மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்
கேள்வி-பதில்
கேள்வி-பதில்

எங்களுக்கு ஒரே மகன். என் பாட்டி, தந்தை மற்றும் என் சகோதரர்களுடன் பூர்வீக வீட்டில், கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். பெரியவர்கள் சிலர், பூர்வீக வீட்டில் 3 தலைமுறைக்குமேல் வசிக்கக் கூடாது என்கிறார்கள். இது சரியா?

- சுந்தரராஜன், திருச்சி-6

வசிக்கக்கூடாது என்பது தவறான தகவல். ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு கேரளத்தில் குடியேறிய தமிழர்கள் ஆறு தலைமுறையாக அங்கே குடியிருந்து, வாழ்ந்து வருகின்றனர். கொச்சியில் குடியேறிய குஜராத்திகளும், கொங்கிணிகளும் குடியேறிய நாளில் இருந்து அதே வீட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின் றனர். சென்னப் பட்டணத்தில் குடியேறிய தெலுங்கர்களும் அதில் அடங்குவர்.

'திருமணத் தம்பதிகள், தங்களது நாலாவது தலைமுறையில் உதித்த குழந்தைக ளோடு ஆடிப்பாடி மகிழ்ந்து இந்த வீட்டில் நிலைத்து இருக்க வேண்டும்’ என்ற பிரார்த்தனை ரிக் வேதத்தில் உண்டு (க்ரீடந்தௌ புத்ரை: நப்த்ரிபி: ஏதமாளௌ ஸ்வே கிருஹே) வேதமே பல தலைமுறைகளாக இந்த வீட்டில் வாழ வேண்டும் என்று எண்ணும்போது, மூன்று தலைமுறைக்குப் பிறகு வசிக்க இயலாது என்கிற வாதம், வியாபார நோக்கில்- பகுத்தறிவுவாதிகளின் குரலாக இருக்கலாம்!

கோயிலில் பிரதோஷத்தின்போது, மூலவர் எதிரில் இருக்கும் நந்திக்கு மட்டும்தான் அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டுமா? கொடிமரம் அல்லது முகப்பு மண்டபத்தில் இருக்கும் நந்திதேவருக்கு நைவேத்தியம் (காப்பரிசி) சமர்ப்பித்து ஆராதித்தால் போதுமா? அல்லது, அவருக்கும் விரிவான வழிபாடுகள் நடத்த வேண்டுமா?

- கே.தேனப்பன், திருநெல்வேலி-4

##~##
மூலவரின் எதிரில் இருக்கும் நந்திக்கு மட்டும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் போதுமானது. அதன் மூலம், கோயிலில் இருக்கும் அத்தனை நந்திகளையும் வழிபட்ட பலன் கிடைத்து விடும்.

சரஸ்வதி பூஜையின்போது, புத்தகம் அடுக்கி வைத் திருப்போம். அதில் மேலே இருக்கும் புத்தகத்துக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்தால், அதன் கீழே இருக்கும் அத்தனை புத்தகங்களுக்கும் பூஜை செய்ததாக ஆகிவிடும். மூலவரின் நித்யாராதனையில் உத்ஸவரும் மகிழ்வார். வீதியுலா வரும் உத்ஸவருக்கான வழிபாடு, மூலவரையும் அடைந்துவிடும்.

பிராகாரச் சுவரின் மூலைகளில் எதிரும் புதிருமாக நந்திகளைத் தரிசிக்கலாம். கோயில் மணிகளிலும் நந்தி வீற்றிருப்பார். அவர்களின் பணிவிடைகளைத் தனியாகச் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; பிரதான நந்திக்கான வழிபாட்டில் அது அடங்கிவிடும்.

நைவேத்தியத்தை மறைக்கும் திரையிலும் நந்தி இருக்கும். சிவபார்ஷதனின் நினைவை நிலைநிறுத்த நம்மால் ஏற்படுத்தப்பட்டது அது. நந்தியை மனதில் குடியிருத்துங்கள்.

கேள்வி-பதில்

பெரியோரைக் கண்டால் வணக்கம் சொல்லும்படி பழக்கியிருக்கிறேன் என் மகனை. அதன் பொருட்டு... வயதில் பெரியோரை, பெற் றோரை, குருவை வணங்கும்போது எப்படி வணங்க வேண்டும், சாஸ்திரம் என்ன அறிவுறுத்துகிறது என்பதை நானும் அறிய விரும்புகிறேன்.

