சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
லசலத்து ஓடுகிற நதியும் கரைக்கு அருகில் உள்ள வனமும்  ரொம்பவே பிடித்துப்போனது பரத்வாஜ முனிவருக்கு! புராண காலத்தில் அந்த நதியை 'பாஹு நதி’ என்று அழைத்தார்கள். நதியின் பெருமையையும் அருகில் உள்ள வனத்தின் குளுமையையும் உணர்ந்த முனிவர், அங்கே தங்கி, ஸ்ரீராமரை பூஜிப்பது என முடிவு செய்தார்.

அழகிய ஸ்ரீராமபிரானின் விக்கிரகத் திருமேனி ஒன்றை உருவாக்கினார். ஆற்றில் நீராடிவிட்டு, தினமும் ஸ்ரீராம மந்திரம் சொல்லி, அந்த விக்கிரகத்தை வழிபட்டார். காற்று பலமாக வீசியதையும் மழை வேகமாகப் பெய்வதையும் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மாறாக, ராம நாமத்திலேயே மூழ்கிப் போனார்.

பக்தனுக்குக் கருணை காட்டுகிற இறைவன், பக்தியும் சிரத்தையுமாகத் தவம் செய்து, வேதங்களைக் கட்டிக்காக்கிற முனிவர்களிடமும் ஞானிகளிடமும் கருணை காட்டாமலா போய்விடுவார்?!

ஒருநாள்... பரத்வாஜ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த பரம்பொருள், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். தன் அவதாரங்களை தானே பறைசாற்றிக் கொள்கிற திருமால், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க... அங்கே ஸ்ரீராமராகவும் திருக்காட்சி தந்தார். ஸ்ரீநரசிம்ம மூர்த்தமாகவும் தரிசனம் தந்தார்! இதில் மெய்சிலிர்த்துப் போனார் பரத்வாஜ முனிவர்.

ஆலயம் தேடுவோம்!

பரம்பொருள், முனிவருக்குத் தரிசனம் அளித்ததை அறிந்து, அங்கே ஆச்சார்யர்களும் அந்தணர்களும் ஓடோடி வந்தனர்.

அந்த நதியிலும் கரையிலும் வனத்திலும் மனத்தைப் பறிகொடுத் தவர்கள், அவர்களும் அங்கேயே தங்கி, திருமாலுக்கு பூஜை செய்யத் துவங்கினார்கள்.

அந்த இடத்தில் மெள்ள மெள்ள நல்லதொரு அதிர்வலைகள் பரவின. தினமும் காலையிலும் மாலையிலும் வேத கோஷங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஒருபக்கம் அந்தணர்கள் கூட்டமாக அமர்ந்து வேதங்களை முழங்க... இன்னொரு பக்கத்தில், ஆசார்ய புருஷர்கள் யாக வேள்வியில் ஈடுபட்டனர்.

பாஹு நதிக்கரையில் யாகங்களும் வேத கோஷங்களும் நிறைந்திருந்ததால், அந்த இடத்துக்கு யக்ஞ வேதிகை என்று பெயர் ஏற்பட்டது. அந்த இடம், யாக மேடு என்று அழைக்கப் பட்டது. முனிவர்களும் அந்தணர்களும் ஆசார்ய புருஷர்களும் வழிபட்டு வேதம் சொல்கிற அந்த இடம் குறித்து, மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மன்னர், அங்கே ஆலயம் ஒன்றை உருவாக்க ஆணையிட்டார். தொண்டை நாட்டில் சிறந்து விளங்குகிற ஆலயங்கள் எத்தனையோ உண்டு என்றபோதிலும், இந்தக் கோயிலை மிக அழகாகவும் பிரமாண்டமாகவும் கட்டி, வழிபடத் துவங்கினார் மன்னர் என்கிறது ஸ்தல வரலாறு.

ஆலயம் தேடுவோம்!

தொண்டை நாட்டின் பாஹு நதிக்கு, பின்னாளில் வேறொரு பெயர் வந்து, பிறகு அதுவே நிலைத்துவிட்டது. அது... செய்யாறு. முருகப்பெருமான் தன் வேல் கொண்டு தண்ணீரை வரவழைத்த ஆறு என்றும் சொல்வார்கள். சேய் ஆறு என்பதே செய்யாறு என்று மருவியது. ஆக, செய்யாற்றங்கரைக்கு அருகில் யாக மேடு என அழைக்கப்பட்டு, பிறகு இஞ்சிமேடு என அழைக்கப்படும் அந்த ஊரில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். ஸ்ரீபெருந்தேவித் தாயாருடன் ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீஅனுமன், ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீசீதா சமேத ஸ்ரீராமபிரான் எனச் சகலரும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர், இங்கே!

ஸ்ரீமத் அகோபில மடத்தின் 34-வது பட்டம் ஸ்ரீசடகோப ராமானுஜ யதீந்திர மகா தேசிகன், மற்றும் 42-வது பட்டம் ஸ்ரீஸ்ரீரங்க சடகோப யதீந்திர மகா தேசிகன் என இரண்டு மகான்கள் அவதரித்த புண்ணிய பூமி இது எனப் போற்றுகின்றனர் வைணவப் பெருமக்கள்!

