சதுரகிரி மகாலிங்கம் கோயில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோவிலுக்கு செல்லமுடியாமல் நடக்க முடியாத பக்தர் ஒருவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய நாட்களில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயில் பகுதியில் செயல்பட்டு வந்த அன்னதானக் கூடத்தை மூட இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனால் பக்தர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

அன்னதான கூடங்கள் இருந்தபோது கீழே இருந்து அரிசி, காய்கறிகள் போன்ற சமையலுக்கு தேவையான பொருட்களை சுமைப்பணியாளர்கள் கொண்டு சென்று வந்தனர். ஆனால் தற்போது அன்னதான கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோயிலுக்கான பூஜை பொருட்களையும், கடை உரிமையாளர்களும் விற்பனைக்கு தேவையான பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அறநிலையத் துறை அதிகாரிகளோ கோயிலில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் தோப்பூரை சேர்ந்த நடக்க முடியாத பக்தர் ஒருவர் டோலி மூலம் கோயிலுக்கு செல்வதற்காக சுமைப் பணியாளர்களிடம் பதிவு செய்திருந்தார். அதன்படி, மலையேறுவதற்காக குடும்பத்துடன் நேற்று தாணிப்பாறை வந்தார். ஆனால் கடந்த 3 நாட்களாக சுமைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருவதால் அவரை கோயிலுக்கு தூக்கிச் செல்ல முடியாது என தெரிவித்தனர். எனவே நடக்க முடியாத மகனை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் கோயில் அடிவாரம் வரை சென்றனர்.

எப்படியாவது சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் மகனை சிரமப்பட்டுத் தான் கோயிலுக்கு அழைத்து வந்தோம். ஆனால் கோயிலுக்கு சென்று சாமியை வழிபடும் பாக்கியம் அவருக்கு கிடைக்கவில்லை என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.