

ஒரு முறை காசி யாத்திரைக்குச் சென்ற குமரகுருபரர், பெரியோர் பலருடன் அங்கு நடந்த சமய மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த தேசத்து முகமதிய மன்னனும் மாநாட்டுக்கு வந்திருந்தான். அவன், நமது வழிபாட்டு முறைகள்... இறை நம்பிக்கைகள் போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பி, தென்னாட்டில் இருந்து சென்றிருந்த சமயப் பெரியோர்களிடம் பலவாறான கேள்விகளைக் கேட்டானாம். அதுவும் எப்படி? ஹிந்துஸ்தானி மொழியில் கேட்டான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மொழி புரியாது நம்மவர்கள் திகைக்க, அங்கிருந்த குமரகுருபரர் மன்னனது கேள்விகள் அனைத்துக்கும் தாமே மறுதினம் பதில் தருவதாகச் சொல்லிவிட்டு திரும்பினார்.
மன்னனிடம் அவகாசம் வாங்கியாகிவிட்டது. ஆனால் மறுதினம் ஹிந்துஸ்தானி மொழி தெரிந்து பேச வேண்டுமே? கலைமகளைச் சரணடைந்தார் குமரகுருபரர். ஸ்ரீமஹாசரஸ்வதி தேவியைக் குறித்து 'சகலகலாவல்லி மாலை’ எனும் போற்றிப் பாடல்களைப் பாடி வணங்கினார். தேவி சரஸ்வதியின் பரிபூரண அருளால், மறுதினம் மன்னனின் கேள்விகள் அனைத்துக்கும் ஹிந்துஸ்தானி மொழியிலேயே பதில் அளித்தார்.

இதனால் மிகவும் மகிழ்ந்த அந்த மன்னன், வேண்டியவற்றைக் கேட்கும்படி குமரகுருபரரிடம் கூறினான். அந்த நேரத்தில் வானில் கருடன் பறக்கவும், இந்த கருடன் பறந்து சென்று தரையிறங்கும் வரையிலான இடத்தை தனக்கு எழுதித் தரவேண்டும் என்று கேட்டாராம் குமரகுருபரர். அதன்படி, மன்னன் அளித்த இடத்தில் ஒரு மடத்தினை நிறுவி, வடநாடு மற்றும் தென்னாட்டுக் கலைகள், வழிபாடுகள் ஒரே இடத்தில் அமைந்திட வழிசெய்தார்.
குமரகுருபரருக்கு வேண்டிய கலைகளை அருளிய சகலகலாவல்லி மாலையின், 'வெண்டா மரைக்கன்றி...’ என்ற முதல் பாடலில் துவங்கி... 'மண்கண்ட வெண்குடைக் கீழாக’ வரையிலான பத்துப் பாடல்களையும் பாடி, சரஸ்வதிதேவியை மனதார வழிபட்டுவர, பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம்.
அனைத்துப் பாடல்களையும் பாடி வழிபட இயலாதபட்சத்தில், பத்தாவது பாடலை மட்டுமாவது தினமும் பாராயணம் செய்து கலைமகளை துதியுங்கள். அவள் அருளால் அனைத்து ஞானமும் ஸித்திக்கும்! அந்தப் பாடல்...
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்ப்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வம் முளதோ சகல கலாவல்லியே!
##~## |
பாடங்களைப் படிக்கும் முன்னர், ஸ்ரீமஹா சரஸ்வதிதேவியை மனதில் நிறுத்தி, இந்தப் பாடலைப் பாடி வணங்கிவிட்டு... மனமொன்றி படிக்கத் தொடங்குங்கள். கலைமகளின் பரிபூரண அருளுடன்... தேர்வில் ஜெயிப்பீர்கள்!
தொகுப்பு: இரா.மங்கையர்கரசி
