Published:Updated:

``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் " - ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு!

``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் " -  ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு!
``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் " - ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு!

``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் " - ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு!

`நாள் செய்யாததைக் கோள் செய்யும்; கோள் செய்யாததைக் குலதெய்வம் செய்யும்' என்பது சொலவடை. மக்கள் இனக்குழுச் சமூகமாக வாழ்ந்தபோது, மக்களையும் ஆநிரைகளையும் காக்கும்பொருட்டு நிகழ்ந்த போரில் உயிர் நீத்த வீரர்களை நடுகல் நட்டுக் குலதெய்வங்களாக வழிபடும் வழக்கம் தோன்றியது. இதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. 

'ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென,

கல்லே பரவின் அல்லது,

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே...'

- (புறம் : 335, மாங்குடி மருதனார்) என்கிறது புறநானூற்றுப் பாடல்.

``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் " -  ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு!

`தம் குடியைக் காக்க, பகைவர்களுடன் போரிட்டு, யானையை வென்று, போர்க்களத்தில் வீழ்ந்த மாவீரர்களுக்காக நட்ட நடுகல்லைத்தான் தொழுவோமே அன்றி, நெல்லும் பூவும் சொரிந்து வேறு கடவுள்களை வழிபட மாட்டோம்’ என்பதே இப்பாடலின் பொருள். இத்தகைய நடுகல் வழிபாடுகள் இன்றுவரைத் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்துவருகிறது. அத்தகையதொரு வழிபாடே `கொட்டக்குடி கொம்புதூக்கி அய்யனார்' வழிபாடு . 

போடியிலிருந்து குரங்கணி செல்லும் சாலையில் இருபது நிமிடங்கள் பயணித்தால், கொட்டக்குடி என்னும் கிராமத்தில் உள்ள கொம்புதூக்கி அய்யனார் கோயிலை அடையலாம். மலைச்சரிவில் ஊர்ந்து செல்லும் சாலைக்கும், பள்ளத்தாக்கில் உருண்டோடும் கொட்டக்குடி காட்டாற்றுக்கும் நடுவே அமைந்திருக்கிறது இந்தக் கோயில். அடர்ந்த மரங்களை ஆடையாகக் கொண்டிருக்கும் எழில்மிகு பச்சைக்கானல் மலையடிவாரம்; அங்கு எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் கொட்டக்குடி ஆறு. கோடைக்காலத்தில் கூடக் கோயிலிலிருந்து அந்த ஆற்றின் சலசலக்கும் சத்தத்தைக் கேட்கமுடியும். இலவம்பஞ்சு, புங்கை, மாமரம் ஆகிய மரங்கள் நிறைந்த இந்த மலையடிவாரத்தில் இச்சிலி மற்றும் ஆலமரத்தின் அடியில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். கோயிலுக்குள் நுழையும் முன்னரே கோயிலில் பலிகொடுக்கப்பட்ட ஆடு மற்றும் கோழியின் ரத்த வாடையை உணரமுடியும். கோயிலுக்கு முன்பாக ஆலமரத்தடி பொந்தில் அமர்ந்திருக்கிறார் `கருதலைமுடையார்.’ கையில் வாளுடன் ஆவேசக்கோலத்தில் காவல் காக்க மேடைமீது வீரமுடன் நிற்கிறார். 

``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் " -  ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு!

கருதலைமுடையாரை வணங்கிக் கடந்து சென்றால் சங்கிலி கருப்பசாமி, வன பேச்சியம்மன், நாகம்மாள் ஆகியோர் மரத்தடியில் அமர்ந்து அருள்புரிகிறார்கள். அங்கிருக்கும், கோயில் கருவறைக்குள் முண்டாசு கட்டி, முறுக்கு மீசையுடன் சாந்தமான கோலத்தில் கொம்புதூக்கி அய்யனார் காட்சியளிக்கிறார்.  

ஆடும் கோழிகளும் பலியிடப்படும் இடத்தில் அமர்ந்திருந்தாலும், மூலவரான கொம்புதூக்கி அய்யனார் சுத்த சைவம். அதாவது, இவருக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் பழங்கள் மட்டுமே படைக்கப்படுகின்றன. கோயிலில் வெட்டப்படும் ஆடு மற்றும் கோழி ஆகிய அனைத்தும் மரத்தடியில் அருள்பாலிக்கும் கருதலைமுடையாருக்குத்தான். 

