சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

அரனுக்காக ஓர் இரவு!

அரனுக்காக ஓர் இரவு!

அரனுக்காக ஓர் இரவு!
அரனுக்காக ஓர் இரவு!

கிமை மிகு மாசியில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திருநாளே, மகா சிவராத்திரி. யுகம் யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக் காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக, ஒரே ஒரு நாள் இரவு விழித்திருந்து, அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரி அது!

'ராத்ர’ என்ற சொல்லுக்கு, யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்று பொருள். எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப் பொழுது, ராத்திரி எனும் பெயர் ஏற்றது. மகா சங்கார (சம்ஹார) காலமாகிய ஊழிக் காலத்தில், பஞ்சபூதங்களும் செயலற்று மாயையில் ஒடுங்கும்; எங்கும் இருள் சூழ, உலகம் செயலற்று எங்கும் அமைதி நிலவும். இந்த நிலையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றுவார். அவரை அடுத்திருக்கும் சக்தியான தேவி, சிவபூஜை செய்வாள். அந்த அகண்டாகாராமாகிய இரவு சிவராத்திரி எனப்படும். 'ராத்ர’ என்பதற்குப் பூஜித்தல் என்பதும் ஒரு பொருள். ஆக, சிவனாரை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி என்றும் கூறுவர்.

##~##
'உணவும், உறக்கமும் உயிர்க்குப் பகை. இந்த இடத்தில் உணவு என்பது வினைகள். அதனைச் செய்யச் செய்ய வினைகள் மூண்டு திரும்பத் திரும்ப பிறக்க நேரும். உறக்கம் என்பது மாயைக்குட்பட்டு மயங்குதலாகும். ஆக... உணவு நீக்கம் என்பது வினைகளை அகற்றுதலும், விழித்திருத்தல் என்பது ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதும் ஆகும். இந்த தாத்பரியத்தின்படி, மகா சிவராத்திரி தினத்தில் ஊண், உறக்கம் ஒழிப்பது என்பது... உண்மையில் வினைகளை வென்று ஆன்மாவானது தன்னை உணர்ந்து கொள்வதற்காகவே’ என சிவராத்திரி விரதம் குறித்து அற்புதமாக விளக்கம் தருவார்கள் ஆன்றோர்கள்.

இதை உணர்ந்து சிவராத்திரி விரதம் இருக்கும் அன்பர்கள், சிவராத்திரிக்கான காரணக் கதைகளையும் அறிந்து வழிபடுவது இன்னும் சிறப்பல்லவா?

சிவராத்திரி குறித்து பல்வேறு காரணங்களை விவரிக்கின்றன புராணங்கள்.

அரனுக்காக ஓர் இரவு!

ரு காலத்தில் உலகம் அழிந்து, யாவும் சிவபெருமானுள் ஒடுங்கின. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில், பார்வதிதேவியார் சிவ பெருமானை ஆகமங்களில் கூறியுள்ளபடி நான்கு காலம் வழிபட்டாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவனாரை வழிபட்ட பார்வதியாள், ''இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்ச மும் தரவேண்டும்'' என்று பரமனிடம் வேண்டிக்கொண்டாளாம். 'அப்படியே ஆகுக’ எனச் சிவபெருமானும் அருள்பாலித்தாராம். அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.

கா சிவராத்திரிக்குக் காரணமாக புராணங் கள் சொல்லும் கதைகளில் முக்கியமானது- அடி-முடி தேடிய கதை! ஒருமுறை பிரம்மனுக் கும் திருமாலுக்கும் இடையே, தங்களில் பெரியவர் யார் எனும் சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவருக்குமான மோதலால் உலகமும் உயிர்களும் பாதிப்படையுமே என அச்சம் கொண்ட தேவர்கள், ஸ்ரீபரமேஸ்வரரைச் சரணடைந்தனர். அவர்களை ஆறுதல் படுத்தினார் ஈஸ்வரன்.

அரனுக்காக ஓர் இரவு!

திருமாலுக்கும் பிரம்மனுக்கும் நடுவில் பெரும் நெருப்பு தூணாய் தோன்றினார். அதன் பிரமாண்டம் அவர்களை அயரவைத்தது. அந்தப் பிரமாண்டத்தின் (நெருப்புத் தூணின்) திருவடியையோ அல்லது திருமுடியையோ முதலில் கண்டு வருபவரே பெரியவர் என்று முடிவானது.

உடனே பெருமாள், வராக உருவெடுத்து பூமியை அகழ்ந்து, திருவடியைக் காணச் சென்றார்.  பிரம்மன், அன்னப் பறவையாக மாறி திருமுடி காண உயரப் பறந்தார். ஆனால் இருவராலும் அந்த நெருப்புத் தூணின் அடி-முடியைக் காண இயலாமல் போனது (பிரம்மன்- தாழம்பூ கதை குறித்து ஆன்மிக ஆன்றோர்களிடம் வேறுபட்ட கருத்துக்கள் உண்டு).

செய்வதறியாமல் இருவரும் துதித்து நிற்க, தேவர்கள் யாவரும் போற்றி வழிபட, அந்த நெருப்புத் தூணின் மையத்தில்... மான், மழு, அபய, வரத முத்திரை தாங்கியவராக திருக் காட்சி தந்தார் சிவபெருமான்.

அங்கிருந்த அனைவருக்கும் அனுக்கிரஹம் தந்தவர், ''இவ்வாறு நான் காட்சியளித்த தினம் சிவராத்திரி ஆகும். இதுபோல், முன்னம் ஒரு சிவராத்திரி நாளில் தேவியும் என்னை பூஜித்து பேறு பெற்றாள். ஆகம முறைப்படி இந்த தினத்தில் எம்மை பூஜிக்க... நல்லது யாவும் நடந்தேறும். பாவங்களைப் பொசுக்கி, சிவகதி காட்டும் அற்புதமான இந்த பூஜை, அஸ்வமேதம் முதலான யாகங்கள் செய்வதைக் காட்டிலும் நூறு மடங்கு பலன் தருவது'' என்று அருள்பாலித்த பின் திருக்கயிலைக்கு எழுந்தருளினார்.

இப்படி, திருமால் மற்றும் பிரம்மாதி தேவர்கள் சிவனருள் பெற்ற தினம் மாசி மாதம் தேய் பிறை சதுர்த்தசி நாள். இதையே உலகத்தார் மகா சிவராத்திரியாகக் கொண்டாடுகின்றனர். சிவ மகா புராணத்தின் பூர்வ பாகம், உபமன்யு பக்தவிலாசம், மகா ஸ்காந்தம், நாரதம், லிங்க புராணம் போன்றவை மேற்கண்ட கதையை விரிவாகவும் சிற்சில மாறுதலுடனும் விவரிக்கின்றன. தமிழில் உள்ள கந்தபுராணம், அருணகிரி புராணம், சிவராத்திரி புராணம், அருணாசல புராணம் ஆகியவற்றிலும் இந்தக் கதையைக் காணலாம்.

இன்னும் சில கதைகளும் உண்டு!

ரு முறை, பார்வதிதேவியார் விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். அதனால் உலகில் இருள் சூழ்ந்தது.காலமல்லாத காலத்தில் கொடிய இருள் சூழ்ந்ததனால், உயிர்கள் வருந்தின.அப்போது ருத்திரர் தலைமையில் 11 கோடி ருத்திரர்களும் சிவபெருமானை அர்ச்சனை புரிந்தனர். அதனை நினைவுகூரும் வகையில் சிவராத்திரி கொண்டாடப்படுவதாகச் சில நூல்கள் குறிப்பிடுகின்றன.

பார்வதிதேவி, சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால் உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிலையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள் பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். அவள் பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான், அச்சுடர் ஒளியை தன் ஒளியாக்கி அருள்புரிந்தார். அந்நாளையே சிவராத்திரி என்று சில நூல்கள் கூறும்.

பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில் சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித் துப் போற்றினர். அதுவே சிவராத்திரி என்பர் சிலர்.

இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து, இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால், துன்ப இருள் அகன்று, சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும்.

மகா சிவராத்திரிக்கு முந்திய மாலை காலத்தில் ஸ்ரீநடராஜ மூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும். தொடர்ந்து, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட (சந்திர சேகரர்) மூர்த்தியையும் வழிபட வேண்டும்.

இந்தத் திருநாளில் கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான- சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞானநூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியத்தைத் தரும். அத்துடன், சிவராத்திரி காலத்தில் சிவபிரானின் எட்டு திருப்பெயர்களை ஓயாது ஜபிப்பதும் விசேஷம். ஸ்ரீபவாய நம:, ஸ்ரீசர்வாய நம:, ஸ்ரீருத்ராய நம:, ஸ்ரீபசுபதயே நம:, ஸ்ரீஉக்ராய நம:, ஸ்ரீமகாதேவாய நம:, ஸ்ரீபீமாய நம:, ஸ்ரீஈசாநாய நம:  - இந்த எட்டு திருப்பெயர்களைச் சொல்லி மனதார சிவனாரைத் தியானித்து வழிபட, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். இம்மையில் இன்பமும் மறுமையில் சிவபதமும் ஸித்திக்கும்.

அரனுக்காக ஓர் இரவு!


சிவராத்திரி திருத்தலங்கள்...

னைத்து சிவாலயங்களிலும், சிவத் தலங்களிலும் சிவ பெருமானைச் சிவராத்திரியில் வழிபாடு செய்தால் இம்மை, மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் என்றாலும், சிவராத்திரிக் கதைகளோடு தொடர்புடையதாகவும் சிவராத்திரிக்கே உரியதாக வும் சில தலங்கள் சிறப்புடன் பேசப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

திருஅண்ணாமலை:  பிரமனும் திருமாலும் அடி-முடி தேட, அழல் மலையாய் நின்ற பெருமான், மானிடர் உய்யும் பொருட்டு கல் மலையாக நின்ற இடமே திருவண்ணாமலையாகும். அவர் அந்நாளில் ஜோதி வடிவாய் நின்றதை விளக்கவே, இந்நாளில் மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது என்று அருணாசலபுராணம் கூறும். இங்கு சிவராத்திரி பெருஞ்சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. இது மாசிச்சிவராத்திரிக்கு உரிய தலமாயினும், தற்போதைய நாட்களில் கார்த்திகை தீபத்தாலேயே மிகப்பெருமை அடைந்துள்ளது.

திருக்கடையூர்: இது மார்க்கண்டேயன் எமனை வெல்லும் பொருட்டு சிவபூஜை செய்த இடம். 3-ஆம் ஜாமத்தில் இங்குள்ள லிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு, எமனை உதைத்து வீழ்த்திய இடம். சிவபெருமான் காலசம்ஹாரராக பெரிய திருச்சபையில் எழுந்தருளியுள்ளார். சிவராத்திரியில் இங்கு வந்து வழிபட, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

காஞ்சி: சிவபெருமானின் கண்களைப் பார்வதி தேவி விளையாட்டாக மூடியதால் உலகத்தில் இருள் சூழ, பெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதன் வெப்பத்தால் உலக உயிர்கள் வருந்தின அப்பாவம் நீங்க சிவனை பார்வதிதேவி பூசித்த இடம் இதுவாகும்.

உலகம் இருண்ட அந்தகாரமான இரவில் உருத்திரர்கள் இங்கு பூசித்தனர். அந்த உருத்திரர்கள் பூசித்த ஆனந்தருத்ரேசம், மகாருத்ரேசம், உருத்திர கோடீசம் போன்ற ஆலயங்கள் இவ்வூரில் உள்ளன. காஞ்சிப் புராணத்தில் இவ்வூரின் ஒரு பகுதி, 'உருத்திரசோலை’ என வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீசைலம்: சிவ மகா புராணத்தில் சொல்லப் பட்டுள்ள மான், வேடன் குறித்த சிவராத்திரி கதை நடந்த இடம் இது என்பர். ஆந்திர மாநிலத்தில் பெரிய அளவில் சிவராத்திரி வழிபாடு நடைபெறும் இடம் இது. மல்லிகை மலர்களைச் சூடுவதால் இப்பெருமான் மல்லிகார்ச்சுனர் என்று அழைக்கப்படுகிறார்.

ஓமாம்புலியூர்: சிதம்பரத்தை 24 கி.மீ. தொலை வில் உள்ள இத்தலத்திலும் வேடன் புலிக் கதை கூறப்படுகிறது. சிவபெருமான் பிரணவப் பொருளை தேவிக்கு உரைத்த இடம். பிரணவ வியாக்ரபுரம் எனவும் அழைக்கப்பெறும்.

இவை தவிர திருக்கழுக்குன்றம், திருவைகாவூர், ஸ்ரீகாளத்தி, திருக்கேதீச்சரம், திரிகோணமலை, மதுரை முதலியனவும் சிவராத்திரிக்கு உரிய தலங்களாகப் போற்றப்படுகின்றன.

நான்கு கால பூஜைகள்...

அரனுக்காக ஓர் இரவு!

சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய சிறப்பான அபிஷேக, அலங்காரம், நிவேதனம் ஆகியவற்றை பெரியோர்கள் வகுத்துள்ளனர். அதன்படி சிவ வழிபாடு செய்வது நலம்பயக்கும்.

முதல் காலம்: அபிஷேகம்- பஞ்சகவ்யம். மேற்பூச்சு- சந்தனம். வஸ்திரம்- பட்டு. ஆடையின் வண்ணம்- சிவப்பு, நிவேதனம்- காய்கறிகள், அன்னம். வேதம்- ரிக். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது-சிவபுராணம். தீபம்- விளக்கெண்ணெய். தத்வ தீபம்- ரதாரத்தி. அட்சதை- அரிசி. மலர்- தாமரை. பழம்- வில்வ பழம்.

இரண்டாம் காலம்: அபிஷேகம்- பஞ்சாமிர்தம். மேற் பூச்சு- பச்சைக் கற்பூரம். வஸ்திரம்- பருத்தி. ஆடையின் வண்ணம்- மஞ்சள், நிவேதனம்- பரமான்னம், லட்டு. வேதம்- யஜூர். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது - இருநிலனாய்... பதிகம். தீபம்- இலுப்பை எண்ணெய். தத்வ தீபம்- ஏக தீபம். அட்சதை- யவை. மலர்கள்- தாமரை, வில்வம். பழங்கள்- பலாப் பழம்.

மூன்றாம் காலம்: அபிஷேகம்- தேன். மேற்பூச்சு- அகில். வஸ்திரம்- கம்பளி. ஆடையின் வண்ணம்- வெள்ளை, நிவேதனம்- மாவு, நெய் சேர்த்த பலகாரங்கள், பாயசம். வேதம்- சாமம். திருமுறை பஞ்ச புராணத்துடன்- லிங்கபுராண குறுந்தொகை. தீபம்- நெய். தத்வ தீபம்-கும்ப தீபம். அட்சதை- கோதுமை. மலர்கள்- அறுகு, தாழம்பூ. பழங்கள்- மாதுளை.

நான்காம் காலம்: அபிஷேகம்- கருப்பஞ்சாறு. மேற்பூச்சு-கஸ்தூரி. வஸ்திரம்- மலர் ஆடை. ஆடையின் வண்ணம்- பச்சை. நிவேதனம்- கோதுமை, சர்க்கரை, நெய் கலந்த பலகாரங்கள். வேதம்- அதர்வணம். திருமுறை பஞ்ச புராணத்துடன்- போற்றித் திருத்தாண்டகம். தீபம்- நல்லெண் ணெய். தத்வ தீபம்- மகாமேரு தீபம். அட்சதை- உளுந்து, பயறு முதலான ஏழு தானியங்கள். மலர்கள்- எல்லா வகை மலர் களாலும். பழங்கள்-  வாழை முதலிய அனைத்து வகைப் பழங்களும்.

லிங்கோத்பவ காலம்!

அரனுக்காக ஓர் இரவு!

சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.

லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வென்னீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, தாழம்பூக்களாலும் மற்றும் பிற மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும். இந்த ஒரு காலம் தவிர, வேறு தருணங்களில் தாழம்பூவை சிவபெருமானுக்கு அணிவிக்கலாகாது.

நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும். மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ''இருநிலனாய் தீயாகி'' எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.