ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
த்ரி மலை- மேற்கு மலைத்தொடரின் ஓர் அங்கமாக, மேகப் பொதி சுமந்து, வான்முட்டி நிற்கும் இந்த மலை.. தன் மேனியின் கற்களெல்லாம் லிங்கங்களாகவும், புற்களெல்லாம் மூலிகைகளாகவும் திகழ, தேவாதிதேவர்களும் முனிவர்களும் தினமும் தேடி வந்து தொழும் புண்ணிய மலையாக விளங்குகிறது!

மாமுனிவர் அத்ரி தங்கியிருந்து தவமியற்றியதால், அவர் பெயரையே தன் பெயராகக் கொண்டு திகழ்கிறது, தென்னகத்தில் இந்த திருமலை! அத்ரி மட்டுமா? அகத்தியர், கோரக்கர் முதலாக இன்னும் பல மகரிஷிகளும் வந்து வணங்கிய திருவிடம் இது என்கிறார்கள் பக்தர்கள்.

'அதுசரி... ஸ்ரீபரசுராமருக்கும் இந்த மலைக்கும் என்ன தொடர்பு?!’

நாம் கேட்டதும்தான் தாமதம்... ''என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்...'' என உரிமையுடன் கோபித்தபடி... நம்மை வழிநடத்திச் சென்ற நண்பர்கள், அத்ரி மலையின் மகத்துவத்தை, பரசுராமருக்கும் இந்தத் தலத்துக்குமான தொடர்பை விவரிக்க ஆரம்பித்தபோது, நாங்கள் கடனா நதி நீர்த்தேக்கத்தில் இறங்கி, நடக்க ஆரம்பித்திருந்தோம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆழ்வார்குறிச்சி. இந்த ஊரில் அண்ணா சிலை அருகே, இடப் புறமாக ஒரு சாலை பிரிகிறது (காலேஜ் ரோடு). அதன் வழியே சுமார் 13 கி.மீ. தூரம் பயணித்தால், கடனா நதி அணையை அடையலாம். தற்போது, நீர்த் தேக்கத்தில் தண்ணீர் குறைவு என்பதால், உள்ளே இறங்கி நடக்க முடிந்தது. மழைக் காலங்களில் நீர் நிரம்பியிருக்கும்; கரையோர சுற்றுப்பாதை வழியாகவே மலையடிவாரத்துக்குச் செல்ல முடியும்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

''ஒரு முறை, மேலுலகில் ஒரு விவாதம் நடந்தது. உலகில் சிறந்த பதிவிரதை அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசுயாதேவியே என்று நாரதர் கூற, முப்பெருந்தேவியரும் அவளைச் சோதிக்க விரும்பினார்கள். அதன் பொருட்டு பிரம்மன், சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியரையும் பூலோகம் செல்லும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களும் முனிவர்களாய் உருமாறி, யாசகம் கேட்டு அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர்.

அவர்களை வரவேற்று வணங்கினாள் அனுசுயா. அறுசுவை உணவு படைத்து அதிதி உபசாரம் செய்யவும் விரும்பினாள். ஆனால் அவர்களோ, அனுசுயாதேவி பிறந்தமேனியுடன் உணவு பரிமாற வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அனுசுயா என்ன செய்தாள் தெரியுமா? தன் பதிவிரதத்தின் மேன்மையால், அவர்களைக் குழந்தைகளாக்கி, அவர்கள் கேட்டபடியே உணவு அளித்தாள்.

அந்த உத்தமியின் பதிபக்தி, முப்பெருந்தேவியரின் பதிகளையும் குழந்தைகளாக்கி, அனுசுயா வீட்டுத் தொட்டிலில் தூங்கச் செய்தது. தேவியர் கலங்கினர். அனுசுயாவிடம் வந்து நடந்ததைக் கூறி வருந்தினர். அவளும், மூம்முர்த்தியரையும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தாள். தவமாய் தவமிருந்தாலும் காணக்கிடைக்காத  மும்மூர்த்தியர் மற்றும் முப்பெருந்தேவியரின் திவ்விய தரிசனம் ஒரே இடத்தில் கிடைத்தது அனுசுயாதேவிக்கு. அதுமட்டுமா? மும்மூர்த்தியரின் அம்சமாக தனக் கொரு குழந்தை வேண்டும் என்று அவள் வரம் கேட்க, அதுவும் கிடைத்தது. அதன்படி அனுசுயாதேவிக்கு பிறந்த குழந்தையே ஸ்ரீதத்தாத்ரேயர்.

