Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சிம்ம ராசியில் இடம்பிடித்த நட்சத்திரம் மகம். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதி. செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நால்வரும் மக நட்சத்திரத்தின் நான்கு பாதங்களிலும் இடம் பிடித்து அம்சகத்தில் இணைந்தவர்கள்.

'சூரியன் ஆன்மா’ என்கிறது வேதம் (சூர்ய ஆத்மா ஜகத: தஸ்துஷ:ச). ஜோதிடமும் 'ஆன்மகாரகன் சூரியன்’ என்று சொல்லும் (காலாத்மா தினக்ருத்). பரம்பொருளின் மனதில் இருந்து தோன்றியவன் என்று சந்திரனைக் குறிப் பிடுகிறது வேதம் (சந்திரமா மனசோ ஜாத:). மனதுக்குக் காரகன் சந்திரன் என்கிறது ஜோதிடம் (மனஸ்துஹிளகு). செவ்வாய் வெட்பம்; சுக்கிரன் தட்பம்; புதன் பூமி என்று ஜோதிடம் குறிப்பிடும். சுறுசுறுப்பு, செல்வம், பகுத்தறிவு ஆகியவற்றைத் தரவல்லவர்கள் இந்த மூவரும்.

செல்வச் செழிப்பு, திறந்த மனம், தெளிவான சிந்தனை ஆகியவற்றை மகத்தில் பிறந்தவனிடம் காணலாம் என்கிறது ஜோதிடம். ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள் அளவுடன் இணைந்து வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் என்பதால், 'மகத்தில் பிறந்த மங்கையும் மங்காப் புகழோடு திகழ்வாள்’ என்று ஜோதிடம் குறிப்பிடும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை அள்ளித்தரும் ஐவரின் இணைப்பு மகத்துக்கு இருப்பதால், அதற்கு தனிச்சிறப்பு வந்துவிடுகிறது.

மகத்தில் பிறந்தவன் முதலில் கேது தசையை சந்திப்பான். அது, ஏழு வருஷங்கள் நீண்டு இருக்கும். அஸ்வினிக்கும் மூலத்துக்கும் அது பொருந்தும். ராசி சக்கரத்தின் 2-வது 'கண்ட’த்தில் அதாவது துண்டில் முதல் நட்சத்திரம் மகம். கேதுவுக்குப் பிறகு சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய் என்ற தசை வரிசைகள்... மகத்தின் மூன்று நட்சத்திர பாதங்களுக்கும் ராசிக்கும் உடையவர்களாகவே அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பு. பிறந்து ஐம்பது வருட வளர்ச்சியில் (7 20 6 10 7) ஐவரது பங்கு நிகழ்வதால், முதுமை வரையிலும் அவர்களது வாழ்நாள் சிறப்பாகத் திகழ வழி வகுக்கிறது ஜோதிடம். ராகு, குரு, சனி, புதன் - இவர்கள் பலம் குன்றாமல் ராசிச் சக்கரத்தில் உரிய இடத்தைப் பெற்றிருந்தால், முதுமையிலும் இளமையைக் காண்பான் என்கிறது ஜோதிடம் பௌர்ணமியுடன் இணைந்த மகம், மாசிமகமாக பெருமை பெற்றது. மாக ஸ்நானம் புண்ணியத்தைச் சேர்க்கும். மாசி மாதத்தை 'மாக மாதம்’ என்று புராணம் சொல்லும். மாசி மகத்தில் அத்தனை தெய்வ வடிவங்களும் நீராடி மகிழ்வது உண்டு. மாசி மகத்தையும், மஹா மகத்தையும் (மாமாங்கம்), கும்பமேளாவையும் உருவாக்கியது மகம் நட்சத்திரம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அச்வினி, மூலம் - இந்த இரண்டு நட்சத்திரங்களில், நான்கு பாதங் களில் செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நால்வர் இணைந்திருந்தாலும்... ஆன்ம காரகனான சூரியனின் சிம்ம ராசி வழிவந்த இணைப்பு இருப்பதால், மகத்தில் நீராடலுக்குப் பெருமை வந்தது. மகத்தின் தனிச்சிறப்புக்கு ஆன்ம ஸம்பந்தம் அதாவது சூரிய ஸம்பந்தம் காரணமாயிற்று.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