- உஷா விஸ்வநாதன், காரைக்குடி

தாய், தந்தை, குரு - இவர்களை அடிபணிந்து ஆசி பெற வேண்டும். அதுபோல் வயதில் மட்டுமல்ல, அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்த பெரியோர்களை, மகான்களை தண்டனிட்டு வணங்க வேண்டும். தாய்- தந்தையரின் ஜீவாணுக் களில் தனயன் உடல் உருப்பெற்றிருக்கிறது. கல்வி வழி கண்களைத் திறந்து வைத்தவர் குரு. இந்த மூவரையும் வழிபடப் பரிந்துரைக்கிறது வேதம் (மாத்ருதேவோபவ, பித்ருதேவோபவ, ஆசார்ய தேவோபவ). நம்மிடம் எதையும் எதிர்பாராமல் நன்மையை அளிப்பவர்கள்; புண்ணியம் அல்லது பாவம்... அதன் பலனை ஏற்க உடல் அளித்தவர்கள் தாயும் தந்தையும். கருவறையிலிருந்து வெளி வந்தவனுக்கு வாழ்க்கையின் வழிகாட்டியாகச் செயல்படுபவர் குரு. அன்பும், பண்பும், அரவணைப் பும் இந்த மூவரிடம் இருந்தும் வந்துவிடும். உலக சுகம்- ஆன்மிகம் ஆகிய இரண்டு பகுதிகளை முழுமையாக அளிப்பவர்கள், இந்த மூவரும்.

கேள்வி-பதில்

நம்மிடம் தென்படும் அன்பு, பண்பு, அறிவு ஆகியன இந்த மூவரையும் அடையாளம் காட்டும். இவர்களை சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். 'கொண்டு வந்தாலும், கொண்டு வராவிட்டாலும் தாய்’, 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ ஆகிய சொல்வழக்குகள் அவர்களின் பெருமைக்கு எடுத்துக்காட்டு.

பண்டைய காலத்தில் குருவின் வாய் மொழியாகக் கல்வி கற்பார்கள். அரசன் முதல் ஆண்டி வரை குருகுல வாசம் செய்து கல்வி கற்பார்கள். குருவின் வாயால் வெளிவந்த கல்வியைக் காதால் கேட்டு, மனதில் அப்போதே பதியவைத்து விடுவார்கள். கல்வியானது ஒலி வடிவில் காது வழியாக உள்ளத்தை அடைந்து நிலைத்திருக்க வேண்டும். 'என் காதுகள் என்றென்றும் ஒலியை உள்வாங்கும் திறமையோடு திகழ வேண்டும்’ என்று வேதம் பிரார்த்தனை செய்யச் சொல்லும் (ச்ரோத்ரம் த உர்வபதிராபவாம:).

கரும்பலகை, எழுதுகோல், புத்தகம் ஆகியவற்றை எதிர்பார்க்க மாட்டார்கள். மனிதனின் மஸ்திஷ்கம் (மூளை) பல்கலைக்கழகமாக மாறிவிடும். கல்வி யைக் காப்பாற்ற அதைவிடச் சிறந்த முறை இருக்க முடியாது. தாயிடம் இருந்து அன்பும், தந்தையிடம் இருந்து பண்பும் பெற்ற பிறகு, அவன் கல்வி கற்கும் தகுதி யைப் பெறுகிறான். அவனைச் சீடனாக ஏற்று அறிவு புகட்டி ஆளாக்குகிறார் குரு. பண்பட்ட மனிதனாக உருவாக்கும் குருவின் பங்கு சிறப்பானது. தனயனான வன், தாய்- தந்தையரின் வளர்ப்பில் வளர வேண்டும். குருவிடமிருந்து கல்வி பெற வேண்டும். வளர்ப்பிலும் கல்வியிலும் இந்த மூவரின் தொடர்பு இல்லாதவனிடம் தென்படும் கல்வி, உலகுக்கு பயனில்லாமல் போகவும் இடமிருக்கிறது. ஆகையால் உலகுக்கும் பயன்படும் வகையில், இந்த மூவரது அரவணைப்பில், வளர்ப்பில், கல்வியில் தேர்ச்சி பெறுவது சிறப்பு.

வெளிநாட்டுக் கலாசாரத்தில் ஊறிய நம் குழந்தைகளில் சிலர், பழைய நடை முறையை ஏற்கமாட்டார்கள். குட்மார்னிங், குட் ஈவ்னிங். குட் ஆஃப்டர்நூன், ஷேக் ஹாண்டு... எனச் சொல்லி வணக்கத்தையும் அறிமுகத்தையும் முடித்துவிடுவர். நாமும் அவர்களுக்கு நமது பழம் பெருமையை ஊட்ட முயற்சிக்க மாட்டோம். அவர்களும் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

தாயும், தாய்நாடும் சொர்க்கத்தைவிட உயர்ந்தது என்கிறது தர்மசாஸ்திரம் (ஜனனீ ஜன்மபூமி:ச ஸ்வர்காத பிகரீயஸீ). அதை அவர்கள் காதுகளில் விழ அனுமதிக்க வேண்டும். பிறப்பின் இலக்கை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். ஸனாதனம் சொல்லும் பண்பான- அர்த்தமுள்ள வாழ்வியலை உணர்த்த வேண்டும். பெரியோர்களை மதிக்க வேண்டும், தாய் - தந்தையை வணங்க வேண்டும், குருவை வழிபட வேண்டும் என்கிற தத்துவத்தை அவர்களுக்கு விளக்க, புராண- இதிகாச கதைகளை ஓத வேண்டும். ஸ்ரீராமனையும், ஸ்ரீகிருஷ்ணனையும் ஹரியையும் ஹரனையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

பக்திச் சொற்பொழிவு நிகழும். கூட்டம் நிரம்பி வழியும். ஒலி எல்லோர் காதிலும் விழும். ஆனால், மனதில் பதிய வைத்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆகையால், குழந்தைகளுக்கு மனதில் பதியும் வரை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

  நேர்த்திக்கடன்பொருட்டு அம்மனுக்கு சார்த்து வதற்காக, வெள்ளிக் கவசம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். குறிப்பிட்ட நன்னாளில் சாத்தி வழிபடுவதாக ஏற்பாடு. அதுவரையிலும் கவசத்தை வீட்டில் வைத்திருக்கலாமா? அல்லது, புனிதம் கருதி வேறொரு கோயிலில் வைத்திருக்க வேண்டுமா? பெரியவர்கள் சிலர் தண்ணீரிலோ, தானியக் குதிருக் குள்ளோ வைத்திருக்கலாம் என்கிறார்கள். இதுகுறித்து தங்களின் ஆலோசனை தேவை.

- செ.மாரியப்பன், விருதுநகர்

கேள்வி-பதில்

வெள்ளியைத் தண்ணீரால் சுத்தம் செய்தால் போதும். தூய்மை பெற்றுவிடும். வெள்ளிக் கவசத்தை அம்மனுக்குச் சார்த்துவதற்கு முன்பு புனித நீரால் சுத்தம் செய்வார்கள். அதில் பெருமை பெற்றுவிடும். எனவே, அதை வீட்டில் வைத்திருக்கலாம். தானியத் திலோ, தண்ணீரிலோ அல்லது புனிதம் கருதி வேறு கோயில்களிலோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பண்டைய நாட்களில் செல்வந்தர்கள் ஒரு பொட்டளவு தங்கம் பதித்த வெள்ளித் தட்டில் உணவு அருந்துவார்கள். உண்ட பிறகு, அந்தத் தட்டு தண்ணீரால் தூய்மை பெற்றுவிடும். அதைச் சாம்பல் போட்டுத் தேய்த்து, தூய்மையை வரவழைக்க வேண் டிய அவசியம் இல்லை என்கிறது சாஸ்திரம்.

பொருளின் தரத்துக்கு ஏற்ப தூய்மைப்படுத்தும் முறையை விரிவாக ஆராய்ந்திருக்கிறது தர்ம சாஸ்திரம். தூய்மை பெற்றுவிட்டது, தூய்மை இழந்து விட்டது என்பதை நிர்ணயம் செய்வது தெளிவான மனம். தூய்மை இழந்துவிட்டதாக மனம் எண்ணினால், கூஷ்மாண்ட ஹோமம் செய்து செயலில் இறங்கு என்று தர்மசாஸ்திரம் சொல்லும் (கூஷ்மாண்டைர் ஜுஹுயாத் யோபூத இவமன்யேத).

என்றைக்கும் தூய்மையான வெள்ளியில் தூய்மையற்ற எண்ணம் வரக்கூடாது. சாத்தும் வரையிலும் காப்பாற்றிக் கொடுக்கவேண்டிய பொறுப்பு உண்டு. சாத்துபவர், அதன் தூய்மையை வரையறுத்துச் செயல்படுவார். அது, நமது அதிகார வரம்புக்கு உட்படாத விஷயம். நீராடியவுடன் தூய்மை பெற்றதாக மனம் எண்ணும். அது மனம் சார்ந்த விஷயம். நேர்த்திக்கடனை அளிப்பது கடமை. அதை நிறைவேற்றுங்கள்.

வருடத்தில், தர்ப்பணாதி கடமைகள் 96 உண்டு என்கிறார்களே... அதுகுறித்து விளக்குங்களேன்!