இது, இந்தக் கிராம மக்களின் மூல அய்யனார் கோயில் இல்லை. பிடிமண் கொண்டுவந்து, கட்டியெழுப்பி வழிபடப்படும் கோயில். சமவெளியில் வழிபடப்பட்டுக்கொண்டிருந்த அய்யனார் மலைச் சரிவுக்கு வந்த நிகழ்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று கூறுகிறார்கள் மக்கள்.  

மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே இருக்கிறது கொட்டக்குடி எனும் கிராமம். அப்போது, எதிரிகள் திடீர், திடீரென்று படையெடுத்து வந்து கொட்டக்குடி கிராமப் பெண்களைக் கவர்ந்து செல்வர். இந்தப் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமாக ஊரில் இருந்த பெரும்பாலான மக்கள் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கினார்கள். கீரையனூர், மதுரை, செலமலை என்று வெவ்வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள். எஞ்சிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்காலத்தில் எந்தவித பிரச்னையும் வரக் கூடாது என்று மலைமேல் மறைந்து வாழ முடிவெடுத்தார்கள். போடியில் குரங்கணிக்கு அருகில் பச்சைக்கானல் மலைச்சரிவில் அவர்கள் அமைத்துக்கொண்ட புதிய கிராமம்தான் தற்போதைய கொட்டக்குடி. 

``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் " -  ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு!

சொந்த ஊரிலிருந்து புறப்பட்ட அந்த மக்களின் தலைவன், தங்களுக்குக் குலதெய்வத்தின் தொடர்பு விட்டுவிடக் கூடாதென்று, அவர்கள் வழிபட்ட அய்யனார் கோயிலிலிருந்து பிடிமண்ணை எடுத்துக் கொண்டுவந்துவிட்டார். 

ஒரு கையில் பாதுகாப்புக்காகக் கொம்பையும், மறுகையில் அய்யனார் கோயில் பிடிமண்ணையும் எடுத்துக்கொண்டு வந்து இங்கு அய்யனாருக்குக் கோயில் எடுத்தார். அதனால் அவருக்கு `கொம்புதூக்கி அய்யனார்’ என்று பெயர் சூட்டி வழிபட்டனர் மக்கள். இடம்பெயர்ந்துவிட்ட சூழலிலும், விரோதிகள் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர். ஆற்றின் கரையில் அய்யனார் பிடிமண்ணை நிறுவி வழிபட்ட ஊர்த் தலைவன், மக்கள் அனைவரையும் மலைமீது பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டுக் காவல் இருக்கத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்தபடியே எதிரிகள் அவர்களின் பாதையைக் கண்டுபிடித்து வந்து சேர்ந்திருந்தார்கள். காவல் தலைவருக்கும் அவரது எதிரிகளுக்கும் ஆற்றின் கரையோரம் பெரும்போர் நடந்தது. போரின் காரணமாக, சில நாள்கள் ஆறு ரத்தமாக ஓடியது. எதிரிகள் அனைவரையும் கொன்றழித்துவிட்டுத் தன் கிராம மக்களைக் காத்த அந்தக் காவல் தலைவனும் இறந்துபோனார். மக்களைக் காக்க தெய்வமாகிப்போன அந்தக் காவல் தலைவனை ஊர் மக்கள் வழிபடத் தொடங்கினார்கள். அவர்தான் `கருதலைமுடையார்'.

``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் " -  ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு!

கொட்டைக்குடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் மண்ணாடியார் ராமசாமி கொம்புதூக்கி அய்யனார் கோயில் வழிபாடு குறித்து பேசினார். 

``ஒவ்வொரு வருசமும் சித்திரை மாதம், முதல் வியாழக்கிழமையன்னைக்குதான் ஊர் சனங்க எல்லாரும் சேர்ந்து கோயில்ல கொம்புதூக்கி அய்யனாருக்கு சர்க்கரைப் பொங்கல் வச்சும், கருதலைமுடையாருக்குக் கிடாவெட்டியும் வழிபடுவோம். எங்க கோயில் கொம்புதூக்கி அய்யனார் சுத்த சைவம். அவருக்கு சர்க்கரைப் பொங்கல் மட்டும்தான் படைப்போம். ஆனா, கோயில்ல இருக்கற கருதலைமுடையாருக்குப் பலி கொடுக்காமப் படையல் போடமாட்டோம். 

