Published:Updated:

பொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை?

பொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை?
பொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை?

பொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை?

தமிழக வரலாற்றில், சோழர்கள் ஆட்சிக் காலம் சைவத்துக்கும் சிவ வழிபாட்டுக்கும் பொற்காலம். சோழ மன்னர்கள் பிரமாண்ட சிவாலயங்களை நாடுமுழுவதும் எழுப்பினர். அவற்றில் பல இன்று வழிபாடு இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன. ஆயிரமாண்டு வரலாற்றைத் தன்னகத்தே சுமந்திருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த நெற்குணம் தீர்த்தகிரீஸ்வரர் சிவாலயம் அப்படியான ஒரு  பொக்கிஷம். 

பொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை?

ஒருகாலத்தில் சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தை மிகவும் பராமரித்து ஆறுகால பூஜைகளும் நடத்தியிருக்க வேண்டும். சோழர்கால ஆகம விதிகளின்படி அமைந்திருக்கும் இந்த கோயிலின் அமைப்பே, அதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கிறது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட ஆலயம். எப்பொழுது முழுதும் இடிந்துவிழுமோ என்று அஞ்சத்தகும்  நிலையில் உள்ளது.

தீர்த்தகிரீஸ்வரர் கோயில் கருவறை, இடைக்கட்டு, அர்த்தமண்டபம், முன்மண்டபம் என்னும் அமைப்பில் உள்ளது. சதுர வடிவில் அமைந்திருக்கும் கருவறையில், ஈசன் கிழக்கு நோக்கிய சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். செவ்வக வடிவமாக உள்ள முன்மண்டபத்தின் விதானத்தை வரிசைக்கு இரண்டு தூண்கள் வீதம் இருவரிசைகளில் நான்கு தூண்கள் தாங்குகின்றன. இந்தத் தூண்கள் ஒவ்வொன்றும் 'சதுரம், பதினாறு பட்டை' என்ற அமைப்பில் அரியச் சிற்பங்களுடன் காட்சியளிக்கின்றன. இந்த மண்டபத்தில் உள்ள நந்தி ஈசனைப் பார்க்காமல் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தற்போது, நந்திதேவரின் உருவம் பாதியளவு மண்ணில் புதைந்துள்ளது. 

பொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை?

மண்டபத்தின் வடக்குப் பகுதியில் 'ஜேஷ்டாதேவி' நின்ற கோலத்தில் இரு கரங்களுடன் காட்சியருள்கிறார். ஜேஷ்டாதேவிக்கு வலப்புறம் மாந்தனும், இடப்புறம் மாந்தியும் நின்ற கோலத்தில் காணப்படுகின்றனர். மூதேவியின் வலப்புறம் காக்கைக்கொடி உள்ளது. இந்த மண்டபத்தின் தெற்குச் சுவற்றில் கல்லால் செய்யப்பட்ட சாளரம் ஒன்று எழிலுறக் காட்சியளிக்கிறது. முன்மண்டப வாயிலின் திருநிலைக்கால் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. எப்போது இடிந்து விழுமோ  என்னும் அச்சத்தோடுதான் உள்ளே பிரவேசிக்க

பொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை?

வேண்டியுள்ளது. 

வாயிலின் புறச் சுவற்றில்  அமர்ந்த கோலத்தில் விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை, அர்த்தமண்டம், முன்மண்டபம் ஆகிய பகுதிகளின் புறச்சுவர் அதிட்டானம், சுவர், பிரஸ்தாரம் ஆகிய அங்கங்கள் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. அதிட்டானத்தை உபானம், முப்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை, ஜகதி ஆகிய உறுப்புகள் அலங்கரிக்கின்றன. சுவற்றில் அரைத்தூண்களும் தேவகோட்ட மாடங்களும் உள்ளன. இக்கோட்டங்களில் இறையுருவங்கள் காணப்படவில்லை. தீர்த்தகிரீஸ்வரரை வலம் வரும்போது கோஷ்டத்தில்  விநாயகர்,  நவகிரக மண்டலம்,  சூரியன்  ஆகியோர்  திருவுருவங்களும் காணப்படுகின்றன. 