- கே.ஆர்.சுரேஷ், பெங்களூரு

அமாவாசை - 12,

யுகாதி - 4 : மாக கிருஷ்ண அமாவாசை, பாத்ர கிருஷ்ண த்ரயோதசி, வைசாக சுக்ல த்ருதீயை, கார்த்திக சுக்ல நவமி.

மன்வாதி - 14: சைத்ர சுக்ல த்ருதீயை, சைத்ர பூர்ணிமா, ஜ்யோஷ்ட பூர்ணிமா, ஆஷாட சுக்ல தசமி, ஆஷாட பூர்ணிமா, சிராவண கிருஷ்ண அஷ்டமி, பாத்ர சுக்ல த்ருதீயை, ஆச்வின சுக்ல நவமீ, கார்த்திக சுக்ல த்வாதசி, கார்த்திக பூர்ணிமா, பௌஷ சுக்ல ஏகாதசி, மாக சுக்ல ஸப்தமி, பால்குன பூர்ணிமா, பால்குன அமாவாசை.

கேள்வி-பதில்

சங்கராந்தி - 12,

வைத்ருதி - 13,

வ்யதீபாதம் - 13,

மஹாளயம் - 16,

அஷ்டகா (அஷ்டமி) - 4: மார்க்க கிருஷ்ண அஷ்டமீ, பௌஷ கிருஷ் ணாஷ்டமி, மாக கிருஷ்ணாஷ்டமி ,  பாத்ர கிருஷ்ணாஷ்டமி.

அன்வஷ்டகா (அஷ்ட்டம் யந்தர நவமி) - 4: மார்க்க கிருஷ்ண நவமி, பௌஷ கிருஷ்ண நவமி, மாக கிருஷ்ண நவமி, பாத்ர கிருஷ்ண நவமி

பூர்வேத்யு சிராத்தம் - 4: மாக கிருஷ்ண ஸப்தமி, பௌஷ கிருஷ்ண ஸப்தமி, மார்க்க கிருஷ்ண ஸப்தமி, பாத்ர கிருஷ்ண ஸப்தமி.

ஆக, 12 4 14 12 13 13 16 4 4 4 = 96 (அமா- யுக- மனு-க்ராந்தி -த்ருதி-பாத-மஹாளய -அஷ்டகா- அன்வஷ்டகா- பூர்வேத்யு சிராத்தை: நவதி சஷட்) இப்படி, ஒரு வருடத்தில் 96 தர்ப்பணாதிகள் உண்டு என்கிறது தர்மசாஸ்திரம்.

தங்களது சிந்தனைக்கு ஒரு வார்த்தை. உணவு விடுதிக்கு ஒருவர் வந்தார். நாற்காலியில் அமர்ந்தார். பரிமாறுபவரிடம், அன்றைய 'மெனு’வை விளக்கச் சொன்னார்.

இனிப்பில் 10 வகை, காரத்தில் 10 வகை, இட்லி, உப்புமா போன்றவற்றை விளக்கினார் பரிசாரகர். இவர் இரண்டு இட்லிக்கு ஆர்டர் கொடுத்தார். பரிசாரகரும் தட்டில் இரண்டு இட்லியை கொண்டு வந்து, ஒரு குவளை சாம்பாரை ஊற்றி முன்னால் வைத்தார். இவர், ஸ்பூனால் இட்லியைத் துண்டு துண்டாக வெட்டினார். அத்தனை துண்டுகளும் ஒரு குவளை சாம்பாரையும் குடித்துவிட்டது. திரும்பவும் சாம்பாருக்கு ஆர்டர் போட்டார். மேலும் ஒரு குவளையில் சாம்பார் வந்து சேர்ந்தது. அதை உட்கொண்ட பிறகு, இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, பில்லை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார் அன்பர்.

அதுபோல், இன்னொருவர் வந்தார். 'மெனு’வை ஒப்பிக்கச் சொன்னார். பரிசாரகர் சொன்ன தைக் கேட்ட பிறகு, ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கி அருந்திவிட்டு எழுந்துவிட்டார்.

முன்னால் வந்தவர், இரண்டு இட்லியாவது சாப்பிட்டார். இரண்டாமவரோ, தண்ணீரோடு நிறுத்திக்கொண்டார்.

96 சிராத்த 'மெனு’வைக் கேட்ட தாங்கள், தண்ணீர் மட்டும் குடித்து விட்டுப் போனவரைப் போன்று இருக்கக் கூடாது. முன்னவரைப் போன்றாவது மாற வேண்டும். அப்போதுதான் மெனு ஒப்பித்தவனின் முகம் மலரும்!

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்