கோயிலும், அங்கே குடிகொண்டிருக்கிற மூர்த்தங்களும் கொள்ளை அழகு! சமீப காலம் வரை, மிக மோசமாகச் சிதிலம் அடைந்து, வழிபாடுகளும் இல்லாமல் களையிழந்து காணப்பட்ட கோயில் இது! ஊர்மக்களின் ஒத்துழைப்பாலும், இஞ்சிமேடு ஸ்ரீஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபையினரின் பெரு முயற்சியாலும் திருப்பணிகள் நடந்துள்ளன.

ஸ்ரீவரதராஜ பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி. இவர் சந்நிதிக்கு வந்து முறையிட்டால் போதும்... நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தருவார் இவர்! ஸ்ரீபெருந்தேவித் தாயாரும் கருணையே உருவானவள். திருமண தோஷத்தால் கலங்குவோரும் பிள்ளை பாக்கியம் இல்லையே என வருந்துவோரும் தாயாருக்கு மஞ்சள் மாலை சார்த்துவதாகப் பிரார்த்திப்பது இங்கே விசேஷம்!

ஆலயம் தேடுவோம்!

ஸ்ரீபெருந்தேவித் தாயாரை மனதுள் நினைத்து, தினம் ஒரு மஞ்சள் (விரலி மஞ்சள்) எடுத்து, பூஜையறையில் வைத்துப் பிரார்த்திக்க... 48 நாட்களுக்குள் திருமண வரன் தேடி வரும் என்பது ஐதீகம்! பிரார்த்தனை நிறைவேறியதும் அந்த மஞ்சளையெல்லாம் எடுத்து மாலையாக்கி, தாயாருக்கு சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

அடுத்து, ஸ்ரீசீதாதேவி - லட்சுமணர் சமேதராகக் காட்சி தரும் ஸ்ரீராமரின் விக்கிரகத் திருமேனி கொள்ளை அழகு! இங்கே... ஸ்ரீராமரின் தனுஸில் (வில்) ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்! அஞ்சலி அஸ்தத்துடன் ஸ்ரீஅனுமனும் காட்சி தருகிறார். மாதந்தோறும் மூல நட்சத்திர நாளில், இவருக்குச் சிறப்பு ஹோமமும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

திருமணம் மற்றும் சகல ஐஸ்வரியங் களையும் தந்தருள்கிறார் ஸ்ரீகல்யாண லக்ஷ்மி நரசிம்மர். ஒருகாலத்தில் இந்தப் பகுதி, நரசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டதாம்! கொள்ளை அழகுடன் காட்சி தரும் ஸ்ரீகல்யாண லக்ஷ்மி நரசிம்மரைக் கண்ணாரத் தரிசித்தாலே எதிரிகள் தொல்லையெல்லாம் ஒழிந்துவிடும் என்கின்றனர், பக்தர்கள்!

மாதந்தோறும் சுவாதி நட்சத்திர நாளில், ஸ்ரீசுவாதி மகா ஹோமமும் ஸ்வாமிக்குத் திருமஞ்சனமும் சிறப்புற நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீபெருந் தேவித் தாயார் சமேத ஸ்ரீவரதராஜரையும் ஸ்ரீகல்யாண லக்ஷ்மி நரசிம்மரையும் வணங்கித் தொழுதால், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்; மனதில் உள்ள பயம் விலகி மனோபலம் கூடும் என்பது நம்பிக்கை!

ஆலயம் தேடுவோம்!

''அன்பர்களின் உதவியால் திருப்பணி கள் நடந்து, மிகச் சிறிய அளவில் கும்பாபிஷேகத்தையும் நடத்திவிட்டோம். ஆனால் நித்தியப்படி பூஜைகளையும் திருமஞ்சனம் மற்றும் உத்ஸவங் களையும் நடத்த முடியாமல், தவிக் கிறோம்'' என்கின்றனர் கைங்கர்ய சபையினர்.

பெருமாள் இருப்பதற் குக் கோயில் தயாராகி விட்டது. ஆனால் அவரை மகிழ்விக்க, பூஜைகள் வேண்டாமோ? அவர் திருவீதியுலா வந்தால்தானே, அந்த ஊரும் மக்களும் சிறப்புறத் திகழ முடியும்? தீர்த்தவாரி போன்ற விழாக்கள் நடந்தால்தானே, பூமியும் காடு - கரையும் செழிக்கும்?

இறைவனுக்கு தினப்படி பூஜைகள் செவ்வனே நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி! பூஜைகளும் நைவேத்தியங்களும் இல்லாமல், இறைவன் இருப்பது தகுமா?

முப்பத்திரண்டு தலைமுறைக்கும் நற்கதி கிடைத்த பூரிப்புடன் ஸ்ரீநரசிம்மரைத் தொழுதபடி பிரகலாதன் இங்கே காட்சி தருகிறார். நித்தியப்படி பூஜைக்கு நாம் கைங்கர்யம் செய்தால், நம் தலை முறையினரும் நன்றாக வாழ்வார்கள்; நற்கதி அடைவார்கள்!