நாங்க வயல்ல முதல் உழவு செய்றதுக்கு முன்னாடி இவரத்தான் வேண்டிக்கிவோம். நல்லபடியா  வெளஞ்சதுக்கு அப்பறமா, முதல் கதிர உருவிக்கிட்டு போய் பொங்கல் வைப்போம். பொங்கல் வைக்கறப்போ நெல்லாதான் பொங்குவோம். கொதிக்கக் கொதிக்க உம்மி தனியா வந்துடும். அதுக்குப் பிறகு தவுடா மெதக்கும். அதையும் அள்ளிப் போட்டு பொங்க வைப்பாங்க. இன்னொரு அதிசயமும் உண்டு. அந்தக் காலத்துல ஒவ்வொரு வருசமும் திருவிழா நடக்கும்போது, ஒரு மான் வந்து தானாவே தலைய கொடுக்கும். ஒருமுறை, வழிபாடு வைச்ச பூசாரி, சாமிக்குப் படைக்கிறதுக்கு முன்னாடியே மான்கறியை எடுத்து மறைச்சு வச்சிட்டாராம். அதுக்கு அடுத்த வருசத்துலேருந்து பலியிட மான் வரது இல்ல. சாமிகிட்ட ஊர்சனங்க எல்லாரும் மன்னிப்பு கேட்டதுக்கு அப்பறம், `இனி மான் வராது. அது கத்தற சத்தம் மட்டும்தான் கேட்கும். நீங்க உங்களால முடிஞ்ச ஆடு, மாடு கோழிய பலிகொடுத்து கும்புடுங்கண்ணு’ சொல்லியிருக்காரு. இன்னைய வரைக்கும் ஒவ்வொரு சித்திரை மாத முதல் வியாழக் கிழமைக்கும் மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுக்கறோம்” என்றார்.

``மான் சத்தம் கேட்டதுக்கு அப்பறம்தான் பொங்கல் வச்சிப் பலிகொடுப்போம் " -  ஆச்சர்யமூட்டும் கொட்டக்குடி அய்யனார் வழிபாடு!

கொம்புதூக்கி அய்யனார் கோயிலுக்கு எப்போது சென்றாலும் மக்கள் கெடாவெட்டி பூஜை செய்வதைப் பார்க்க முடியும். வேண்டும் காரியங்களை அப்படியே நிறைவேற்றுவதாகக் கூறுகிறார்கள் மக்கள். நிலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, புது தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி, கொம்புதூக்கி அய்யனாரை வணங்கி, குறிகேட்ட பிறகே முடிவெடுக்கிறார்கள். குரங்கணி செல்லும் சுற்றுலாப் பயணிகளும் ஒருகணம் கொம்புதூக்கி அய்யனாரை வழிபட்ட பிறகே செல்கிறார்கள். பச்சைக்கானல் மலையைச் சுற்றிலும் இருக்கும் வனப்பகுதி, கொட்டக்குடி காட்டாறு பாயும் பள்ளத்தாக்கு, மலை மீதிருக்கும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் கொம்புதூக்கி அய்யனாரும், கருதலைமுடையாரும்தான் தங்களைப் பாதுகாப்பதாக நம்புகிறார்கள். 

மக்களோடும், அவர்கள் வாழ்வியலோடும் ஒன்றிப்போன அந்த வீரன், வருடங்கள் பல கடந்தும் சாகாவரம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கிறான். அடுத்தமுறை குரங்கணி செல்ல நேர்ந்தால் வழியில் கொட்டக்குடியில் இறங்கி, அந்த வீரனை தரிசித்துவிட்டுச் செல்லுங்கள். நீங்கள் திரும்பி வரும்வரையிலும், எந்த வனவிலங்குகளும் தாக்காமல் அவர் உங்களைப் பாதுகாப்பார்..!  

Vikatan
அடுத்த கட்டுரைக்கு