சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

க்ஷேத்திர சங்கீதம்!

இறைவனுக்கு இசையால் ஆராதனை!

க்ஷேத்திர சங்கீதம்!
##~##
தே
வார மூவரும், புலவர்களும், சங்கீத மும்மூர்த்திகளும் சீர்காழி மூவரும், ஸ்தல புராணங்களையும் பெருமைகளையும் அற்புதமான ராகங்களில், அழகுறப் பாடியுள்ளனர். புத்தகங்கள் படித்தும் சொற்பொழிவுகள் கேட்டும் இவற்றை அறிவது ஒரு சுகம் எனில், அவற்றை இசையாக, பாடல்களாகக் கேட்பது பரமசுகம்! அதனால்தான், சென்னை மயிலாப்பூர் நாரத கனா சபாவினர், புனித க்ஷேத்திரங்கள் குறித்த ஓர் இசை நிகழ்ச்சியைத் தொடராக நடத்த முற்பட்டனர்.

மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, க்ஷேத்திர சங்கீதம் எனும் தலைப்பில், தலங்கள் பற்றிய கச்சேரி நடத்த முடிவாகி, அந்தப் பாடல்களைப் பாடுவதற்கு பாடகி டாக்டர் விஜயலட்சுமியைத் தேர்வு செய்தனர். அதன்படி, காஞ்சிபுரம், திருவையாறு, திருவாரூர், மதுரை, சிதம்பரம், திருப்பதி, திருவான்மியூர், சென்னை, சிருங்கேரி, திருச்செந்தூர் ஆகிய தலங்கள் குறித்து அற்புதமாகப் பாடினார்.

க்ஷேத்திர சங்கீதம்!

பத்து மாதங்கள், பத்து ஞாயிற்றுக் கிழமைகள், பத்துத் தலங்கள் என நடந்த விழாவில், டாக்டர் சாரதா நம்பிஆரூரன், டாக்டர் சுதா சேஷய்யன், நாகை முகுந்தன், வி.ஸ்ரீராம், டாக்டர் சரஸ்வதி ராமநாதன், கவிஞர் வாலி, டாக்டர் சித்ரா மாதவன் ஆகியோர் தங்களுக்கே உரிய பாணியில், தலங்கள் குறித்து அழகுற விவரித்தார்கள்.

நிறைவாக... திருச்செந்தூரை பற்றி   சுவையான தகவல்கள் தந்தார் டாக்டர் சாரதா  நம்பிஆரூரன். திருச்செந்தூருக்கு முருகன்  சூரனை ஜெயித்த இடம் என்பதால் ஜெயந்திபுரம் என்றே பெயர் உண்டு. ஐந்து வயது வரை பேச்சே  வராமல் இருந்த குமரகுருபரர், செந்தூர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்றார் என்றும், அருணகிரிநாதர், பகழிக்கூத்தர், ஆதிசங்கரர்  போன்றோர்  முருகனைப் பாடிய அழகு பற்றியும் விளக்கினார். திருச்செந்தூர் முருகன் மீது மாறா பக்தி கொண்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன்,  திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்திருக்கிறான். இன்றைக்கும் முருகப்பெருமானின் ஆபரணங்களில், பாஞ்சாலங்குறிச்சியின் ராஜ இலச்சினையைக் காணலாம்! உச்சிகால பூஜை முடிந்து, மணியோசை  காதில் கேட்ட பிறகுதான் மதிய உணவு சாப்பிடுவான் கட்டபொம்மன் என்று சாரதா நம்பி ஆரூரன் கூறிய தகவல்கள் மொத்தமும் தித்தித்தன!  

- பேராசிரியை சந்திரிகா ராஜாராம்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்