ஸ்ரீதத்தரின் அவதாரம் நிகழ்ந்தது இந்த அத்ரி மலையில் தான். அவருக்கு அநேக சீடர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் ஸ்ரீபரசுராமர். அவரும் இங்கு வந்திருக் கிறார்; குருவிடம் நிறைய உபதேசங்கள் பெற்றிருக்கிறார். இந்தப் பூவுலகில் தனக்கென ஒரு க்ஷேத்திரத்தை தோற்றுவிப்பதற்குமுன் ஸ்ரீபரசுராமர் நிலை கொண்டது இங்குதான்.'' என்று அவர்கள் சொல்லி முடித்தபோது... நீர்த்தேக்கம் கடந்து, மேடான ஒரு ஏற்றத்தில் ஏறி- இறங்கி, கடனா நதிக்கரையை அடைந்திருந்தோம்.

'கடனா நதியில் குளித்தால் கங்கையில் குளித்த புண்ணியம்’ நண்பர் ஒருவர் சொல்ல, குளிக்கும் ஆர்வத்துடன் ஓடிச் சென்று, ஆற்று நீரில் கால் பதிக்க முயற்சித்து, பதறி பின்வாங்கினோம்!

அடடா அதென்ன ஆற்றில்... அத்தனையும் லிங்கங்களா?! இல்லையில்லை... கற்கள்தாம். ஆனாலும் எவரோ செதுக்கிப்போட்டது போன்று, சிறிதும் பெரிது மாக லிங்க பாணங்களாகக் காட்சி தருகின்றன!

அருகில் வந்து தோள் தொட்ட நண்பர் ஒருவர், எனது வியப்பைப் புரிந்துகொண்டார். ''நாங்களும் இங்கு வரும் பக்தர்களும் இந்தக் கற்களை லிங்கங்களாகவே பாவிக்கிறோம். வடக்கே கண்டகி நதியில் சாளக்கிராமம் சேகரிப்பதுபோன்று, பக்தர்கள் பலர் இந்தக் கற்களை  லிங்கங்களாகக் கருதி, பயபக்தியுடன் எடுத்துச் சென்று வீட்டில் வைத்து பூஜிப்பதும் உண்டு!'' என்றார்.

பரம்பொருள் எப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி...’ என்றும், 'பச்சைமா மலை போல் மேனி...’ என்றும் அடியார்களும் ஆழ்வார்களும் பாடி வைத்தது எவ்வளவு பொருத்தம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தன் உள் கடந்து அங்கிருக்கும் ஒளியைத் தரிசிப்பவருக்கே, வெளியிலும் எல்லாம் இறையாய் தோன்றும்.

ஆனால் அந்த பாக்கியம் எல்லோருக்கும் வாய்க்காது. அப்படி வாய்த்தவர்களே, இறைவனை விண்ணாக, மண்ணாக, மலையாக, மரமாகக் கண்டார்கள்!

அப்படியரு பாக்கியம், அத்ரி மலைக்கு வரும் சாமானியர்களுக்கும் வாய்க்கும் என்பதுதான் விசேஷம்!

ஒருவாறு நதியில் குளித்து, கரை யேறினோம். அங்கிருந்து ஓர் ஒற்றையடிப் பாதை வழியே மலையேற்றம். ஆளுயர நாணற் புற்களும், நெடிதுயர்ந்த மரங் களும் பிரமிக்க வைக்கின்றன. சிற்சில இடங்களில் மரங்களின் வேர்களே தரைக்கு மேல் வெளிப்பட்டு, இயற்கை படிகளாகத் திகழ, விழுதுகள் பிடித்து, வேர்களைத் தாண்டி முன்னேறினோம். குளிர்க்காற்று மூலிகை வாசத்துடன் சுவாசம் நிறைத்தது! கால்கள் முன்னே நடக்க, பரவசத்தில் பஞ்சாகிப் போன மனசு, பரசுராமரிடம் லயித்தது.

தசாவதாரம் திருத்தலங்கள்!

ஸ்ரீபரசுராமரும் தன் குருவை நாடி, இந்த வழியாகத்தான் நடந்திருப்பாரோ?!

உங்களுக்கு ஒன்று தெரியுமா... ஞானிகளும், மகான்களும் போற்றிக் கொண்டாடும் ஞான நூல் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் மட்டுமல்ல, தற்போ தும்... இந்து மதத்தின் மீது ஈர்ப்புள்ள வெளிநாட்டு அறிஞர் களும் படிக்கத் துடிக்கும் பொக்கிஷம் அது. 'திரிபுரா ரகஸ்யம்’ என்று பெயர்!  அற்புதமான இந்த திரிபுரா ரகஸ்யம் பரசுராமருக்கும் உபதேசிக்கப்பட்டது. அதை அவருக்கு உபதேசித்தது, ஸ்ரீதத்தாத்ரேயர்.  ஒருவேளை, அந்த அருளுபதேசம் இந்த அத்ரி மலை யில் கூட நிகழ்ந்திருக்கலாம்!