சப்தமாதர் சிற்பங்கள்    

நெற்குணம் கிராமத்தின் நடுவில் செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை செவ்வக வடிவில்  காணப்படுகிறது.  நீண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பங்களாக சாமுண்டி, பிராமி, வைஷ்ணவி, வராகி, மகேசுவரி, இந்திராணி, கௌமாரி ஆகியோர் திருமேனிகள் காணப்படுகின்றன. சப்தமாதர்களும் வலதுகாலை மடித்து, இடதுகாலைத்  தொங்கவிட்டுச் சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றனர். அனைவரும் நான்கு கரங்களுடன் காட்சி கொடுக்கின்றனர். கீழ் வலக்கையை அபய முத்திரையில் காட்ட, அவர்களது கீழ் இடக்கைகள் முறையே தொடைமீது கடிமுத்திரையில அமைந்துள்ளன. மேற்கைகளில் அவரவர்களுக்கு உரிய ஆயுதங்கள் காட்டப்பட்டுள்ளன. மகளிர் எழுவரின் தலை அலங்காரம், ஆடை, அணிகலன் ஆகியன மிகவும் சிறப்புற அமைந்துள்ளன. ஆனால், இந்த தெய்வங்களுக்கான வாகனங்கள் சிற்பங்களில் காணப்படவில்லை. இந்த அமைப்புகளைக் கொண்டு இவையனைத்தும், கி.பி.11-12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்களாகக் கருதலாம். 

நெற்குணம், தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திலும், செல்லியம்மன் ஆலயத்திலும் கல்வெட்டு ஆய்வாளர் உத்திராடம், ஆய்வு மேற்கொண்டபோது செல்லியம்மன் கோயிலுக்கு முன்பாக ஒரு பலகைக் கல்வெட்டு அமைந்திருப்பதைக் கண்டுபிடித்தார். அந்தக் கல்வெட்டை ஆய்வு செய்தபோது, அது, 9 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதித்த சோழன் காலத்துக் கல்வெட்டு என்பதைக் கண்டறிந்திருக்கிறார்.   

கல்வெட்டில் காணப்படும் செய்தி

முதலாம் பராந்தக சோழனின் 24 -வது ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் காணப்படும் செய்தி, சிங்கபுர நாட்டு கிழக்கு வழியில் நெற்குன்றத்தில் இருந்த ஏரி பராமரிப்புக்காக 'நிருபதுங்கமங்கலப் பேரரையன்' என்பவரது மகன் 'நம்பிமல்லன்' என்பவர் நிலம் கொடுத்தார் என்று தெரிவிக்கிறது. ஏரி பராமரிக்கக் கொடுக்கப்படும் நிலம், பொதுவாக 'ஏரிப்பட்டி' என்று அழைக்கப்படும். இந்நிலம் மூன்று பகுதிகளாக மூன்று பெயர்களில் இருந்தது. 

பொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை?

1.மருதஞ்செறு 2.கொடுமாடி என்ற நிலம் 3.கழுவல் என்ற நிலம். ஏரி பராமரிப்புக்காகக் கொடுக்கப்பட்ட இந்நிலங்கள் வரி இல்லாமல் கொடுக்கப்பட்டவை. நெற்குன்ற ஊரார் வரி இல்லாத நிலம் என்று ஏற்றுக்கொண்டதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இது குறித்து வரலாற்று ஆய்வாளர் உத்திராடம் கூறியபோது, "நெற்குணம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். இங்கிருக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மிகவும் பழைமையானது. இந்து அறநிலையத் துறையும், தனியார் அமைப்புகளும் முன்னெடுத்து அந்தக் கோயிலைப் புனரமைப்பதோடு, அங்கு ஆய்வும் மேற்கொண்டால் பல்வேறு கல்வெட்டுகளையும் ஆதாரங்களையும் கண்டறியமுடியும். இப்போது கிடைத்திருக்கும் கல்வெட்டு 9 - ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இன்னும் இந்தப் பகுதியில் ஆய்வு செய்தால் மேலும் பல கல்வெட்டுகள், தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்றார்.

சோழர்காலத்தில் சீரும் சிறப்புமாக விழாக்கோலம் கண்ட தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம் மீண்டும் பொலிவு பெற்று எழ வேண்டும் என்பதே அடியார்களின் வேண்டுகோள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு