40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்' வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக எழுந்தருளச் செய்யப்படுவார். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அத்திவரதர் தரிசனத்துக்காக லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுதரிசனத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. சிறப்பு தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதுபோல் சகஸ்ர நாமம் தரிசனம் காலை11.00-12.00 மணி வரையும், மாலை 5.00-6.00 மணி வரையும் நடைபெறும். அப்போது 108 மந்திரங்கள் சுவாமிக்கு ஓதப்படும். சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய நபர் ஒருவருக்கு 500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சகஸ்கர நாமம் தரிசனத்துக்கு மேற்கு கோபுரம் வழியாக வரும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் தரப்பில் நேரடியாக டிக்கெட் விற்பனை செய்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம். மேலும், கோயில் நிர்வாகத்தில் உள்ள சிலர் பிளாக்கில் அதிக தொகைக்கு அந்த டிக்கெட்டை விற்பனை செய்துவிடுவார்கள். எனவே, ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tnhrnce.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். 4.7.2019 அன்றிலிருந்து ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். அதுபோல் மேற்கு கோபுரம் வழியாக வி.ஐ.பி-க்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

48 நாள்களிலும் கோயில் பகுதியில் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வாகனம் வைத்திருப்பவர்கள் வாகனத்துக்கான அனுமதிச் சீட்டு (Pass) பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் உள்ள உதவி மையத்தில் 26.6.2019 முதல் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.