சுமார் 6 கி.மீ. தூரம் மலைப்பாதையில் பயணித்து, அத்ரி மகரிஷி ஆஸ்ரமத்தை அடைந்தோம். அன்று ஸ்ரீமகா பிரத்யங்கிரா யாகம் நடந்ததால் அன்பர்கள் நிறையபேர் வந்திருந்தனர். சாதாரண நாட்களில் பக்தர்கள் அதிகம் வருவதில்லை. தனியாளாக இந்த மலைக்கு வருவது கடினம். பாதுகாப்பு கருதி வனத்துறையினரும் அனுமதிக்க மாட்டார்கள். வன விலங்குகளால் ஆபத்து நேரிடவும், பாதை தவறி காட்டுக்குள் அகப்பட்டுக்கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, புதிதாக வருபவர்கள், தகுந்த வழிகாட்டிகளுடனோ அல்லது இந்த மலைக்கு வந்து பழக்கப்பட்ட பக்தர்களுடனோ சேர்ந்து வருவது நல்லது. பெண்கள், குழந்தைகளை அழைத்து வருவதை நாமே தவிர்த்துவிடலாம். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று பக்தர்கள் குழுவாக வந்து தரிசித்துச் செல்கிறார்கள். மற்ற நாட்களில் கோயில் அர்ச்சகர் மட்டும் வந்து பூஜை வைத்து செல்கிறார்.

மலைக்கு வரும் பக்தர்கள் அங்கேயே குளித்து, சமைத்து, அந்த உணவை ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். பிறகு அனைவருமாக உணவருந்தி விட்டு மலை இறங்குகிறார்கள். நாங்கள் சென்றிருந்த அன்றும் குழுவாகச் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர், யாக பூஜையில் மும்முரமாக இருந்தனர்.

நாம் தெய்வச் சந்நிதிகளைத் தரிசிக்கக் கிளம்பினோம். தாழை, அரசு, அத்தி என பல்வகை மரங்கள் நிறைந்த அந்தத் திருவிடத்தில் ஒரு விருட்சம், நம் கவனத்தை ஈர்த்தது. பக்தர்கள் பயபக்தியுடன் அந்த விருட்சத்தை வலம் வந்து வணங்கிக் கொண்டிருந்தனர். அருகில் சென்று விசாரித்தால், 'சகல பிணிகளும் தீர்க்கும் அமிர்த விருட்சம் இது’ என்கிறார்கள் சிலிர்ப்புடன்!

உடன் வந்த நண்பர் விளக்கினார்: ''இது பாலை மரம் இதன் விசேஷம் என்ன தெரியுமா? பங்குனி மாதத்தின் கடைசி 5 நாட்கள், சித்திரையின் முதல் 5 நாட்கள்... இந்த பத்து தினங்களில் ஏதேனும் இரண்டு நாள், இதன் அருகில் வந்து நின்றால், பன்னீர் தெளிப்பது போன்று, நீர்த் தாரைகள் நம் மீது சொரியும்.

காரணம் என்ன தெரியுமா? குறிப்பிட்ட அந்த தினங்களில், இந்த மரத்தில் அடையும் வண்டுகள்தான்! மரத்தின் நிறத்திலேயே இருப்பதால், கீழிருந்து பார்க்கும்போது வண்டுகள் கண்ணுக்குத் தெரியாது. அவற்றின் உடம்பிலுள்ள சுரப்பி களின் நீர்தான், துவானம் போன்று தூறிக்கொண்டே இருக்கும். இந்த மரத்தை நெருங்கினாலே, நம்மிடம் இருந்து பிணிகள் விலகும் என்பது நம்பிக்கை. அதனால் இதை அமிர்த விருட்சம் என்பார்கள்'' என்றவர், இன்னொரு விருட்சத்தையும் சுட்டிக்காட்டினார்.

அந்த விருட்சத்தில்தான், அத்ரி மகரிஷி தலைகீழாகத் தொங்கியபடி தவம் செய்தாராம்! இப்படியரு தவம் எதற்காக?

- அவதாரம் தொடரும்...
படங்கள்: எல்.ராஜேந்திரன்