இறப்புக்கு பிறகு சிறப்பு பெற்ற நம் முன்னோர் அதாவது பித்ருக்கள், மகத்தின் தேவதைகள் (மகா நக்ஷத்திரம் பிதரோதேவதா). திவ்ய பித்ருக் களை படைத்த பிறகு, தேவர்களையும் மனிதர் களையும் மற்ற இனங்களையும் படைத்தார் கடவுள் என்கிறது புராணம். தேவர்கள், பித்ருக்களை அண்ணனாகப் பார்ப்பார்கள். தேவர்களின் வழிபாட்டில் முன்னோர் வழிபாடு முன்னமேயே நடந்துவிடும் (நாந்தீச்ராத்தம்). அண்ணனுக்கு முதலிடம் கொடுப்பான் தம்பி என்பது பண்பு மட்டும் அல்ல; சாஸ்திரமும் விரும்புகிறது. முன்னோர் ஆராதனையும் திருமணமும் சேர்ந்து வந்தால், முதலில் ஆராதனையை முடித்துவிட்டு திருமணத்தை ஏற்கச் சொல்லும் சாஸ்திரம் (தஸ்மாத்பித்ருப்ய: பூர்வேத்யு:க்ரியதை). திவ்ய பித்ருக்களுடன் நம் முன்னோரையும் இணைத்து, பித்ருக்கள் என்கிற அந்தஸ்தை அளிக் கிறோம். வசு, ருத்ரன், ஆதித்யன்-என்ற மூவரில், நம் பித்ருக்களை இணைத்து, என்றும் ஆராதனைக்கு உரியவர்களாக அவர்களை உயர்த்துகிறோம்.

'பூத உடலை எரித்தும் எரிக்காமலும் (புதைத்தும்) முன்னோராக மாறியவர்கள், புண்ணிய வசத்தால் தேவ லோகத்தில் இருப்பவர்கள், எங்களது அறிவுக்கு எட்டி யவர்கள் எட்டாதவர்கள் ஆகிய அத்தனை பித்ருக்களும் மக நட்சத்திரத்துடன் இணைந்து, நாங்கள் அளிக்கும் உணவை ஏற்று பெருமைப்படுத்தி அருளுங்கள்’ என்கிற தகவல் வேதத்தில் உண்டு. வழிபாட்டுக்கு உகந்தவர்கள் நம் முன்னோர் என்கிறது வேதம் (நமோவ: பிதரோரஸாய...) 'எவரது ஜீவாணுக்களில் இருந்து நம் உடல் உருப்பெற்றதோ அவரை நினைத்து வழிபடுவது உயர்ந்த பண்பு; கடமை’ என்கிறது சாஸ்திரம் (பித்ருன் உத்திச்ய யத் தத்தம்... பித்ருணாம்மகா:) வம்ச பரம்பரையை உருவாக்கியவர்கள் பித்ருக்கள். குழந்தை பிறந்தால் பித்ருக்கள் மகிழ்வர். குழந்தை செல்வத்துக்கு பித்ருக்களை வழிபடும்படி பரிந்துரைக்கும் சாஸ்திரம்.

ஐந்து தாரைகளை உள்ளடக்கியது மக நட்சத்திரம். உழைப்பில் உயர்வு, செல்வத்தின் செழிப்பு, இன்பத்தின் சுவைப்பு, இறந்த முன் னோர்களில் பக்தி, செயல்பாடுகளில் சுறுசுறுப்பு ஆகிய அனைத்தும் மகத்தில் பிறந்தவனில் காணலாம் என்கிறார் வராஹமிஹிரர்.

