்கள்.

திருச்சி-அரியலூருக்கு அருகேயுள்ள பழுவூர் பரசுராமர் பூஜித்த தலமாகும். இங்கே ஸ்ரீபரசுராமர், ஆலமரத்தின் கீழ் அதன் இலைகளைப் பரப்பி, அதன் மீது சயனித்த நிலையில் தவம் செய்து, தன் தாயைக் கொன்ற பாவம் தீரப்பெற்றதாகச் சொல்வர். இங்குள்ள சிவனாரின் திருநாமம் ஆலந்துறையீசர்; அம்பாள்- அருந்தவ நாயகி.

காஞ்சிக்கு அருகில் உள்ளது வேகாமங்கலம். இந்தத் தலத்தில்,  ஸ்ரீபரசுராமர் சிவபெருமானை வழிபட்டு மழுவாயுதம் பெற்று க்ஷத்திரிய வதம் செய்து, தந்தைக்கு நீர்க்கடன் செய்தார் என்கிறது புராணம்.

கும்பகோணம் திரைலோக்கியில் உள்ள சிவாலயமும் ஸ்ரீபரசுராமேச்வரமே என்கின்றன கல்வெட்டுக் குறிப்புகள்!

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருநின்றியூரிலும் ஸ்ரீபரசுராமர் சிவ வழிபாடு செய்ததாக புராணத் தகவல் உண்டு. இங்கே, 300 அந்தணரோடு 360 வேலி நிலத்தை இறைவனுக்கு தாரை வார்த்து கொடுத்ததாக தேவாரப் பாடல்கள் விவரிக்கின்றன..