சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

எங்களின் குலதெய்வம் ஸ்ரீவீரபத்திரர். இந்த ஸ்வாமி சிவபெருமானின் அம்சமா அல்லது அவதாரமா? ஸ்ரீவீரபத்திரருக்கு உகந்த விசேஷ தினங்கள் என்னென்ன?

- சொ.சரஸ்வதி, சென்னை-44

##~##
குலதெய்வத்திடம், அவர் அம்சமா... அவதாரமா என்ற சிந்தனை எழக்கூடாது. அவர் பரம்பொருள் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். அவரின் தரத்தை அலசி ஆராய நினைத்தால், இன்னும் அவர் மீது பக்தி பற்றிக்கொள்ளவில்லை என்றே பொருள். இறையுருவங்கள் பலவாறாக இருந்தாலும், அத்தனையும் பரம்பொருளின் வடிவங்களே என்ற எண்ணம் மேலோங்கி இருந்தால் மட்டுமே வழிபாடு சிறக்கும்.

நமது கற்பனையில் தோன்றிய இறையுருவங்களில் ஏற்றத் தாழ்வைக் காணும் சிந்தனை வளர்ந்தால் பக்தி விடுபட்டு போகும்; விரும்பியது கிடைக்காது.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சட்டி, பானை, கூஜா, குவளை, அகல், அடுப்பு போன்ற மண் பாண்டங்கள் ஏராளம். அத்தனையும் மண்ணால் ஆனது. வடிவம்தான் மாறியிருக்கிறது. பல வடிவங்களில் அணிகலன்கள் உண்டு. அவை அத்தனையும் தங்கத்தால் ஆனவை. அதை அடமானம் வைத்தாலோ, விலைக்குக் கொடுத்தாலோ தங்கம் என்ற எண்ணத்துடன்தான் ஏற்பார்கள்; அணிகலன் என்ற நோக்கில் பார்க்கமாட்டார்கள். வணங்கும் இறைவனை பரம்பொருளாக எண்ணி வணங்குங்கள். குலதெய்வம் பரம் பொருள் என்று நினைத்தால் சந்தேகம் எழாது. பரமேஸ்வரரும் வீரபத்திரரும் பரம்பொருளும் ஒன்று. அம்சமாக இருந்தாலும் அவதாரமாக இருந்தாலும் அவர் பரம்பொருள், அவர் குலதெய்வம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று, தினமும் ஆராதனையை ஏற்கும் தெய்வம், விசேஷ வழிபாட்டை எதிர்பார்க்காது. நமது பக்தியை வெளிப்படுத்த விசேஷ ஆராதனை என்று வைத்திருக்கிறோம்.

ஆகையால், குலதெய்வத்தை பரம்பொருளாகப் பார்த்து வணங்க வேண்டும். பெருமாள், ஈசன் என்று அவர்களில் உயர்வு தாழ்வு பார்க்கும் எண்ணம் உதித்தால், நமது சிந்தனை திசை திரும்பி, பிரியமான தெய்வத்திடம் நம்பிக்கை குறைந்து, பிரியமில்லாத தெய்வத்திடம் வெறுப்பு வளர்ந்து, மனம் மாசுபட்டு, பக்தியை வெளியே தள்ளிவிடும். விரும்பிய பொருளில் பற்றுதல் நிலைக்க, விரும்பாத பொருளைப் பற்றிய சிந்தனையை வளர்க்கக் கூடாது!

நான், பணி ஓய்வு பெற்றவன். பிரபலமான கோயில்களை மட்டுமின்றி, சிதிலம் அடைந்து கிடக்கும் ஆலயங்களையும் அவ்வப்போது தரிசித்து வருவது எனது வழக்கம். ஆனால், இடிந்து கிடக்கும் கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவதால், வாழ்வில் வளம் குன்றும் என்கிறார்கள் நண்பர்கள் சிலர். இது சரியா?

- ஜி.கிருஷ்ணரத்னம், சென்னை-61

ஆன்மாவுடன் இணைந்த மனம், தன்னுடைய எண்ணங்களை செயல்படுத்த, புலன்களின் வாயிலாக வெளியுலகுடன் இணைந்துவிடும். அப்போது தன்னுடன் இணைந்த ஆன்மாவை  மறந்துவிடும். அப்படி மறந்துபோன ஆன்மாவை (கடவுளை)  ஞாபகப்படுத்த... வெளியுலகக் கோயில்களில் உறைந்திருக்கும் பரம்பொருளைத் தரிசித்து வழிபட்டு, அவரை மனதில் இருத்திக் கொள்வதை பழக்கப்படுத்துதல் அவசியம். இதன் மூலம், துன்பங்கள் நிறைந்த வெளியுலகம் பொய்யானது, உள்ளே உறைந்திருக்கும் ஆன்மாவே பரமாத்மா- கடவுள் என்கிற எண்ணம் மேலோங்கி, அறிவு பெற்று, துயரம் முற்றிலும் அகன்று ஆனந்தத்தில் மூழ்கிவிடுவான்.

