சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

நாகநாதருக்கு நாகலிங்கப் பூ!

நாகநாதருக்கு நாகலிங்கப் பூ!

நாகநாதருக்கு நாகலிங்கப் பூ!
##~##
நா
கை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்களாச்சேரி. குரா மரங்கள் அடர்ந்த வனமாகத் திகழ்ந்ததால், திருக்குராச்சேரி என அழைக்கப்பட்டு, பின்னாளில் திருக்களாச்சேரி என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் - ஸ்ரீநாகநாத ஸ்வாமி. ராகு - கேது தோஷங்களைப் போக்கும் அற்புதத் தலம். இங்கே அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசிவகாமசுந்தரி. சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த, புராதனமான திருக்கோயில் இது! கோயிலின் ஸ்தல விருட்சம் குரா மரம்.

ஆடிப்பூர நன்னாளில், அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதனைக் காண, நாகை மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்களாம்!  

நாகநாதருக்கு நாகலிங்கப் பூ!

பிரதோஷ காலம் மற்றும் ராகு கால வேளைகளில் இங்கு வந்து ஸ்ரீநாகநாத ஸ்வாமியை வணங்கித் தொழுதால், கால சர்ப்ப தோஷம் முதலான சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீகஜலக்ஷ்மி, ஸ்ரீபிரம்மா மற்றும் சூரிய பகவான் ஆகியோரும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஐப்பசி அன்னாபிஷேகம், தைப்பூசம், திருவாதிரை என வருடத்தில் பல விசேஷங்கள் சிறப்புற நடைபெறும். ஸ்ரீநாகநாத ஸ்வாமியை மகா சிவராத்திரி நாளில் தரிசித்தால், தீராத நோயும் தீரும். சகல தோஷங்களும் விலகும் என்று போற்றுகின்றனர், பக்தர்கள்!

திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற இந்தத் திருத்தலத்தில், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால பூஜை சிறப்புற நடைபெறுகிறது. கோயிலில், நாகர் புற்றும் உள்ளது. ராகு - கேது தோஷம் உள்ளவர்கள், இங்கே புற்றுக்குப் பால் வார்த்து, ஸ்ரீநாக நாதருக்கு நாகலிங்கப்பூ, வில்வம் சார்த்தி, தீபமேற்றி வழிபடுவது சிறப்பு என்கிறார் கோயில் அர்ச்சகர் வெங்கட்ரமணி. மகா சிவராத்திரி நாளில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி, சந்தனம், திரவியப் பொடி, அரிசி மாவு என ஸ்ரீநாகநாத ஸ்வாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.  

நாகநாதருக்கு நாகலிங்கப் பூ!

சிவராத்திரி அன்று மாலை 6 மணிக்கு ஒரு கால பூஜையும், இரவு 8 மணிக்கு அடுத்த பூஜையும், இரவு 11 மணிக்கு மூன்றாவது பூஜையும், அதிகாலை 3 மணிக்கு நிறைவு பூஜையுமாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும்!

ராகு - கேது தோஷம் உள்ளவர்கள், ஸ்தல விருட்சமான குரா மரத்தில், மஞ்சள் கலந்து நூலைக் கட்டி, ஸ்ரீநாகநாத ஸ்வாமியை வணங்குகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொள்கின்றனர். சிவராத்திரி நன்னாளில், இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால்... நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

மகா சிவராத்திரி நாளில், ஸ்ரீநாகநாத ஸ்வாமிக்கு நாகலிங்கப் பூ சார்த்தி வழிபடுங்கள்; வளம் பெறுங்கள்!  

- மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா