Published:Updated:

ஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்! #VikatanInfographics #DoubtOfCommonMan

சுற்றுலா

எல்லோரா - அஜந்தா சாலையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பது உண்மைதான். சில இடங்களில் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. அதனால், எல்லோராவிலிருந்து அஜந்தாவை அடைவதற்கு மட்டுமே மூன்று மணி நேரம் ஆகிறது.

Published:Updated:

ஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்! #VikatanInfographics #DoubtOfCommonMan

எல்லோரா - அஜந்தா சாலையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பது உண்மைதான். சில இடங்களில் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. அதனால், எல்லோராவிலிருந்து அஜந்தாவை அடைவதற்கு மட்டுமே மூன்று மணி நேரம் ஆகிறது.

சுற்றுலா

ஒருமணி நேரம் முன்னதாகக் கிளம்பினால் திட்டமிட்டபடி அஜந்தாவைப் பார்த்துவிடலாம். சிலர் ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். சிலர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். மேலும் சிலர் ஆன்மிகச் சுற்றுலாவுடன், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும் செல்ல விரும்புவர். அதற்கான பயணத் திட்டம் வகுக்கும்போது போக்குவரத்து வசதி எப்படி இருக்கும், சாலைகள் தரமானவையாக இருக்குமா என்றெல்லாம் சந்தேகங்கள் எழக்கூடும். அப்படி ஒரு சந்தேகத்தை நமது, #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருந்தார் வாசகர் விவேகானந்தன்.

ஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்! #VikatanInfographics #DoubtOfCommonMan

"ஷீர்டிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை வழியாக ஔரங்காபாத் சென்று எல்லோரா மற்றும் அஜந்தா குகைகளைப் பார்க்க விரும்புகிறேன். ஔரங்காபாத்திலிருந்து அஜந்தா செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது என்கின்றனர். இப்போது நிலைமை எப்படி உள்ளது?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

``எல்லோரா - அஜந்தா சாலையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பது உண்மைதான். சில இடங்களில் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. அதனால், எல்லோராவிலிருந்து அஜந்தாவை அடைவதற்கு மட்டுமே மூன்று மணி நேரம் ஆகிறது. கொஞ்சம் முறையாகத் திட்டமிட்டால் ஷீர்டிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து அஜந்தா, எல்லோரா, கிரிஸ்னேஸ்வர் கோயில், தேவகிரி கோட்டை ஆகியவற்றைப் பார்த்துவிடலாம்” என்கிறார் எல்லோரா சுற்றுலா வழிகாட்டியான கான். 

வழிகாட்டுதல்
வழிகாட்டுதல்

உங்கள் பயணத்திட்டத்தில் முதலில் ஷீர்டி இருக்கட்டும். பிறகு அஜந்தா, எல்லோரா போன்ற இடங்களுக்குச் செல்லலாம்...

ஷீர்டி

சென்னையிலிருந்து ஷீர்டிக்குச் செல்ல விரும்புபவர்கள் சென்னை - மும்பை ரயில் மூலம் புனேவுக்குச் சென்று, அங்கிருந்து ஷீர்டி செல்லலாம். சென்னையிலிருந்து ஷீர்டிக்கு தினமும் மதியம் 12.10 மணிக்கு விமான சேவை உள்ளது. விமானத்தின் மூலம் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே ஷீர்டி சென்றுவிடலாம். பெங்களூர், ஹைதராபாத் இணைப்பு விமானம் மூலமும் ஷீர்டிக்குச் செல்லும் வசதி  உள்ளது. ஷீர்டி விமானநிலையத்திலிருந்து, சாய்பாபா சமாதி மந்திர் சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ளது. ஷீர்டியில் தங்கும் விடுதிகளை, ஷீர்டி சாய் டிரஸ்டின் (https://online.sai.org.in/#/RoomAccommodation) இணையதளத்திலேயே பதிவு செய்துகொள்ளலாம். சாதாரண அறைகள் 200 ரூபாயிலிருந்தும், குளிர்சாதன வசதி கொண்ட அறைகள் 400 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன. 

ஷீர்டி பாபா
ஷீர்டி பாபா

சாய்பாபா சமாதி மந்திரில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு காகட் ஆரத்தி எனப்படும் காலை ஆரத்தி நடைபெறும். இந்த ஆரத்தியை தரிசிப்பது மிகவும் விசேஷமாக பாபாவின் பக்தர்களால் கருதப்படுகிறது. ஷீர்டியில் பாபாவின் சமாதி மந்திருடன், குருஸ்தானம், துவாரகாமாயி, சாவடி, லெண்டித் தோட்டம் போன்ற இடங்களையும் தரிசிக்கவேண்டும். பயோமெட்ரிக் முறையில் சர்வ தரிசனத்துக்குக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தருகிறார்கள். எனவே, நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. மூத்த குடிமக்கள் எப்போது வேண்டுமானாலும், கவுன்டருக்குச் சென்று ஆதார் அடையாள அட்டையைக் காட்டி டோக்கன் பெற்றுக்கொண்டு தரிசிக்கச் செல்லலாம். வியாழக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், மற்ற நாள்களில் செல்வது நல்லது. சமாதி மந்திருக்குச் செல்லும்போது மொபைல், காமிரா போன்றவற்றை அறையிலேயே வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அஜந்தா
அஜந்தா

அஜந்தா

அடுத்ததாக ஷீர்டியிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிலுள்ள அஜந்தாவுக்குச் செல்லலாம். சுமார் ஆறு மணிநேரப் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், கூடுதலாக ஒரு மணி நேரம் பிடிக்கக்கூடும். செல்லும் வழியிலேயே உலகப் பிரசித்தி பெற்ற எல்லோரா குகைக்கோயில்கள் இருந்தாலும்கூட, முதலில் அஜந்தாவுக்குச் சென்று குகைக்கோயில் மற்றும் ஓவியங்களைப் பார்த்து ரசித்துவிட்டு, அடுத்த நாள் எல்லோராவைப் பார்வையிடுவது நல்லது. அஜந்தாவுக்கு திங்கள்கிழமையன்றும், எல்லோராவுக்கு செவ்வாய்க்கிழமையன்றும் விடுமுறை என்பதால் அதற்கேற்ப பயணத்தை  திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அஜந்தா கிராமத்தில் காலை நேரத்தில் குளிக்க, நிறைய இடங்கள் இருப்பதால் அறை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்துடன் செல்பவர்கள் தங்கள் உடைமைகளை வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஓர் அறை எடுத்துக்கொள்ளலாம். 

அஜந்தா கிராமத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அஜந்தா குடைவரைகள் அமைந்திருக்கின்றன. அஜந்தா கிராமத்திலிருந்து தொல்லியல் துறையினர் மூலம் ஏற்பாடு செய்யும் வாகனங்கள் மூலமே பயணிக்கமுடியும். கூட்டத்தைப் பொறுத்து அஜந்தா கிராமத்தில் சில மணிநேரங்கள் காத்திருக்க நேரிடும். அஜந்தாவில் மட்டும் 28 குடைவரைகள் இருப்பதால், அனைத்தையும் தரிசிக்க விரும்புபவர்கள், ஷீர்டியிலிருந்து இரவோடு இரவாகப் பயணித்து, அதிகாலை நேரத்தில் அஜந்தாவை அடைந்துவிடுவது நல்லது. 

1,500 வருடங்களுக்கும் மேலாக புதரில் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷம் என்பதுடன், ஓவியக்கலையின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்திய அஜந்தாவைப் பார்த்து ரசிப்பது நமக்குள் பரவசத்தை ஏற்படுத்தும். மழைக்காலத்தில் சென்றால் மேலிருந்து வகோரா ஆறு அருவியாக விழுவதைப் பார்த்தபடி குடைவரைகளைக் காண்பது கூடுதல் பரவசத்தை அளிப்பதாக இருக்கும்.

எல்லோரா
எல்லோரா

எல்லோரா 

அஜந்தா குடைவரைகளைப் பார்த்துவிட்டு அன்றைக்கு இரவே எல்லோரா வந்து தங்குவது நல்லது. அஜந்தாவை விடவும் இங்கு ஹோட்டல் மற்றும் ரிசார்ட்களில் தங்கும் அறைகளுக்கான கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. எல்லோராவில் 34 குடைவரைகள் உள்ளன. அவற்றுள் 16-வது குடைவரைதான் உலகப் பிரசித்தி பெற்ற கயிலாசநாதர் கோயில். எல்லோராவில் குடைவரை 34 அல்லது குடைவரை 1 - லிருந்து தொடங்கி கடைசியாக கயிலாசநாதர் கோயிலைப் பார்க்கும்படி திட்டமிட்டால், ஒரே நாளில் எல்லோரா குடைவரைகள் அனைத்தையும் பார்த்துவிடலாம். கயிலாசநாதர் கோயிலுக்கு முதலில் சென்றுவிட்டால், அதன் அழகில் மயங்கி நேரம் போவதே தெரியாமல் இருக்க நேரிடும் என்பதால் அனைத்துக் குடைவரைகளையும் பார்க்க முடியாத நிலை ஏற்படக்கூடும்.

எல்லோராவிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலுள்ளது வெருள் கிராமம். இங்குதான் புகழ் பெற்ற கிரிஸ்னேசுவரர் கோயில் உள்ளது. பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று இந்தக் கோயில். இந்தக் கோயிலின் விசேஷம் மூலவரை நாமே தொட்டு அபிஷேகம் செய்யலாம். சரியான திட்டமிடல் இருந்தால் ஒரே நாளில் எல்லோரா மற்றும் கிரிஸ்னேசுவரர் கோயிலை தரிசித்துவிட முடியும். எல்லோராவில் மட்டும் இரண்டு நாள்கள் இருக்கும்படிப் பார்த்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் எல்லோராவின் பிரமாண்டத்தையும் அதன் சிற்ப நுணுக்கங்களையும் ரசித்து உணர முடியும்.

தேவகிரி கோட்டை
தேவகிரி கோட்டை

தேவகிரி கோட்டை

எல்லோராவில் இரண்டு நாள்கள் இருக்கும்படியாகத் திட்டமிட்டுக்கொண்டால், இரண்டாம் நாள் மதியத்துக்குப் பிறகு எல்லோராவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கும் தௌலதாபாத் கோட்டை எனப்படும் தேவகிரி கோட்டையையும் பார்க்கலாம். இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை இது. கி.பி.1327-ம் வருடம் முகம்மது பின் துக்ளக், இந்த தேவகிரியைத்தான் இந்தியாவின் தலைநகராக அறிவித்தான். அந்த இடத்திலுள்ள கோட்டை சுமார் 200 மீட்டர் உயரமுடையது. மலைமீது கருங்கற்களால் கட்டப்பட்ட மூன்றடுக்குகள் கொண்ட கோட்டையின் வெளிச்சுவற்றின் சுற்றளவு சுமார் 4.5 கி.மீ. கோட்டையின் அகழிகளைக் கடந்து, குறுகலான படிக்கட்டுகள் வழியே கோட்டையின் மேலேறி தேவகிரியின் அழகைப் பார்ப்பதே அலாதி இன்பமாக இருக்கும்.

சில குறிப்புகள் 

தனியாகவோ அல்லது ஒருசிலரோ பயணிக்கும்பட்சத்தில் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் மூலம் திட்டமிட்டு பயணிப்பது நல்லது. குடும்பமாகவோ அல்லது குழுவாகவோ சென்றால் பிரைவேட் டாக்சி அல்லது கார்களை 'கி.மீ - க்கு இவ்வளவு' என்று வாடகைக்குப் பேசிக்கொள்ளலாம்.

மூன்று நாள்கள் மட்டுமே திட்டமிடும்பட்சத்தில் தேவகிரியைத் தவிர்த்துவிட்டு கிரிஸ்னேஸ்வரர் ஆலயத்துடன் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிடலாம்..

எல்லோராவிலிருந்து புனே 255 கி.மீ தொலைவிலும் ஷீர்டி 109 கி.மீ தொலைவிலும் இருக்கின்றன. ரயில் அல்லது விமானம் என்று எது வசதியோ அதற்கேற்ப பயணத்தை  திட்டமிட்டுக் கொள்ளலாம்.

அஜந்தா மற்றும் எல்லோராவில் தலா 50 ரூபாய் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

அஜந்தா மற்றும் எல்லோராவில் குறைந்தபட்சம் ரூ.500 லிருந்தே தங்கும் அறைகள் கிடைக்கின்றன. வசதிக்குத் தகுந்த மாதிரி அறைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

சில தனியார் டிராவல் நிறுவனங்கள் ரூ.8000 செலவில் ஷீர்டி - அஜந்தா - எல்லோராவை மூன்று நாள்களுக்குச் சுற்றிக்காட்டுகிறார்கள். இந்தTravel Package மூலமும் முயற்சி செய்யலாம்.

ஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்! #VikatanInfographics #DoubtOfCommonMan