பேரானந்தத்தை அடைவதே அவன் (மனிதனின்) இலக்கு. அந்த இலக்கை அடைய வழிகாட்டும் செயல், கோயில்களுக்குச் செல்லுதல். ஆக, கோயிலுக்குச் செல்வதால் வாழ்வில் வளம் குன்றும், பல இடையூறுகள் நேரும் என்று கணிப்பதெல்லாம் அறியாமையே. அறியாமையை அகற்றும் அருமருந்து ஈசன் வழிபாடு. அதை, 'அறியாமையை அளிப்பது’ எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

நண்பர்களின் கருத்து தங்களின் சிந்தனையைத் தொட்டு சந்தேகத்தை எழுப்பியிருப்பது, தங்களது மனம் இன்னும் முழுமையாக இறைப்பணியில் இணையவில்லை என்பதற்கு அடையாளம். ஆன்ம சோதனை செய்துகொண்டு, இறைப்பணியில் ஒன்றிவிடுங்கள். அப்போது, விபரீதமான விளக்கங்கள் காதில் விழுந்தாலும் மனம் ஏற்காது!

நான் பிரம்மசாரி. பெற்றோர் இல்லை. கடந்த மாதம் சித்தி (சித்தப்பாவின் மனைவி) மறைந்துவிட்டார். 10-ஆம் நாளன்று குழி தர்ப்பணம் செய்தேன். பிரம்மசாரி ஆதலால், செய்தது தவறு என்கிறார்களே சிலர், அப்படியா?

அதேபோன்று, பிரம்மசாரிகள் மலைக் கோயில்களுக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள் சிலர். அது சரியா?

- வி.ராகவன்,  கும்பகோணம்

வேதம் பயிலும் மாணவனுக்கு (பிரம்மசாரிக்கு) தீட்டில் இருந்து விலக்கு அளித்தது தர்மசாஸ்திரம். பயிலும் வேளையில் இடையூறு நிகழ்வதைத் தவிர்க்கவும், படிப்பிலிருந்து சிந்தனை நழுவாமல் இருப்பதற்கும் விலக்கு பயன்பட்டது.

பிரம்ம என்றால் வேதம்; 'சாரி’ என்றால் அதில் சொன்ன நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவன்; வேதம் பயில்பவன் என்று பொருள். தற்போது, கல்யாணம் ஆகாதவன், 'பிரம்மசாரி’ என அழைக்கப்படுகிறான். தற்காலச் சூழலில் வேதம் படிக்கும் ஓரிஜினல் பிரம்மசாரிகளை விரல் விட்டு எண்ணலாம். வேதம் படிக்காத பிரம்மசாரிகளே ஏராளம். தீட்டின் விதிவிலக்கை ஏற்று உரிமை கொண்டாட, பிரம்மசாரியாகக் காட்டிக் கொள்வார்கள். முதிர்ந்த வயதிலும் கல்யாணம் ஆகாமல் இருந்தால், தீட்டின் விதிவிலக்கை அனுபவிப்பார்கள். 'சீனியர் ஸிட்டிசன்’ சலுகைகளும் அவருக்கு உண்டு. ஏனோ தெரியவில்லை... அறம் தெரிந்த அறிஞர்களும் முதிர்ந்த பிரம்ம சாரிக்கு சலுகைகளை ஏற்கிறார்கள்!

கல்யாணம் செய்துகொள்ளாமல் பிரம்மசர்ய ஆச்ரமத்தில் இருப்பவர்கள் உண்டு. அவர்களுக்கு நைஷ்டிக ப்ரம்மசாரி என்று பொருள். அவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.

வேதமும் பயிலாமல், கல்யாணமும் பண்ணிக் கொள்ளாமல் இருக்கும் மாணவனுக்கு விதிவிலக்கை அனுபவிக்கும் உரிமை வழங்கப்பட்டிருக் கிறது. பல தலைமுறைகளாக, கல்யாண மாகாத பிரம்மசாரிக்கு தீட்டு விலக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது சம்பிரதாயமாக மாறிவிட்டது. அந்த நோக்கில் தீட்டு இல்லாதபோது, குழி   தர்ப்பணமும் தலைதூக்காது.

இறையுருவங்கள் வீற்றிருக்கும் கோயில்கள் எல்லாம் ஒன்றுதான். மலைக் கோயில், தரைக் கோயில் என்கிற பாகுபாடு வழிபாட்டில் வராது. பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் படைத்தவனை வழிபடும் உரிமை இருக்கும்போது, பிரம்மசாரிக்கு தனி விதிவிலக்கு வராது. சந்தேகம் எழாத இடத்திலும் சந்தேகம் முளைக்கும் அளவுக்கு, நமது சிந்தனை தரம் தாழ்ந்துவிட்டது நமது துரதிர்ஷ்டமே.

சுமங்கலிகள் நெற்றியிலும், அதற்கு நேர் வகிட்டிலும் குங்குமம் தரிப்பது வழக்கம். என் தோழி ஒருத்தி, நேர் வகிடு எடுக்காமல் சற்று தள்ளியே (கோணலாக) வகிடு எடுப்பாள். அதற்கு நேராகவே குங்குமமும் இட்டுக்கொள்கிறாள். இது சரியா?

- பி.பார்கவி, கோவை-2

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

'நேர் வகிடில் குங்குமம் தரிப்பது சரி’ என்று தங்கள் மனம் எண்ணுகிறது. தோழியின் செயல்பாடு சரியில்லை என்றும் எண்ணுகிறது. இந்த நிலையில் கேள்வி எழுப்புவது முறையில்லை. நேர் வகிடு பண்பின் அடையாளம். ஸீமந்தத்தில் மனைவியின் கூந்தலை சரி செய்து நேர் வகிடு எடுக்கச் சொல்லும் தர்மசாஸ்திரம். 'ஸீமந்தம்’ என்ற சொல் நேர் வகிடைக் குறிக்கும்.

அம்பாளின் நேர் வகிடைப் புகழ்கிறார் ஆதிசங்கரர்.  (வஹந்தீ ஸிந்தூரம்). கச்யபர் அதிதிக்கு நேர் வகிடு எடுத்து பெருமைப் படுத்தினார் என்கிறது வேதம் (யத்ஸீமந்தம்கங்கத). அன்றைய சமுதாயம் அதை அழகாகவும் பண்பாகவும் பார்த்தது. நேர் வகிடு சுமங்கலிக்கு அழகு என்றது தர்மசாஸ்திரம்.

தோழியின் செயல்பாட்டை சரியாக்க தடயங்கள் தேடாதீர்கள். நாம் விரும்பிய செயல்பாடுகளுக்கெல்லாம் தர்மசாஸ்திரத்தின் சான்றிதழை எதிர்பார்க்காதீர்கள்.

தற்காலத்தில், குங்குமம் தரிக்க வேண்டிய இடத்தில் காகிதம் (ஸ்டிக்கர் பொட்டு) ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாமல் பளிச்சென்று நெற்றியை வைத்துக்கொண்டிருப் பவர்களும் உண்டு. அலங்காரத்தின் தரம், அதன் சிந்தனை மாறிவிட்டது. மத அடையாளமாக நினைத்து அதை ஒதுக்கியவர்களும் இருக்கிறார்கள். தான்தோன்றியாக இருக்க நினைப்பவர்களை விமர்சிக்கக்கூடாது. பண்பாடு, கலாசாரத்தை கசப்பாக நினைப்பவர்களுக்கு ஊட்டக்கூடாது!

குறிப்பிட்ட ஒரு திதியானது முதல் நாள் மதியம் துவங்கி மறுநாள் மதியம் வரை நீடிக்கும் நிலையில்... சிராத்தம் செய்ய வேண்டி வந்தால், அந்தத் திதி மதியம் துவங்கிய பிறகு செய்ய வேண்டுமா? அல்லது, குறிப்பிட்ட நாளை கணக்கில் கொண்டு சிராத்தத்தை காலையிலேயே நிறைவேற்றுவதா?

- ரா.பாஸ்கரன், பெங்களூரு

மதியம் சிராத்தம் செய்யும் வேளை. காலையில் சிராத்தம் செய்வது சிறப்பல்ல. பகல் 18 நாழிகையைத் தாண்டிய பிறகே, சிராத்த காலம் வரும். பிற்பகல் அதன் எல்லை.

தற்காலச் சூழலில் வயிற்றுப் பிழைப்புக்காக அலுவல்களில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், சிராத்தத்தை காலையில் நிகழ்த்தவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. நம் மனமும் அலுவல்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.

அந்த திதி வரும் வேளையில் சிராத்தம் துவங்க வேண்டும் என்று இல்லை. அது வருவதற்கு முன்பே துவங்கலாம்; அதன் புண்ணியகாலம் துவங்கிவிடும்.

மதியம் வரை சதுர்த்தசி இருந்து பிறகு அமாவாசை வரும் நாளில், காலையிலேயே தர்ப்பணம் செய்துவிட்டு அலுவலகம் செல்வது உண்டு, அந்த நடைமுறையை இங்கும் தொடரலாம். விடுமுறை நாட்களில் சிராத்தம் வந்தால், சரியான வேளையில் அதை நடைமுறைப்படுத்துங்கள். அகாலத்தில் செய்தாலும் அதன் பழக்கம் அகலாமல் இருக்க, காலையில் செய்யுங்கள்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்