மூக்கு நுனியில் கோபம் ஒட்டிக் கொண்டிருக்கும். கோபத்தில் வசம் இழந்து விடுவான். பெற்றோரிடம் பற்று, வேள்வியில் விருப்பம், நண்பர்கள் குழாம் மட்டுமின்றி, எதிரிகள் குழாமும் அவனைச் சுற்றி இருக்கும். விலங்கினங்களில் ரத்தம்... ஆகிய அத்தனையும் மக நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் தென்படும் என்கிறார் பராசரர். ஆசையில் கட்டுண்டவன், சிறந்த செயல்பாடுகளில் ஆர்வம், மனைவிக்கு அடிபணிபவன், தன்மானம் காப்பவன், செல்வச் செழிப்பில் திளைப்பவன்... இந்த விஷயங்களை மகத்தில் பிறந்தவனில் காணலாம் என் கிறது ஜாதக பாரிஜாதம். மகம் முதல் மூன்றரை நாழிகைக்கு கண்டாந்த தோஷம் உண்டு. அதில் பிறந்தவன் தாயை கவனிக்க மாட்டான் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

##~##
'பித்ருகாரகன் சூரியன் மகத்துடன் இணைந்தவன்.  மாத்ருகாரகன் சந்திரன் வியயாதிபதியாக இருப்பதால் அன்னையின் அன்பு குறையும். முதல் பாதத்தில் புத்திரனை இழப்பான். 2-வதில் புத்திர னோடு இணைவான். 3-ல் பல பிணிகளைச் சந்தித்து துயரத்தை ஏற்பான், 4-ல் அறிஞனாகத் திகழ் வான்’ என்கிறார் வராஹமிஹிரர். 'உக்கிரமான நட்சத்திரம் மகம். எதிரிகளை வீழ்த்தவும், பிடிவாத மாக நிலைத்து நின்று காரியத்தை சாதிக்கவும், கைவிஷம், மாரணம், உச்சாடனம் போன்றவற்றில் வெற்றி பெறவும் இந்த நட்சத்திரத் தின் தொடர்பு உதவும் என்கிறார் வராஹமிஹிரர்- ப்ருஹத் ஸம்ஹிதையில்.

போர் புரிதல், போர் தளவாடங்களைத் தயார் செய்தல், எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழித்தல், நகரம், கிராமம் முதலானவற்றை தாக்கி அழித்தல், மணி, மந்திரம், ஓளஷதம், சூதுவாது, பரவஞ்சனம் (பிறரை ஏமாற்றுதல்) போன்றவற்றில் வெற்றி பெற, இந்த நட்சத்திரம் உதவும் என்று பராசரர் கூறுகிறார். ஸாமம், தானம், பேதம், தண்டம் ஆகிய நான்கு உபாயங்களை செயல்படுத்த இது உதவும் என்கிறது ஜோதிடம். எதிரிகள் பலம் மிக்கவர்களாக இருப்பின், சந்தி செய்து அரசைத் தக்கவைத்துக் கொள்ள, கப்பம் கட்டும் பேரரசிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, பலம் பொருந்திய வல்லரசோடு இணைந்து எதிரியை வெல்ல... இந்த நட்சத்திரத் தின் இணைப்பு உதவும் என்கிறார் பராசரர்.

பித்ருக்களை ஆராதனை செய்ய உகந்தது இது (பித்ருப்ய:ஸ்வாஹா மகாப்ய:...). நம் முன்னோர் திவ்ய பித்ருக்களோடு- வசு, ருத்ர, ஆதித்ய ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ் - வாயு போன்ற லேசான பஞ்ச பூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள். 'வம் வஸ¨ப்ய: ரும் ருத்ரேப்ய: அம் ஆதித்யேப்ய: பித்ரும்ப்யோநம:’ என்று சொல்லி வழிபடலாம். மந்திரம் தெரிந்தவர்கள் 'நமோவ: பிதரோ ரஸாய...’ என்ற மந்திரத்தைச் சொல்லி 16 உபசாரங்களை அளித்து வழிபட லாம். மந்திரம் தெரியாதவர்கள் 'தேவதாப்ய: பித்ருப்ய: சமஹா யோகிப்ய ஏவச.நம:ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:’ என்ற செய்யு ளைச் சொல்லி வழிபட வேண்டும். அதுவும் இயலாதவர்கள், காலையில் எழுந்து நீராடியதும், இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளி எடுத்து, 'பித்ரூன் தர்ப்பயாமி’ என்று சொல்லி விட வேண்டும். ஜலத்தை அள்ளி அளித்து வழிபடுவதில் மகிழ்பவர்கள் அவர்கள்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

தகப்பனின் ஜீவாணுக்களின் தொடர்பு, தன்னோடு சேர்த்து 7 தலைமுறைகளில், விகிதாசாரப் படி படிப்படியாகக் குறைந்து ஒட்டிக் கொண்டிருக்கும். அதன் பிறகு ஓய்ந்துவிடும். மூன்று தலைமுறைகளில் முழுமையாக இருக்கும். ஆகையால், மூன்று தலைமுறை பித்ருக்களை நிரந்தர ஆராதனையில் சேர்த்திருக்கிறது தர்மசாஸ்திரம் (நம:பிதா புத்ர: பௌத்ரோ வஷட்ஸவாஹா).

மனதில் பதிந்துவிட்ட, இறந்துபோன தந்தையின் உருவத்தை நினைத்துக்கொண்டு வழிபட லாம். தற்போது தந்தையின் வரைபடத்தை வைத்து சிலர் வழிபடுகிறார்கள். இன்னும் சிலர், போட்டோவை வைத்து வழிபடுகின்றனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை, கிரஹண காலங் கள், மஹாளயபக்ஷம் போன்ற காலங்களில் இறந்தோரை நினைத்து அன்னதானம் செய்வதும், விசேஷமான முன்னோர் வழிபாட்டில் அடங்கும்.

ஸ்னேஹம் என்றால் நட்பு என்று பெயர் உண்டு. பற்றிக்கொள்ளுதல் என்றும் சொல்ல லாம். எள்ளிலிருந்து வந்த ஸ்னேஹம் அதாவது எண்ணெய் ஒட்டிக்கொள்ளும்; விட்டுப்போகாது. பித்ருக்களுடன் ஒட்டுதலை உறுதி செய்ய ஒட்டும் தன்மை பொருந்திய எண்ணெய்க்கு ஆதாரமான எள்ளை சேர்த்துக் கொள்கிறோம், பித்ரு தர்ப்பணத்தில். நீரிலும் ஸ்னேஹம் உண்டு. அதன் அளவு குறைந்து காணப்படும். ஆகையால் ஒட்டுதலை உறுதி செய்யும் ஜலத்தால் பித்ருக்களை வழிபடுகிறோம். தினமும் வழிபட வேண்டியவர்களில் பித்ருக்களும் அடங்குவர். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் மூவரையும் தினமும் வழிபடச் சொல்லும் தர்மசாஸ்திரம்.

பருவகாலங்களை நடைமுறைப்படுத்தி உலகை இயங்கச் செய்பவர்கள் தேவர்கள். கல்வியை அளித்து, சிந்தனை வளத்தைப் பெருக்கி, மனித இனத்தை செழிப்பாக்குபவர்கள் ரிஷிகள்.

அறம் காக்கும் வாரிசுகளை தடை இல்லாமல் அளித்து, உலக இயக்கத்தை நிலைநாட்டுபவர்கள் பித்ருக்கள். அவர்களது வழிபாடு உலக நன்மைக்கு உகந்தது. சூரிய வம்சம், சந்திர வம்சம், யாதவ வம்சம் போன்ற வம்ச பரம்பரை வளர்ந்தோங்க அவர்களது அருள் பயன்பட்டது. இயற்கையாக இவ்வுலகம் அழிவைத் தொடும் வரை உலக இயக்கத்தை முறைப்படுத்த, அறத்தைக் காக்க, நல்ல குடிமகன்களைத் தோற்றுவிக்க அவர்களது அருள் வேண்டும். எனவே, மறக்காமல் தினமும் அவர்களை வழிபட வேண்டும்.

- வழிபடுவோம்