சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது! இந்தத் தெலுங்குப் பாட்டுக்கு அர்த்தம் தெரியலை. இது தெலுங்கான்னும் தெரியலை'' என்று நண்பர் வாய்விட்டுச் சத்தமாகச் சொல்ல, எங்கள் இலக்கிய மகாசபையே நிமிர்ந்து பார்த்தது. மதுரையில் நூற்றாண்டுகாலப் பழைமைகளில் ஒன்றான விக்டோரியா எட்வர்டு மன்றம். இங்குதான் எங்கள் இலக்கிய மகாசபை மாலைப் பொழுதில் திட்டமிடப்படாமல் எப்போதேனும் கூடும்.

'தாதி தூது’ என்ற பாடலைச் சொல்லி நண்பர் தொடங்கி வைக்க, 'ஹிந்தி மெட்டுல இப்படியரு பாட்டை, நான் சிக்டீஸ்ல கேட்டிருக்கேன்' என்றார் ஒரு எழுபது. 'நோ நோ... எல்விஸ் பிரெஸ்லியி னுடைய டான்ஸ் மெட்டுன்னு நெனைக்கிறேன்' என்று அடுத்தவர் அபிப்ராயப்பட்டார். உடனே நான், 'இது கவிகாளமேகம் எழுதின பழந் தமிழ்ப்பாட்டு' என்று சொல்ல... எல்லோரும் ஆச்சரியப் பட்டார்கள்.

##~##
''சரி, முதல்ல பாட்டைச் சொல்றேன், கேளுங்க'' என்று முழுப் பாட்டையும் சொல்லிவிட்டு விளக்கத்துக்கு வந்தேன். 'தனி மனிதர்களுடைய காதலாக இருந்தாலும், நாடுகளுக்கான கூட்டுறவு மற்றும் போராக இருந்தாலும் யாராவது ஒருத்தரைத் தூதுவரா அனுப்புறது காலங்காலமாக இருந்துவருகிற வழக்கம்...' என்று சொல்ல... 'யூ மீன் அம்பாஸடர்?' என்று ஓர் ஆங்கிலப் பேராசிரியர் கேட்டார்.

'ஆமாம். தமிழ் இலக்கியத்துல முதல்பெண் அம்பாஸடர்,  (தூதுவர்) ஒளவை. அதியமானிடத்திலிருந்து தொண்டைமான் என்ற வேந்தனிடம் போர்த் தூதுவராகச் சென்றாள். ராமாயண அனுமன், மகாபாரத கண்ணன், கந்தபுராணத்தில் வீரபாகு இவர்களெல்லாம் போர்த் தூதராகச் சென்றவர்கள். ஆனால் காதலுக்கு தென்றல், கிளி, அன்னம், மயில், மேகம் போன்ற வற்றைத் தூதாக அனுப்புவார்கள். திருமாலிருஞ்சோலை சுந்தரராஜபெருமாளிடத்திலே (அழகர்பெருமான்) கிளியைத் தூதனுப்பினாள் ஒரு பெண். தமிழ் மொழியையே சிவனாரி டம் தமிழ் விடு தூதாக அனுப்பினார் ஒரு புலவர்' என்று நான் சொல்லிக்கொண்டு போக, 'ஐயா! முதல்ல இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்லுங்க... ' என்று ஆதங்கப்பட்டார் மர்மப்படங்களை விடாமல் பார்க்கும் மதன் மோகன்.

'சார் கேளுங்க... தாதி தூதோ தீது - அதாவது தன் வயதையத்த தோழியைத் தன் காதலனிடத்திலே தூதாக அனுப்பக்கூடாது. தத்தை தூது ஓதாது - தத்தையாகிய கிளியைத் தூது அனுப்பினால் அது சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கும்.

தூதியே- (அதனால்) என் மனமே!, தூதுஉன் -  தூதானது, ஒத்து - பொருந்திவரும், தாது -ஒத்த தங்கத்தைப் போன்ற, துத்தி -  உடம்பில் படரும் வெண்மையான தேமல், தத்தாதே -  படராதவண்ணம், துதித்து - அவரை (காதலரை) பாராட்டி, தேத்து-அவர் மனத்தைத் தேற்றி, இது இந்தச் செய்தியை, தித்தித்தது --  என் மனத்துக்கு இனிமை தரும்படி, ஓதி- அவரிடம் சொல்லி, திதி - என்னைக் காப்பாற்றுவாயாக' என்று நான் சொல்லி முடித்தேன்.

இதோ, அந்த முழுப் பாட்டு...

'தாதி தூதோ தீது தத்தை தூதோ தாது

தூதி தூதொத்திதத் தூததே தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத் தேத்தொத்தீது

தித்தித்ததோ தித்திதி...’

'தாதீதூதீ..’ என்று அதைப் பாடமுயன்று தடுமாறிய  அங்கிருந்த சாஃப்ட்வேர் இளைஞர், தன் செல்போனை எடுத்துக்காட்டி, 'உங்க காலத்துல கவிதை, சொல்லுக்குள்ளே... இப்ப இதெல்லாம் எங்க செல்லுக்குள்ளே! எங்களுக்குத் தூது எங்கள் விரல்கள்தான். அதனால இந்த யுகத்துக்கு விரல்விடு தூதுதான் லாயக்கு'' என்று சொல்லிவிட்டு, எஸ்.எம்.எஸ். அடிக்கத் தொடங்கிவிட்டார்.